அன்னை ஈ.வே.ரா. மணியம்மை
பொதுத் தொண்டில் ஈடுபடும் மகளிர் வாழ வேண்டிய நெறி முறைமைகளுக்கு ஓர் இலக்கணம் வகுக்கப்படுமேயானால் , அந்த நெறியாக, இலக்கணமாக வாழ்ந்தவர் மணியம்மையார்!
சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விருட்சமாக வேர் விட்டுப் படர்ந்த ஓர் இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கும் அரசியல் களத்தில் ஒளி வீசும் தீபமாக , திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று , சுடர்விட்டுப் பிரகாசித்தவர் மணியம்மையார். திராவிட இயக்கத்தில் சாதி இழிவு நிலை ஒழிந்து, சமத்துவம் தழைத்தோங்கவும், திராவிட இன மக்களின் அடிமைத்தளை ஒழியவும், அவர்தம் விடுதலைக்கு ஓங்கி குரல் எழுப்பிய உத்தம ஆத்மா , அன்னை ஈ.வே.ரா மணியம்மையார்.
ஈ.வே.ரா. பெரியாரின் உற்ற துணையாக அவருடைய உடல் நலத்தைப் பேணியதோடு, அவரோடு இணைந்து கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் காரணமாக சிறைக்கோட்டம் ஏகினாலும், மனம் தளராது, பெரியாரின் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு, இடையறாத கட்சிப் பணியும் செய்து, பெரியாரின் மறைவிற்குப் பிறகும் அவர் விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே, திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய சிறந்த பெண்மணி மணியம்மையார்.
தமிழகத்தையும், தமிழ் இன மக்களையும் அனைத்து வகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை கொண்டிருந்த பெரியாரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்த வகையில் திராவிட இயக்கத்திற்கே பெரும் தொண்டாற்றியவர் என்ற பெயர் பெற்றாலும், உண்மையான தாய்மைப் பண்பும், இளகிய உள்ளமும், சேவை மனப்பான்மையும், ஒருங்கே அமையப் பெற்ற தியாகச் சுடர்தான் மணியம்மையார். மூப்பின் விளிம்பில் இருந்த பெரியார், “ இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறேன் என்றால் அது இந்த அம்மாவால்தான் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளதே அதற்கான சான்று.
எந்தப் பலனும் எதிர்பாராமல், சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு தாயாக பெரியாரை அரவணைத்துக் காத்து வந்தார். அவருடைய வாழ்க்கையின் ஆழத்தைப் புரிந்து கொண்டவர்கள், உலகில் எந்த ஒரு தாயும், இத்தகைய ஏச்சையும், பழியையும், கேலி கிண்டலையும், ஏளனமான சொற்களையும், அவதூறுகளையும் சுமந்திருப்பார்களா என்றால், இல்லை என்றே உறுதிபட உரைப்பர். அவருடைய மனம், செயல், சொல் , எண்ணம் , குறிக்கோள் அனைத்துமே தொண்டு என்பது மட்டுமே! பெண்மைக்கே உரிய விருப்பங்களான, ஆடம்பரம், அலங்காரம், படாடோபம், பகட்டு என்ற எண்ணங்கள் எதுவுமே இல்லாமல், காது, கழுத்து, மூக்கு,கை என எங்குமே எந்த அணிகலனும் அணியாமல், மிக மலிவான கைத்தறி சேலையும், அதுவும் கருப்பு வண்ண சேலையும், வெள்ளை இரவிக்கையும் மட்டுமே அணிந்து, ஆணவம், அகந்தை, அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லாமல் , மிக எளிமையாக, அடக்கமே உருவமாக, இயக்கப் பணி மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர் மணியம்மையார்.
தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியக் கோட்பாடான, பெண்ணினத்திற்கேயுரிய, உரிமை உணர்வு, சமத்துவப் பாங்கு, சுதந்திரப்பண்பு, விடுதலை வேட்கை, கொள்கைப் பிடிப்பு, ஆர்வம், அக்கரை, எளிய தோற்றம், சிக்கன இயல்பு, சீர்திருத்தச் சிந்தனைப் போக்கு, ஏற்றமிகு நடத்தை போன்ற அனைத்து குண நலன்களும் அட்சரம் பிறழாமல் அப்படியே கடைப்பிடித்து, அவருக்குப் பின் திராவிடக் கழக தலைமைப் பொறுப்பும் ஏற்ற சீர்மிகு வெற்றிப் பெண்மணி மணியம்மையார். திறந்த புத்தகம் போன்றது இவரது வாழ்க்கை. எந்த ஒளிவு மறைவோ, கள்ளத்தனமோ, பேராசையோ, இல்லாத ஒரு பேரானந்த நிலையில் இருந்தது இவர் வாழ்க்கை என்றால் அது மிகையாகாது. குடும்பமாக இருந்த ஒரு இயக்கத்தின் தாயாக இருந்து தொண்டர்களை குழந்தைகளாக பாவித்து, வழி நடத்தியவர் மணியம்மையார். பெரியார் வகுத்த பாதையில் அடி பிறழாமல், நடந்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித்தாயை இந்த நாடு கண்டதில்லை என்ற அறிஞர்களும், ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர் இவர். பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்றால் திராவிட இயக்க வரலாறு என்பது போல, அந்த வரலாற்றில் நீங்கா இடம் பெறும் வரலாறு அன்னை மணியம்மையாரின் வரலாறு. அவர் கேட்டு வந்த பழிச்சொல், வசை மொழி, இழிவுச் சொற்கள் அனைத்தும் அவரை மென்மேலும் பண்படுத்தி, அவரைப் பன்மடங்கு ஆக்கப்பூர்வமாக உழைக்கச் செய்தது. அந்த வகையில் உலகின் அத்துனைப் பெண் இனமும் மனதில் உள்வாங்கிக் கொள்வதோடு, தாம் தேர்ந்தெடுத்தப் பாதையில் ஏற்படும் தடைகளை எளிதாக முறியடித்துக் கொண்டே முன்னேறிச் செல்லும் அந்த வல்லமையை தம் வாழ்நாளின் இறுதி நாள் வரை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்த அந்த மன உறுதியை, முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு வாழக்கூடியது என்றால் அது மிகையில்லை!
வட ஆற்காடு மாவட்டம் பற்றி அறிஞர் அண்ணா ஒரு முறை நகைச்சுவையாக , ”வட ஆற்காடு மாவட்டம் அன்னை மணியம்மையாரை கொண்டு வந்து சேர்க்காவிடில், திமுக பிறந்திருக்க வாய்ப்பே இல்லை”, என்று குறிப்பிட்டது , அவர்தம் திறமையை நன்கு பறைசாற்றுகிறது.
1943 இல் செல்வி காந்திமதி பெரியாரிடம், அவருக்குச் செயலாளராகவும், வரவு, செலவு கணக்கு பார்ப்பவராகவும், பெரியார் சொற்பொழிவு ஆற்றும் நேரங்களில் , இயக்க ஏடுகளை விற்பனை செய்பவராகவும் தம் பணியைத் தொடர்ந்தார். காந்திமதியின் தந்தை திரு கனகசபையின் நண்பர் கு.மு.அண்ணல்தங்கோ என்பார் காந்திமதி என்ற இவருடைய பெயரை கே.அரசியல் மணி என்று மாற்றினார். அதனைச் சுருக்கமாக கே.ஏ. மணி என்றும் அழைக்கப் பெற்றார். இவர் வெளியிட்ட அறிக்கை மிக ஆழமான தகவல்கள் கொண்டதாக இருந்தது. கழகத்தின் களப்பணிகள் செய்வதற்கு மன உறுதியும், நாணயமும், நா - நயமும் கொண்டவராகவும், தேவையற்ற பழிச்சொற்களைக் கண்டு அஞ்சாதவரும், தந்தை பெரியாருடன் அனைத்து பயணங்களும் உடன் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதுடன், கழக உறுப்பினர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இயக்கப் புத்தகங்கள் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அப்படி கழகத் தொண்டில் அர்ப்பணிப்பு செய்பவர்களின் வாழ்க்கை சீவனத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்ற பெரியாரின் விருப்பமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படிருந்து. மிக யதார்த்தமான அறிக்கை. தங்கள் கழகத்தின் எதிர்கால நிலை குறித்த தெளிவான அறிக்கை!
மணியம்மையார், 1920 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் , திரு வி.எஸ். கனகசபை மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். விறகுக் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார், இவர் தந்தை. பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுத முடியாமல் அவரது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு தடை செய்தது. இரண்டாவது முறை எழுத முயன்ற போது தந்தையின் உடல் நிலை மோசமானதால் எழுத முடியாமல் போனது.
