Thursday, October 3, 2013

வளம் தரும் நாயகியே! வருகவே!


பவள சங்கரி
Goddess_Adi_Parashakthi_at_Parashakthi_Temple
பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!
நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா
அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா
ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

pbaba097_goddess_lakshmi_parvati_and_saraswati
வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும் அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின் விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும். மனிதரின் வாழ்க்கை நலமான, கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி சரசுவதி தேவியை வழிபடுகிறோம்.
பதினென் கரங்களுடன் செவ்வாடை தரித்து ஞானத்தின் பிரதிபிம்பமாக, அழகின் இன்ப ஊற்றாக, அட்ட இலட்சுமியாகக் காட்சியளிப்பவள் அன்னை. 1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம் ஆகியவற்றை 18 ஆயுதங்களையும் அன்னையின் 18 திருக்கரங்கள் தாங்கி நிற்கிறது. வெள்ளை ஆந்தையை வாகனமாகக் கொண்டவள். 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி என அட்ட சக்திகளாக அருள்பாலிப்பவள் அன்னை. அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு அமைய வேண்டுமானால் அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆயினும் இந்த அட்ட இலட்சுமிகளில் எந்த இலட்சுமியின் அருளை இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ இயலும். ஆனால் தைர்ய இலட்சுமி என்பவளின் அருளை இழக்க நேர்ந்தால் நம் வாழ்வு என்ன ஆகும் என்று சொல்ல வேண்டியதில்லை. தன்னம்பிக்கையைக் கொடுத்து, எத்துனை துன்பம் வந்தாலும் அதைத் தாங்கி நின்று மீண்டு வரும் மாயம் செய்பவள் தைரிய இலக்குமி! தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு என பல்வேறு அழகான நாமங்கள் சூடியவள் அன்னை. நன்னடத்தை, நல்லதொரு குறிக்கோள், சோம்பலின்மை ஆகியவைகளை உடையவர்களுக்கும், தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும் தன்னுடைய பூரண அருளைப் பொழிபவள் அன்னை. தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றி, கோபூசை செய்து அன்னையை வழிபட உள்ளம் குளிர்வாள். இந்துக்களிடம் ஆலய வழிபாடும், இலட்சுமி கடாட்சமும் செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையின் ஓரத்தில் கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் பழமையான இலட்சுமி தேவியின் சிலை ஒன்று கிடைத்துள்ளதாம். இதிலிருந்தே இலட்சுமி தேவியின் தொன்மை நன்று விளங்குகிறது.
பெரியோரை மதிப்போருக்கும், எப்போதும் உண்மையே பேசுபவர்களுக்கும், தன்னையும், தம் இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், இரக்கமுள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள், போன்றவர்களுக்குத் தம் அருளாசியை அள்ளி வழங்குபவள் அன்னை. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.
படத்திற்கு நன்றி:
நன்றி: வல்லமை

3 comments:

  1. 1400 ஆண்டுகள் முன்பு... வியக்க வைக்கும் தகவலோடு சிறப்பான பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. படங்களும், பாடலும், விளக்கங்களும் வெகு அருமை.

    இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.//
    நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete