சங்க கால உணவு முறைகள்
பவள சங்கரி
தென்னிந்தியாவின்
கற்கால மனிதர்களின் காலம் கி.மு. 10000. அக்காலங்களில் வேட்டைக்காரர்கள், மூங்கில் வேலை செய்பவர்கள், ஆடை தயாரித்தவர்கள்,
மீன் பிடிப்பவர்கள், உப்பளங்கள் அமைத்து உப்பு
சேகரித்தவர்கள், மாலுமிகள் போன்றவர்கள் மட்டுமே அடங்கிய சமூகம்
அது. அவரவர்கள் வாழும் பகுதிகளின் வளங்களுக்கேற்ப அமைந்த தொழிலின்
அடிப்படையில் கூடிய சமூகம் அது.
மக்களின் உணவு
முறை என்பது அந்தந்த காலகட்டங்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நிதிநிலை, வாழ்க்கைத் தரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. நவீன
கால கண்டுபிடிப்புகளின் பாதிப்பு ஏதுமின்றி, உடல் உழைப்பை
மட்டுமே மூலதனமாகக் கொண்டு தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் ஆரோக்கியமான
உடலும், மனமும் பெற்றிருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர
முடிகின்றது. கற்காலத்திற்குப் பிறகான சங்க காலத்திலும்
பெரும்பாலும் இந்த நிலை குறிப்பாக உணவுப் பழக்கத்தில் மிகச் சில மாற்றங்களுடன்
தொடர்ந்திருப்பதையும் அறிய முடிகின்றது. இதற்கான ஆதாரங்கள்
சங்க காலப் பாடல்களில் அதிகமாகவே கிடைக்கின்றன.
சங்ககால
மக்கள் இயற்கையாகக் கிடைக்கும் தாமரையிலை, தேக்கிலை, ஆம்பலிலை, வாழையிலை, பனையோலை,
மூங்கில் போன்றவற்றை உணவு உண்பதற்குத் தகுந்த
கலன்களாக வடிவமைத்துப் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு ஆதாரங்களாக,
“சேக்குவள்
கொல்லோ தானே தேக்கின்
அகலிலை
குவிந்த புதல்போல் குரம்பை
ஊன் புமுக்
கயரு முன்றில்” (அகம். 315: 15-17)
“வாழை
ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு
அமர்த்த கண்கள்” (நள். 120: 5-6)
“செமுங்கோள்
வாழையகலிலைப் பகுக்கும்”(புறம். 168, 13)
“ஆம்பல் இலைய
வமலை வெஞ்சோறு
தீம்புளிப்
பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை
யிடு உமுர” (அகம். 196: 5-7)
போன்ற
பாடலடிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
அடுத்து
சமைப்பதற்கும், சமைத்த
உணவை பாதுகாப்பதற்கும் பழந்தமிழ் மக்கள் எத்தகைய பாத்திரங்களை
பயன்படுத்தியிருப்பார்கள் என்ற ஐயங்களுக்கும் சங்கப் பாடல்களே விடையளிக்கின்றன. குழிசி, சாடி, கலன், கன்னல், தசும்பு, குப்பி, தடவு போன்ற பல வகையான,
பல அளவுகளிலான பானைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறிய
முடிகின்றது.
தசும்பு என்ற பானை, பால், தயிர், கள் போன்ற பொருட்களை நிறைத்து
வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதை,
“இஞ்சிவி
விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத்
தெறிந்த தசும்பு துளங் கிருக்கை
தீஞ்சேறு
விளைந்த மணி நிற மட்டம்” (பதிற்று,
42: 10-12)
என்ற
பாடலடிகள் மூலமும்,
குழிசி என்பது
உணவு சமைக்கப் பயன்படுத்தும் மண்ணால் செய்யப்பட்ட பானை என்பதனை,
“மான்றடி
பழுக்கிய புலவுநாறு குழிசி” (புறம்,
165:6)
“கயறு
பிணிக் குழிசி” (அகம், 77:7)
“முரவுவாய்க்
குழிசி முரியடுப் பேற்றி” (பெரும், 99)
என்ற
பாடலடிகள் மூலமும் அறிய முடிகிறது.
இக்காலங்களில்
நாம் சுவையாக உணவைச் சுவைத்து உண்ண பக்கவாட்டில் சில துணைப் பதார்த்தங்களையும் பயன்படுத்துகிறோம். அதில் மிக முக்கியமானது உப்பில் ஊற விட்டு காரமும்,
புளிப்பும் சேர்ந்த சுவையான ஒரு பதார்த்தமாகப் பயன்படுத்தும் ஊறுகாய்!