சேவை மனப்பான்மையில் சிறந்து விளங்கிய மணியம்மையார், மருத்துவமனையில் சென்று ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்குவதைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார். முதலில் பத்து குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்தப்பணி, நூறு குழந்தைகளுடன் தொடர்ந்தது. பெற்ற தாயைப் போலவே அன்பும் பாசமும் காட்டி வளர்த்து வந்தார்கள், அக்குழந்தைகளை.
மே மாதம் 15 ஆம் நாள் 1943ஆம் ஆண்டில் மணியம்மையாரின் தந்தை திரு கனகசபையின் மறைவிற்கு, உடல் நலமில்லாத போதும் வந்து கலந்து கொண்ட பெரியாரிடம், அண்ணல்தங்கோ அவர்கள் காந்திமதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அடுத்த மாதமே, 30 ந்தேதி, பெரியாரின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. வயிற்று வலி, கால் வீக்கம், ஏப்பம், விக்கல் ஆகியவை ஏற்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரே வாரத்தில் 34 பவுண்டு எடை குறைந்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் நடந்த மாநில சுய மரியாதைத் தோழர்கள் கூட்டத்தில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். சுய மரியாதை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், தமக்குப் பிறகு இயக்கம் சரியாக நடைபெற அதற்கொரு வாரிசும் அவசியமாகிறது என்று பெரியார் அங்கு பேசினார்.
மணியம்மையார் கழகத்திற்குள் வரும் முன்பே, வாரிசு பற்றிய பிரச்சனை வந்து விட்டது. 1933 இல் பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்த பின்பு, துயரம் மனதில் வலியூட்டினாலும், தம்முடைய பொது வாழ்க்கை இன்னமும்,தங்கு தடையின்றி நடைபெறும் என்றே அவரால் எண்ணத் தோன்றியது. அவருடைய உறவினர்கள் பத்து ஆண்டுகளாகப் பலமுறை கட்டாயப்படுத்தியும்,
அவர்தம்முடைய மறுமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கழக சம்பந்தமாக பல பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தைத் தவறாது கடைப்பிடித்து வந்த பெரியார், கொள்கைப் பற்றுடைய தலைவர், மனதில் துளியும் சலனமின்றி தூய்மையான மனதுடனே இருந்தார். காந்திமதியின் தந்தையார், பெரியாருக்கு அடிக்கடி , உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மடல் எழுதுவாராம். அப்போது அதற்குப் பதிலாக, ஒரு முறை “ எல்லோரும் தூர இருந்தபடி, உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை ... என்னவோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று எந்தவிதமான உள்நோக்கமுமின்றி , சலிப்புடன் எழுதினார்.
பெரியாரின் கடிதம் கண்ட கனகசபை, தம் மகள் காந்திமதியை அழைத்து வந்து, இவள் தங்களுடன் இருந்து உதவி செய்வாள் என்று கூறினார். தம் தந்தை இறந்த பிறகு ஒரு மாதம் கழித்து, பெரியாரிடம் வந்து சேர்ந்தார். பெரியார் முதலில் அவரை குலசேகரப்பட்டினம் தமிழ் கல்லூரியில் காந்திமதியைச் சேர்த்து தமிழ் வித்வான் கல்வி கற்க வைத்தார். முதல் முறை உடல் நலக் குறைவினால் தேர்வு எழுத முடியாமல் போக, இரண்டாம் முறை, மதுரையில் சென்று தேர்வு எழுதச் சென்றபோது, இவரைக் கண்ட இவருடைய உறவினர் ஒருவர் , அவரை வீட்டில் இருந்து ஓடி வந்து விட்டார் என்று எண்ணி காவல் நிலையத்தில் கொண்டு சென்று அவரை ஒப்படைத்தார். தேர்வு எழுதவே தாம் மதுரை வந்துள்ளதாக வாதித்து , காவலர்களை ஒப்புக்கொள்ளச் செய்தாலும், நேரம் கடந்து போனதால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
மணியம்மையாரின் முதல் எழுத்தோவியமாக ,’ இராமாயணம் - கந்தபுராணம் ‘ ஒப்பீடு 1944 ஆம் ஆண்டு, கந்த புராணமும், இராமாயணமும் ஒன்றே என்ற கட்டுரையின் முதல் பகுதி மட்டும் வெளியானது. இதன் தொடர்ச்சி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நிறைவுற்றது. இக்கட்டுரைகளே 1960 இல் புத்தகமாக வெளி வந்தது. இதுவே அம்மையாரின் , அச்சில் வெளிவந்த முதல் நூலாகும். ‘பெண் கல்வி’ எனும் தலைப்பில் ’தோழர்’ மணியம்மை சொற்பொழிவு , 1944 இல் ஆகஸ்ட் 19 இல் ’ஈரோடு உண்மை விளக்கம் கல்வி நிலையம் ’ , எனும் தலைப்பில் குடியரசில் எழுதியது குறிப்பிடத்தக்கது. ‘தோழர்’ என்று மணியம்மையார் குறிப்பிடப் பெற்றுள்ளார். ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவாக தோழர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ தனிப்பட்டோர் நலத்தைவிடச் சமுதாயத்தின் மானமே பெரிது” எனும் கருத்து மணியம்மையாரின் கொடியேற்று விழா உரையில் இடம்பெற்றது. இது அனைவரையும் கவர்ந்தது. கழகத் தொண்டர்களை திரும்பிப் பார்க்கச் செய்தது.
