பட்டொளிவீசும் பதின்மத்தின் தலைவாசலில்
பட்டுத்தெளியும் திருமணபந்தமெனும்
சிறைவாசம்.
கடமையே கண்ணாக கணவனின்
சுகசீவனமே
மாசற்ற கற்புநெறியாக
இனிய பதினாறில் இளம்தாயாகி
மறுபிறவியாய்
மகத்தான தலைப்பிரசவம்.
கனியும் காதலால் உறவுகளையும் சுமக்கும்
அச்சாணியாய்
குதூகலமான குடும்பபாரம்.
தளிர்நடை பயிலும் முன்பே மூத்தாளாக
உயரச்செய்த
வல்லமையான மறுபிரசவம்.
தொலைக்காட்சி திரைக்காட்சி அபூர்வமான
காலகட்டத்தில்
கட்டில்காட்சியே பொழுதுபோக்காய்!
தொன்விருட்சமாய் விழுதுகள்
இரத்த பந்தங்கள்
சூப்பிய பனங்கொட்டையாய் சுண்டியவதனம்.
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உரையும்கோட்டின்
உளைச்சலின் உச்சம்.
குருதியும்கொதித்து இருதயமும்துடித்து
பரிதவிக்கும்வேளை
கிடுகிடுக்குமோசை படபடக்குமுயிர்.
சரசரக்கும் பாசக்கயிறை வீசி
துடிதுடிக்கும் உயிரை
சிகரமேற்றும் சிலிர்ப்பு .
பட்டதெல்லாம் போதுமினித்துயர் படமுடியாதென்றே
பந்தபாசம் விலக்கி
பக்திநெறிப் பயணத்தின் ஆயத்தமாக
விழுதுகள் வேரூன்ற உற்றதுணை நாடி
கூப்பித்தொழும் முதிதையில்
மாலவனின் மாயலீலையால் காலனின்கயிறும் பொடிப்பொடியாக
பாசமும்வெல்ல நேசமும்சிறகடிக்க
படபட இதயமும்
மெதுமெதுவாய் துடிக்க
லப்..டப்….லப்…..டப் ஓசையுடன்
இதயக்கண் விழிக்க
பட்டதுயரே இதமாய் இனிக்க
கனிந்துநின்று கசிந்து உருகி
மாடாயுழைத்து ஓடாய்த்தேய்ந்து
தண்ணளி வீசும் பெண்ணாலம்!!!!
படத்திற்கு நன்றி :
http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Banyan_tree_on_the_banks_of_Khadakwasla_Dam.jpg
நன்றி : வல்லமை பிரசுரம்
அருமையான கவிதை.
ReplyDeleteநன்றி ராமலட்சுமி.
ReplyDelete