பவள சங்கரி
எல்லோரும் நல்லவரே!
சக மனிதர்களை பாரபட்சமின்றி நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவரையும், எக்காரணம் கொண்டும் வெறுத்தல் ஆகாது. அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியும், தோல்வி அச்சமும் கொண்டவர்களே அடுத்தவரை வெறுத்துப் புறக்கணிக்க எண்ணுகின்றனர். ஒருவரை வெறுக்கும்போது, நம் மனதில் அவரைப் பற்றி அடிக்கடி சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவதோடு, அவரால் நமக்கு பெரும் தீங்கு விளையப் போவதாகவும், அவர் நமக்கு பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் எண்ணி தேவையில்லாமல் சுய பச்சாதாபம் கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த சுய பச்சாதாபம் என்பது நம் வெற்றியின் முக்கியமான ஒரு எதிரி எனலாம். தன்னம்பிக்கையை முற்றிலும் குலைக்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் இந்த வெறுப்புணர்ச்சி, அதிகம் கோபம் கொள்ளுதல், பழி வாங்குதல், போன்ற செயல்களில் ஈடுபட்டு கால விரயம் ஏற்படச்செய்கிறது. அத்துடன் மனக்கவ்லை கொள்ளச்செய்து ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.