திராவிடர் கழகக் கொடியின் இலட்சியம் “நம்முடைய சமுதாய சுயமரியாதையையே குறியாய்க் கொண்டு நமது இழிவுகளும், தடைகளும் நீக்கப் பெற்று மனிதத்தன்மை பெறுவதே முக்கிய நோக்கம் என்பதையும் , அதையேத் தாங்கள் முக்கியமாகக் கருதுவதோடு அதற்காக தாங்கள் துக்கப்படுகிறோம் என்கிற துக்கக் குறியையும் காட்டுவதற்காகக் கருப்பு வர்ணத்தையும் அதற்காகத் தீவிர கிளர்ச்சியில் இறங்கிவிட்டோம். இனி ஓய மாட்டோம். எது வரினும் எதிர்த்து நிற்போம் என்பதைக் காட்டுவதற்காக நடுவில் சிவப்பு வர்ணத்தையும் வைத்துள்ளதை தமது திராவிடர் கழகக் கொடியில் பயன்படுத்துகிறோம்” என்பதாகும்.
1949க்குப் பிறகு பெரியாரின் துணைவியாராக அவருக்குப் பணிவிடைகள் செய்வதும், ஐயா ஏற்படுத்திய திருச்சி ஆதரவற்ற குழந்தைகளின் இல்லமான நாகம்மையார் இல்லப் பொறுப்பு, பெரியார் - மணியம்மையார் இல்லப் பொறுப்பு ஆகியவைகளே அவருடைய அன்றாடப் பணிகளானது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகுத் தம்முடைய எழுத்துப் பணிகளை மீண்டும் தொடர ஆரம்பித்தார்.
" சீதையைப் பற்றிய ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி” என்ற கட்டுரையில், வால்மீகி தனது இராமாயணம் என்னும் காவியத்தில் சீதையை ஒரு கற்புள்ள உயர்குணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறாரா? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவுவெடுத்திருக்கலாமோ? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று கருதி இருந்திருக்கிறாரோ ? ” என்பதுபோன்ற மிக வித்தியாசமான சிந்தனையை கிளப்பி விடுவது இந்த ஆராய்ச்சியின் மையக்கருத்தாக உள்ளது.
’தேவர்களின் காமவிகாரம்’ என்ற திரட்டு, இந்து சமயப் புராணக் கதைகளை விமர்சிக்கும் கட்டுரையாகும். “ இந்து சமயத் தேவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்லுகின்றன. இந்த 33 கோடி தேவர்களின் வரலாறுகளைப் புராண இதிகாசங்கள் எழுதவில்லை. முக்கியமான ஒரு சிலரைப் பற்றி மாத்திரம் புராணங்களிலும் , இதிகாசங்களிலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களின் யோக்கியதையைப் பற்றி ஆராய்வதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது’ என்கிறார்.
’காம விகாரங் கொண்டு திரியும் இந்து மத தேவர்கள் சரித்திரங்கள் அடங்கிய புராணங்களையும், இதிகாசங்களையும் படிப்பதானாலும் கேட்பதனாலும் கடுகளவாவது ஆத்திக புத்தி உண்டாகுமா? கடவுள் பக்தி ஏற்படுமா? மோட்சம் கிடைக்குமா? அல்லது சன்மார்க்க புத்தியாவது உண்டாகுமா? இந்த ஆபாசம் நிறைந்த சாமிகளின் கதைகளைப் படித்தால் அறிவு விளக்கமுறுமா? தேசத்திற்கு நல்ல பெயர்தான் கிடைக்குமா? யோசித்துப் பாருங்கள்’ என்பதே இக்கட்டுரையின் சாரங்கள். மிஸ் மேயோ போன்ற மேனாட்டுப் பெண்கள் இந்தியாவைப் பற்றியும், இந்து சமயத்தைப் பற்றியும் இழிவாக எழுதினார்கள் என்றால் அதற்கு இது போன்ற கீழ்த்தரமான புராணக்கதைகள்தான் காரணமாக இருந்திருக்கும், என்றார்.
”தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி” என்ற தலைப்பில் மனமுருகி சொற்பொழிவாற்றியதை மணியம்மையார் தொகுத்து வழங்கியதன் கருத்துகள் , பல ஆண்டிற்கு முற்பட்டதாயினும் அவைகள் இன்றளவிலும் பொருந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி திராவிடர்கள் இந்துக்கள்தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டப்போதிலும், அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை என்றும், அக்கொடுமைகளைத் தடுத்துக் கேட்டால் , மனுதர்ம சாத்திரம் சொல்கிறதென்று, சாத்திரக் குப்பைகளைக் காரணம் காட்டுகிறார்கள் . மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு மதத்தின் பெயராலும், சமய நூல்கள் , சாத்திரங்கள், புராணங்களின் பெயராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை . சாதிக்கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சம உரிமை இல்லாதிருப்பதைவிடச் சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாய் இருக்க முடியாது. அதற்குத் தடையாய் இருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை என்றும் இவ்வாறு ஆவேசமாக ஆற்றிய சொற்பொழிவை அதன் ஆவேசம் சற்றும் குறையாமல் மணியம்மையாரும் தொகுத்து வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1945 லிருந்து பெரியார் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டார். அத்துனை அவதியிலும் மக்கள் தொண்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர்தம் உன்னத மனம் அச்சேவையில் எந்தக் குறையும் வைக்கத் தவறவில்லை. மணியம்மையாரின் தொண்டும், பெரியாரின் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் அவர் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியும் ஈடு இணையற்றது.
தந்தை பெரியாரை , மணியம்மையார் மணமுடிக்கும் ஏற்பாடுகள் நடந்த போது, அவைகள் அவரிடம் கலந்து பேசியோ, அவருக்குத் தெரிந்தோ நடந்தது அல்ல. மணியம்மையாரைப் பொறுத்த மட்டில் பெரியாரின் கருத்து என்னவோ அதுவே தம்முடைய கருத்தாகவும் கொண்டு வாழ்ந்தவர். பெரியார் செய்யும் ஒவ்வொரு காரியமும், பேசும் ஒவ்வொரு பேச்சும் கழக நன்மைக்காக மட்டுமே இருக்கும் என்றும் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்.
1949 ஆம் ஆண்டு பெரியாருக்கும், மணியம்மையாருக்கும் திருமண அறிவிப்பு வெளியிட்டவுடன், பல குழப்பங்கள் கழகத்திலும், கழகத் தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவும், 72 வயது நிரம்பிய ஒருவர் 26 வயதேயான ஒரு இளம் பெண்ணை மணப்பது கழக வளர்ச்சிக்கு நல்லது அல்ல, அவதூறுகள் வந்து சேரும் என்று வாதிட்ட போதும், 19 - 06 - 1949 ல் விடுதலை பத்திரிக்கையில் , ‘இயக்க விஷயத்தில் தனக்கு இதுவரை அலைந்தது போல அலைய உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. தன்னைப் போல பொறுப்பு எடுத்துக்கொள்ளத்தக்க ஆள் வேறு யார் இருக்கிறார்கள். ‘ என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் கிடைக்கவில்லை என்றார். ஆதலால் தனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி , அவர் முலம் பல ஏற்பாடுகள் செய்து விட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டிருப்பதனால், அது பற்றியே திரு. இராஜாஜியிடமும் பேசியுள்ளதாகவும் எழுதினார்.
திருமணம் குறித்து அம்மையார், “ அய்யாவின் திருமணம் என்னும் ஏற்பாடு , ஓர் இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடே என்பதை விளக்கி விடுதலை நாளேட்டிலும், குடிஅரசு வார ஏட்டிலும் அறிக்கை வாயிலாக வெளியிட்டார்.
