Thursday, November 11, 2021

சங்க இலக்கியங்களில் சித்த மருத்துவம்

 


 

                             

தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலகத் தமிழ் வளர்ச்சி ஆய்வு மையம் இணைந்து நடத்திய தமிழர் மருத்துவக் கலை எனும் பன்னாட்டுக் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட இலக்கியங்களில் சித்த மருத்துவம் என்ற என் ஆய்வுக் கட்டுரை இது.

 

உலகில் உள்ள சித்த மருத்துவம், ஆயுர்வேம், யூனானி, அலோபதி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் எனும் அனைத்து ஆறு வகை மருத்துவத்தில் மிக தொன்மை வாய்ந்தது, சித்த மருத்துவம்.
மற்ற மருத்துவங்கள் எப்போது தோன்றின என்று வரையறுத்து கூற முடிவதுபோன்று சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது என்பதே அதன் தொன்மையை உறுதி செய்கிறது.

 

விண் அறிவியல், அணு அறிவியல், மருத்துவ அறிவியல், ஐந்திணை அறிவியல், கால ஒழுக்கம், சமய அறிவியல் என சித்தர்கள் தொடாத எல்லைகளே இல்லை. தாங்கள் கண்டறிந்த உண்மைகளை ஓலைச்சுவடிகளாக, கல்வெட்டு எழுத்துகளாக, ஏட்டுப்பிரதிகளாக இவ்வுலகிற்கு அருட்கொடையளித்துள்ளனர். பல்வேறு அரிய அறிவியல் கருத்துகளை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பது  அதிசயம். கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள் என்றால், "கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள். சித்தி பெற்றவர் சித்தர். இவர்களைச் சமய, சமுதாயத்தின் ஆன்மிகப் புரட்சியாளர்கள் என்றும் அறிவியலின் முன்னோடிகள் என்றும் கூறுவர்.

அத்தகைய சித்தர்களின் தொன்மையான மருத்துவம் உலக மாந்தரின் உயிர் காக்கும் உன்னதமாக விளங்குவது இன்று நிரூபணம் ஆகியுள்ளது.

 

நம் இந்தியாவின் தலைசிறந்த பாரம்பரிய சித்த மருத்துவம் மிகப்பழைமையான மருத்துவ முறை. ஆகச்சிறந்த மருத்துவச் சித்தர்களின் ய்வுகளின் அடிப்படையில் பல ஆயிரம் ஆண்டுகளாக வெற்றி பெற்ற சிகிச்சை முறையாக வழிவழியாக வந்து கொண்டிருக்கும் ஒரு மருத்துவ முறை. ஓலைச்சுவடிகளில் எழுதி பராமரிக்கப்பட்டு வந்துள்ள மருத்துவக் குறிப்புகளின் அடிப்படையில் மூலிகை மருத்துவம் பார்க்கப்படுகிறது. பதினெட்டு சித்தர்கள் இயற்கை மருத்துவம் சார்ந்த இந்த சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தர்கள் என்று கருதப்படுகிறது. தமிழ் மருத்துவம் என்றும் வழங்கப்படும்  பக்க விளைவுகளற்ற மருத்துவம் என்ற வகையில் இந்த நவீன காலத்திலும் பலரும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் மருத்துவம் என்றாலும் நவீன ஆங்கில மருத்துவமுறை போன்று நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள முடிவதில்லை என்ற குறையும் உள்ளது. சிறப்பு வாய்ந்த நம் பாரம்பரியமான சித்த மருத்துவம் உலகளவில் பெரிதும் பரவாமல் இருப்பதற்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

 

பண்டைய இலக்கியங்கள் நானோ என்கிற மீநுண் மற்றும் கரிம உலோக சேர்மங்களின் எண்ணிக்கையை அடையாளம் காண்கின்றன. இதன் பொருள், சித்தர்கள் மீநுண் தொழில்நுட்பம், உயிர் அறிவியலையும் பயன்படுத்தினர், அதாவது மீநுண்-மருந்து வடிவமைப்பு, மீநுண்-மருந்து தொகுப்பு, மீநுண்-மருந்து விநியோகம் போன்றவை. நானோ சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படும் பல செயல்முறைகளையும் இந்த இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட மீநுண் உருவாக்கம் சித்தர் அகத்தியரின்,  அகத்தியர் பன்னிரண்டாயிராம்” எனும் இலக்கியம் மூலம் அறியமுடிகின்றது. தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய்ந்து, உள்நாட்டில் கிடைக்கக்கூடிய, செலவு குறைந்த இயற்கை வளங்களை சிகிச்சைக்காகப் பயன்படுத்தினர் என்பதே இதன் சிறப்பம்சம்.