ஊறுகாய் பயன்படுத்தும் வழமை நமக்கு நம் முன்னோர்களிடமிருந்து,
ஆதி காலந்தொட்டு இன்றுவரை விடாமல் தொடர்ந்து வருவதும் ஆச்சரியம்தான்.
இக்காலம்
போன்றே நெல்லிக்காய், எலுமிச்சம் பழம், புளியங்காய், மாங்காய் போன்றவற்றை, பதப்படுத்தி ஊறுகாய்களாகச் சமைத்து அவைகளை
மண்ணால் செய்யப்பட்ட காடிகளில் அடைத்து வைக்கின்றனர். ஊறுகாய்கள் கெடாமல்
இருப்பதற்கு காடிகள் பயன்படுகின்றன என்பதனை,
“காடி வைத்த
கலனுடை மூக்கின்
மகவுடை
மகடூஉப் பகடு புறந் துரப்பக்” (பெரும், 57-58)
என்ற பாடல் வரிகள்
மூலம் அறிய முடிகின்றது.
கன்னல் என்பது
நீர் நிறைத்து வைக்கப்படும் மண் பானை. ‘தொகுவாய்க் கன்னல்’, ‘குறுநீர்க்கன்னல்’
என்று இரண்டு விதமான கன்னல் பானைகள் உள்ளன. குவிந்த வாயையுடைய பானையான தொடுவாய்க்
கன்னல் என்பதனை,
“தொடுவாய்க்
கன்னற் றண்ணி ருண்ணார்
பகுவாய்த்
தடவிற் செந் நெருப்பார”
(நெடுநெல்வாடை, 65-66)
என்ற அடிகள்
மூலமும்,
மண்பானையில்
நீர் நிறைத்து அதன் அடியில் சிறிய துளையிட்டு அதன் வழியாக அந்நீரை சிறிது
சிறிதாகக் கசிய விட்டு அந்நீரினை அளப்பதற்கான கருவியாகலின் இது குறுநீர்க் கன்னல்
என்றழைக்கப்பட்டது. இதனை,
“ஏறி நீர் வையகம்
வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க்
கன்ன லினைத்தென் றிசைப்ப” (முல்லை, 57-58)
என்ற
பாடலடிகள் மூலமும்,
குளிர் காலத்தில் குளிப்பதற்கு நீரைச் சூடாக்க
பெரிய மண்தாழிகளைப் பயன்படுத்தினர். தடவு எனப்படும் இதனை,
“பகுவாய்த்
தடவிற் செந் றெருப்பயர” (நெடுநெல்வாடை,
66)
என்ற
பாடலடிகள் மூலமும்,
மக்களின் தேவைக்கு ஏற்ப மண்பாண்டங்கள்
செந்நிறத்திலும், கருப்பு நிறத்திலும் செய்து கொடுத்துள்ளனர். இதனை,
“செந்தாழிக்
குவிபுறந் திருந்த” (புறம், 238:1)
“பெருங்கட்
குறுமுயல் கருங்கலன்” (புறம், 322:5)
என்ற
பாடலடிகள் மூலமும் அறியலாம்.
சங்க கால உணவு
சங்க
காலத்தில், சோற்றைக்
குறிக்க அடிசில், அயனி, அவிழ், கூழ், மிதவை, மூரல், சொன்றி,
நிமிரல், புழுக்கல், புன்கம், பொம்மல் போன்ற
சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நெல், வரகு,
திணை முதலிய தானியங்களும், பால், தயிர், மோர், ஈசல்களையும், அவரைக்காய், வேளைக்கீரை,
வேளைக்கீரைப் பூ போன்ற தாவர வகைகளையும்,
செம்மறியாடு, முயல் இவற்றின் இறைச்சிகளையும் பல்வித கள் வகைகளையும் சங்க கால
மக்கள் உணவில் முக்கியமாகக் கொண்டிருந்தனர். வேளைக்கீரை, அதன் பூ, தயிர், மோர்,
ஈசல், வரகு இவற்றையெல்லொம் சேர்த்து தனிப்பட்ட முறைகளில், புளியங்கூழ், புளியங்கறி, புளியஞ்சோறு
போன்ற உணவு வகைகளைச் சமைத்துள்ளனர். நன்கு விளைந்து முற்றிய நெல்லை, அரிசியாக்கி
ஆம்பற்பூவோடு சேர்த்து, சுவையாகச் சமைத்து உண்டனர். களிமண்
பானைகளில் மூலம் இந்த உணவு வகைகளைச் சமைத்துள்ளனர் என்பதனை, அகம்.393:14
பாடல் மூலம் அறியலாம்.