திருமண கலாட்டாக்கள் முடிவடைந்து, ஐயாவின் மனைவி என்று சட்டப்படி ஆனபின்னும், ”ஐயாவின் மனைவி”, என்ற அதிகாரத் தோரணையில் ஆரவாரம் செய்வதோ, மேடையில் சென்று சரிசமமாக அமர்வது என்று எதுவும் அம்மையாரிடம் இல்லை. பெரியார் அந்தத் தள்ளாத வயதிலும், நோயின் பிடியிலும் சிக்குண்ட போதும் சமூகம் மேம்பட வேண்டும் என்ற உயரிய கொள்கையில் 3 மணி நேரம் கூட பேசிக்கொண்டிருப்பார். அப்போது, கோடிக்கணக்கான அவருடைய சொத்துக்கு வாரிசாகவும், கொள்கைப் பிடிப்புள்ள, ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உண்மையான தலைவனாகவும், இருந்த ஒரு பெரிய மனிதரின் மனைவியாகவும் இருந்த மணியம்மையார், கூட்டத்திற்கு அப்பால் ஒரு மூலையில் கிழிந்த கோணிகள், அட்டைகள் அல்லது புத்தகம் கட்டிவந்த காகிதங்களை விரித்து அதில் கழகப் புத்தகங்களை அடுக்கி விற்பனையை ஆரம்பித்து விடுவார். அந்தக் கணக்கைச் சரியாக ஐயாவிடம் ஒப்படைத்தும் விடுவார்.
மணியம்மையார், பெரியாரை கணவர் என்ற உரிமை எடுத்துக் கொண்டு எந்தச் செயலும் செய்ததாகக் தெரியவில்லை. அத்துனை தொண்டர்களும் ஒருமுகமாக இதனை உறுதியிட்டுக் கூறுவதில் இது தெளிவாகிறது. 1957 ஆம் ஆண்டு, சாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் அன்னையாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக, பார்ப்பனர் உணவு விடுதிகளில் முன்புறப் பலகைகளில் உள்ள ‘பிராமணாள்’ என்ற அடைமொழியை அடைப்பதாக (அழிப்பதாக) முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு ஆரம்பமாகப் பெரியார் சென்னை அரசுக்கும், ஆளுநருக்கும், கடிதம் ஒன்றை எழுதி, அதனை 27 ந்தேதி, ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டின் விடுதலை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில் அவர் தமது நோக்கமாக, சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்பட வேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளெல்லாம் சாதியைக் காட்டக் கூடாது என்றும், நம் நாட்டில் சாதிப்பிரிவு என்பது, அன்றாடப் புழக்கத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் என்ற இரண்டிற்குள் அடங்கி விடுவதை அழகாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய பாங்கு சுவையானது.
உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ என்று பெயர்ப்பலகையில் வெளியிடுவது, தமிழர்களை இழிவுபடுத்தும் செயலாகும் என்பதை, ஒரு தெருவில், ‘இது பத்தினி வீடு’ என்னும் பெயர்ப்பலகை இருந்தால் , மற்ற வீடுகள் ‘வேசி வீடு’ என்னும் பொருள்படாதா? என அறிக்கையில் வெளியிட்டும் பேசியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். அத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்து தகுந்த நடவடிக்கைகள் ஏற்படாததால், கிளர்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. பல உணவு விடுதிகளில் பிராமணாள் விடுதி என்ற பெயர் நீக்கப்பட்டு, சைவ உணவு விடுதி என்று மாற்றப்பட்டது. இருப்பினும் இன்றைய பாரதி சாலை என்ற அன்றைய பெல்ஸ் சாலையில் , அப்படிப் பெயர் மாற்றம் செய்ய ஒத்துவராத ஒரு பெரிய உணவு விடுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு கிளர்ச்சி செய்ய முடிவெடுத்து தொண்டர்கள் பலர் புடைசூழ, பெரியாரின் மேற்பார்வையில், விடுதி முதலாளியிடம் அதனை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாததால், தாங்களே அழிக்க முன்வந்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இடைவிடாத இந்தக் கிளர்ச்சியில், 210 ஆம் நாள் (2-12-57) கைதாகித் தண்டனை பெற்றோரின் எண்ணிக்கை 837 ஆனது. இதில் மணியம்மையாரும், விசாலாட்சி அம்மையார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருடன் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு, 11ஆம் மாதம் , இரண்டு இலட்சம் ஈட்டிகள் திரண்டதாக பெரியாரே வருணித்த மாபெரும் மாநாடு நடந்தது. அதில் பெரியார் சற்றுக் கடுமையாக வெளியிட்ட அறிக்கை அவரைப் பல பிரிவுகளில் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1958 ஆம் ஆண்டு , ஜனவரி 19 ஆம் நாளில் வெளியான , ‘இளந்தமிழா புறப்படு போருக்கு’ , என்ற கட்டுரையினால் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனச் செயலாளர் மணியம்மையார் அவர்களை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு வெளியான ’விடுதலை ’ மீது அரசு வழக்குத் தொடர்ந்தது. தமிழறிஞர்கள் சாட்சி சொன்ன புகழ் பெற்ற வழக்காக இவ்வழக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் பொருட்டு மு.வரதராசனார் அவர்கள் முன்வந்து சாட்சியமளித்த முதல் வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடுகள் பல மாவட்டங்களிலும் நடைபெற்றன. குன்றக்குடி அடிகளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார், டி.பி. சொக்கப்பா, பட்டுக்கோட்டை எம்.எஸ் . கிருட்டிணசாமி பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன், வீர.கே.சின்னப்பன், கி.வீரமணி, ச.சோமசுந்தர பாரதியார் முதலானவர்களுடன் மணியம்மையாரும் இணைந்து பங்கேற்று அவற்றை நடத்தினார். இந்த வழக்கில் 100 ருபாய் அபராதமும் கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கழகத்தின் நடைமுறைக்கிணங்க அம்மையார் அபராதம் கட்ட மறுத்து சிறை சென்றார். 1958 ஆம் ஆண்டு, மார்ச் 22ம் நாள் அந்த விடுதி வழக்கு நிறைவுற்று, முரளி கபே, சைவ காபி சாப்பாடு ஓட்டல் என்று பெயர் மாற்றம் பெற்றது.
