பவள சங்கரி
”யக்கா, யக்கா இன்னைக்கு நான் ஊட்டாண்ட வர நேரமாவும் போலக்கீது, கொஞ்சம் புள்ளைய பாத்துக்கக்கா. வயித்துக்கு எதுனா சாப்பாடு குடுத்துடு இன்னா.. நான் அப்பாலைக்கி வந்து குயந்தையை இட்டுணுப்போறன். சரியா”
“.......................”
“அட ஆமா யக்கா. இங்க இந்த பெரிசு படுத்துக்கிணு கீதில்ல. அத்தைப் பாத்துக்க இன்னைக்கு ஆளு வரல. அதான் சின்ன ஐயா இன்னைக்கு ஒரு நாளைக்கு இத்தை பாத்துக்கச் சொன்னாரு. என்னால தட்டமுடியல.. பணமும் 200 ரூவா கொடுத்தாரு. அதேன், நீ இருக்க தகிரியத்துலதான் ஒத்துக்கினேன்”
“.................”
“அதா, அத்தை ஏன் கேக்கற, சுய நினைவே இல்லாம மரக்கட்டையாட்டமாத்தான் கிடக்குது. என்னமோ கோமாவுல கடக்குதுன்றாங்க. உசிரும் போவாம இசுத்துக்கினு கடக்குது . மனசுல என்ன ஆசை கீதோ தெரீல, இப்புடி அந்த உசிரு அல்லாடிங்கிடக்குது பாவம்”
“கடவுளே, இது தேவையா எனக்கு, இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி செத்த உடலோட , மனசு மட்டும் சுறுசுறுப்பா வச்சி வதைக்கப் போற. டெர்ரர் சிவசாமின்னு பேரெடுத்த எனக்கு இப்புடி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம். கண் பார்வையிலேயே என்னோட நூல் மில்லுல வேலை செய்த நூத்துக்கணக்கானவர்களும் மிரண்டுபோய் சுழன்றுவேலை பார்ப்பாங்களே. இன்னைக்கு ஒரு வேலைக்காரி கூட என்னை ஒரு ஜடமாட்டம் பாக்கறாளே. இந்தக் கையினால எத்தனை முறை போனசு, குழந்தைக்கு உடம்பு சரியில்ல, புருசனுக்கு உடம்பு சரியில்லேன்னு காசு வாங்கியிருப்பா.. இந்த மூனு மாசமா படுக்கையில கிடக்க ஆரம்பிச்ச உடனே இவ்ளோ அவமானப்படுத்துறாங்களே. வாயைத் திறந்து ஒரு வார்த்தையும் பேச முடியல. இன்னும் என்னவெல்லாம் கேக்கணுமோ.. திடீர்னு அம்மா எப்பவோ பேசுன இதே டயலாக் நினைப்பு வந்தது. ..
“ஏப்பா, சிவசாமி, உன்ற அப்பாரு குழந்தைக கூட சாவந்தின்னியும் (சாகும்வரை) இருக்கோணும்னு ஆசைப் படுறாக அப்புனு. அன்னாடம் புலம்பித் தீக்குறாக. இன்னும் எம்புட்டு நாளக்கி இருக்கப்போவுது அந்த மனுசன். ஊருக்குக் கூட்டிட்டுப் போப்பா. பாவம்ப்பா .. சமாதானமே பண்ண முடியல”
“அம்மா, என்னம்மா நீ, எத்தனைவாட்டி சொன்னாலும் கேக்க மாட்டீங்கற. அப்பா அங்க வந்து இருக்க முடியாதும்மா. நிதமும் அவருக்கு சாயங்காலமானா தண்ணிப் போடணும். வீட்டில குழந்தைகள் இருக்கிறாங்க, தேவையில்லாம பிரச்சனை வரும். உங்களுக்கு என்ன பிரச்சனை இங்க. கடலாட்டம் பெரிய வீடு. கூப்பிட்ட குரலுக்கு ஆளு. இன்னும் வேற என்ன வேணும். வாரக் கடைசீல பிள்ளைங்களையும் கூட்டியாந்து காமிச்சுப் போட்டுதானே போறேன். அங்க வந்தா மட்டும் என்ன பண்ணப்போறீங்க. டவுன்ல ஒரே சத்தமுமா கிடக்கு. இங்க கிராமத்துல அமைதியா இருக்கலாம். நிம்மதியா இருக்கறத உட்டுப்போட்டு கோயம்புத்தூர் வறேன்னு அடம் புடிக்கறியகளே.. இதான் எட்டிப் புடிக்கிற தூரத்துல இருக்குற கந்தம்பாளையம். எப்ப வேணா போன் பண்ணா நான் வந்துட்டுப் போறேன். சந்தோசமா இருக்கப் பாருங்கம்மா”
“ஏப்பா, இப்புடி பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு ஆடற.. உங்கப்பாரு கடைசி காலத்து ஆசையைக்கூட கண்டுக்கிடாம இருக்கறியே. அப்புடித்தான் அவரு என்ன மொடாக்குடியரா? என்னமோ சாயங்காலம் போல கொஞ்சமா போடுவாரு. போட்டாலும் சத்தமில்லாம போய் ரூமுக்குள்ள முடங்கிக்கிடுவாரு. அதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?”
