Wednesday, November 3, 2010

தீபாவளி கொண்டாட்டம் !

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு
அதிக கலோரி வகையான இனிப்புகள் மற்றும் ஒரு கிரேவி ஸ்பெஷலாக செய்யலாம்.


* கடலை மாவு பர்ஃபி.

தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 100 கி.
நெய் - 100 கி
சக்கரை - 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 5 கி
பால் - 1/2 கப் [அ] 120 மி.லி.
குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை :- 10 கி.நெய், 1/4 கப் பால், இரண்டையும் கடலை மாவில் கலந்து கொள்ளவும்.மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் வைத்து விடவும். மீதமுள்ள நெய்யை சூடு செய்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை பூந்தி கரண்டியில் போட்டு தேய்த்து விட்டு,குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறி கீழே இறக்கி குளிரச் செய்யவும்.
சக்கரை 100 கிராம் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கெட்டியான பாகாக காய்ச்சிக் கொள்ளவும். மீதமுள்ள பாலையும், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தும் போட்டு, நன்கு கிளறி கீழே இறக்கவும்.

ஆறிய பின்பு, கடலை மாவு கலவையை எடுத்து அந்த பாகில் கலக்கவும். நன்கு கலந்த பின்பு ஒரு தட்டில் கொட்டி, செட்டாகச் செய்யவும். சிறிது நேரம் கழித்து விரும்பும் வடிவத்தில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு துண்டு 450 கலோரிகள் வரை இருக்கும்.


சீதாப்பழ பாசந்தி :

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்.
கல்கண்டு - 100 கி.
ஏலக்காய்த்தூள் - 5கி.
பாதாம் பருப்பு - 5கி
பிஸ்தா பருப்பு - 5கி
வெள்ளரி விதை - 5கி
சீதாப்பழம் - 2.

செய்முறை :- பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே காய்ச்சவும். தீயை குறைத்து வைக்கவும். பால் பாதியளவிற்கு சுண்டியவுடன் அதில் கல்கண்டு சேர்த்து கிளறவும். சக்கரை கரைந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை அனைத்தையும் சன்னமாக சீவி அதில் சேர்க்கவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கவும். சீதாப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு பழக்கூழை மட்டும் பாசந்தியுடன் சேர்த்து கலக்கவும்.சில்லென்று பரிமாறவும்.

இதன் கலோரி அளவு 460.


சில்லி பன்னீர் : சைனீஸ் ஸ்டைல்!

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கி
சோள மாவு [ corn flour] - 1/2 கப்.
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - 1/2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன் [தேவையென்றால்]
மிளகாய் தூள் - 1 1/2 டீ.ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டே.ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பால் - 4 டே.ஸ்பூன்.

கிரேவிக்குத் தேவையானவை :

எண்ணெய் - 80 மி.லி.
வெங்காயம் பொடியாக நறுக்கியது -25கி
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டீ.ஸ்பூன்
பூண்டு விழுது _ 2டீ.ஸ்பூன்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -2
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 டே.ஸ்பூன்.
1/4 ஸ்பூன் அஜினோமோட்டோ.
தண்ணீர் - 1 கப்.
சோள மாவு - 1 டே.ஸ்பூன்.
வினிகர் - 2 டீ.ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சக்கரை - 1டீஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது -3.

செய்முறை :- சோள மாவு, மைதா, உப்பு அஜினோமோட்டோ, மிளகாய் தூள், மிளகு தூள், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான பால் கலந்து கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பன்னீர் துண்டுகளை அந்த மாவில் போட்டு 5 நிமிடம் ஊறவிடவும். அதை எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

கிரேவி தயாரிக்க :-

சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் தக்காளி சாஸ் வினிகர், சோயா சாஸ், உப்பு, சக்கரை மற்றும் மிளகு தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். சிகப்பி மிளகாய் விழுது [ மிளகாயை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்]இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.

அடுத்து சோளமாவு கலவையை எடுத்து அதி ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் பொழுது கிரேவியை திரும்ப சூடாக்கி, பன்னீர் பக்கோடாவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பாதி அளவிற்கு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைத்து விடவும். பரிமாறும் கின்னத்தில் போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரிக்கவும்.

Tuesday, November 2, 2010

கடல் கால் அளவே............



வாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில்லை. ஆனால் திடீரென சுனாமியாக பிரச்சனை வந்து புரட்டிப் போடும் போதுதான் சம்பந்தப்பட்ட அந்த நபரின் தகுதி தெரிய வரும். அதாவது பிரச்சனையை எதிர்த்து நின்று போராடக்கூடியவரா அல்லது தலைதெறிக்க ஓடுபவரா, இன்னுமொரு படி மேலே போய் கோழைத்தனமாக தன்னையே அழித்துக் கொள்பவரா என்பது.. ஒரு சிலரின் வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை, சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரும் பிரச்சனைகள் வராமல் ஓடிவிடுகிறது. சிலரின் வாழ்க்கை தன்னுடைய நம்பிக்கையையும், திறமையையும் நிரூபித்துக் காட்டும் வகையில் விதி பிரச்சனைகளைக் காட்டி இழுத்துச் செல்லும்.அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான் இது.

செல்வி, மத்தியவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ,அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். கணவர் கனகராஜ், ஈரோட்டில் நூல் விற்பனை முகவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். ஆண் ஒன்றும்,பெண் என்று என்று இரு குழந்தைகள் சலனமில்லாத அமைதியான வாழ்க்கை. மூத்த பெண் பள்ளியிறுதியாண்டு முடித்து நல்ல மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் ஆவலில் காத்திருக்கிறாள். இளைய மகன் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன். இந்த நிலையில் தான் கணவர் கனகராஜீவிற்கு திடீரென கால்வலி ஏற்பட்டது. அதிகம் நடக்க முடியாமல் சிரமம் கொடுத்த போதுதான் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குள் மகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டிய வேளை நெருங்கியதால் ஈரோட்டில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டு மருத்துவ மனைக்குச் சென்றவர், அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் ஒரு சம்பவமாகிப் போனது..........

‘காயமே இது பொய்யடா.....காற்றடைத்த பையடா.....என்பார்கள், மேல் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு உடல்நிலையைக் கணிக்க முடியாது என்பதற்கு கனகராஜ் ஒரு உதாரணமாகிப் போனார். கால்வலிதானே ஏதாவது வலி நிவாரணி கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மருத்துவரை அணுகிய போது பரிசோதித்த மருத்துவர் சி..டி. ஸ்கேன், எக்ஸ்ரே என்று ஏதேதோ எடுக்கச் சொல்ல அப்பொழுதே ஏதோ பெரிய பிரச்சனைக்கு அறிகுறியாக தெரிந்தாலும், இறுதியில் மருத்துவர், இதயத்திலிருந்து வரும் ரத்தக் குழாயில், காலில், அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சி ஆனது.

மன உளைச்சல் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார நிலை அடுத்த பிரச்சனை. செலவுகள் லட்சத்தை தாண்டிக் கொண்டிருக்கின்றன..... கையிருப்பும் கரைந்து கடன் வாங்கும் நிலையும் வந்தது. வீட்டுப் புறாவாக அதுவரை, கணவனையும் குழந்தைகளையும் பராமரிக்கும் கடமையை மட்டுமே சிரமேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் செல்விக்கு, திடீரென்று எல்லா பொறுப்பும் ஒரு சேர வந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. படித்தது என்னவோ 9 ஆம் வகுப்பு வரைதான். சொந்தபந்தங்களிடம் சென்று உதவிக்காக நிற்பதற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இது நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியாதே.

இதற்கிடையில் கணவனின் அறுவை சிகிச்சைக்காக ஈரோட்டிலிருந்து, கோவையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்து பெரிய நோட்டுக்களாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கணவனின் தொழில் மீது கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவானது.

சாதம் படைக்கவும் செய்திடுவோம் : தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்

காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி !






.

என்று பாரதி அன்றே பாடி வைத்துச் சென்றான்.

பெண்களுக்கான சில பொதுவான தொழிகள் உள்ளன. அப்படி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவிற்கு சமாளிக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் செல்வியின் நிலையோ,தன் கணவனின் தொழிலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு உபாயம் இல்லை. கணவர் செய்யக்கூடிய நூல் விற்பனை முகவர் தொழில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தொழில். காரணம், பலரை, பல நேரங்களில், சந்திக்க வேண்டும். பணிக்கான குறிப்பிட்ட கால நேரங்கள் கிடையாது. அதிகமான சுற்றுப் பயணம், பெரும் தொகைகளை வசூல் செய்து பட்டுவாடா செய்ய வேண்டும். இது போன்று ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய பணியை, 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, கணவன் தொலைபேசியில் உரையாடும் நிகழ்வுகள் மட்டுமே அனுபவமாகக் கொண்ட நாற்பது வயதைக் கடந்த நிலையில் ஒரு பெண் தனியாக நின்று சமாளிக்க வேண்டிய கட்டாயம், கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று.