1964 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் ஈரோட்டில் நடந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவர், ‘ எனக்கு என்று எந்தச் சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில்தான் போட்டு வைத்து உள்ளேன் . ஏதோ மணியம்மைக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன. அவ்வளவுதான் ஆகும்’ என்று பேசியவரைத் தொடர்ந்து பேசிய மணியம்மையார்,
‘ ஐயா அவர்கள் பேசும்போது தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஸ்தாபனத்திற்குச் சேர்ப்பித்தது போக எனக்கென்று ஏதோவிட்டு வைப்பதாகக் குறிப்பிட்டார்கள். அப்படி எனக்கென்று என்ன விட்டு வைத்திருக்கிறார்? என்ன விவரம் என்று எனக்கு இதுவரை தெரியாது , அவர்களும் கூறியது இல்லை. எனக்கு அப்படி சொத்து வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு என்னையே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அறிவு எனது தாய்தந்தையர்களால் அளிக்கப்பட்டவளாகத்தான் இருக்கிறேன். அப்படி ஐயா அவர்கள் எனக்கு என்று வைத்து இருப்பாரேயானால் அதையும் இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத்தான் செலவு செய்வேன்’ என்று கூறியது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதை வெறும் மேடைப்பேச்சாக , கைதட்டலுக்காகச் செய்யாமல், பெரியாரின் மறைவிற்குப் பிறகு,ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவு இல்லம் ,ஈரோட்டு இல்லம் மற்றும் பெரியார் அவர்கள் மணியம்மையாருக்காக வழங்கிய தனிச்சொத்து அனைத்தையும் பொதுவிற்கு வழங்கியதே அதற்கான சான்று.
தந்தை பெரியார் மறைவிற்குப்பின் 1974 ஆம் ஆண்டு, ஐயாவின் 96 ஆவது பிறந்தநாள் விழாவில் தன் குடும்பம், தான் கடந்து வந்த பாதை, தன் இலட்சியம் ஆகியவைகள் குறித்து மனம் திறந்து முதன் முறையாக வெளிப்படையாகப் பேசக் காண்கிறோம்.
‘ நான் ஒரு இலட்சியத்திற்காகவே வாழ்கிறேன். உன்னையும் ஒரு இலட்சியவாதியாக ஆக்கவே விரும்புகிறேன். என்று 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் ஐயா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அருமையான உள்ளத் தூய்மையான வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. அதன் உட்பொருளை, மெய்ப்பொருளை புரிந்து கொள்ளும் வல்லமை, அறிவு, தகுதி, அன்று எனக்குப் போதாமல் இருந்த காரணத்தால் அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்கவோ மனதில் ஏற்கவோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தாற்போல் என்னைப் பற்றிச் சில வார்த்தைகள்! பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் ஐயாவின் ‘தொண்டு புரிவது இலட்சியம்’ என்று ஒப்படைத்த ஒரு சிறிய ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதில் உள்ள உண்மை நன்கு புரியும். தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து சேர்ந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ , பணத்திற்கு ஆசைப்பட்டோ , பெருமை ஆடம்பர உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் எதிர்பார்த்தோ , வந்தவள் அல்லவே அல்ல’ என்ற போக்கில் பேசிய பேச்சு, அவருடைய திறந்த புத்தகமான வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், தன்னலமற்ற மனப்போக்கின் வெளிப்பாடாகவும், இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 1974 இல் தி.மு.க. பற்றி பேசுகையில் அம்மையார், ‘இன்றைய தி.மு.க. ஆட்சி கட்டிக் காக்க வேண்டிய அசல் தமிழர் கட்சி’ என்றதும் குறிப்பிடத்தக்கது.
