Thursday, April 9, 2020

கொரோணா ஒழிக!






ஏய் கொக்கரிக்கும் கொடுங்கோலன் கொரோணாவே
போதும் நிறுத்து உன் ஆட்டத்தை
பல்லாயிரம் உயிர்களைக் கபளீகரம் செய்தும்
இலட்சக்கணக்கான மனிதர்களை சீண்டிப் பார்த்தும்
கோடிக்கணக்கானவர்களை அச்சத்தின் உச்சத்தில் நிறுத்தியும்
அடங்கவில்லையா உன் அகோரப் பசி?
மனிதர்களின் உயிர்களைக் குடித்தது போதும்
வேண்டுமானால் அவர்தம் பாபம் கோபம்
குரோதம் ஆணவம் அகங்காரம் வன்மம்
என்றனைத்தையும் உண்டு ஆற்றிக்கொள் உன்பசியை!
எம் சந்ததியினரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும்
இனியும் அசைத்துப் பார்க்கவும் எண்ணிவிடாதே!
எச்சரிக்கிறேன் உன்னை! அடங்கி விடு!
அடங்க மறுத்தால் அழித்து விடுவாள்
பராசக்தி! பரிதவித்து நிற்கும் சாமான்யர்களின்
துயரம் நிறைந்த வேளையில் மிகுந்திருக்கும்
சோகத்தைத்தானே பலி கொடுக்க இயலும்?
அதையேற்று அடி ஆழத்தில் புதைந்துவிடு
அன்னையின் பொற்பாதங்களில் ஆதரவாய் பணிந்துவிடு
அவளருளால் நற்பிறவி வாய்க்கும் வரமேற்றுவிடு
செய்த பாவத்திற்கு மன்னிப்பும் பெற்றுவிடு!
சரணாகதியால் பிழைத்துப்போ! சேதாரமின்றி தப்பிப்போ!!
சங்கடமேற்படுத்தி சங்காரம் செய்யத் தூண்டிவிடாதே!!

No comments:

Post a Comment