Thursday, June 13, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (16)




பவள சங்கரி

உள்ளார்ந்த ஒரு நெடும் பயணமே மிகவும் நீண்ட பயணம். ஒருவர் தம்முடைய இலக்கை அடைய முனையும் போது தம்முடைய உள்ளாற்றலை முழுமையாகப் பயன்படுத்தி அந்தத் தேடுதலைத் தொடங்கினால், அதன் முடிவில் தம்முடைய இருத்தலின் அடையாளத்தை அழுத்தமாக நிறுவமுடிகிறது அவரால்!

டாக் ஹாமர்ஸ்க் ஜோல்ட்  - ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொது செயலாளர்



அமைதியான தீர்வு!

 ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு அதற்கான தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருந்த நான்,  அன்புத் தோழி ஒருவரிடம் அது பற்றி கலந்தாலோசித்தேன். அவள் சொன்ன ஒரு யோசனை, கடுமையான சிக்கல் என்று எண்ணி  பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த என் மனநிலையை நொடியில் மாற்றியமைத்துவிட்டது.  அவள், ‘சங்கரி, உனக்கு இப்ப வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது மட்டும்தான் உன் பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு சொல்லக்கூடியது. ஆம் உனக்கு தற்போது வேண்டுவதெல்லாம், அமைதியாக தீர்வு காணக்கூடிய மனோபாவம்!” என்றாள். அவள் சொன்ன வார்த்தைகள் உண்மையிலேயே என் இதயத்தைச் சுண்டிவிட்டது. அந்த நேரத்திலிருந்து இன்று வரை என்னுடைய பல்வேறு பிரச்சனைகளையும், துணிவுடன் சமாளிக்க அந்த வார்த்தைகளே கைகொடுக்கிறது! 



‘தீர்வு’ என்று சொல்லும்போது ஒன்றைப் பற்றிய  திட்டவட்டமான அல்லது உள்ளார்வத்துடனான முடிவை எடுப்பதென்பதே. அதாவது எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியானதொரு தீர்வைக் காண்பது. உதாரணமாக, இரண்டு நீண்டகால நண்பர்கள், பங்குதாரர்களாகச் சேர்ந்து ஒரு நூற்பு ஆலையை வைத்தார்கள். நட்பில் இருந்த நெருக்கம், தொழில் என்று வந்த போது முற்றிலும் மாறுபட்டுவிட்டது. இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்துவிட்டது. ஒரு சமயத்தில் சேர்ந்து தொழில் செய்வதே சிரமம் என்ற நிலை உருவானது. இருவரும் அமைதியாக தொழிலை பிரித்துக் கொண்டு விலகி விட்டார்கள். இலாபமோ, நட்டமோ, அவர்கள் எடுத்த தெளிவான முடிவினால் இருவரும் மன உளைச்சலிலிருந்து விடுபட்டதோடு, அடுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த முடிந்தது அவர்களால். மனச்சுமையிலிருந்து சுத்தமாக விடுபட்டு வெளியேறினர் அந்த இருவரும். 

தொழில்முறை முரண்பாடுகளோ அல்லது சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளோ, அது சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும் அதற்கான தீர்வு என்பது அதனை  நாம்  அணுகும் விதத்திலேயே  அமைகிறது. நாம் கையாளும் ஒரு காரியத்தில் பாதுகாப்பற்றதொரு உணர்வைப் பெறும்போது, உடனடியாகத் தீர்வை நாடும் மனம்,  அதற்காக கடுமையாக போராடவும்  ஆரம்பித்துவிடும்.  அந்த நேரத்தில் அச்சப்பட்டோ, கண்மூடித்தனமாகவோ, அல்லது கோழைத்தனமான முடிவையோக்கூட எடுக்க வேண்டிவந்துவிடும். குழப்பமான இது போன்ற மன நிலையில் எடுக்கும் முடிவுகள், நம்மை மீண்டும் தலை தூக்க முடியாத அளவிலான தீர்மானங்களைக் கூட எடுக்க வைத்துவிடும்.  எச்சரிக்கை தேவை!

நியாயமான அமைதியை இலக்காகக் கொண்டு செயல்படும்போது,  நம்மைச் சரியான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய அறிவார்ந்த உறுதிப்பாட்டின் ஒரு மாபெரும் சக்தியை உருவாக்குகிறோம் . அப்போதைக்கு இதன் பின்விளைவுகளைப் பற்றி  உடனே அறிய முடியாமல் போனாலும் கூட, அதைப்பற்றிய விழிப்புணர்வு தேவையான காலத்தில் கட்டாயம்  வரும் என்ற திடமான நம்பிக்கை மலரும்! அந்த நம்பிக்கையே மனத்தெளிவையளிப்பதோடு, அடுத்து நடக்க வேண்டியதற்கும் அச்சாரம் போட்டுவிடும்.