அம்மா இப்படி சண்டை போட்டதால சங்கடப்பட்டுக்கிட்டு 2 வாரம் போய் பார்க்கவே இல்லை. மில்லுல லேபர் பிரச்சனை அது, இதுன்னு வேலையும் கூடிப்போனதாலே ஊருக்குக் கிளம்பும் வாய்ப்பும் இல்லாமல் போனது. அன்று அப்பா ரொம்ப சீரியசான நிலைமைல இருக்குறதா போன் வந்தவுடன் அடிச்சுப் பிடிச்சுப் போயும் உயிரற்ற உடலைத்தான் பார்க்க முடிந்தது. அன்றோடு அப்பாவுடன் சேர்த்து அம்மாவின் உறவும் இறந்து போனது சிவலிங்கத்திற்கு. அதற்குப் பிறகும் அம்மா தனியா இருக்க வேண்டாம் என்று கோவைக்கே வந்துடும்மான்னு எவ்வளவோ கூப்பிட்டும் வைராக்கியம் பிடித்த அம்மா இன்றுவரை வரவே இல்லை. இது எல்லாவற்றையும் விட ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் மூச்சுவிட சிரமமும், லேசாக நெஞ்சு வலியும் இருந்ததால், மகனிடம் கூட சொல்லாமல் வேலைக்காரப் பெண்ணை கூட்டிக்கொண்டு கோவை மருத்துவமனைக்கு வந்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்திருப்பதாக யாரோ சொல்லி தெரிந்துகொண்டு அவசரமாக ஓடி,
"அம்மா, ஏம்மா இப்புடி பண்றே. எங்கிட்ட சொன்னா நான் உங்கூட ஆஸ்பத்திரிக்கு வந்திருப்பேன்ல. சரி அப்படித்தான் வந்தியே, டாக்டரைப் பார்த்துட்டு வீட்டுக்கு வராம பஸ் ஸ்டேண்டுல உட்கார்ந்திருக்க வேணுமா? இன்னைக்கு திடீர்னு பஸ் ஸ்டிரைக் வேற. இன்னும் எந்நேரம் இது முடியுமோ தெரியாது. வா வீட்டுக்குப் போகலாம். “
“இல்லப்பா, வேண்டாம் சாமி. நான் எப்புடியும் இராவுக்குள்ள ஊரு போயி சேந்துடுவேன். நீ ஒன்னும் கவலைப் படாம ஊட்டுக்குப் போய் ஓய்வெடுப்பா. இன்னும் செத்த நேரம் பார்த்துப்போட்டு, ஏதாவது வாடகை வண்டி புடிச்சி போயிடுவோம். இவளும் பாவம் புள்ளை குட்டிகளை உட்டுப்போட்டு வந்திருக்கா. நாங்க போயிக்குவோம் ராசா, நீ கிளம்புப்பா”
“அம்மா, ஏம்மா இப்புடிக் கொல்லறே. மானமே போவுது எனக்கு. வீட்டுக்கு வாம்மா போலாம். என்னமோ என்னைய கொடுமக்காரனாட்டமா பாக்குறாக நம்ம சொந்தமெல்லாம்.”
