Tuesday, June 28, 2011

பொன் வண்டு

பவள சங்கரி
பாரதி ராஜாவின் கேமராக் கண்களுக்குத் தப்பிய அழகிய பண்ணை வீடூ. வீட்டைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தது போன்று அப்படி ஒரு பசுமை, நிறை மாத கர்ப்பிணியாக துவண்டு நிற்கும் நெற்கதிர்கள்!வரப்பு மேட்டு மேலேயே போய் நெல் வயலைத் தாண்டியவுடன் ஒரு புறம் தாயும், கன்றுமாக வாழைத்தோப்பும், மறு புறம் நெடிதுயர்ந்து கொத்துக் கொத்தாக குலையுடன் தென்னை மரங்களின் அணிவகுப்பு.இந்தக் காட்சியெல்லாம் சாமான்யரையே கிறங்கச் செய்யும் போது கவிஞரொருவரின் கண்ணில் பட்டால் என்ன ஆவது?
அந்தி மயங்கும் மாலை வேளையில் வரப்பு மீது அமர்ந்து கொண்டு ஓடை நீரில், கணுக்கால் தெரியும் வரை சின்னாளப் பட்டுப் பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு காலை விட்டு ஆட்டிக் கொண்டே சலசலக்கும் அந்த ஓடை நீரின் தண்ணளியுடன் கூட்டில் அடையும் ஆவேசத்துடன் அன்றில் பறவைகள் அணிவகுத்துச் செல்லும் அழகையும், குச்சு வீட்டில் காதல் மொழி பேசி கொஞ்சிக் குலவும் இணைகளின் சங்கேத மொழியின் கீதமும் கண்ணையும், செவியையும் ஒரு சேர கொள்ளை கொள்ள, வானத்தில் ஆங்காங்கே கரிய மேகங்களின் ஓவியச் சாலங்களும் அதில் இணைந்து கொள்ள தன்னை மறந்ததொரு மோன நிலைக்குச் செல்ல வேறு முகாந்திரமும் வேண்டுமோ ஒயிலரசிக்கு? இவளுடைய அன்றாட வழமைகளில் இதுவும் ஒன்று………..
“எலே, ஒயிலா, நெதமும் இது ஒனக்கு தொழுவாடா போச்சுதா? காலேசு உட்டு ஊடு வந்தோமா, எதுனாச்சும் சாப்புட்டோமான்னு கூட இல்லாம, நேரா இங்கன வந்து குந்திக்கிட்டு ஆகாசத்தையும், பூமியிம் விரைக்க விரைக்க பாத்துக்கிட்டு அப்படி என்னலே பண்ணுதே…..?”
“போங்க அப்பத்தா, இன்னும் கொஞ்சம் நேரம் போனா நானே வந்துடப் போறேன். நீங்க என்னத்துக்கு இவ்வளவு தொலவு வந்தீங்க?”
“சரி சரி வா போகலாம். உங்கம்மா கடந்து ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சிக்கிட்டு கிடக்கா”
“அப்பத்தா இந்த பச்சப் பசேல் வயலும் தென்னங் காத்தும், சலசலக்கும் நீரோடையும், புள்ளினங்களின் கீதமும் என்னை அப்படியே மயக்கி கட்டிப் போடுது அப்பத்தா. அப்படியே இந்த இயற்கையோடேயே கரைஞ்சு போயிட மாட்டோமான்னு மனசு ஏங்குது அப்பத்தா”
“என்னலே என்னமோ சினிமா வசனமாட்டம் பேசற. உங்கப்பன் என்னமோ உன்னை பெரிய படிப்பெல்லாம் படிச்சு பட்டணத்துல உத்தியோகம் பாக்குற மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுக்கப் போறதா சொல்லிக்கிட்டுத் திறியறான். நீ என்னடான்னா இந்த தோட்டத்தையே கட்டிக்கிட்டு கிடக்கற”
”போங்க அப்பத்தா நான் செத்தாலும் இந்த தோட்டத்தை விட்டுப் போக மாட்டேன் ஆமா!”
அவள் பேச்சில் இருந்த உறுதியும் முகத்தில் தெரிந்த கடுமையும் அப்பத்தாவையும் ஒரு கணம் மிரளச் செய்தது.