அடுத்த வேளை உணவு, குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை , அனைத்திற்கும் மேலாக கணவனின் மருத்துவச் செலவு. இப்படி ஒரு இறுக்கமான சூழலில்தான், கணவரிடம் ஆலோசனை பெற்று, அவர் வியாபாரம் செய்த நூற்பாலை முதலாளிகள் மற்றும் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்போன்றோரின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். கனகராஜின் நேர்மையான தொழில் வழமை அவருக்கு நல்ல நட்புக்களை தொழில்ரீதியாக உருவாக்கி வைத்திருந்தது.

கணவனின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த திருப்தியில், கணவனின் உதவியுடன் தொழிலைக் கவனிக்க ஆரம்பித்த வேளையில், விதி தன் குரூரமான மறுபக்கத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. அறுவை சிகிச்சை முடிந்தும் இரத்தக் குழாயில் இருந்த அடைப்பு நீங்கியும், இரத்தம் வேகமாக பாய்ந்த காரணத்தினால் மூளை நரம்பு வெடித்து, அதி விரைவில் உயிரும் பிரிந்து விட்டது. அதிர்ச்சியில் உறைந்து போன செல்விக்கு உலகமே இருண்டு போனது போல் தோன்றியது. இனி தன் குழந்தைகளின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவு செய்த வேளையில்தான், கணவனின் நல்ல நண்பர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட நூற்பாலை முதலாளிகள் சிலர் கொடுத்த நல்லறிவுரைகள் மற்றும் ஊக்கம் கொண்டு, கணவன் மறைந்த எட்டாவது நாளே தொழிலை கவனிக்க வந்துவிட்டார், செல்வி.

கல்வியும் குறைவு, விசேச தகுதிகள் என்று ஏதும் இல்லை. ஆனால் சமாளித்து விடுவோம் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் மட்டும் கைகொடுக்க 45 வயதில், இரு சக்கர வாகனம் ஓட்டிப் பழகினார். சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய நினைவு மட்டுமே துணை இருந்தது அதற்கு. 20 நாட்களில் மொபெட் ஓட்டி பழகினார். பக்கத்தில் இருக்கும் கிராமங்கள் , சிற்றூர்கள் என்று நேரம் காலம் இல்லாமல் அலைய வேண்டிய அவஸ்தை........ நூற்பாலையிலிருந்து நூல் பைகளை சரக்கு வண்டியில் ஏற்றிக் கொண்டு, இரவு வேளைகளில் கூட சரக்கு வண்டியிலேயே பயணித்து வந்த அனுபவம் இப்படி எத்தனையோ........... ஆனால் அதைப்பற்றியெல்லாம் எண்ணி மாய்ந்து போகாமல், துணிச்சலைத் துணைக் கொண்டு, தன்னை விரட்டிய விதியை திரும்பி நின்று தான் விரட்ட ஆரம்பித்தார். விதியும் பயந்து ஒதுங்க, இன்று மகளை ஒரு ECE பொறியாளராக, ஒரு பிரபல கம்பெனியில் அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். மகனையும் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று தான் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கேட்ட போது, பல கசப்பான அனுபவங்கள் ஆரம்பத்தில் பெற்றிருந்தாலும், இன்று தலை நிமிர்ந்து நிற்பதை எண்ணி பூரிப்படைகிறார். பொதுவாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பெண்களேதான் முதல் எதிரி என்பார்கள். செல்வியின் வாழ்விலும் அது உண்மையாகிப் போனதும் மறுக்க இயலாது. சொந்த, பந்தங்களின் ஏளனப் பேச்சு பல நேரங்களில் வாட்டி எடுத்தாலும், அதனையெல்லாம் துச்சமாகத் தூரத்தள்ளி, நேர்மையும், நம்பிக்கையும், நல்லொழுக்கமும், துணிச்சலும் கொண்டு பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் செல்வி, தன் கணவரின் நினைவுகளைச் சுமந்து கொண்டு..............,