“ஓ, அதான பார்த்தேன். என்னடா நம்ம மவனுக்கு திடீர்னு பாசம் பிச்சிக்கிச்சின்னு. போச்சாது, போப்பா. அவிக கடக்குறாக. நீ எம்புட்டு பெரிய ஆளு. உன்னையப்போயி ஒருத்தன் விரலை நீட்டி பேச முடியுமா. அதுக்கெல்லாம் நீ பெருசா ஒன்னும் வெசனப்படாத ராசா. நான் எம்பட வழியைப் பாத்து போயிக்குவேன்.”
அதற்குப் பிறகு அவ்வப்போது கோவை மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருந்தபோதும் ஒரு முறைகூட வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்தே இருந்தார்கள். இரத்த ஓட்டம் இயல்பாக துரித நடையில் செல்லும் போது தம் தவறுகள் பற்றிய உணர்வே இருப்பதில்லை. இரத்தம் சுண்டி, உடல் வலுவிழக்கும்போது செய்ய இருந்த தவறுகள் கூட விரட்டி வந்து உறுத்தும். அப்பாவின் கவலை தோய்ந்த ஆவலான முகமும், அம்மாவின் கோபமான பார்வையும் விரட்டி வந்து இன்று வதைப்பதை அசையாமல் ஜீரணம் பண்ண வேண்டியிருந்தது. ஈன்றபோது பெரிதுவக்கும் இன்பமாக இருந்தது கடைசி காலத்தில் வேதனையின் உச்சமாகும் போது ஒரு தாயின் மன நிலை எப்படியிருக்கும் என்று தன்னால் எப்படி உணர முடியாமல் போனது என்ற பாரம் பாறையாய் அழுத்தியது. பிள்ளைகள் கல்வி, விளையாட்டு, கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள் என்று வளர்ந்துகொண்டே இருக்க, அம்மாவை அடிக்கடி போய்ப் பார்ப்பதுகூட சிரமம் ஆகிவிட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு அன்று கந்தம்பாளையம் செல்வதற்குக் கிளம்பியபோது,
“ஏனுங்க, இன்னைக்கு நம்ம ரிஷவன் ஸ்கூல்ல சாயங்காலம் விழா இருக்கில்ல. அதில நம்ம பையனும் மாறு வேடப் போட்டியில இருக்கான். நாமதான் போயி அவனுக்கு சிரவணன் மேக்கப் போடணும். சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க”
“இல்ல இன்னைக்கு நான் கந்தம்பாளையம் போகலாம்னு இருக்கேன். அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குது. போய் ஒரெட்டு பாத்துப்போட்டு வரலாம்னு கிளம்புனேன்”
நோய்வாய்ப்பட்ட தாய் தந்தையரை கூடையில் வைத்து சுமந்து கொண்டு திரிந்த சிரவணன் கதையை நினைத்துப்பார்க்கக் கூட நேரமில்லை பாவம் அவர்களுக்கு!