“அப்பத்தா நம்ம கருப்பராயன் கோவில்கிட்ட பெரிய வேப்பமரம் இருக்கிதுல்ல. அதுக்குங் கீழே சின்ன சின்ன சாமியா இருக்குதே அது என்ன சாமி அப்பத்தா?”
”அதுவா அது ஏழும் ஏழு கன்னிமாருங்க.நம்ம பரம்பரையில கன்னியா செத்துப் போன் பொண்ணுங்க நம்ம குலத்ய்வமா அங்கனயே இருந்து நம்ம வம்சத்தையே காத்திக்கிட்டு இருக்குதுன்னு எம்பட மாமனாரு, அதேன் உங்க பெரிய தாத்தன் சொல்லுவாரு”
பாட்டியும்,பேத்தியும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். வழக்கம் போல அம்மாவின் சத்தத்தைச் சமாளிக்க ஓடிச் சென்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘ சாரிம்மா….என் செல்லந்தானே..கோவிச்சுக்காதம்மா’ என்று கொஞ்சிக் கொண்டே காபியை வாங்கி உறிஞ்சிக் கொண்டே, ‘மஞ்சுக் குட்டி’ என்று செல்லமாகக் கூப்பிட்டாள்.
அக்காவின் குரலைக் கேட்டவுடன் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப் போல துள்ளிக் கொண்டு ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
”என்னக்கா,இன்னைக்கு என்னக்கூட பார்க்காம தோட்டத்துக்குப் போயிட்ட. உனக்காக எவ்வளவு நேரமா என் மார்க் சீட்டை காட்டறதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்”
“என் செல்லக்குட்டி எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க் தானே. அதில என்ன சந்தேகம். சரி உனக்கு உன்னோட ஃபேவரிட் மயிலிறகு நாளைக்கு கொண்டு வந்து தறேன். சரியா.”
“அம்மா நான் போயி கண்ணன் அண்ணனை பார்த்துட்டு வாரேன்”
“எதுக்குடி இந்நேரத்துல போற……. காலைல போகலாமில்ல”
“இல்லம்மா,எனக்கு அண்ணனைப் பார்க்கலாம்னு இருக்கு. நாளைக்கு அண்ணன் தான் என்னை பாக்க வாரோனும்” என்றாள் சிரித்துக் கொண்டே.
கண்ணன் ஒயிலாவின் பெரியப்பா மகன். அவளிடம் மிக அன்பாக இருப்பவன்.பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அவன் எடுக்கும் துணியைத்தான் அவள் அணிந்து கொள்வாள். அண்ணனும் தன் தங்கைக்கு அவள் விரும்பும் துணியைப் பார்த்து பார்த்து டவுனுக்குச் சென்று வாங்கி வருவான்.ஒயிலாவும் ஒரு சின்ன விசயமானாலும் அண்ணனைக் கேட்காமல் செய்ய மாட்டாள். பக்கத்துத் தோட்டத்திலேயே அவள் பெரியப்பா வீடு என்பதால் தினமும் ஒரு முறையாவது சென்று வருவாள்.
பெரியப்பா, பெரியம்மா, அண்ணன் எல்லோரையும் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்கு இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்பாவுடன் உட்கார்ந்து அன்று நடந்ததெல்லாம், கல்லூரித் தோழிகள் பற்றி என்று ஒரே அரட்டைதான்.
பாட்டியின் அருகில்தான் அவளுக்கும் படுக்கை. தூக்கம் வரும் வரை ஏதேனும் பழங்கதைகள்பேசிக் கொண்டிருப்பது இருவருக்கும் வழமையான ஒரு பொழுது போக்கு. பாட்டியும் ஊர் கதை அத்தனையும் அறிந்து வைப்பவர். தன் பேத்தியும் எல்லாவற்றையும் பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லது என்று எண்ணுபவர்.