 

திருமூலரின் திருமந்திரத்தின் ஒரு பாடலும் அதன் மறு உருவமும் காணலாம் …

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு

அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008        

 

பெரிய ஆட்ரான் மோதுவி (Large Hadron Collider, அல்லது LHC)யில் அணுவின் அடிப்படைத் துகளான நேர்மின்னிகள் என்ற புரோத்தான்கள் கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 3 லட்சம் கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படைத் துகள்களையே கட்டமைக்கும் பரமாணு என்ற  Higgs boson என்ற கடவுள் துகள் குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.  அதில் வெற்றியும் கண்டனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

 

சித்த மருந்துகளான, குறிப்பிட்ட மூலிகை தயாரிப்பு,  கனிம பொருட்கள்  என்ற உப்புகள், தாதுக்களிலிருந்தும் விலங்கு பொருட்களான கொம்புகள், முத்துக்கள் அல்லது பவளப்பாறைகள் போன்றவைகள் மூலம் தயாரிக்கப்படுபவை. தாவரங்கள், உப்புகள், தாதுக்கள் மற்றும் விலங்கு பொருட்களின் பண்புகள், உயிர் சூத்திரங்களின் பண்புகள், அதன் சுத்திகரிப்பு, செயலாக்கம், அளவை நிர்ணயித்தல், நச்சுத்தன்மை, மாற்று மருந்து மற்றும் மருத்துவ பயன்பாடு பற்றிய சித்தர்களின் ஞானம், அதற்கான அவர்களின் கண்டுபிடிப்புகள் போன்றவைகளையும் பாடல்களில் காணலாம்.

 

ஆதித்தமிழர்கள் வரலாறு என்பது மிக நீண்டதொரு பாரம்பரியம் கொண்டதல்லவா .. இதனால் மருத்துவ முறைகளும் மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்திருக்க வேண்டும். புராணங்களின்படி சித்த முறைகள் உலகின் முதற்கடவுளான சிவனிடம் இருந்து பார்வதிக்கும், பின்பு நந்தி தேவருக்கும், பின்பு சித்தர்களிடமும் பயின்று வரப்பெற்றது என்பார்கள். ஆதி காலத்தில் சித்தர்கள் பெரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக திகழ்ந்தார்கள் என்பதே நிதர்சனம். திருமூலர், போகர், அகத்தியர் போன்ற தெய்வீகச் சித்தர்களின் வழியில் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகளாக பரவி வந்துள்ளதே சித்த மருத்துவம் என்பதே பரவலான நம்பிக்கை. இன்றும் பல்வேறு பழம்பெரும் நூல்களிலிருந்து இன்றைய நூல்ள்வரை அகத்தியரின் மருத்துவ முறைகள் குறித்த விளக்கங்கள் காணப்படுவதோடு இன்றைய மருத்துவர்களால் அதிகளவில் பயன்படுத்தவும்படுகிறது. சித்தர்கள் இதனை தமிழ் மொழியில் உருவாக்கிக் தந்ததாலும் இதனை தமிழ் மருத்துவ முறை எனலாம். இதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் காணமுடிகின்றது. அந்த வகையில் பண்டைய தமிழ் சமூகம் மருத்துவத் துறையிலும் மிகச்சிறந்து விளங்கியுள்ளதை அறிய முடிகின்றது. தமிழருக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த மருத்துவ முறையான இதில் மூலிகை வர்க்கம், பாடாண வர்க்கம், உபரச வர்க்கம், உலோக வர்க்கம், வைப்புமுறை போன்ற பிரிவுகளாக வகுத்து அளித்துள்ள சித்தர்கள் காலம் கி.மு. 5000 முதல் கி.பி. 500 க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. இதற்கான ஆதாரங்களும் அதிகமாகவே உள்ளன.

 

ஆதித்தமிழர்கள் பிரளயத்தால் கடலில் மூழ்கிய நிலப்பரப்பிலிருந்து புகலிடம் தேடி மேற்கே கடல் பாதையில் பயணமாகி, இசுரேலுக்குச் சென்றவர்கள் யூதர்களாகவும், எகிப்திற்குச் சென்றவர்கள் சுமேரியர்களாகவும் ஆனார்கள்.   சிந்து சமவெளியில் குடியேறியவர்கள் சேரர்கள் எனவும், கங்கை பாயும் சமவெளிப் பகுதிக்குச் சென்றவர்கள் சோழர்கள் எனவும், தெற்குப் பகுதியில் குடியேறியவர்கள் பாண்டியர்கள் எனவும் ஆனார்கள். பின் அடுத்தடுத்த பல்வேறு படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் போன்ற காரணங்களால் சிந்துநதிப் பகுதிச் சேரர்களில் பெரும் பகுதியினரும், கங்கைப் பகுதி சோழர்களும், பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்ட தெற்குப் பகுதிக்கே வந்து சேர்ந்தனர். இவ்வாறு இந்திய வடபகுதி முழுவதும் தமிழர்களே இருந்துள்ள செய்திகளும், அப்பகுதி முழுவதும் அகண்ட தமிழகமாக பரந்த நிலப்பரப்பைக் கொண்டதாக உருவாகியுள்ளதற்கான பல ஆதாரங்கள் உள்ளன.

இந்த அகண்ட தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் சித்தர் அகத்தியர் என்றால் அது மிகையாகாது. மறைந்துவிட்ட சிந்து வெளி எழுத்து மூலம் சிந்து வெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவை உறுதிப்படும் முயற்சியில், திரு ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவுக்குப்பின் மேலும் தொடர வாய்ப்பில்லாத நிலையில் அகத்தியர் வரலாறு இந்த இணைப்புக்குப் பாலமாக அமையும் என்றும், ஹாரப்பாவிலிருந்து கிழக்கும் தெற்குமாக இடம்பெயர்ந்த சிந்து வெளியினரில் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்த பதினெட்டுக் குடிகளுக்குத் தலைமைதாங்கி வழி நடத்தி அவர்களைத் தமிழகத்தில் கொங்கு போன்ற இடங்களில் குடியேற்றி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் அகத்தியர். கடல்வழியே கீழை நாடுகளுக்குப் பயணித்து ஆதிக்குடிகள் சமயமும் புத்த சிந்தனையும் கலந்த தமிழ் புத்தம் கிழக்காசிய நாடுகளில் பரவ அடித்தளம் அமைத்தவர் அகத்தியர். தென்கிழக்கு ஆசியாவில் சாவா, பாலி, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் அகத்தியர் வழிபாடு நடந்ததை அந்நாட்டு வரலாற்று ஆவணங்கள் விளக்குகின்றன. எனவே தமிழரின் வேதகாலத்துக்கு முற்பட்ட வரலாற்றைக் கட்டமைக்க அகத்தியர் பற்றிய ஆய்வை தமிழக ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் வகையில் சித்த மருத்துவத்தின் தோற்ற வரலாறு குறித்தும் அறியலாம்..

 

தொல்காப்பியம் பற்றி பேசும் தமிழ் சமூகம் அகத்தியர் பற்றி அதிகம் பேசுவதில்லை. தொல்காப்பியனுக்கு ஆசானாக விளங்கியவர் அகத்தியர் என்று இலக்கியங்கள் செப்புகின்றன. அதுமட்டுமன்றி கிழக்காசியாவின் பலவேறு நாடுகளிலும் அகத்தியர் வணக்கத்துக்குரியவராகப் போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொன்மம், புனைவுகள் மலிந்த தமிழர் வரலாற்றில் அகத்தியர் குறித்த தெளிவான விளக்கத்தைப்பெற அகத்தியர் தொடர்பான தரவுகளைத் திரட்டுதல் மூலம் அகத்தியரின் மருத்துவ ஆய்வுகள் குறித்த விவரங்களையும் திரட்ட முனையலாம்.

 

தென் கிழக்காசியாவில் அகத்திய வழிபாடும் அவலோகேதீசுவரர் வழிபாடும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கில் உள்ளன. தொல்காப்பியரின் ஆசானான அகத்தியர், மூலைகைகளின் சுவர்கமாகத் திகழும் பொதிகை மலையில் வாழ்ந்து கிழக்காசியப் பயணம் செய்து திரும்பி வந்ததாகக் குறிப்புகள் கிட்டும். பொதிகை மலையில் தமிழ் புத்தமும் செழித்திருந்தது. சித்தர்களின் சித்தாந்தமான உள்மனப் பயிற்சியும் உடல்நலப் பேணலும் கிழக்காசியாவில் தமிழ் புத்தமாக புத்தரின் மான்பூங்கா முதல் பொழிவை இணைத்து உருவானதே போதி தர்மரால் பிற்காலத்தில் ஜென் புத்தமாகப் பரப்பப்பட்டது.

அகத்தியர் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட கிழக்காசிய மக்கள் அவலோகேதீசுவர் வழிபாட்டையும் மேற்கொண்டிருந்தனர். சித்தர்களின் சிந்தனையும் அவலோகேதீசுவரர் தொடர்பான நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டே அனைத்து புத்தர்களின் ஒருங்கிணைந்த வடிவிலான போதிசத்துவர் என்ற அவலோகேதீசுவர் கிழக்காசியாவின் பல நாடுகளிலும் அரசனாகவோ அல்லது அரசியாகவோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

 

மிதமான தட்பவெப்பம் நிலவுகின்ற நிலநடுக்கோட்டை அடுத்துள்ள பகுதியிலேயே முதன்முதலில் தோன்றிய உயிரினம் பின்னர் பரிணாம வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்ற வகையில் சமச்சீரான தட்பவெப்பம் நிலவுகின்ற பகுதியான தென்னிந்திய தீபகற்பத்தில்தான் மனிதன் முதலான ஏனைய உயிரினங்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்பது புவியியலாளர்கள், மானிடவியலாளர்களின் கருத்து. இதனை உறுதி செய்யும் விதமாக வரலாற்றறிஞர் பி.டி சீனிவாச ஐயங்காரும், ஆதி மனிதன் உறைபனி அடர்ந்த இமயமலைத் தொடரின் உச்சிகளிலோ அல்லது அதன் அடிவாரத்திலோ, விலங்குகள் நிறைந்த தண்டகாரண்யாக் காடுகளிலோ தோன்றி, வளர்ச்சியடைந்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.  மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை உணவுகள், தூய்மையான காற்று, நல்ல தட்பவெப்பம் என அனைத்தும் அழகான இயற்கை சூழலுடன் அமைந்துள்ள தென்னிந்தியாவே மனித இனத்தின் தோற்றுவாயாக இருக்கவேண்டும் என்று உறுதியாகிறது. பரிணாம வளர்ச்சியின் ஊடாக நோய் தீர்க்கும் கலையையும் கற்று உயிர் காக்கும் பணியில் மருத்துவச் சித்தர்களும் இருந்திருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

கி.மு. 5000 ஆண்டளவில் உருவான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களில் நோய், பிணி என்ற சொற்கள் உடல் நலம், மனநலம் சார்ந்து பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ …

 

“நோயும், இன்பமும் இருவகை நிழலில்”

“அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்”

 

“மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு

 யாப்புற வந்த இளிவரல் நான்கே”

 

பையுளும் சிறுமையும் நோயின் பொருள”

போன்றவைகள்  ….

