பவள சங்கரி
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊரின் மத்திய பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு புறம் சிரிப்பொலி அதிர்ந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக அங்கு கண்கள் சென்றபோது, ஒரு கூட்டமாக சில முதியவர்கள் அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பது போல கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைத்தனமான அந்த நடவடிக்கை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது அருகில் என்னைப் போலவே பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் அவர்கள் அருகில் சென்று அதே உற்சாகத்துடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலில் பெயரையும், ஊரையும் கேட்டவர், அடுத்தது வயதையும் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். உடனே அனைவரின் முகத்திலும் உற்சாகம் குறைந்ததோடு, லேசான கலக்கமும் தெரிந்தது. அதில் ஒருவர், கோபமாக ‘என்பது வயசு ஆவுது.. இப்ப என்ன அதுக்கு?’ என்றார். மிக யதார்த்தமாக, நட்புடன் கேட்ட கேள்வியாக இருப்பினும் அது அவர்களுடைய மகிழ்ச்சியை மொத்தமாய் சீர்குலைத்துவிட்டது. அனைவரும் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். சற்று நேரம் முன்பு அத்துனை கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்து, தங்களின் வயதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென்று அவர்களின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் ஆச்சரியம் ஊட்டக்கூடியது. சுயபச்சாதாபத்தில், வேதனையோடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நடையில் முன்பிருந்த உறுதியும் குறைந்திருந்தது. உலகில் பிறந்தவர் அனைவரும் இது போன்ற மாற்றங்களுக்கு ஒரு நாள் தயாராகத்தான் இருக்க வேண்டிவரும். ஒரு சிலர் அந்த முதுமையையே தங்களுக்குக் கிடைத்த மரியாதைக்குரிய காலமாகக் கருதி நிம்மதி கொள்பவரும் இருக்கின்றனர்.