“அப்பத்தா, போன வருசம் நம்ம செண்பகம் அத்தையோட பொண்ணு சந்திரா, அதான் எங்கூட படிச்சாளே அப்பத்தா, அவ எப்படி அப்பத்தா செத்திருப்பா. அவ, மண்ணெண்ணை அடுப்பு வெடிச்சி செத்துட்டதாத்தானே நாம நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, அப்படி இல்லையாம்.அவ வேணுமின்னே தானே நெருப்பு பத்த வைச்சுக்கிட்டாளாம். ”
“சரி அதப்பத்தி இப்ப என்னாத்துக்குப் பேசறே? தூங்கறப்ப கண்டதையும் பேசக் கூடாது.
” இல்ல அப்பத்தா,செத்துப் போனப்பறம் என்ன ஆவாங்கன்னு சொல்லு ….”
“நல்லபடியா செத்தா சாமிகிட்ட போவாங்க. உடம்பு போனாலும் ஆன்மா அழியாது.ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துட்டு அடுத்த பிறவியோ அல்லது சாமி பாதத்துக்கோ போயிடும். அது அவரவர் விதிப்படி நடக்கும். ஆனா, உங்க அத்தை மகள் போல நிறை மாத புள்ளதாச்சியா, புருசன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு கிணத்துல விழுந்து செத்துப் போனாப் பாரு அப்படிப் போனாத்தான் ஆவேசம் அடங்காம ஆவியா அலைவாய்ங்க…….அவளும் அப்படித்தேன் கொஞ்ச நாள் அலைஞ்சிக்கிட்டு கிடந்ததா சொல்லுவாய்ங்க….அப்பறம் பூசையெல்லாம் பண்ணி அவளுக்கு சாந்தி பண்ணாங்க.. சரி சரி தூங்கு. காலைல பேசிக்கலாம்.தூங்கும் போது சாமியப் பத்தி மட்டும் தான் நினைக்கோனும் சரியா ஆத்தா….”
வழமைக்கு மாறாக அன்று வெகு சீக்கிரமே விழித்துக் கொண்டாள் ஒயிலரசி.
நேரே சமயலரையில் சென்று தாயிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டாள். தாய்க்கு மிக ஆச்சரியம் மகள் என்றும் இல்லாத திருநாளாக இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டாளே.
“அம்மா எனக்கு இன்னைக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறாயா…”என்றாள்
“ என்னடி இது அதிசயம். தலைக்கு குளிக்கறதுனாலே உன் கிட்ட சண்டை போட்டு மாளாது, இன்னைக்கு அதிசயத்துக்கு மேல அதிசயமா இருக்கு.என்னை வேற தலைக்கு குளிச்சி விடச் சொல்லற…மழைதான் கொட்டப் போகுது போ…”
மகளுக்கு தலைக்கு நல்லெண்ணெய் இளம் சூடாகக் காய்ச்சி அதில் சிறிது வெந்தயமும் போட்டு, அந்த எண்ணையை தலையில் நன்கு தேய்த்து ஊறவிட்டு பிறகு தண்ணீர் காய வைத்து மகளுக்கு தலை தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணிப் புகை போட்டு , அதன் மீது பெரிய கூடை கவிழ்த்து , அவளுடைய சுருள் சுருளான, நீண்ட கூந்தலை அதன் மீது விரித்து சாம்பிராணிப் புகை எல்லாப்பக்கமும் பரவும் படிச் செய்து அவள் கூந்தல் காய்ந்ததோடு நறுமண்மாகவும் இருந்தது.
அம்மாவை இட்லி ஊட்டி விடச் சொல்லி அடம் பிடித்து ஒரு இட்லி சேர்த்தே சாப்பிட்டாள் என்றும் இல்லாதத் திருநாளாக.தனக்கு மிகவும் பிடித்தமான, பளபளவென கருப்பு வண்ண ஜெர்சி பாவாடையும் அதே வண்ண இரவிக்கையும், வெள்ளை சிப்பான் ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு அழகு தேவதையாய் கல்லூரிக்குக் கிளம்பினாள்.