“ஏன் உங்கம்மாவுக்கு என்ன, நல்லாத்தானே இருக்குது. கிழவி இங்க கூப்டா வரமாட்டேன்னு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்குது. மனசுல என்னதான் வச்சிக்கிட்டு இருக்குதுன்னு தெரியல. நம்மள அவமானப்படுத்தோணுமின்னே அங்கன கந்தம்பாளையத்துலயே உக்காந்துக்கிட்டு கழுத்தறுக்குது. இங்க நம்ம புள்ளைகள பாக்கறத உட்டுப்போட்டு பொழுதுக்கும் உங்கம்மா பின்னாடி திரிய முடியுமா? அது எல்லாம் வாழ்ந்து முடிச்ச கட்டை , இனிமேட்டு குழந்தைகளத்தானே பாக்கோணும். போங்க, போய் நம்ம புள்ளைகள பாக்குற வேலையைப் பாருங்க. அது கடக்கட்டும். போன் பண்ணி ஊட்டுக்கு வரச் சொல்லுங்க”
”இரக்கமே இல்லாம அன்னைக்கு பெண்டாட்டி சொன்னபோது அது நல்லதா, கெட்டதான்னு யோசிக்கிற பக்குவம் கூட இல்லாமப் போனது. அடுத்தடுத்த பிரச்சனைகள், தீர்வுகள் என்று ஓடிக்கொண்டிருந்ததில் அம்மாவைப் போய்ப் பார்ப்பது அரிதாகிப்போனது. ஆடிக்கொருதரம், அம்மாவாசைக்கு ஒரு தரம்னு ஆகிப்போச்சு. ஐயோ அம்மா இந்த தள்ளாத வயசுல தனியா இருக்க எவ்ளோ கஷ்டப்படுதோ, கடவுளே.. இன்னைக்கு என் கதி என்ன. ஒரே மகள் திருமணத்திற்குப்பின் ஆஸ்திரேலியா வாசம். வாரம் ஒருநாள் மட்டும் போன் செய்து பேசுவாள். சமீபத்தில் படுக்கையில்ப்விழுந்தவுடன் இந்த வேலையும் இல்லாமல் போனது. அவ்வப்போது தம்பியிடம் அப்பாவின் உடல் நலம் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வதோடு சரி. அப்பா திடீரென்று இப்படி படுக்கையில் கிடையாய் கிடக்கையில் வியாபாரத்தின் மொத்தப் பொறுப்பும் ரிஷவன் தலையில் குருவித்தலை பனங்காயாக விழுந்துவிட்டது! மாசத்தில் 25 நாளும் வெளியூர் சுற்றிக் கொண்டிருக்க வேண்டிய நிலை அவனுக்கு . மனைவி, . சந்திரகலா இவங்க இரண்டு பேரையும் எப்படீல்லாம் வளர்த்தாளே. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்ததைத் தவிர, அவிங்களுக்காகவே வாழ்ந்ததை அவள் பெருமையாக நினைத்தாள். ஏன் நான் மட்டும் என்ன.. ஊரில யாருக்குமே கிடைக்காத அருமையான ஒரு மனைவி கிடைச்சது என்னோட நல்ல நேரம்ன்னுதானே நினைச்சேன். குதிரைக்கு லாடம் கட்டினது போல அவளோட பார்வை முழுசும் பிள்ளைகங்க மேலேயே இருந்ததால, சில நேரங்கள்ல என்னையே கூட பாரமா நினைச்சவதானே. நான் கூட அப்ப சந்திரா எவ்ளோ நல்ல அம்மாவா இருக்கான்னு நண்பர்கள்கிட்டயெல்லாம் மார்தட்டிக்கிட்டது அவிங்க பார்வையில கிண்டலா இருந்திருக்குமோ? கண்ணை வித்து ஓவியம் வாங்குறான் பாருன்னு, கிண்டல் அடிச்சிருப்பாங்களோ. எங்க அதெல்லாம் யோசிச்சம் அப்ப.. “
“ஹலோ, ஹலோ, சின்ன ஐயாவுங்களா? உங்க அப்பாவுக்கு கொஞ்ச நேரமா துக்கிப் போடுது. கை, கால் எல்லாம் ஒரு மாதிரியா உதறல் எடுத்துக்கினே கீது. பயமா இருக்கு. சீக்கிரமா வாரீங்களா.. “
“அக்கா, நான் இப்ப இருக்குறது நாகப்பட்டிணத்துல. எப்படி நான் உடனே அங்க வந்து சேர முடியும்? ஏற்கனவே அப்பாவுக்கு இப்படி இரண்டு மூனு தடவை இந்த மாதிரி ஆகியிருக்கு. ஒன்னும் ஆகாது. கவலைப்படாதீங்க. நான் டாக்டருக்கு போன் செய்து பார்க்கிறேன். அவர் நர்சம்மாவை அனுப்புவார், அவங்க வர வரைக்கும் அப்பா பக்கத்துலேயே இருங்க. அவங்க வந்து பார்த்தப்புறம் எனக்கு போன் போடச் சொல்லுங்க. அப்பறம் பார்த்துக்கலாம்”
“சரிங்க தம்பி.” இரண்டு மனசாத்தான் பதில் வந்தது.