பூளைப் பூ போன்ற வரகுச் சோற்றை வேங்கைப் பூவை
ஒத்த அவரைப் பருப்புடன் அவித்து வரகுச் சோற்றுடன் கலந்து உண்டதை,
குறுந்தாள்
வரகின் குறள்அவிழ்ச் சொன்றி
புகர்இணர்
வேங்கை வீ கண்டன்ன
அவரைவான்
புழுக்கு அட்டி, பயில்வுற்று
இன்சுவை மூரல்
பெறுகுவீர் (பெரும்.193-196)
என்ற
பெரும்பாணாற்றுப்படை அடிகள் குறிப்பிடுகின்றன.
பசு, எருமை,
ஆடு ஆகியவற்றின் பாலையும் அவற்றினின்று
கிடைக்கும், பால் மற்றும் பால்படுப்பொருட்களான, தயிர்,
மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றையும் மிக விருப்பமான உணவாகக்
கொண்டவர்கள்
சங்க கால ஆயர்கள் என்பதை முல்லைத்திணைப் பாடல்களின் மூலம் அறிய முடிகின்றது . பாலை
உணவாகக் கொண்டதைப் பற்றி அகநானூறும் (393:17), மலைப்படுகடாம் (409-410) மற்றும்
பெரும்பாணாற்றுப்படை (168, 175) பாடல்களும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
மேலும், தானிய வகைகள், பூக்கள், பூச்சிகள், ஊன்
உணவுகள், கள் ஆகியவைகளும் அவர்களது விருப்பமான உணவுகளாக இடம் பெற்றிருந்தன.
பாலிலிருந்து
கடைந்தெடுத்த வெண்ணெயை உருக்கி எடுக்கப்பட்ட, மணமிக்க சுவையான நெய்யில், கடலையை
வறுத்து அதனை சோற்றுடன் சேர்த்து உண்டதையும் (புறம்.120:14),
புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகின்றது.
தீம்புளி என்ற
ஒரு உணவும் பல பாடல்களில் மிகச் சிறப்பான உணவாகக் காட்டப்பட்டுள்ளது.
பரதர் தந்த
பல்வேறு கூலம்
இருங்கழிச்
செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
பரந்தோங்கு
வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழுமீன்
குறைஇய துடிக்கண் துணியல் . .
(மதுரை
காஞ்சி 318)
பண்டமாற்று
முறை வாணிபத்தில், நம் நாட்டிற்கு குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே
மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும்
தத்தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லுவார்களாம்.
தீம்புளி
என்றால் என்ன?
சாப்பிட்டதுண்டா? சங்கப்பாடல் சொல்லும் சுவையான பண்டம் இது!
ஆம், புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்
பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று பெயர்.
நெற்சோற்றோடு
மோர் ஊற்றி, அதில் வெண்ணெய் கொண்டு கறிவேப்பிலையும், மாதுளங்காயும் பொறித்துக்
கொட்டி, அதில் மிளகுப்பொடி தூவி, அதனுடன் மாமரத்தின் பிஞ்சு இலைகளை மேலே போட்டு
வைத்த ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, பார்ப்பணத்தி ஒருத்தி சாப்பிட்டாள் என்பதனை கீழ்கண்ட பெரும்பாணாற்றுப்படை
பாடல் மூலம் அறியலாம் ,
சேதா நறுமோர்
வெண்ணெயின் மாதுளத்
துருப்புறு
பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி
யளைஇப் பைந்துணர்
நெடுமரக்
கொக்கி னறுவடி விதிர்த்த
தகைமாண்
காடியின் வகைபடப் பெறுகுவிர் 310
வண்ட லாயமொ
டுண்டுறைத் தலைஇப்
புனலாடு மகளி
ரிட்ட பொலங்குழை
இரைதேர்
மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
புள்ளார்
பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
சோறுடன் தயிர் சேர்த்து உண்ணும் போது, காரமும்
புளிப்பும், உப்பும்
அதிகமாகச் சேர்ந்த ஊறுகாயுடன் உண்ணும்
பழக்கம் சங்ககால மக்களிடையே இருந்துள்ளதை பட்டினப்பாலை பாடல் மூலம் அறிய முடிகிறது.
இன்றைய
காலகட்டத்தில் அசைவ உணவான பிரியாணி என்று
அழைக்கும் உணவு அக்காலத்தில் ஊன்சோறு என்று அழைக்கப்பட்டிருப்பதை,
ஊன் சோற்று
அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14
அட்டு ஆன்று
ஆனா கொழும் துவை ஊன் சோறும் - புறம் 113/2
என்ற
பாடலடிகள் விளக்குகின்றன.