தன் மகளின் அழகைப் பார்த்து தாய்க்கு மாளாத பெருமை. இருக்காதா பின்னே. அந்த ஊரிலேயே கொடியிடை அம்மன் போல மிக அழகான பெண் இவள்தான். கடைக்குட்டி மஞ்சுவும் அக்காவின் அழகிற்கு சளைத்தவள் அல்ல. தன் மகள்களுக்கு சுத்திப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். வீட்டில் ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாடிக்கையாக நடக்கின்ற ஒன்று.
ஊரு கண்ணு உறவு கண்ணு
கோழி கண்ணு கொள்ளி கண்ணு
அண்டை கண்ணு அயலு கண்ணு
பல்லி கண்ணு பாம்பு கண்ணு
தாய் கண்ணு தந்தை கண்ணு
உற்றார் கண்ணு மற்றார் கண்ணு
மூளி கண்ணு முட்டை கண்ணு
எல்லா கண்ணும் மண்ணோடு மணணாப் போக
என்று சிகப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் போட்டு அது காரத்துடன், சடசடவென பொரிய, தாய் கண்ணிலோ மகள்களின் கண் திருட்டியெல்லாம் போய் விட்டது என்று பெருமை பொங்கும் !
பேருந்து நிறுத்தத்தில் தோழி மாலாவுடன் நின்று கொண்டிருக்கும் போது ஏதோ லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது ஒயிலாவிற்கு. என்னமோ நடக்கப் போகிறது என்பதை உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டிருந்தது. எங்கோ மற்றொரு உலகத்தின் வாசல் தனக்காக திறந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது.ஆனாலும் மன உறுதி அதனோடு போராடச் செய்து தலையை சிலிர்த்துக் கொண்டு கண்ணை விரித்து பார்வையை தெளிவு படுத்திக் கொண்டு ஒரு அடி எடுத்து வைக்க முயன்று….தோற்று , மூக்கில் ஏதோ ஊறுவது போன்று தோன்ற துடைக்க எண்ணி கைக்குட்டையை எடுத்து துடைத்து விடடு தன்னிச்சையாக கையைப் பிரித்துப் பார்த்தவள் அந்தக் கைக்குட்டையெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், சில்லி மூக்கு உடைந்திருக்கும் சற்று நேரத்தில் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டே, பேருந்து வருவதைப் பார்த்து விட்டு அதை நோக்கிச் செல்ல முடிவெடுத்த வேளையில் அருகிலிருந்த தோழி மாலாவிற்கு, ஒயிலாவின் முகத்தில் இருந்த ஒரு இயலாமை தன்னையும் பின் வாங்கச் செய்தாலும், ஒயிலா அவள் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு இருவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள்.
உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள்……..அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது!ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது……..இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.
பி.கு. நண்பர்களே, இக்கதையின் இறுதிப் பகுதியை நீங்கள் எழுதலாம். இக்கதையின் போக்கிலேயே சரியாக இருக்கும் கதையை நிர்வாண நேனோ செகண்ட்ஸ் கதையின் எழுத்தாளர் திரு ரிஷி ரவீந்திரன் அவர்கள் தேர்ந்தெடுத்து அவரை வெற்றியாளராக அறிவிக்கப் போகிறார். தொடருங்கள் நண்பர்களே….வாழ்த்துகள்.