‘சந்திராவைப் பத்தி நினைச்சப்ப என்னை அறியாமலே இந்த ஜடம் குலுங்கியிருக்கும் போல.. இந்த உலகத்துக்குள்ளேயே இருந்துகொண்டு, எவர் கண்ணிலும் படாம வெகு தூரமான ஒரு அத்துவானக் காட்டில, தனிமைல திரியற மாதிரி நிலை. ரிஷவனுக்கு ஒரு தடவை டைபாய்ட் காய்ச்சல் வந்தப்ப, விடிய விடிய அவனை கவனிச்சிக்கிட்டும் மறு காய்ச்சல் வந்து பையன் ரொம்பவே மோசமாயிட்டான். மருத்துவமனையில சேர்த்தப்ப பையன் துவண்டு போய் என்ன ஆவானோன்னு நான் கூட துடிச்சுப் போனப்ப, சந்திரா எவ்ளோ தைரியமா, நம்பிக்கையோட, டாக்டர் சொன்னதை அப்படியே கேட்டு கிட்டத்தட்ட மூனு மாசம் ஒரு தவமா பையனைக் காப்பாத்துனாளே.. அதை எப்படி மறக்க முடியும்.. அதே போல மகள் மது பதினாறு வயது இளமை வேகத்தில் உடன் பயிலும் மாணவனை லவ் பன்றேன்னு சர்வ சாதாரணமா, இங்கிலீஷ் மீடியம் பள்ளிக்கூடம் கொடுத்த தைரியத்துல வெளிப்படையா சொன்னப்ப, நிலைகுலைந்து போனது இப்பவும் நினைத்தால் உள்ளம்(?) பதறுதே.. ஆனா சந்திரா கொஞ்சமும் கவலைப் படாமல் அவளை ஓங்கி ஒரு அறை விட்டதோடு, அந்தப் பையன் வீட்டிலும் போய் பேசி, பள்ளியிலும் எடுத்துச் சொல்லி, மகள் கொஞ்ச நாட்கள் மந்திரிச்சி விட்டது போல திரிந்தாலும், சீக்கிரமே தெளிந்து விட்டது சந்திராவோட சாமர்த்தியம்தான். இன்னைக்கு அவளும் ஒரு இன்ஜீனீயரா, நல்ல கணவன் அழகான ஆண் குழந்தையோட அமைதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருக்கான்னா அது சந்திராவோட வளர்ப்புதானே.. ஒரு பெற்றோர் தம் குழந்தைகளை அறிவுரை சொல்லி திருத்துவதோடு, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி சொல்லிட்டிருந்ததை, சாதித்து விட்டாள், மது விசயத்தில்... ஆனால் சந்திராவின் இறுதி முடிவும், அமைதியாக இல்லையே... கார் விபத்தில் தூக்கி வீசப்பட்டவளின் தண்டு வடம் நொறுங்கிப் போக, 50 வயதில் படுத்த படுக்கையாகி, இயற்கை உபாதைகள் கூட தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனதில், இனி சரியாக வழியில்லை என்பதை அரசல் புரசலாக அறிந்தவள் சமயம் பார்த்து தூக்க மாத்திரைகளை ஒன்றாக அள்ளிப் போட்டுக்கொண்டு போய் சேர்ந்தே விட்டாள். இரண்டு ஆண்டுகள் படுத்த படுக்கையாகக் கிடந்ததில் மனமும், உடலும் நொந்து போய் வெறுப்பின் எல்லையில் போய்ச் சேர்ந்ததை உறவுகளில் கூட எவரும் அதிகம் கவலைப்படாதது அதிர்ச்சிதான். ஆனாலும் இருந்து வேதனைப்படுவதைவிட போனதே மேல் என்று உறவுகள் காதுபட பேசியது மறப்பது சிரமம்தான்’
மெதுவாக ஒரு புறம் முனகிக் கொண்டிருந்த தொலைக்காட்சி திடீரென அதிர ஆரம்பித்தது. பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்த மனது மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தது. வேலைக்காரம்மா ஏதோ தனக்குப் பிடித்த நிகழ்ச்சி என்று சத்தமாக வைத்திருக்கும் போல.. குரல் தனக்குப் பழக்கப்பட்ட குரல் என்பதால் சற்று கவனம் வைத்து கேட்கத் தொடங்கிய சிவசாமி,
காரில் பயணம் செய்யும் போது பல நேரங்களில் விரும்பிக் கேட்கும், பெரியவரின் சொற்பொழிவு. இடையில் அவர் சொல்லும் குட்டிக் கதைகளுக்காகவே பல முறை கேட்கத்தோன்றும்.
ஒரு பெரிய மனிதரின் உயிர் அப்போதுதான் பிரிகிறது. கடவுள் ஒரு பெட்டியுடன் தன்னருகில் வந்து, ‘”சரியப்பா, கிளம்பும் நேரம் வந்துவிட்டது. கிளம்பு” என்றாராம்.
அதிர்ந்த மனிதரோ, “ஐயோ சாமி அதற்குள்ளாகவா? இன்னும் என்னுடைய பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அரைகுறையாக இருக்கிறதே?’
இல்லையப்பா, உன் நேரம் முடிந்துவிட்டது. கிளம்புற வழியைப் பாரு”.என்றார் கடவுள்.
அந்த மனிதனோ, “அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது” என்று கேட்டான் ஆவல் பொங்க.
”உன் உடமைகள்தான்” என்றார் கடவுள்.
“என் உடமைகளா? என் பணம், தங்கக் கட்டி, துணிமணிகளா?” என்று கேட்டான்.
”நீ சொன்ன அதெல்லாம் உன்னுடையது இல்லை. அவையனைத்தும் பூமிக்கே சொந்தம்” என்றார்.
“ஓ, அப்போ அவையனைத்தும் என் நினைவுகளா?”, என்று கேட்டான் அவன்.
அதற்கு கடவுளோ, “அது எப்படி அவை உனக்குச் சொந்தமாகும்? காலத்தின் உடமைகள் அவை” என்றார்.
”என் தனித்திறமைகளா?” என்றான்.
புன்னகைத்த கடவுளோ, “அதுவும் உன்னுடையது அல்ல. காலச் சூழலுக்குச் சொந்தமானது அவைகள்” என்றார்.
“என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோ?” என்று கேட்டான்.
கடவுள் உடனே, “இல்லை மகனே, நிச்சயம் இல்லை. அவையெல்லாம் வந்த வழிக்கேச் சொந்தம். உனக்கில்லையப்பா” என்றார்.
“ஓ, என் மனைவியும், மகனும்தானே?” என்றான்.
கடவுளோ, “அடடா, அதுவும் உன்னுடையது அல்ல. உன் இதயத்திற்குச் சொந்தமானவர்கள் அவர்கள்” என்றார்.
”என் உடலா இது?”
“ஹ..ஹா... அது மண்ணுக்குச் சொந்தமப்பா” என்றார்.
“ஓ, என் ஆன்மாதானே அது?”
“வாய்ப்பே இல்லை. அது என்னுடையதப்பா” என்று பதிலளித்தார்.
அந்த மனிதனுக்கு அச்சம் வந்துவிட, அப்படி என்னதான் அந்தப் பெட்டியில் இருக்கும் என்ற யோசனையுடன், கடவுளிடமிருந்து அதை வாங்கி திறந்து பார்த்தவன், அது காலியாகக் கிடந்ததைக் கண்டு கண்ணீர் மல்க, “எனக்கென்று எதுவுமே இல்லையா?” என்றான்.
கடவுளோ, “உண்மைதானப்பா, நீ வாழ்ந்த அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான் உனது. வாழ்க்கையே அந்த ஒரு நொடிதான். அந்த நொடியே உன் உடமை” என்றார்.
