பவள சங்கரி
பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!
நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா
அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா
ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!