Monday, May 21, 2012
எம் சூர்யோதயம்
உழைப்பால் உயர்ந்த உத்தமி!
சுசேதா கிருபளானி (1906 – 1974)
அந்நிய ஆதிக்கத்தின் அடிமைத் தளையைக் களைய, வீறு கொண்டு எழுந்த இந்திய தேசத் தியாகிகளின் வரலாற்றில் , சுதந்திரப் போராளி திருமதி சுசேதா கிருபளானிக்கும் மிக முக்கிய இடமுண்டு! ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெரும் பேற்றையும் பெற்றவர் சுசேதா அவர்கள். வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.என்.மஜீம்தார் என்பவருக்கு 1906ஆம் ஆண்டு , ஹரியானா மாநிலம், அம்பாலா எனும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை அரசாங்க மருத்துவராகவும், தேசியவாதியாகவும் இருந்தவர். தில்லியிலுள்ள இந்திரப்பிரஸ்தா மற்றும் செயிண்ட் .ஸ்டீபென் கல்லூரிகளிலும் தம் கல்வியைப் பெற்றவர். இதற்குப் பிறகு சுசேதா பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியில் அமர்ந்தார். 1936ஆம் ஆண்டில் மாபெரும் சோசலிசத் தலைவரான, ஆச்சார்ய கிருபளானியைச் சந்தித்து , பல எதிர்ப்புகளிடையே அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திரு. ஆச்சார்ய கிருபளானியின் சகோதரி கிகிபெஹன், இத்திருமணத்திற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவரைப் பற்றி நன்கு அறிந்த சுசிலா நய்யார் அவர்கள் , கிருபளானி அவர்களின் சகோதரி இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் முக்கியமான காரணம், அவர்கள் இருவருக்கும் உள்ள அதிகப்படியான வயது வித்தியாசம்தான். திரு கிருபளானியின் வயது ஐம்பதைத் தாண்டியிருந்த போது, சுசேதாவின் வயது 20களில் இருந்ததுதான். மேலும் கிகிபெஹன் அவர்கள் , தாம் எழுதிய ஒரு கடிதத்தில், தங்கள் குடும்பத்தில் ஆண்கள் அதிக நாட்கள் உயிர் வாழுவதில்லை என்பதால் , இந்த வயதில் , அவ்வளவு வயது வித்தியாசம் உள்ள ஒரு பெண்ணை மணமுடிப்பது சரியல்ல என்பதால்தான் அப்படிச் சொன்னார், என்கிறார். ஆனால் சுசேதாவோ, இத்திருமணத்தில் மிக உறுதியாக இருந்தார். காரணம், தாங்கள் இருவரும் நல்ல நட்பின் மூலம் மிக நெருங்கி விட்டதாலும், தங்கள் இருவருக்கும் பல விசயங்களில் ஒத்துப் போவது மட்டுமல்லாமல், பல செயல்பாடுகள் தங்கள் இருவருக்கும் பொதுவானதாக இருப்பதாலும், அனைத்திற்கும் மேலாக தாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிப்பதாலும் , தாம் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லியிருந்தார். மேலும் தாங்கள் இருவரும், தங்கள் முடிவைத் தாங்களே எடுக்கும் அளவிற்கு வயது முதிர்ந்தவர்கள் என்பதாலும், தாங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால, சமுதாயத்தில் தேவையில்லாத விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதாலும் தாங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சுசேதா. அதே அளவிற்கு திரு ஆச்சார்ய கிருபளானியும், சுசேதாவை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமாகவும், விருப்பமாகவும் இருந்தார். அண்ணல் காந்தியடிகளும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் சுசேதா அவர்கள் காந்தியடிகளுக்குத் தெரியப்படுத்தாமலே கிருபளானி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து, சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார் சுசேதா அம்மையார். தாம் எடுத்த முடிவில் மிக உறுதியாக நிற்கும் நெஞ்சுரம் கொண்ட ஒரு பெண்மணியாகவே இவரைக் காண முடிகிறது. 1946ஆம் ஆண்டில், காந்தியடிகளின் ஆலோசனைப்படி, சுசேதா, கஸ்தூரிபா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின், ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த அறக்கட்டளையின் செயலாள்ரான திரு தக்கர் பாபா அவர்களுடன் நாடு முழுவதும் சுற்ற வேண்டி வந்தது. இவருடைய பெற்றோர் மிக வலுவான பஞ்சாப் மாநிலத்தின் மண்ணில், தைரியமான ஒரு சூழலில், கொள்கைப் பிடிப்புகளுடன் வாழக்கூடிய , பிரம்ம சமாஜத்தில் அதிக மத நம்பிக்கைக் கொண்டவர்கள். இவரும் இந்து மதக்கலாச்சார ஒருங்கிணைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
அதே ஆண்டில் திரு. கிருபளானியை, இனவாதத்தினால் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த நவகாளி எனும் இடத்திற்கு மகாத்மா காந்தி அனுப்பி வைத்தார். 1942 இன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், அருணா அசஃப் அலி மற்றும் உஷா மேனன் ஆகியோருடன் , இவரும் கலந்து கொண்டார். இனவாத தீவிரவாதத்தின் போது காந்தியடிகளுடன், சுசேதாவும் நவகாளிக்குச் சென்று கடுமையாக உழைத்தார். கிருபளானி அவர்கள் திரும்பி வந்த போதும் சுசேதா அங்கேயே சில காலம் தங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தாயாக இருந்து ஆறுதலளித்தார்.