1978இல் தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எம்.ஜி.ஆர். அரசிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். தமிழக அரசின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டதையும் தம் ஊழியர்களுடன் தக்க உடன்பாடு காணவேண்டி அரசினை வலியுறுத்தி, ‘என்.ஜி.ஓ. பிரச்சனையும் அரசின் விசித்திர அணுகுமுறையும் ‘ என்னும் தலையங்கத்தினை விடுதலை இதழில் மார்ச் 9 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில் எழுதிய இந்த எழுத்துக்களே இவர் தம் வாழ்நாளில் எழுதிய இறுதித் தலையங்கமாய் அமைந்தது. அரசை அடக்கு முறையைத் தவிர்க்க வேண்டும் என்பதை அன்புடன் எடுத்துக் கூறிய அதே வேளையில், அரசு ஊழியர்களும் பொறுமையுடன் , தங்கள் கடமையறிந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியது அவர்தம் தாய்மை உணர்வை பறை சாற்றும் விதமாகவே அமைந்திருந்தது. அம்மையார் தம் இன்னுயிர் இழக்கப் போகும் ஆறு நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து, போராட்டமும் கைவிடப்பட்டது.
மார்ச் 16 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டில் மணியம்மையாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அன்பான அஞ்சலியுடன் அம்மையாரின் இன்னுடல், தந்தை பெரியாரின் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, கழகக் கண்மணிகளின் அன்புத்தாய் மணியம்மையார். தாம் இறப்பதற்கு முன்பே, பெரியார் சுயமரியாதைப் பிரசார நிர்வாகக் கமிட்டியின் செயலாளர் பதவியைத் தொடர , திரு கி. வீரமணி அவர்களை நியமனம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார் அன்னையார்.
சுயநலமற்ற, தன்னிகரில்லாத் தம்முடைய சேவை மனப்பான்மையால் , தாம் சார்ந்திருந்த கழகத்தின் கொள்கைகளை நிறைவேற்றுவதே தம் கடமையாக எண்ணி வாழ்க்கையையே அர்ப்பணித்த மணியம்மாரை இன்றும் மனமார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் அன்பான அவருடைய கழகக் கண்மணிகள்! கழகம் சார்ந்தோ அல்லது மணியம்மையார் பெண் குலத்தில் தோன்றிய ஒரு உன்னத பிறவி என்ற முறையிலோ பெண் குலத்திற்கே முன்னுதாரணமான வாழ்க்கை இவருடையது என்றாலும் அது மிகையில்லை.
கவிஞர் பூங்குன்றனாரால் எழுதப்பட்டு, சென்னை கடற்கரையில் அம்மையாருக்கு நடைபெற்ற மாபெரும் இரங்கல் பொதுக்கூட்டத்தில் திரு.டி.எல் மகராசனால் பாடப்பட்ட பாடல் வரிகள் வருமாறு:
அம்மா மறையவில்லை!
அம்மா மறையவில்லை - அய்யா
இலட்சியம் சாகவில்லை!
அம்புவி மீதினிலே - அவர்கள்
பாதையை நாம் தொடர்வோம்! (அம்மா)
அம்மா என்ற சொல்லினிலே - அன்பின்
ஆறு பாயுதடா!
அம்மா என்ற சொல்லினிலே - ஐயா
உருவம் தெரியுதடா (அம்மா)
தியாகத் திருவுருவம் - தந்தை
ஆயுளின் இரகசியம்!
தீயில் மெழுகாம் - இந்தத்
தாயின் கதையடா! (அம்மா)
போராட்ட குணமடா - நெஞ்சம்
புலிவாழும் குகையடா!
ஈரோட்டு எரிமலையில் - பூத்த
எழுச்சியின் சின்னமடா (அம்மா)
மணியம்மையாரின் குணநலன்களை தெள்ளத்தெளிவாக எளிமையாக எடுத்துக் காட்டும் இப்பாடல் அம்மையாரின் வாழ்க்கைக்கு ஓர் சான்றாக நிற்பதும் நிதர்சனம்!