 

உலக மொழிகளிலேயே மிகவும் பழைமை வாய்ந்த மொழியான நம் தமிழ் மொழியின் இலக்கியங்களைப் போன்றே நம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் அதனினும் பன்மடங்கு பழைமை வாய்ந்த, இயற்கை வரம் பெற்ற ஒரு கலை. முதல் சங்கம், இடை சங்கங்களின் காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களின் வரிசையில், இறையனார், அகத்தியர், கௌதமர் போன்றோர் மருத்துவர்களாக இருந்துள்ளனர். இவர்களது மருத்துவ நூல்கள் காலத்தால் அழிந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அகத்தியம் எனும் முத்தமிழ் இலக்கண நூலைப் படைத்த அகத்தியர், வாடகம் முதலாம் சித்த மருத்துவ நூல்களையும் உருவாக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தொல்காப்பியச் சூத்திரங்கள், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே மருத்துவ நூல்கள் இருந்திருக்கலாம் என்றும், கடைச்சங்க காலத்திற்கு முன்பே சித்த மருத்துவமும், மருத்துவ நூல்களும் இருந்திருக்க வேண்டும் என்பதற்கும் ஆதாரங்களாகின்றன.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்

மறைமொழி தானே மந்திரம் என்ப”

என்ற இந்த தொல்காப்பிய வரிகளே ஆதாரமாகும்.

 

சோழர் காலத்தின் திருமுக்கூடல் கல்வெட்டு ஆதாரங்களின் மூலமாக அக்காலத்தில் இரண சிகிச்சை முறையே இருந்திருப்பதையும் அறியமுடிகின்றது.

 

திருமூலர் தமது திருமந்திரத்தில்  ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு 21,600  சுவாசங்களை உள்வாங்கி வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறார். அக்காலத்தில் அங்குலக் கணக்கில் குறிப்பிடும் வழக்கப்படி, நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை வலது நாசித் துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழிமுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது என்றும் இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளதும் ஆச்சரியமான விசயங்கள். வலது நாசியில் சுவாசிக்கும்போது சூரிய கலை, பின் கலை, தந்தை கலை, வட கலை என்று பெயர் சொல்வார்கள். இடது நாசியில் சுவாசிக்கும்போது சந்திரகலை, தாய் கலை, இட கலை, சுழி முனை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கலித்தொகை பாடல் ஒன்று பார்க்கலாம் ..

அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே

இதன் பொருள்

உள்ளம் உடைந்துபோன வருத்தம் ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தமும் மிகுந்திட,  வேதனையால் பித்துப்பிடித்துப்போவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே! வருந்தவைக்கும் நோயைத் தீர்ப்பதற்கான வழியை அறிந்த ஒருவன் அதற்குரிய மருந்தைத் தனக்குத் தெரியாது என்று கூறுவதைக் காட்டிலும் கொடியது, உன்னை நுகர்ந்தோரின் நெஞ்சம் அழிந்து போகும்படி அவரைக் கைவிட்டுவிடுவது, என்பது பொருள்.

 

சங்க இலக்கியங்களில் மகப்பேறு வைத்தியம் சார்ந்த சில செய்திகளையும் காணமுடிகின்றது. கருவுற்ற பெண்ணுக்குச் செய்யும் சங்குகள் குறித்தும் குழந்தை பெற்ற பிறகு இளம் தாயான காலத்தே மைந்த மருத்துவமும் அது தொடர்பான கிாியைகள் போன்றவை பற்றியும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அதாவது தாய் ஒருத்தி சிறு வெண்கடுகு பூசி படுத்திருக்கும் செய்தியினை பாலை விளக்குகின்றது. சித்த மருத்துவம் சார்ந்த இதுபோன்ற பல செய்திகளைக் காணமுடிகின்றது.

 

 ற்றிணை பால் வாிகள்:

 வாராய் பாண டுக்கம் நேரிழை

 கடும்புடை கடுஞ்சரல் ங்குடிக்கு உதவி

நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்

விளங்கு கர் விளங்கக் கிந்தோட் குறுகிர்

புதல்வன் ஈன்றெனப்........

 

கருவுற்ற பெண்கள் மசக்கை நோய் உடையோராக புளிப்பு பண்ங்கள், களிமண் உருண்டை முதலாம் பொருள்களைப் பிறர் அறியாவண்ணம் விரும்பி உண்ணுவதுண்டு. அச்செய்தி புற நானூற்றிலும் கூறப்படுகின்றது.

பிறர் மண்ணுண்ணும் செம்மல் நின்நாட்டு

வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது

கைவருண்ணா அருமண்ணினையோ

 

 குறுந்தொகையில், “பசும்புளி வேட்கை

 கடுஞ் சூல் மகளிர் போல நீர் கொண்டு “

முதன்முதலாக கருவுற்ற பெண்கள் பசிய புளிப்புச்சுவையில் விருப்பங்கொள்ளுதலைக் குறுந்தொகை பாடல் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

 

புறநானூறு:மீன் புரையும் கற்பின் மடமொழி

அாிவை தோள் அள வல்லதை

நினதன இல்லை நீ ……” என்றும்

 

 உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்

அற்றே வருமட்டும் அன்னத்தை காட்டாதேஎன்றும் குறிப்பிடுவதை இன்றும் நாம் இயல்பாகவே வழக்கத்தில் கொண்டுள்ளோம் பாருங்கள் .. அதாவது

பட்டினி இருத்தல் சிறந்த மருந்து என்பார்கள். இன்றளவிலும் பெண்கள் பலர் இறையுணர்வின் பெயரால் நோன்பு இருப்பதும் உண்டு. குறிப்பிட் ஒரு ஒழுங்கு முறையில் பட்டினி இருத்தல் உல் லத்திற்கு உகந்ததாகின்றது என்கிறது பாடல். சுரம் என்ற காய்ச்சல் நோயாளிக்கு சோறு கொடுக்காதிருத்தல் ன்று என்கிறது தமிழ் மருத்துவம்.