அசைவ உணவாக, வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமை,
மீன் வகைகள், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை, உடும்பு போன்றவற்றின்
இறைச்சியைத் தனியாகவோ, பாலும் அரிசியும் சேர்த்தோ சமைத்து உண்பார்கள்.
“முளிதயிர்
பிசைந்த காந்தள் மெல்விரல்
தான் துழந்து
அட்ட தீம்புளிப் பாகர்” (குறுந்.167:1-2)
குறுந்தொகைப்
பாடலின் தலைவி தன் கணவனுக்காக உணவு சமைப்பதை அழகாக விளக்கப்பட்டுள்ளது. நன்றாகக் காய்ச்சிய பாலில் முந்தைய நாளில்
உறை ஊற்றி, மறுநாள் காந்தள் மலரைப் போன்ற தன் மெல்லிய விரல்களால் புளிப்பேறிய
தயிரைப் பிசைந்து, அதனுடன் இனிய புளிப்புச் சுவையுடைய குழம்பினைச் சேர்த்துத் தன்
கணவனுக்கு அன்பாகப் பரிமாறுகிறாள். தலைவி குழம்பு வைக்கும் போது புளி, தயிரை
மட்டும் சேர்க்கவில்லை. அத்தோடு தன்னுடைய
உண்மையான காதலையும் சேர்த்துப் பறிமாறுகிறாள் என்று உணவுச் சுவையுடன், தலைவன், தலைவியின் வாழ்வியல் பண்பாட்டு நெறியையும் சேர்த்தே விளக்குகிறது இப்பாடல்.
நெய்யொடு
கூடிய தயிர்ச்சோற்றை உண்ணல் (அகம்:340),
புல்லரிசியை
உண்ணல் (பெரும்.89-94) போன்ற செய்திகள் சங்க காலப் பாடல்கள் காட்டுகின்றன.
அடிசில்
என்பது சங்க காலம் தொட்டு இன்றுவரை புழக்கத்தில் உள்ள ஒரு சொல். ஆம், அக்கார அடிசில்
என்பது இன்றும் குழைந்த சோறுடன், பால், வெல்லம், நெய் சேர்த்து படைக்கும் உணவு.
புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – (அகம் 394/9-12)
மேற்கண்ட அகநானூற்றுப்
பாடல் தோழி தலைமகனைப் பார்த்துச் சொல்வதாக அமைந்த பாடல் இது.
மேலும்
வத்தம், வட்டம், வல்சி, வறை, வாட்டு, வாடூன், விசையம், வேவை போன்ற சொற்களும், பல்வேறு வகைத் தின்பண்டங்களுக்குப்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
பரல் வறை
கருனை காடியின் மிதப்ப - பொரு 115
உடும்பின்,
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர் - பெரும் 132,133
நெய் கனிந்து
வறை ஆர்ப்ப - மது 756
நெய் துள்ளிய
வறை முகக்கவும் - புறம் 386/3
மண்டைய கண்ட
மான் வறை கருனை - புறம் 398/24
என்ற அடிகள்
மூலம் பொரித்த இறைச்சித்துண்டுகள் வறை எனப்படுவதை அறிய முடிகின்றது.
வாடூன் என்பது
வாடிய ஊன் என்றறிய முடிகிறது.
வாடூன் கொழும்
குறை
கொய்குரல்
அரிசியொடு நெய்பெய்து அட்டு
துடுப்பொடு
சிவணிய களிக்கொள் வெண்சோறு - புறம் 328/9-11
இதனை மேற்கண்ட
புறநானூற்று அடிகள் விரிவாகச் செய்முறையுடன் விளக்குகின்றன. அதாவது இன்றளவிலும் மீந்து
போன ஆட்டுக் கறி துண்டங்களை உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு காய வைத்து அதனைத் தேவையான
நேரத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கு உப்புக்கண்டம்
என்று கூறுவார்கள். அந்த ஊன் துண்டங்களை இரும்புக்
கம்பிகளில் கோத்து நெருப்பில் வாட்டியுண்பார்கள்
அதேபோன்று கருப்பஞ்சாறிலிருந்து
எடுக்கப்படும் நாட்டுச் சக்கரை, வெல்லம் போன்ற பொருட்களை விசையம் என்று கூறினர். அதனை
விசையம்
கொழித்த பூழி அன்ன (மலைபடுகாம் - 444)
என்று பாடலால்
அறிய முடிகிறது. அதே போன்று வேக வைத்த உணவை வேவை என்றனர். பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு,
சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு ஆகியவற்றையும் பண்டைத் தமிழர்
உண்டனர். மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப் புளிக்க வைத்து புளிக்குப்
பதிலாக அதைப் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. இன்றும்
மாங்காயை உலற வைத்து பொடியாக்கி பயன்படுத்தும் அந்த வழமை இருக்கிறது.