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (15)

இல்லறம் என்ற இனிய பந்தத்தின் அடித்தளமாக இருப்பது, சம்பந்தப்பட்ட அந்த இரு இதயங்களின் இடையே ஓடும் மெல்லிய நூலிழை போன்ற சுயநலமற்ற அன்பு மட்டுமே. தன்னுடைய சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் என அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்ளும் அந்த நேசம் மிக அவசியம். ஒரு இதயம் வலியால் துடிக்கும் போது அதை உணர்ந்து அதற்கான மருந்தாக இருககக் கூடிய பாசமாக இருக்க வேண்டும் மற்றொரு இதயம். இதில் ஏதேனும் தடுமாற்றம் வரும் போதுதான் அந்த இனிய பந்தமே கேள்விக் குறியாகிவிடுகிறது.

அந்த வகையில் அனுவிற்குப் பல சந்தேகங்கள் மனதில் எழ ஆரம்பித்திருந்தது. இன்று வரை மாறனிடமிருந்து, ஒரு அன்பான விசாரிப்போ கனிவான ஒரு பார்வையோ, குறைந்த பட்சம் ஒரு நட்பின் வெளிப்பாடோ கூட இல்லை என்பது ஆச்சரியமான விசயமாக இருந்தது. அவளுக்கு உள் மனதில் லேசாக பொறி தட்ட ஆரம்பித்தது. மாறன் மனதில் தன்னைவிட உயர்ந்த இடத்தில் வேறு எவரோ இருப்பதை உணர முடிந்தது அவளால். எதையும் மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய கற்பூர புத்தி உடையவள் அனு. அதனாலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ள முடிந்தது அவளால். கண்டதும் காதல் என்ற தத்துவத்திலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லை அவளுக்கு. அதனால் தன் மாமன், மாமிக்குச் செய்யக் கூடிய பணிவிடைகள் ஒரு பாரமாக ஆவதற்கும் வாய்ப்பில்லை. இயற்கையிலேயே இரக்க சுபாவம் கொண்ட அனுவிற்குத் தன் கண் முன்னால் அடுத்தவர் வேதனைப் படுவதை சகித்துக் கொள்ள முடியாது முடிந்த வரை உதவி செய்ய நினைப்பாள். அலுவலகப் பணியில் கூட இயலாதவர்களுக்காக இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்கள் வேலையையும் செய்து கொடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டாள்.

நல்ல காரியம் பேசுவதற்காக கிளம்பிய போது இது போல தடை ஏற்பட்டது சிறிது கவலை அளிப்பதாக இருந்தது மாறனின் பெற்றோருக்கு. திரும்பவும் ஒரு முறை குலதெய்வ வழிபாடு செய்தால் தேவலாம் போல் தோன்றியது. இருவரும் இது பற்றி கலந்து முடிவு செய்ய வேண்டும் என்று ஒருவருக்கொருவர் தன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ரம்யா………இதயம் இரத்தம் சிந்த உதடு மட்டும் புன்னகைக்கும் அரிய கலையைக் கற்ற அற்புதப் பிறவியவள். அலுவலகம் விட்டு வீடு சென்றாலே இப்போதெல்லாம் அச்சமாக இருக்கிறது அவளுக்கு. காரணம் அவள் தாயின் நியாயமான ஆசையையும் பூர்த்தி பண்ண வேண்டிய கட்டாயம் தான். ஆம் தன் குழந்தைக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணம் செய்து வைத்துப் பார்ப்பதில்தானே ஒரு பெற்றோரின் உண்மையான கடமை இருக்கிறது. ரம்யாவிற்கு அவள் மனதிற்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லாத சூழலில் கூட விதி அவள் வாழ்க்கையில் கொடூரமாக அல்லவா விளையாடி விட்டது. இப்போது திருமணம் என்ற பேச்செடுத்தாலே, இதயத்தில் இடி விழுந்தது போல ஒரு அதிர்வல்லவா ஏற்படுத்துகிறது…….. இதைச் சொல்லி புரிய வைக்கும் பக்குவம் கூட அவளிடம் இல்லாது போய்விட்டது. அப்படியே சொன்னாலும் அதைச் சரியாக அவள் பெற்றோரால் புரிந்து கொள்ள இயலுமா என்பதே கேள்விக்குறிதான். காரணம் அவர்களுக்கு ஏற்கனவே தன் மகளின் சம்பாத்தியத்தினால் குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயம் வந்ததில் ஒரு குற்ற உணர்ச்சி.

எது எப்படியாயினும் ரிஷி தன் உண்மையான அன்பை அலட்சியப்படுத்தியதன் வலி இன்றளவும் தாங்கவொண்ணாததாகவே இருக்கிறது ரம்யாவிற்கு. காரணம் எவ்வளவு உயர்ந்ததாகவும், உன்னதமாகவும் இருந்தாலும், ஒரு உண்மையான காதலுக்குச் செய்யும் துரோகத்திற்கு ஒரு முன்னறிவிப்பாவது கொடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் இன்றளவும் அவள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விசயம். இதையெல்லாம் கடந்து அடுத்த ஒரு பந்தத்திற்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே.



வந்தனா, எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ரம்யாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தின் காட்சியை மறக்க இயலாமல் 



தவித்தாள். தானே அதற்கு முழுமையான காரணமாகிப் போனதின் வலி பாடாய்ப் படுத்துவதையும் தவிர்க்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள். ரிஷியின் நிலையோ இதை விடக் கொடுமையானது. வெளியில் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருந்தான். ரம்யாவிற்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று மனதார வாழ்த்திக் கொண்டிருப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாத சூழல் அவனைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது. இதற்கிடையில் வந்தனாவின் உடல் நிலை வேறு முழுமையாக குணமடையவில்லையோ என்று சந்தேகப் படும் வகையில் அடிக்கடி அவளுக்கு சுகவீனம் ஏற்படுவதும், மருத்துவ மனை செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதும் சேர்ந்து அவன் நிம்மதியை குலைத்துக் கொண்டிருந்தது. வாழ்க்கை பல நேரங்களில் இப்படித்தான் தன் போக்கில் இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும். பகுத்தறிவோ, பட்டறிவோ எதுவும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. இதற்குப் பெயர்தான் விதி என்பதோ?


