பவள சங்கரி
பெண்களை உயர்வாக மதித்து நடத்தும் நாடுதான் முன்னேறும் - காந்தியடிகள்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனைக் காக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 24 ஆம் நாள் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதே தினத்தில்தான், 1966ம் ஆண்டு நம் இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி அவர்கள் பதவியேற்றார்.
நம் இந்தியாவைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளை வளர்ப்பதை பெரும் சுமையாகக் கருதும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பதால் பெண் சிசுக் கொலை மிகப் பரவலாக ஆனது. இதன் காரணமாக 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் இருக்கிறது..ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்களும்தான் இருந்திருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பாவமும் அறியாத ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன என்பது வேதனையான விசயம்.அதாவது தினசரி கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் அழிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பில் தெரிவித்திருக்கிறது.