சங்க கால
மக்கள் அசைவ உணவையே பெரிதும் விரும்பி உண்டனர். பண்டைத் தமிழகம் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப் பெற்றிருறந்தது. அதன்
அடிப்படையிலேயே மக்களின் வாழ்வும், உணவுப் பழக்கங்களும் இருந்துள்ளன.
குறிஞ்சி
நிலம் வாழும் மக்கள் மலையில் விளைந்த திணையைச் சோறாக்கியும், நெய்யில்
பொறிக்கப்பட்ட இறைச்சியையும் உண்டனர்.
மருத நிலம்
வாழும் மக்கள் வெண்சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கூட்டையும், பழைய
சோறு, அவல் போன்றவற்றை விரும்பி உண்டனர்.
நெய்தல் நிலம்
வாழும் மக்கள், இறால்
மீன், வயல் ஆமை ஆகியவற்றைப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டனர்.
பாலை நிலம்
வாழும் மக்கள் இனிய புளிக்கறி சேர்க்கப்பட்ட சோற்றையும். காய்கறியையும், இறைச்சியையும், உண்டனர்.
உணவினைக்
கலங்களிலும் தேக்கிலையிலும் பரிமாறினர். உண்ணும் முன் கலங்களைக் கழுவி அதில்
சோறுண்டனர் (புறம்.120).
புல்லி
நாட்டில் ஆயர்கள் மாடு மேய்க்கப் புறப்படும்போது புளிச்சோறு உணவினை மூங்கில்
குழாயில் இட்டு, அதனை மாட்டின் கழுத்தில் கட்டி விடுவார்களாம். காட்டு வழியே பயணிக்கும் சமயம், அங்கு பசியோடு வருபவர்களுக்கு
தமது உணவினை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து உண்பார்களாம்.
பயம்தலை
பெயர்ந்து மாதிர வெம்ப
வருவழி
வம்பலர்ப் பேணி காவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத்
தேக்கிலைப் பகுக்கும்
புல்லிநன்னாடு
'(அகம் 311,9-12)
மூங்கில்
குழாயினுள் புளிச்சோற்றினை அடைத்து வைத்து வேற்றிடம் செல்பவர்கள் அதனை இலையில்
இட்டு உண்ணல் (அகம்:309) என்ற செய்தி கூறப்பட்டுள்ளது..
முடிவுரை:
அடிமனை, கணிச்சி, நீர் முகக்கும் கருவி, மத்து, உரல், உலக்கை போன்ற மரக்
கருவிகளையும் வடிவமைத்து அவைகளை சமையலறையில் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வகையான
நெல் விளைந்தது. சோற்றோடு காய்கறி வகைகளையும் அதிகளவில் உண்டிருக்கின்றனர். மிளகும்
புளியும் உப்பும் உணவில் சேர்ந்திருக்கும். மாங்கனியைப் பிழிந்து சாறு எடுத்து, அதைப்
புளிக்க வைத்து அதைப் புளியாகப் பயன்படுத்துவது போன்று களாப்பழப் புளி, நாவற்பழப்புளி, துடரிப்பழம் (ஒருவகை
இலந்தைக் கனி – (Zizy Phus Rugosa), முதலிய பழங்களையும் பயன்படுத்தியுள்ளனர். கொம்மட்டி
மாதுளங்காயை அரிந்து, அதனுடன் மிளகின் பொடியைக் கலந்து கறிவேப்பிலை கூட்டிப் பசு வெண்ணெயில்
அதைப் பொரித்து விரும்பி உண்பார்கள். வடுமாங்காய் ஊறுகாய் கூட அக்காலத்தில் இருந்திருக்கிறது.
பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, சேம்பிலைக்கறி, வள்ளிக்கிழங்கு, சுட்ட பனங்கிழங்கு
ஆகியவற்றையும் பண்டைத் தமிழர் விரும்பி உண்டனர்.
துணை நூற்பட்டியல்:
தமிழக வரலாறு
மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை -
1974.
அகநானூறு,
ந.மு. வேங்கடசாமி, சை.சி.நூ. கழகம், சென்னை - 18, 1957.
பண்டைய தமிழ்
நாகரீகமும் பண்பாடும், தேவநேயபாவாணர், தமிழ்மண் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை -
1996.
அ.
தட்சிணாமூர்த்தி, (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: ஐந்திணைப்
பதிப்பகம்.
.