Thursday, April 9, 2020

கொரோணா ஒழிக!






ஏய் கொக்கரிக்கும் கொடுங்கோலன் கொரோணாவே
போதும் நிறுத்து உன் ஆட்டத்தை
பல்லாயிரம் உயிர்களைக் கபளீகரம் செய்தும்
இலட்சக்கணக்கான மனிதர்களை சீண்டிப் பார்த்தும்
கோடிக்கணக்கானவர்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியும்
அடங்கவில்லையா உன் அகோரப் பசி?
மனிதர்களின் உயிர்களைக் குடித்தது போதும்
வேண்டுமானால் அவர்தம் பாபம் கோபம்
குரோதம் ஆணவம் அகங்காரம் வன்மம்
என்றனைத்தையும் உண்டு ஆற்றிக்கொள் உன்பசியை!
எம் சந்ததியினரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும்
இனியும் அசைத்துப் பார்க்கவும் எண்ணிவிடாதே!
எச்சரிக்கிறேன் உன்னை! அடங்கி விடு!
அடங்க மறுத்தால் அழித்து விடுவாள்
பராசக்தி! பரிதவித்து நிற்கும் சாமான்யர்களின்
துயரம் நிறைந்த வேளையில் மிகுந்திருக்கும்
சோகத்தைத்தானே பலி கொடுக்க இயலும்?
அதையேற்று அடி ஆழத்தில் புதைந்துவிடு
அன்னையின் பொற்பாதங்களில் ஆதரவாய் பணிந்துவிடு
அவளருளால் நற்பிறவி வாய்க்கும் வரமேற்றுவிடு
செய்த பாவத்திற்கு மன்னிப்பும் பெற்றுவிடு!
சரணாகதியால் பிழைத்துப்போ! சேதாரமின்றி தப்பிப்போ!!
சங்கடமேற்படுத்தி சங்காரம் செய்யத் தூண்டிவிடாதே!!

Monday, April 6, 2020

கொரோனா ..... 3



கரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் நம் பிரதமர் மோடி அவர்கள் பேசியது வரவேற்கத்தக்கது. சோனியா காந்தி, பிரணாப், மன்மோகன் சிங், தேவகவுடாவுடன் பிரதமர் ஆலோசனை செய்துள்ளார்கள். விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேசத் திட்டமிட்டுள்ளதும் பாராட்டிற்குரியது. இது மிகவும் ஆக்கபூர்வமான செயல்பாடு என்பதில் ஐயமில்லை.

கொரோனா கொடுமை - 2




அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,000 என்பதை தாண்டிவிட்டது. தற்போது நிலவரப்படி கிட்டத்தட்ட 9,620 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெகு விரைவில் இது 1 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் அபாய எச்சரிக்கை மணி அடித்து விட்டார்கள். இந்த நிலையிலும் மக்கள் கொஞ்சமும் விவரம் இல்லாமல் வீடு அடங்கிக் கிடக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பதால் நிலைமை மேலும் மோசமாவதில் ஐயமில்லை. குழந்தைகள் கூட தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பதாகவும், வால்மார்ட் போன்ற மால்களில் பழையபடியே மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் சாவகாசமாக பொருட்கள் வாங்கிச் செல்வதாகவும் நண்பர் ஒருவர் கூறியது கவலை அளிப்பதாக இருந்தது. அதைவிட முக்கியமாக அவர் கூறிய இன்னொரு செய்தி, நம் இந்திய நாட்டின் அருமை இப்போதுதான் தெரிகிறது, நம் பிரதமரும், தமிழக முதல்வரும் எவ்வளவோ பரவாயில்லை. முன்னெச்சரிக்கையுடன் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து விரைவாகச் செயல்படுவதால் தொற்றின் வீரியம் விரைவில் கட்டுக்குள் வந்துவிடும் என்று நம்பிக்கை அளிப்பதாகவும் கூறினார். கட்சி சார்பற்ற என்.ஆர்.ஐ. என்பதால் நம்பிக்கைக்கு உரிய கருத்து என்றே பார்க்கிறேன். 144 தடை உத்திரவும் போட முடியாமல் மக்களைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் திணறுகிறார்கள். நம் நாட்டில் காவல்துறையினரின் சிறப்பான செயல்பாடு மக்களின் அடிப்படைக் கலாச்சாரம் சார்ந்த சுய கட்டுப்பாடு நிலைமையை பெருமளவில் கட்டுக்குள் வைத்திருந்தாலும், மக்கள் சந்தைகளில் கூடுவதைத் தவிர்க்க முடியாமல் அலைமோதுகிறார்கள். இதையும் உணர்ந்து செயல்படும்   நம்  தமிழக அரசு ஒவ்வொரு ஊராக 100 உரூபாய் விலையில், முக்கியமான காய்கறிகளை ஒரு பையில் போட்டு தெருவில் கொண்டு வந்து விநியோகம் செய்வது சிறப்பான செயல்திட்டம்.

அமெரிக்காவைப் பொருத்தவரை இது போன்ற திட்டங்களுக்கெல்லாம் சாத்தியமே இல்லை. இவர்களுடைய அடிப்படைக் கலாச்சாரமே ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் செய்வதறியாது திகைத்துப்போய் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் போலும். குளிர் காலம் முடிவடையும் தருணத்தில் வசந்த காலத்தைக் கொண்டாடும் நிலையில் குழந்தைகள் வீட்டிற்குள் அடைந்து கிடக்க விரும்பவில்லை.

அந்த வகையில் அமெரிக்காவை கொரோனா என்னும் சுனாமி சீரழித்துக்கொண்டிருக்கிறது. டாக்டர் ஆந்தோனி பவுஸி என்கிற நியூ யார்க் நோய்த்தொற்று நிபுணர் கூறுகையில் புளோரிடா, மிச்சிகன் லுயூசியான உள்ளிட்ட இதுவரை கொரோனா பரவாத இடங்களில் கூட தற்போது புதிதாகப் பரவத் துவங்கி உள்ளது என்றுள்ளார். ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகி உள்ளது என்கிறார். இதைவிட ஆச்சரியம் ஜியார்ஜியா மாநில கவர்னர் பிரைன் கெம்ப் என்பவர், இது தொற்றுக் கிருமி என்பதே தெரியாமல் இருக்கிறார். மேலும் இது மக்களை பாதிக்காமல் இருக்க சமூக இடைவெளி முக்கியம் என்பதை வெகு சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். இனிமேல் மக்களை சரியாக வழி நடத்திவிடுவேன் என்றதுதான் .. காலங்கடந்த தெளிவு ..  கடவுளே என்றுதான் இந்த மனித சமூகம் இந்த கொரோனா கொடுமையிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பப் போகிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!