 

புறநானூறு: மேலும் “ பசிப்பிணி மருத்துவனில்லம் அனித்தோ கூறுமின் எமக்கேஎன்கிறது.

பசிப்பிணி என்பது வயிறு தொடர்பான நோய், பட்டினியையும் குறிக்க வழங்கி இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே பசிப்பிணி என்ற வழக்கு நோய் சூட்டியதா அல்லது பசி குறித்ததா என்பது ஆய்வுக்குாியதாகின்றது.

 

கலித்தொகை பால்: "இன்னுயிர் போத்தரு மருத்துவர்" என உயிரை மீட்டுத் தருவோராக மருத்துவரை கூறப்பட்டதையும், "திருந்திய யாக்கையுடன் மருத்துவனூட்டிய மருந்து போல" என மருத்துவர் தரும் மருந்தின் மேன்மை பற்றியும் கலித்தொகையில் பேசப்படுகின்றது.

 

 குழந்தைரோக்கியமாக வளர்வதற்கு தாய்ப்பாலூட்டுதல் மிகவும் அவசியம் என்பதும் அந்நாளிலேயே வற்புறுத்தப்பட்டுள்ளதும் அறியமுடிகிறது. இதன் முக்கியத்துவம் பற்றி புறநானூறு, நற்றிணை குறிப்பிடுகின்றது.

 

 புதல்வன் ஈன்ற ஆங்கண் மந்தை முலைவாய் உறுக்குங் கைபோல….” என்கிறது.

 

திாிகடுகம்: "உலகில் கடுகம் உல் நோய் மாற்றும் அலகில் அகநோய் அகற்றும் - நிலைகொள் திாிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்

மருவு ல்லாதன மருந்து.”  என்கிறது.

திாிகடுகம் என்பது மருந்தின் பெயர். இதன் பெயரால் அறநூலும் ஆக்கப்பெற்றுள்ளது. திாிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்றும் மருந்து சரக்குகளையும் சுட்டும் சொல்லாகும். இம்மூன்று மருந்துகளும் உல் நோய் போக்குவது போன்று இந்நூலில் கூறப்பட்டதை கருத்துக்கள் உளப்பிணியையும், ற்பிணியையும் போக்கும் தன்மை வாய்ந்தவை.

 

நீர் இன்றி வாழாது உடல்; அவ்வுடலுக்கு உணவு கொடுத்தவரும் ஆவர். உணவால்

உளதாவதுதான் மனித உடல், உணவே நிலத்தின் விளையும் நீரும் ஆகும் என்பதை.

'' நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரி யோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத் திசினோரே....'' (--புறம். 18 --)

 

'' உடம் பொடு நின்ற உயிரும் இல்லை '' என்கிறது புறநானூறு.

 

அடுத்தொரு கலித்தொகை பாடல் - நோய் வருவதும் அதற்கான மருந்துண்பதும் இயல்பு என்றாலும் உடல் நல்ல உடலாக இருந்தால்தான் மருந்து விரைவில் உடலில் கலந்து நோய் தீர்க்கும். உடல் கெட்ட நிலையில் நோய் வருமானால் மருந்து பயன் தர நீண்ட நாட்கள் ஆகும்

என்பதனை,

'' திருத்திய யாக்கையுள் மருந்துவன் ஊட்டிய

மருந்து போல், மருந்தாகி, மனன் உவப்பப்

பெரும் பெயர் மீளி....'' என்கிறது.

 

மருந்து என்னும் அதிகாரத்தில்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.  

போன்று மருத்துவம் குறித்த பத்து குறட்பாக்களை திருவள்ளுவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

தற்போதுள்ள பேரிடர் கோவிட் 19 தொற்றுக்கு நிலவேம்பு, கபசர குடிநீர் போன்ற சித்த மருந்துகள் உயிர் காக்கும் வரமாகக்கூட கருதப்பட்டு வருகிறது. 2007ஆம் ஆண்டில் சிக்குன்குனியா என்ற காயச்சல் வந்தபோது நிலவேம்பு சாரு கொடுக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். தொல்காப்பியம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களில் அறுவை சிகிச்சை குறிப்புகள், அரண்மனை வைத்தியசாலை, போர் நடக்கும்போது நோய்தொற்று ஏற்படாமல் தடுப்பது போன்ற மருத்துவக்குறிப்புகள் காணப்படுகின்றன. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையதானதாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டற்கான சான்றாக மண்டை ஓட்டில் ஓட்டை இருக்கும் எலும்புக் கூடுகள் திருநெல்வேலியில் கண்டுபிடிக்கப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள ஓட்டை அறுவை சிகிச்சை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஓட்டையை போன்று காட்சியளிப்பதாகவும் சித்த மருத்துவர்கள் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

 

சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்ததை, அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் தற்போது அமெரிக்க சித்தா வேதா மையம் போன்று தலைசிறந்த ஆய்வு நிறுவனங்களில் நடைபெற்று வருகின்றன என்பதும் மகிழ்வான செய்தி. சென்னையில் உள்ள சித்தா ஆராய்ச்சி மையத்தில் ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்துதல், ஆராய்ச்சி செய்தல், மருத்துவ அளவிலான பரிசோதனைகள் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய சித்தா ஆராய்ச்சி கூட்டமைப்பின் மூலம், இந்த ஓலைச்சுவடிகளை மின்னூலாக்கும் பணிகள் நடைபெற்று வருகின். தஞ்சாவூர் சரசுவதி மகாலில் பல ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு இருக்கின். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகளுக்கென்று தனித்துறைகள் இருக்கின்றன அதன் மூலமாகவும் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  