கல்லூரிக் கல்வியை முடித்த கையோடு, தாம் படித்து சிறந்த மாணவியாக வெளிவந்த அதே கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியமர்ந்தார். இவருடைய தந்தை வெகு விரைவிலேயே, , பொருளாதாரச் சிக்கலுடன் விட்டு விட்டு இறந்து போனதால், தன் படிப்புச் சுமையுடன், தன் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் கல்விச் சுமையும் தன் தலையில் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். தன் கடமைகளைச் செவ்வனே செய்த வல்லமையும் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் ஆச்சார்ய கிருபளானியைச் சந்தித்ததும் பனாரசில்தான்..இவருடைய தனிப்பட்ட ஆளுமை காரணமாக கிருபளானியால் பெரிதும் கவரப்பட்டார்.
சுசேதா கிருபளானி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீவிர பங்கேற்பின் மூலமாக இந்திய வரலாற்றுக் காட்சிப் பெட்டகத்தில் தம்முடைய பிம்பமும் பதியச் செய்தவர். பிரிவினைக் கலவரங்கள் நடந்த சமயங்களில் சுசேதா, அண்ணல் காந்தியடிகளுடன் தோள் கொடுத்து அரும்பணியாற்றினார். 1946ஆம் ஆண்டில் நவகாளி பயணத்தில் அண்ணலுடன் தானும் கலந்து கொண்டிருந்தார். அரசியலமைப்பு மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்பமான எண்ணிக்கையிலான பெண்களில் சுசேதாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்பின், அதிகாரப்பத்திரம் அமைக்கும் பெரும்பணியை செயல்படுத்தும் திட்டக்குழுவின் ஓர் அங்கமானார். இந்திய சுதந்திரத் திருநாளன்று, அரசியலமைப்பு மன்றத்தின் சுதந்திர அமர்வு நிகழ்வில் வந்தே மாதரம் என்ற தேசியப் பாடலையும் அழகாகப் பாடினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, உத்திரப்பிரதேச அரசியலில் ஒரு கருவியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். 1952ம் ஆண்டு மற்றும் 1957ம் ஆண்டிலும், சட்டசபைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948இல் காந்தியடிகள் இறந்த பிறகு அரசியலில் பலப்பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஆச்சார்ய கிருபளானி, ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொண்ட கருத்து வேறுபாட்டினால், காங்கிரசு தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘கிரிஷக் மஸ்தூர் பிரஜா கட்சி’ என்ற கட்சியை நிறுவி, 1952இன் தேர்தலுக்குத் தயாரானார்.இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியின் மன்மோகினி சேகல் என்பவரை வென்றார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். சுசேதா பின்னாளில் திரும்பவும் காங்கிரசினுள் வந்தாலும்,கிருபளானி மனம் மாறவில்லை. இருவரும் வெவ்வேறு கட்சிகளில் பணியாற்றினாலும், சுசேதா அவர்கள் தம் கணவருக்கு ஆற்றக்கூடிய தொண்டுகளை உடனிருந்து செய்ததோடு, அவர் உடல் நலத்தில் அக்கரையும் எடுத்துக் கொண்டார். தாம் ஒரு சிறந்த அமைப்பாளர் என்பதை, கிருபளானி அவர்கள் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறியவுடன், பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் அமைப்புகளில் உறுதுணையாக இருந்ததன் மூலம் நிரூபித்தார் சுசேதா அம்மையார்.