படைப்பாளிகள் அதிகமாக உணர்ச்சிவயப் படுகிறவர்களாக இருப்பினும் அதனையே தன் படைப்பில் புகுத்தி சாதனைப் படைக்கும் வல்லமையும் பெற்றவர்களாவதால் அதுவும் ஆக்கப்பூரவமானதாகவே அமைந்து விடுவதும் கூடுதல் நன்மையாகி விடுகிறது! அந்த வகையில் அவந்திகாவின் மென்மையான குணம், நித்சலமான மனது, யதார்த்த்மான போக்கு, பரோபகாரச் சிந்தை இப்படி அனைத்தையும் அவளுடைய சித்திரங்கள் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும். உயிரோட்டமுள்ள அவளுடைய சித்திரங்கள் ஒவ்வொன்றும் பல கதைகள் பேசி, காண்போரின் பார்வையைக் களவாடிக் கொண்டு போகும் சக்தி வாய்ந்ததாகும். புதிய இடம், புதிய சூழல் அவள் மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்தது. ரம்யா கலகலப்பாக பழகும் சுபாவமாக இருந்தாலும், அவளிடம் ஏதோ பெரிய சோகம் ஒளிந்து கொண்டிருப்பது தெரிந்தது. இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கேட்கும் அளவிற்கு இன்னும் நெருக்கமான பழக்கமில்லையே. அதனால் அமைதியாக இருக்க வேண்டியதாகத்தான் இருந்தது. மாறன ஒரு நல்ல நண்பனாகவும், பண்பாடு அறிந்த மனிதனாகவும் இருப்பது அவளுக்கு அவன் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. தினமும் ரம்யா அவந்திகாவை அவளுடைய அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு தன் அலுவலகம் செல்வதை வழமையாக்கிக் கொண்டாள்.

அமைதியாக பிரச்சனை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிற அவந்திகாவின் வாழ்க்கையில் குழப்பம் ஏதும் வராமல் இருக்க வேண்டும் என்று அவளின் பெற்றோர் அன்று கோவிலில் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டிருந்தனர். எந்த வரனும் அவளுக்குச் சரியாக அமையவில்லையே, வயது ஏறிக் கொண்டே போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.அவள் அழகிற்கும், கல்வித் தகுதிக்கும் ஏற்ற வரன் அமைய வேண்டுமே என்று ரொம்பவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர் அவள் பெற்றோர். ஆனால் அவந்திகாவோ அதைப் பற்றியெல்லாம் ஏதும் சிந்திக்கக் கூட பொழுதில்லாமல், உத்தியோகம், சித்திரம் என்று காலத்தை விரட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்குப் புரியவில்லை, அந்த காலம் வெகு விரைவில் அவளைத் திருப்பி விரட்டப் போவது!

தொடரும்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!



அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!

அதோ அந்த பறவை போல வாழ ஆசைதான்
இதோ மெல்லிய என் சிறகை நீ சீண்டாத வரை

அந்த நிலவைத் தேடி வானுலகம் சென்றேன்
அந்த நிலவும் கள்ளமாய் மறைந்தது மேகத்தினுள்

தண்ணிழல் தேடி மலையருவியை நாடிச் சென்றேன்
தண்ணீரும் வெண்ணீரானது வெந்து வாடி நின்றேன்

பன்னீராய் துளிர்க்கும் வெண்பனிச் சிகரம் சென்றேன்
பன்னீரும் செந்நீராய் மாறி பனிச்சூடாய் தகித்தது

பளபளக்கும் வைரஒளியை பேதையாய் நெருங்கினேன்
வைரஒளியும் மின்னலாய் மாறி மறைந்தே போனது

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவிதானே
உயரவும் வேண்டாம் தாழவும் வேண்டாம்!