 

திருமூலர் ஒரு பாடலில்

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று கூறுகிறார். இந்த உலகில் உள்ள அனைத்தும் நம் உடலின் வடிவில் உள்ளது, என்பதன் இலக்கணமாக விளங்குவதே சித்த மருத்துவமாம். ஒரு பொருளின் நிறம் வடிவம் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டே அவை எந்த வகையான மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதய வடிவில் உள்ள இலைகளான அரச இலை, வெற்றிலை இவற்றை இதய நோய்க்கும் இரத்த அழுத்த நோய்க்கும் பயன்படுத்தியுள்ளனர். சிறுமூளை வடிவில் உள்ள வல்லாரை கீரையை நினைவாற்றல் மருந்தாகவும், நுரையீரலை ஒத்து இருக்கும் தூதுவளை இலையை சுவாசம் சார்ந்த கோளாறுகளுக்கும் பயன்படுத்தி வருவது ஆச்சரியமான உண்மை. அதேபோன்று கீழா நெல்லி எனும் மூலிகையின் இலை நம் உடலிலுள்ள பித்தப்பை வடிவில் இருக்கும்.  மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியை விடவும் சிறந்த மருந்து இல்லை என்பது நவீன மருத்துவர்களே ஒப்புக்கொண்ட உண்மை. அதே போல் கணையத்தை ஒத்து இருக்கும் நாவல் விதை இன்சுலின் சுரப்பு குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாகும் என்கிற சித்த மருத்துவம், இது போன்ற பல நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன என்றும் அக்காலத்திலேயே ஒட்டு சிகிச்சை, அறுவை சிகிச்சை, உடல்கூறு, உடலியல் ஆகியவற்றில் நம் முன்னோர்கள் வல்லமை பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

 

திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்ற மருந்தின் பெயர்களே மருத்துவ நூல்களுக்கும் சூட்டப்பெற்றுள்ளதைக் காணலாம். இயற்கையின் வரப்பிரசாதங்களாக விளங்கும் எண்ணற்ற மரம், செடி, கொடி, வேர், பட்டை, புல், பூண்டு, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவைகளையும், நவரத்தின நவலோகங்களைக் கொண்டும் இரசம் கந்தகம், கற்பூரம், தாரம் அயம், பவளம், துருசு முதலியவற்றைக்கொண்டும் திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கசாயங்கள் போன்றவைகள் கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் சித்த மருத்துவர்கள்.

சங்க இலக்கியங்களில் மருந்து என்ற சொல், உடல் பிணி தீர்க்கும் மருந்து என்ற பொருள்படும் வகையில் 38 இடங்களில் இடம் பெற்றுள்ள.

 

ஆதி காலந்தொட்டு நம் தமிழர்களின் பாரம்பரிய உணவு முறையில் உண்ணும் உணவே மருந்தாகவும் செயல்படுவதாக நம் இலக்கியங்கள் கூறுவதை அறிய முடிகிறது. நீர் இன்றி வாழாது உடல்; அவ்வுடலுக்கு உணவு கொடுத்தவரும் ஆவர். உணவால்
உளதாவதுதான் மனித உடல், உணவே நிலத்தின் விளையும் நீரும் ஆகும் என்பதை,

 

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
 உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;

 

என்னும் புறநானூறு பாடலான நீரும் நிலனும் எனும்  குடபுலவியனார் பாடலின் மூலம்

அறிய முடிகின்றது.

 

உடம்பொடு நின்ற உயிர் '' (புறம். 292)

மெய் உணர்வுப் பேறு பண்டைக் காலத்தில் மிக நுட்பமாக புறநானூற்றில் பற்பல குறிப்புக்கள் காணப்படுகின்றன.

சித்தமருந்து அக மருந்து, புற மருந்து என இருவகைப்படுகின்றது. அகமருந்து என்பது உள்ளுக்குள் சாப்பிடுவது.

புறமருந்து என்பன கட்டு – இலைகள் அல்லது பட்டைகளை நைய இடித்தோ அரைத்தோ வதக்கியோ புளித்தநீர் முதலியவற்றில் வேகவைத்தோ கட்டுதல் என்கிறார்கள்.

 

தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.    என்கிறார் பூதன்தேவனார் நற்றிணையில்.

 

அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை- வாழிய, பலவே!- 

சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்ததாக. - நற்றங் கொற்றனார் நற்றிணையில் கூறுகிறார்.  திருந்திய கோற்றெழில் அமைந்த ஒளி பொருந்திய தோள்வளையை விரும்பி அது பெறாமையாலே யான் அழுதலும்; என் தந்தை தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர்க்கு அவர் விரும்பியதைக் கொடாது ஆராய்ந்து அந் நோய்க்குத் தக்க மருந்துகொடுத்த அறவாளன் போல;

 

இவ்வாறு சங்க காலம் தொட்டு இன்றுவரை சித்த மருந்து பெருமளவில் வளர்ந்துவந்துள்ளது.