ஓ போகும் போது என்னத்தைக் கொண்டு போகப் போறோம் என்று அம்மா அடிக்கடி சொன்னதன் அர்த்தம் மெல்ல புரிந்தது. ‘தேநீரோடு வாழுங்கள்’ என்று சொன்ன பெரியவரின் பேச்சு கூட ஒரு காலத்தில் வேடிக்கையாக இருந்தது நினைவிற்கு வந்தது. எல்லாம் முடியும் நேரம் ஞானம் வந்தது...
இரண்டாவது நாளாக டயப்பர் மாற்றாமல் துர்நாற்றம் வீசுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் வதைத்தது. வேலைக்காரியோ ரூம் ஸ்பிரேவை எடுத்து தாராளமாக அடித்துவிட்டு தள்ளிப்போய் உட்கார்ந்து கொண்டாள். உடனடியாக மாற்றியே ஆக வேண்டிய சூழ்நிலையில் யார் வந்து மாற்றப் போகிறார்கள் என்று புரியாமல் துடிக்க ஆரம்பித்தது மனம். வாசலில் அழைப்பு மணி ஒலிக்க, கடவுளே யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் வரக்கூடாதே, இந்த துர்நாற்றம் அவர்களை அசூசை கொள்ளச் செய்யுமே .. மகன் வந்தால் மாற்றுவான். அவனாக இருக்க வாய்ப்பு குறைவு. வியாபார சம்பந்தமாக டூர் போயிருக்கானே.. தன் உதவியாளராக இருந்தால் தேவலையே .... அம்மா... அம்மா.. என்று உள்ளம் பொங்க ஆரம்பித்தது.
மூன்று முறை பெல் அடித்த பின்பு, சர்வ சாதாரணமாக எழுந்து, மெதுவாக கதவைத் திறந்தாள். திறந்தவள் ஆச்சரியமாக , ‘அம்மா நீங்களா’ என்று சத்தமாகவே குரல் கொடுத்தாள். அவளைத் துளியும் சட்டை செய்யாமல், கடந்து நேராக மகன் இருக்கும் அறைக்குச் சென்றார் பார்வதியம்மாள். பின்னாலேயே வேகமாக நடையை எட்டிப்போட்ட வேலைக்காரி, தயங்கி நின்றாள்.
அம்மாவின் மூச்சுக் காற்று ஏற்படுத்திய அதிர்வில் படபடப்பு அதிகமாகி, கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது சிவசாமிக்கு. அதைக்கண்ட அந்தத் தாய், “டேய் சிவா, என்னடா இப்படி கிழிஞ்ச நாரா கிடக்கற. என் ராசா” என்று கண்ணீர் மல்க அவன் கண்ணீரைத் துடைத்து தலையைக் கோதிவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 88 வயதில் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு மகனைப் பார்க்க அந்த வீட்டிற்கு வந்த பார்வதி அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வேலைக்காரப் பெண்மணி.
“என்ன இது சிவாவுக்கு ஒழுங்கா சுத்தம் பண்ணலையா? இப்படி வாடை வீசுதே” என்றார் கோபமாக. அம்மாவின் குரலைக் கேட்டவுடன் அப்படியே எழுந்து கழுத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று இதயம் துடித்தாலும், சொரணை கெட்ட உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. சங்கடப்பட்டு நெளிந்து கொண்டிருந்த வேலைக்காரியை அனுப்பி பக்கெட்டில் வெண்ணீரும், உடம்பு துடைக்கும் துண்டும் மாற்று உடைகளும் எடுத்து வரச் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மகனுக்கு உடல் துடைத்து பவுடர் போட்டு துணி மாற்றி தலை மாட்டில் அமர்ந்து பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார் அந்தத் தாய்!
தாயின் சிறப்பு...
ReplyDelete// எல்லாம் முடியும் நேரம் ஞானம் வந்தது... // உண்மை - பலருக்கும்...
ஓ போகும் போது என்னத்தைக் கொண்டு போகப் போறோம் என்று அம்மா அடிக்கடி சொன்னதன் அர்த்தம் மெல்ல புரிந்தது
ReplyDeleteகனக்கவைக்கும் தீர்ப்புகள்..
வல்லமை வெளியீட்டுக்கௌ வாழ்த்துகள்..!