சிறுதொழில் அமைச்சராகவும், பணியாற்றினார். 1962ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேச சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963இல் உத்திர பிரதேசத்தில், முதல் பெண் முதல் அமைச்சர் என்ற கௌரவத்தையும் பெற்றார். இக்காலகட்டத்தில், அரசு ஊழியர்களின் 62 நாட்கள் வேலை நிறுத்தத்தை கையாண்ட விதம் இவருடைய முக்கியமான சாதனைகளுள் ஒன்று. ஒரு திறமையான நிர்வாகி என்பதை பல வழிகளிலும் நிரூபித்துக் கொண்டிருந்த காலகட்டமும் அதுதான். அலுவலகத்திற்கு சரியாக காலை 10 மணிக்குச் சென்று, அங்கு பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து, மாலை 7 மணிக்கெல்லாம், அன்று கையெழுத்திட வேண்டிய கோப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து, இரவு படுக்கப்போகும் முன் அத்தனை கோப்புகளையும் ஒன்று விடாமல் நன்கு வாசித்து, பிறகுதான் கையெழுத்திட்டு விட்டு ஓய்வெடுக்கப் போவது வழமை. அக்காலத்திய மக்களால் , இன்றும் இது போன்ற ஒரு முதல்வரைக் காண்பதரிது என்று நினைவு கூறும் அளவிற்கு ஒரு சிறந்த முதல்வராக பணியாற்றிய வல்லமையும் குறிப்பிடத்தக்கது. ஒரு முதல் அமைச்சராக இவருடைய எளிமையைக் கண்டு, லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்.
1971ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவுடன், புது தில்லியில் ஒரு வசதியான வீடு கட்டிக் கொண்டு, இருவரும் சுகமாக குடும்பம் நடத்தினர். ஒரு நல்ல மனைவியாகவும் தம் பங்களிப்பைக் குறிப்பிடும்படி நிறைவேற்றினார் சுசேதா அம்மையார். குளிர் பானங்கள், பழக்கூழ் மற்றும் சிறுதீனி போன்றவைகளை, சிக்கன நடவடிக்கை காரணமாக தம் கையாலேயே தயாரித்துக் கொள்வார். இல்லஸ்டிரேடட் வீக்லி என்ற பத்திரிக்கையில் தம்முடைய சுயசரிதையின் சில பகுதிகளையும் எழுதியுள்ளார் அம்மையார். இவர்களுடைய வருமானம், சேமிப்பு அனைத்தும், தில்லியின் ஏழை எளிய மக்களுக்குச் சேரும் வகையில் லோக் கல்யாண் சமிதி என்ற அமைப்பில் சேர்க்கப்பட்டது. அருமையான பல சேவைகள் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டன.
சமூகப் பணிகளில் தாம் எடுத்துக் கொள்ளூம் தீவிர கவனமும், அக்கரையும், தனக்கென்று வரும்போது நேர் மாறாக நடந்து கொள்வார் சுயநலமற்ற இந்த சமூக சேவகி. சிம்லா மலைப்பிரதேசத்தில் இவருடைய நான்கு சக்கர வாகனத்திற்கு ஏற்பட்ட பெரிய விபத்தினால், முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தார். ஓய்வில்லாத உழைப்பும், சமூகச் சேவைகளும், தம் உடல் நலத்தில் கவனம் செலுத்த இயலாத அளவிற்கு கொண்டு சென்றதன் காரணமாக, 1972ஆம் ஆண்டில், இருதய பாதிப்பு ஆரம்பித்து, இரண்டு முறை மாரடைப்பும் ஏற்பட்டது.
1974ஆம் ஆண்டில், திரு கிருபளானியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, படுக்கையில் இருந்தார். இடைவிடாத இறுமல் தொல்லையும், மூச்சடைப்பும் ஏற்பட்டிருந்தது. இரவு பகல் பாராது அம்மையார் உடனிருந்து அவரைக் கவனித்துக் கொண்டார். தமக்கு இருந்த இருதய நோயை சிறிதும் சட்டை செய்யாமலும், கணவரிடம் அது பற்றி துளியும் வெளிக்காட்டாமலுமே இருந்திருக்கிறார். 1974ஆம் ஆண்டில், நவம்பர் 29ஆம் நாளில், திரும்பவும் மற்றொரு முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த பின்பும், டிசம்பர் 1ஆம் தேதியன்று அவருடைய இன்னுயிர் அமைதியாகப் பிரிந்தது. அருகில் ஆதரவற்ற நிலையில் கணவர் கிருபளானி சோகமே உருவாக அமர்ந்திருக்க அம்மையார் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.
தம்முடைய அறிவாற்றல், கடின உழைப்பு, ஆழ்ந்த கவனம், சிரத்தையான பழக்க வழக்கங்கள், நேர்மை, உண்மை, எளிமை, சுயநலமின்மை, நல்லொழுக்கம், சுய கட்டுப்பாடு என இப்படி அனைத்து நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்ற தன்மையால், சுசேதா கிருபளானி அம்மையார் எக்காலத்தும், பொது வாழ்வில் சாதிக்க எண்ணுபவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்பவர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நன்றி : திண்ணை வெளியீடு
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...