Saturday, February 2, 2013

வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்! (1)


பவள சங்கரி


 
’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

 உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

Thursday, January 31, 2013

மின்னும் நட்சத்திரம்


பவள சங்கரி


ஏழு ஸ்வரங்களுக்குள் நீயும்
எட்டாத எட்டாம் ஸ்வரத்தில் நானும்.
உனக்குள்ளேயே தொலைந்து போனேன்


நீயில்லாத பொழுதுகளிலும்
என்னை மீண்டும் தொலைக்க உன்னைத்
தேடிக் கொண்டேயிருக்கிறேன்.

இருண்ட இரவில் நிலவின் ஒளியில்
இதயத்தினுள் ஊடுறுவி உறுத்தியது
நீயில்லாத தனிமை.

இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை
இது எப்போது ஆரம்பித்தது என்றும் புரியவில்லை.
ஆனால் மனதிற்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

பருவமும், காலமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
எம் இதய வானில் மூடியிருக்கும் கருமேகங்களைக்
களைந்தெறிய நீ எம்மைத் தொடர்ந்து வருகிறாய்

நீ எனக்களித்த அத்துனை இன்பங்களையும்
உனக்கேத் திருப்பியளிக்க நான் விழைந்தாலும்
மேலும் மேலும் என்னையே கடன்காரனாக ஆக்குகிறாய்

எம் இருண்ட பகுதிகளைக் கடக்க
உம் தோளின்மீது சாய்ந்து துயர் துடைத்துக் கொள்கிறேன்
இருந்தும் நீ என்னிடம் இருப்பது போல  
ஆத்மார்த்தமாக என்னால் உன்னிடம் இருக்க முடியவில்லை.
காரணம் என் ஆத்மா என்னிடமில்லையே!

நன்றி: நிலாச்சாரல்

Tuesday, January 29, 2013

தைப்பூசத் திருவிழாவும், எம் நூல்கள் வெளியீடும்

பவள சங்கரி
Inline image 1

’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. பலவிதமான ஆன்மீகச் சிறப்புகளைக் கொண்டது தை மாதம். தை மாதத்தில், பூச நட்சத்திரத்தில் வரும் தினம் புண்ணிய தினமாக நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு வருகிறது. குறிப்பாக பௌர்ணமியும் சேர்ந்து வரும் தைப்பூசத் திருநாள் மிகவும் விசேடமானது. பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதர் முனிவருக்கும், சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவக் காட்சி கிடைத்த அற்புத நாளாம்.

2013ம் ஆண்டு 27ம் நாள் பௌர்ணமி தினத்தில், சிவாம்சம் பொருந்திய சூரிய பகவான் மகர இராசியிலும், சக்தி அம்சம் பொருந்திய சந்திர பகவான் கடக ராசியில், பூச நட்சத்திரத்திலும் ஆட்சி பெற்று, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் இருப்பது பௌர்ணமி தினத்தில் வரும் தைப்பூசத் திருநாளில் மிகச் சிறப்பாம். இந்நாளில் துவங்கப்படும் எக்காரியமாயினும் நிறைந்த பலனை அளிக்கக் கூடியதாகுமாம்.  அறிவின் தேவதையாக போற்றப்படும் குரு பகவான் பூச நட்சத்திரத்தின் நாயகனாகப் போற்றப்படுகிறார்.

சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவத்தில் இவ்வுலகம் தோன்றியதாகவும், முதன் முதலில் நீர் பின்பு நிலம், நெருப்பு, ஆகாயம் என அனைத்து பஞ்ச பூதங்களும் தோன்றியதாகக்  கூறுவார்கள்.

சிவபெருமானாரின் அருளால் தோன்றிய முருகப் பெருமானுக்கு அன்னை பராசக்தி சகல சக்திகளையும் வழங்கியத் திருநாளும் இத்தைப்பூசத் திருநாள் என்பதாலேயே, முருகன் வாழும் குன்றுதோறும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பழனி மலை முருகன் கோவிலுக்குப் பாத யாத்திரையாகவும், விரதமிருந்து மாலையணிந்து பெரும் பக்தர் கூட்டம் வருவதைக் காண முடிகிறது. புனித நதிகளில் நன்னீராடி வழிபடுதலும் சிறப்பாம். கொங்கு நாட்டில், தைப்பூசத் திருநாளில்  குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாகச் செய்வதையும் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் உலகப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுடைய குலதெய்வமான அருள்மிகு பெரியாண்டவர் எல்லம்மாதாய் திருக்கோயிலில் 14ம் ஆண்டு குடமுழுக்கு மற்றும் 36ம் ஆண்டு தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. வெளி நாடுகள் மற்றும் வெளியூர்களில் வாழுபவர்களும், இயன்றவரை வந்து கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 4000 மக்கள் கலந்துகொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக அன்னதானத்துடன் நடந்தேறியது.

மணலும் (வாலிகையும்) நுரையும் - (9)


sand and foam - 9 - Khalil Gibran

பவள சங்கரி


வாழ்க்கை ஓர் ஊர்க்கோலம்.
பாதத்தின் அந்த மெத்தனம் அதை வெகு துரிதமாகக் கண்டுணர்ந்ததால் அவன் வெளியேறுகிறான்.
மேலும் பாதத்தின் அந்த துரிதம் அதை மிகத் தாமதமாகக் கண்டுணர்ந்ததால் அவனும்கூட வெளியேறுகிறான்.

பாபகம் என்ற அந்த ஒன்று உள்ளதெனில் நம்மில் சிலர்  நம் முன்னோர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி அதைச் செய்கிறோம்;
மேலும் நம்மில் சிலர் நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக, ஆளுமையுடன்  அதைச் செய்கிறோம்.

உண்மையில் நல்லவன் என்பவன் தீயவர்களாகக் கருதப்படும் அனைவருடனும் இருக்கும் அந்த ஒருவனே.

Monday, January 28, 2013

வான தேவதையின் வெண்ணாடை!




சுட்டெரிக்கும் சூரியனில்
கனிநதுருகும் வெண்பனியும்
கையகலத் திரைகொணடு பளபளவென மின்னும்
கடலளவு ஒளிக்கதிரை மறைக்கத்தான் இயலுமா?
கருமமே கண்ணாயினாரென
சொல்லொன்று செயலொன்றென்று
சுற்றித்திரியும் மாக்களாய் இன்றி
போக்கும் வரவுமிலா நித்தியமாய்
நிறைந்திருக்கும் வானொளியாய்
ஊடுறுவும் ஒளிக்கீற்றையும்
மறைந்திருக்கும் தண்ணளியையும்
தன்னகத்தேக்கொண்டுத் தவம்புரியும்
தன்னிகரில்லாத் தத்துவநாயகன்!

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...