அதே சமயம் தீர்வைப் பற்றிய சிந்தையே இல்லாததொரு சலனமற்ற அமைதி என்பது சூழ்நிலைக்கேற்ப பயனுள்ளதாகவோ அன்றி பயனற்றதாகவோக்கூட ஆகலாம். தன்னால் இயலாத நிலையில், ஓய்வு பெற்று உட்கார்ந்திருப்பவர்களுக்கு இது நல்ல முடிவாக இருக்கலாம். ஓய்வுக் காலங்களில் இப்படி நீண்ட அமைதிகாத்து அமருபவர்கள்கூட முன் காலத்திலேயே அதற்கான சரியான திட்டமிடல் மூலம், நல்லதொரு பாதையை அமைத்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.  ஆனால், தானாக காரியங்கள் நடந்துவிடும் என்று மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் விதியின் வசம் முடிவை விட்டுவிட்டு அடுத்து என்ன நடக்குமோ என்ற ஏக்கமும், அச்சமும் வாட்டியெடுக்கும் குழப்பத்தில் உழல வேண்டி வரும். இது மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும். அதனால் ஏற்படக்கூடிய எதிர்வினைகளுக்கும் தாமே காரணமாகிவிடக்கூடும். அதாவது, ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்றில்லாமல் குழப்பமற்ற  அமைதியான மனநிலையுடன்  எடுக்கும் முடிவுகள் மூலம் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற திடமான  நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதே சத்தியம். 

தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களும் இது போன்றதோரு சூழ்நிலையில், அமைதியான மனநிலையுடன்  எடுக்கும் முடிவுகளே அவர்களை மீண்டும் அந்தச் சேற்றில் உழன்று, மென்மேலும் தவறு செய்யாத ஒரு உறுதியான மன நிலைக்கு ஆட்படுத்தி சரியான பாதையில் பயணிக்கும் நம்பிக்கையும் அளிக்கிறது. 

எந்த ஒரு பிரச்சனைக்கும் அமைதியான மனநிலையுடன் எடுக்கும் தீர்வானது, நல்லதொரு  பாதையின் பயணத்தின் ஆரம்பம். அடுத்து நடக்க வேண்டியவைகளை நம் அறிவு வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.


சிறகைச் சுமை என்று நினைத்தால் பறவைகள் பறக்க முடியுமா? 

தொடருவோம்

நன்றி : வல்லமை

Monday, June 10, 2013

மோட்டூர்க்காரி!




பவள சங்கரி

முன் குறிப்பு: கீழ்கண்ட இந்த கதை முற்றிலும் என் கற்பனையே. எந்த குறிப்பிட்ட நபரையும் கருத்தில் கொண்டு எழுதவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மெல்ல மொட்டவிழும் மலர்களின், நாசியை நிறைக்கும் சுகந்த மணம். மென்மையாக பூபாளம் இசைக்கும் காதல் பறவைகளின் கீதம். மணி 5.15. அலார பென்குயினின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, எழுந்திருக்கலாமா என்று யோசிக்கும்போதே வேண்டாம்  என்று சொல்ல நொண்டிச் சாக்கைத் தேடுகிறது மனம்இன்று ஒரு நாள் போகாமல் விட்டால்தான் என்ன ஆகிவிடப் போகிறது? சரியான காரணமில்லாமல் ஒரு நாள் சோம்பலில் விட்டால்கூட உடம்பு அந்த சுகத்தைப் பழகிவிடுமோ..? இளங்காலைப் பொழுதின் ரம்மியமான சூழலில் சுகமான உலாவைக்காட்டிலுமா  இந்தத் தூக்கம் பெரிதாகிவிடும். அன்பு கணவர் அருகண்மையில், ஆனந்தமான நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். இரவு வெகுநேரம் , ஒரு சிறிய  பந்திற்காக, 22 வல்லுநர்கள் ஆடி, ஓடி விளையாடும் அரிய காட்சியைக் காண தன்  நித்திரையைக்கூடத் தியாகம் செய்த உத்தமர். சூதாட்டக் குழுவினரால் ஏற்கனவே யார் யார் எவ்வளவு ரன் அடிக்க வேண்டும், எப்போது அவுட் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு களமிறக்கியிருக்கும் ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைக்கூட போலியாக இரசித்து, கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டு உட்கார்ந்திருக்கும் தாராள மனசுக்காரர். இப்பொழுதுதான், சாக்லேட் உண்ணும் மழலையைப் போல புன்னகை தவழும் இதழ்களுடன், [ஏதாவது கனவு கண்டு கொண்டிருப்பாரோ?] உறங்கிக் கொண்டிருக்கிறார். இவரை எழுப்பி வேலைக்காகாது என்று பூனையைப்போல மெதுவாக ஓசையின்றி வெளியே சென்று, அடுத்த அறையின் ஓய்வறையில் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தயாராகிவிட்டேன்அடுத்த 45 நிமிட, வழமையான மூன்று கிலோமீட்டர்  நடைப்பயணம்.