 

சங்க காலத்தில் அறுவை சிகிச்சை முறைகள் இருந்திருக்கின்றனவா என்ற ஐயம் எழலாம் அல்லவா? ஆம், உண்டு என்பதுதான் ஆச்சரியமான உண்மை!

 

போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய அளவில் இருந்தால் அப்புண்ணை மருந்துகளால் ஆற்றுவது கடினம் என்பதை உணர்ந்து’ மருத்துவ வல்லார்களால் அப்புண்கள் தைக்கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுக் கட்டுவதும் நிகழ்ந்துள்ளது. இதுவே இன்றைய நாளிலும் நடைமுறையிலுள்ளது. இவ்வாறு, விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப் பத்து குறிப்பிடுகிறது.

 

மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்

சிரல் பெயர்ந் தன்ன நெடுவெள்ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் ”

 

நீரிலுள்ள மீனைக் கொத்துவதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியில் நீரைவிட்டு மேலே பறந்து செல்லும் சிரல் பறவையைப் போல, நெடிய வெள்ளூசி புண்ணுக்குள் நுழைந்து வெளியே வருகிறது என்கிறது. வெள்ளூசி என்பது வெள்ளியால் செய்யப்பட்ட தையல் ஊசியாக இருக்கலாம்.

 

பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது. அந்த வகையில்

இளங்குழந்தைகளுக்கு மிகவும் தேர்ந்த முறையில் மருத்துவத்தை செய்யப்பட்டுள்ளது.  குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும்’ சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டி யிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது.

 

காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும்

கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்

பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்

தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார்”

 

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை’ தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி’ தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால்’ குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.

 

இவ்வாறு சித்த மருத்துவத்தை பல்வகை நிலையில் தமிழர்கள் பாரம்பரியமாக வளர்த்து வந்துள்ளனர். இவை இன்று உலகளவில் சிறப்புற்று தனித்துறையாக எழுச்சி பெற்று நிற்பது ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக தமிழரும் பெருமை கொள்ளவைக்கிறது.


மெய்யுணர்வு, உடல் தத்துவம். மண், நீர், தீ, காற்று என்னும்
நான்கு பொருள்களுடன் வான் என்னும் ஐந்தாவது பொருளும் உண்டு. அவற்றின் மூலமாகிய
வேறு மேல் நிலைப் பகுதியும் உண்டு. இவைகளுக்கு எல்லாம் வேறாக, அறிவு விளக்கத்திற்கு
ஏதுவான உயிரும் உண்டு என்னும் கொள்ளையை, புறநானூறு கூறுவது,

'' மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை...''
(புறநானூறு- 2)

'' வளியிடை வழங்கா வானம் '' (புறம். 35
'' உயர்நிலை யுலகம் அவன் புக " (புறம். 249)
'' உடம்பொடு நின்ற உயிர் '' (புறம். 292)

எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்ற சித்தர்களுடைய வரலாற்றுக் குறிப்புக்கள் நம் பண்டையத் தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆதிமருந்தை அடிப்படையாகக் சித்த மருந்துவம் பண்டைக் காலந்தொட்டு தமிழ் நாட்டில் பரவி இருந்து உயர்தனிக் கலையாக, செல்வமாக திகழ்கிறது.

 திருமூலர் இயற்றிய தமிழ் மூவாயிரம் தவிர எண்ணாயிரம் என்ற மற்றொரு நூல்
தமிழ் மருத்துவத் துறையில் ஆதி நூல் என்கிறார்கள். விலை மதிப்பில்லாத
திருமூலரின் எண்ணாயிரம் நமக்கு முற்றுமாகக் கிடைக்கவில்லை .

 

திருமூலர்    திருமந்திரம், வைத்தியம் ஆயிரம், கருக்கிடை வைத்தியம் 600, பெருங்காவியம் 1600 போன்ற 12-க்கு மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அவை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்றும் கூறுகின்றனர்.  இவரைப் பற்றிதிருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி, சதுரகிரித் தலபுராணம் போன்ற நூல்கள் குறிப்பிடும். எச்சமயத்தாருக்கும் பொதுவான நெறிகள் திருமந்திரத்தில் பேசப்படுகின்றன. சைவ சித்தாந்தத் தத்துவங்கள் உட்படப் பிற்காலத்து நூல்கள் அனைத்திற்கும் இந்நூலே அடிப்படையாகின்றது. இதனுடைய ஆன்மிகத் தத்துவம் பேரண்டத்தோடும் அறிவியலோடும் தொடர்புடையதாக உள்ளது. இதிலுள்ள அறிவியல் செய்திகள் இன்றைய அறிவியலாளரின் ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரிவதாக அமைகின்றது.

திருமந்திரம், 3000 பாடல்கள், பாயிரம், 7 தந்திரங்கள்  கொண்டது .. இவை 2 ஆம் தந்திரம் 14 வதாக வருவது கர்பக்கிரியை – 41 பாடல்களைக் கொண்டது.  கருவுறுதல், ஆண், பெண், அலி உருவாகும் விதம், மூளைக்கோளாறு, மனநலம் பாதிப்பு, கூன், குருடு, குட்டை, நெட்டை, குழந்தையின்மை போன்ற அனைத்திற்கும் அற்புதமான அடிப்படைகளை குறளாகக் கொடுத்திருக்கிறார். நாம் தான் விளங்கிக் கொள்ள முடியாமல் இன்று ஆட்டிசம் போன்ற குழந்தைகளை வதைக்கும் நோய்களுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கிறோம். சித்த மருத்துவம் இது போன்ற மரபணுக்கள் சார்ந்த நோய்களுக்கான ஆய்வுகளை மேலும் பரந்த அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

