Friday, April 19, 2019

நமது நாட்டிற்கும் இது சரிவருமோ?


ஒரு அரசோ அல்லது தொழிலகமோ எந்த நிர்வாகமாகவோ இருந்தாலும் அதன் வெற்றி, தோல்வி என்பது அதன் நிர்வாகிகளின் நிர்வாகத் திறன் சார்ந்ததாகத்தான் உள்ளது. அந்த வகையில் உலகில் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ள சீனாவில் தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சனை மிக அதிகம். அந்த நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இதனை சமாளித்து சரி செய்வதற்காக ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலைத் திட்டம் என்பதை தீவிரமாக சிந்தித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளார். 

தமிழ் நாட்டில் திருப்பூர், கோவை, ஈரோடு, உடுமலைப்பேட்டை, பல்லடம், போன்ற தொழில் நகரங்களில் அந்தந்த தொழிலுக்குரிய தொழிலாளர்கள் கிடைக்காத பிரச்சனை பெருமளவில் உள்ளன. 50% தொழிலாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தொழிலை சரிவர நடத்த முடியாத நிலையே பெரும்பாலும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கங்காணிகள் மூலமாக நமது தமிழர்கள் சிலோன், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டது போல இன்று பீகார் மற்றும் வட மாநிலங்களிலிருந்து ஏஜண்டுகள் மூலமாக ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். அதிலும் ஆட்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு உள்ளதை சரி செய்ய முடிவதில்லை. தேவைப்படும் தொழிலாளர்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்தாலும், அந்த அளவிற்கு பணியாட்கள் கிடைப்பதில்லை. அதுவும் ஹோலி போன்ற வட நாட்டுப் பண்டிகைகள் சமயங்களில் 2, 3 மாதங்கள் வேலைக்கு வராமல் சொந்த ஊர் பார்க்கப் போய்விடுவார்கள். 

இந்தியாவில் சம வளர்ச்சி, சம வேலை வாய்ப்புகளும் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளது. பீகார், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், அரியானாவின் சில பகுதிகள், போன்றவைகள் இன்றும் சரியான வளர்ச்சியடைந்த மாநிலங்களாக இல்லை. அங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது வாய்ப்புகளே இல்லை என்றுதான் கூற முடிகிறது. இந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்  வேலைக்காக மகாராட்டிரத்தையும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டையும் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. ஆனாலும் குடும்பத்தை விட்டு அவர்களும் எவ்வளவு காலம்தான் விடுமுறை எடுக்காமலே வெளியில் தொடர்ந்து பணியாற்ற முடியும். 

சீன தொழிலதிபரின் திட்டம் போன்று நமது மேற்கு மண்டல தொழிலதிபர்களும் 12 மணி நேர வேலை என்ற திட்டம் பற்றி சிந்தித்து அதற்கான முயற்சி எடுக்கலாம். அதே சமயம் மத்திய, மாநில அரசுகளும் சம வளர்ச்சியும், சம வாய்ப்புகளும் ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டங்களை முன்னெடுத்தால் நலம் கூடுவதோடு நாட்டின் வளமும் பெருகும்! 

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...