Friday, February 14, 2014

’புரட்சிச் சித்தர்’ சிவவாக்கியர்!



பவள சங்கரி


சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சித்தர்’ என்றே குறிப்பிடப்பட்டார். ஆரம்பத்தில் நாத்திகராக இருந்து பின் ஆத்திகராக மாறியவர் இவர். வேதியர் குலத்தில் பிறந்த சிவவாக்கியர் காசி யாத்திரை செல்கிறார். சென்ற இடத்தில் இவருக்கு இல்லறத்தில் நாட்டம் செல்ல, ‘சக்கிலி’ வகுப்பைச் சார்ந்த ஒரு ஞானியரிடம் சென்று தம் விருப்பத்தை வெளியிடுகிறார். அந்த ஞானியும் சிவவாக்கியருக்கு, காசும், பேய்ச்சுரைக்காயும் கொடுத்து,  “எந்தப் பெண் உனக்கு மணலும், இந்த பேய்ச்சுரைக்காயும் கொண்டு நல்ல உணவு சமைத்துப் போடுகிறாளோ அவளே உன் மனைவி”,  என்று  சொல்லி அனுப்பி வைக்கிறார். அவரும் இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு,  தேடியலைந்து, ஒரு குறப்பெண்ணைக் கண்டு அவளையே மணந்து இல்லறத்தில் ஈடுபடுகிறார். ஒரு நாள், பிழைப்பிற்காக மூங்கில் வெட்டும்போது, அது பொன்மாரி பொழிய அதை நீத்து, அங்கிருக்கும் ஒரு கீரையைப் பிடுங்குகிறார். அப்போது தன்னிலைப் பெற்று கொங்கணரால் உள்ளம் திருந்துகிறார். பின் சைவராக மாறி தம் பெயரில் தமிழில், ‘சிவவாக்கியம்’ என்ற நூலை எழுதுகிறார்.  இவர் பிறக்கும் போதே, ‘சிவ’ என்று சொல்லிக்கொண்டே பிறந்ததனால் இவருக்கு சிவவாக்கியர் என்று பெயரிட்டுள்ளனர்.  பின் வைணவராக மாறி, திருமழிசை ஆழ்வார் என்ற பெயர் பெற்றார். சிவவாக்கியர் உருவ வழிபாட்டை முற்றிலும் மறுத்தார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள்  செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத்  தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள்  செய்வதும் என்று தொன்று தொட்டு  நடந்து  வரும் வழமைகளை  மூடப்பழக்கங்கள் என்று  சாடுகிறார்.   


நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


     நல்ல சுவை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சமைத்த சட்டியால், அந்த 
உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்வது சாத்தியமில்லாதது  போலவே மனம் எனும் கோவிலுக்குள் இறைவன்  உறைந்திருப்பதை  அறியாமல்  வெறும் கல்லை  நட்டு வைத்து அதற்கு தெய்வமென்று  பெயருமிட்டு  பூக்களாலும்  முணமுணென்ற மந்திரங்களாலும்   வழிபாடு   செய்வது அறியாமையேதான் அந்த மந்திரத்தால் ஏது பயன் என்று சிந்திக்காமல் இருக்கிறீர்கள். இறைவன் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே உறைபவனே இறைவன். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? என்கிறார்.

ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் 
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் 
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே.


    ஓசையுள்ள கல்லை இரண்டாய் உடைத்து, வாசலில் பதித்த அந்தக் கல்லை மிதித்துக்கொண்டு செல்லுகிறீர்கள். அதையே சிற்பமாய்,  தெய்வ உருவமாய் செய்து, அதன்மீது நீரூற்றி அபிடேகமும் செய்து, மலர்களையும்  சாத்திவிட்டு ஏதோ மந்திர உபாசனைகளையும்  செய்துகொண்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்.  ஈசனுக்கு உகந்த கல் எது என்று சொல்லலாகுமோ என்ற ஐயமேற்படுத்துகிறார். 

சிவவாக்கியர் சொல்வது போன்று உருவ வழிபாடு நீங்கப் பெற்றால் நம்மால் மனம் ஒன்றி இறை வழிபாடு செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.  ஒரு வேளை தொன்று தொட்டு வந்த பழக்கம் காரணமாக இருக்கலாம் என்றாலும்,  வெற்றிடத்தையோ, இயற்கை வளங்களையோ தெய்வமாக நினைத்து வழிபடமுடியுமோ? 

சிவவாக்கியர் பாடல்கள்


https://www.youtube.com/watch?v=BuOrksWTCwM (1)

http://youtu.be/0Vcl2jl-phQ (2)

http://youtu.be/oR44xDLuaDM (3)

http://youtu.be/BTx61GuFZDg  (4)



            சிவவாக்கியர் பாடல்கள்

                                 காப்பு

    அறியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்        ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்        தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்        கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்        பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

                              அக்ஷர நிலை
    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்     ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்     ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்     ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

                            சரியை விலக்கல்
    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை     நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்     வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்     கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

                            யோக நிலை
    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்     கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்     விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்     அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

                            தேக நிலை
    வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்     விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே     நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்     சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.

                            ஞான நிலை
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே     என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்     என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?     என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,     நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?     அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்     எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
 மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
    எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
    கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள்ஆடும் பாவைநீ-
    நண்ணும்நீர்மை நிறபாதம் நண்ணுமாறு அருளிடாய்.

    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

    அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
    எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே !

    கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
    இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
    சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
    இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.

    நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
    கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
    ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
    ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!

                            யோக நிலை

    சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
    வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதமோ?
    மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
    சாத்திரைப்பை நோய்கள்ஏது ? சத்திமுத்தி சித்தியே!

    ஓடம்உள்ள போதெல்லாம் நீர்ஓடியே உலாவலாம்;
    ஓடம்உள்ள போதெல்லாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
    ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
    ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!

    நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
    விருப்பமோடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;
    நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீறேல்
    சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமே!

    கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

    செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
    செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
    உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
    அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமே!

    பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்,
    பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?
    ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?
    ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே!

    வாயிலே குடித்தநீரை எச்சில்என்று சொல்கிறீர்;
    வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
    வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
    வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

    ஓதுகின்ற வேதம்எச்சில், உள்ளமந்திரங்கள் எச்சில்;
    போதகங்க ளானஎச்சில், பூதலங்கள் ஏழும்எச்சில்;
    மாதிருந்த விந்துஎச்சில், மதியும்எச்சில் ஒளியும்எச்சில்;
    ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே!

    பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
    பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
    குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே,
    அறுப்பென செவிஇரண்டும் அங்செழுத்து வாளினால்.

    சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரே
    சத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றது
    முத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?
    வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே.

                                  கிரியை

    சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
    பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
    காதில்வாளி, காரை, கம்வி, பாடகம்பொன் ஒன்றலோ?
    சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?

                              அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

    அறையினில் கிடந்தபோது அன்றுதூய்மை என்றிலீர்;
    துறைஅறிந்து நீர்குளித்து அன்றுதூமை என்றிலீர்,
    பறையறைந்து நீர்பிறந்த அன்றுதூமை என்றிலீர்,
    புரைஇலாத ஈசரோடு பொருந்துமாறது எங்ஙனே.

    தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
    தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
    ஆமைபோல் முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
    தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

    ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்து மாறுபோல்
    மாடுகாட்டி என்னைநீ மதிமயக்கல் ஆகுமோ,
    கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா,
    வீடுகாட்டி என்னைநீ வெளிப்படுத்த வேணுமே.

    தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள்அப்பன் எம்பிரான்
    சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

    உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
    பற்றறுத்து நின்றநீர் பராபரங்கள் எய்துவீர்;
    செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
    சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.

    மைஅடர்ந்த கண்ணினார் மயக்கிடும் மயக்கிலே
    ஐயிறந்து கொண்டுநீங்கள் அல்லல்அற்று இருப்பீர்கள்
    மெய்அறிந்த சிந்தையால் விளங்குஞானம் எய்தினால்
    உய்யறிந்து கொண்டுநீங்கள் ஊழிகாலம் வாழ்வீரே.

    கருவிந்த வாசலால் கலங்குனின்ற ஊமைகாள்,
    குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லீரேல்
    உருவிலங்கு மேனியாகி உம்பராகி நின்றுநீர்
    திருவிளங்கு மேனியாகச் சென்றுகூடல் ஆகுமே!

    கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
    பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
    அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்
    எழுத்திலோ எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.

    ஈன்றவாச லூக்குஇரங்கி எண்ணிறந்து போவீர்காள்!
    கான்றவாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர்
    நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லீரேல்,
    தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே.

    உழலும்வாச லுக்குஇரங்கி ஊசலாடும் ஊமைகாள்?
    உழலும்வாச லைத்திறந்து உண்மைசேர எண்ணிலீர்?
    உழலும்வாச லைத்திறந்து உண்மைநீர் உணர்ந்தபின்
    உழலும்வாசல் உள்ளிருந்த உண்மைதானும் ஆவிரே.

    மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
    நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
    பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
    ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.

    உருவம்அல்ல, வெளியும்அல்ல, ஒன்றைமேவி நின்றதல்ல
    மருவும்வாசல் சொந்தம்அல்ல மற்றதல்ல அற்றதல்ல
    பெரியதல்ல சிறியதல்ல பேசலான தானும்அல்ல
    அரியதாகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
    
    அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
    நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அரிகிலீர்;
    உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
    அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?

    கருக்குழியில் ஆசையாய்க் காதலுற்று நிற்கிறீர்
    குருக்கிடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்
    திருத்திருத்தி மெய்யினால் சிவந்தஅஞ் செழுத்தையும்
    உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

    மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்;
    வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
    நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்;
    எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.

    மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
    விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
    மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
    மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

    மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
    மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
    ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
    உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்!

    பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
    நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே,
    உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
    கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.

    நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை
    அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லீரேல்
    அன்பர்கோயில் காணலாம் அகலும்எண் திசைக்குளே
    தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!

    உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ
    உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்,
    உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே,
    உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.

    அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்;
    உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை;
    மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்;
    அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!

    மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
    மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்;
    மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
    மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே!

    ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல்
    வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!
    ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!
    பாரும்இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆனதே!

    கடலிலே திரியும்ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
    கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
    மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை
    உடலுளே நினைந்துநல்ல உண்மையானது உண்மையே!

    மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்
    நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;
    ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;
    தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!

    மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
    மூன்றும்அஞ் செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
    ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
    தோன்றும் மண்டலட்த்திலே சொல்லஎங்கும் இல்லையே!

    வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
    அட்டவக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
    எட்டும்எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
    எட்டலாம் உதித்து எம்பிரானைநாம் அறிந்தபின்.

    பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே;
    ஆசையான ஐவரும் அலைந்தருள் செய்கிறார்;
    ஆசையான ஐவரே அடக்கிஓர் எழுத்திலே
    பேசிடாது இருப்பிரேல் நாதன்வந்து பேசுமே.

    நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
    நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
    நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
    நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

    பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
    நிச்சலும் நினைந்திட நினைந்தவண்ணம் ஆயிடும்;
    பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
    பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.

    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!



1 comment:

  1. அவரின் எண்ணங்களை சில பதிவுகளில் பகிர்ந்து விட்டேன்...

    சிவவாக்கியர் அவர்களின் சில தகவல்கள் அறியாதவை... நன்றி...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...