 

திருமூலர் குழந்தையின் பாலை நிர்ணயம் செய்யும் செயல் குறித்து அதாவது குழவி ஆணா, பெண்ணா, அல்லது இரட்டைக் குழந்தையா அல்லது மூன்றாம் பாலினமா என்று  நிர்ணயம் செய்யும் வகையில்,

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்

குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

 

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

குழந்தை  குட்டையாகவும், மூடன், கூன் உள்ளவர்கள் பிறப்பது எங்கனம்..
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே

குழந்தை  மந்த புத்தி, ஊமை, குருடு என்றால்


மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

இதுபோன்று குழந்தை அழகாகப் பிறப்பதும், கருத்தரிக்காமல் போவதற்குமான காரணங்களும் அடுத்தடுத்த பாடலில் காணமுடிகின்றது.

 

நம்முடைய ஆதி மருத்துவமான சித்த மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் கிடையாது. ஒருவருடைய நோயின் தனித்தன்மையைப் பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. மீண்டும் அந்த நோய் வருவதில்லை. ஒப்பீட்டு நோக்கில் ஆங்கில மருத்துவத்தைவிட எளிமையானது. அதிகச் செலவில்லாதது.

 ஆங்கில மருத்துவ முறையில் அறுவை சிகிச்சை, விபத்தில் உயிர்காப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் ஆங்கில மருத்துவத்தின் பணி அளப்பரியது. அந்த வகையில் இவை இரண்டும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை முன்னெடுக்கும் வகையில் இன்றளவிலும் மருந்தே இல்லை எனும் ஆட்டிசம் போன்ற பல நோய்களுக்கு தீர்வாக அமையக்கூடும்.

 

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 89 குழந்தைகளில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டிசம் என்கிற மதியிறுக்கம், அதிவேகச் செயல் திறன் (hyperactivity), கற்றல் குறைபாடு, டிஸ்லெக்சியா போன்ற பலதரப்பட்ட பாதிப்புகளுடன் கூடிய சிறப்பு குழந்தைகளுக்கு, சித்த மருத்துவம் சார்ந்த வர்ம மருத்துவச் சிகிச்சை மூலம் புள்ளிகளில் அழுத்தத்தைக் கொடுத்து அவர்களுடைய செயல்திறனில் அதிகபட்சம் 20 சதவீத முன்னேற்றத்தைக் காணலாம் என்று ஆய்வாளர்கள் கூறுவதும் கவனம் கொள்ளத்தக்கது. 2017 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டிசம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், மேலும் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

 

ஆரம்ப காலத்தில், சித்த மருத்துவக் கல்வி குருகுல முறையில் பாரம்பரியமாக வாய்வழியில் கற்பிக்கப்பட்டாலும், காலப்போக்கில், இந்த வாய்வழி பாரம்பரியம் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளில் படியெடுக்கப்பட்டது. அறிவின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இந்த முறை இன்றுவரை ஒரு களஞ்சியமாகச் செயல்படுகிறது. ஆனாலும்  20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில், சித்தக் கல்வி பொது மக்களுக்கான நிறுவனக் கல்வியாக மாற்றப்பட்டு தற்போது, ​​12 சித்த மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில் 11 கல்லூரிகள் தமிழ்நாட்டிலும் 1 கல்லூரி கேரளாவிலும் உள்ளன. 2005 ஆம் ஆண்டில், சித்தா மருத்துவத்தின் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக சித்தாவின் தேசிய நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் சித்தா ஆராய்ச்சிக்கான பிரத்யேக அமைப்பான சித்தாவில் உள்ள மத்திய ஆராய்ச்சி கூட்டமைப்பின் (சி.சி.ஆர்.எஸ்) தேசிய தலைமையகமாகும். கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் நவீன மருத்துவ முறைக்கும் மதிப்பைக் கூட்டுகின்றன.

 

நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!

நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால்  அதில் தொய்வில்லாமல்  பயணம் நடத்திவிடு அப்போதுதான் உன் வெற்றி உன்னைச் சேரும் என்ற உளவியல்  தத்துவத்தை முன்மொழிந்தவர் திருமூலர்.  அந்த வகையில் சித்த மருத்துவம் உளவியலையும் உன்னதமாக்குவதில் வல்லமை பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

 

ஆம், விண் அறிவியல், அணு அறிவியல், மருத்துவ அறிவியல், ஐந்திணை அறிவியல், கால ஒழுக்கம், சமய அறிவியல் என சித்தர்கள் தொடாத எல்லைகளே இல்லை. தாங்கள் கண்டறிந்த உண்மைகளை, பல்வேறு அரிய அறிவியல் கருத்துகளை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகிற்கு அருட்கொடையளித்து இன்றும் பாரம்பரியமாகத் தொடர்ந்து வரச் செய்வது தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளத்தக்கது.

 

இன்று கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தும், அதற்கான மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில் பெருமளவில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ள அதே வேளையில் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவில் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதும் சிந்திக்கத்தக்கது. இதனை கவனம் கொண்டு இதற்கான ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் நம் பாரம்பரிய தொன்மையான சித்த மருத்துவத்திற்கான தனிப்பட்ட பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டால் மக்கள் பயனடைவார்கள் என்பது உறுதி.

 

No comments:

Post a Comment