Thursday, November 11, 2021

உலக நீர் நாள்

 

தமிழர் வாழ்வியல் அறக்கட்டளையின், உலக நீர் நாள் நிகழ்விற்கு தங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தலைமையுரை ஆற்றவிருக்கும், தமிழர் வாழ்வியல் அறக்கட்டளையின் செயலாளரும், தகைசால் பேராசிரியருமான ரேணுகா தேவி அம்மையார் அவர்களையும், சிறப்புரை ஆற்றவுள்ள ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் அர. ஜோதிமணி அம்மையார் அவர்களையும் மகிழ்வோடு வரவேற்கிறோம். நிகழ்ச்சியை தொகுப்புரை வழங்கவுள்ள அன்புச் சகோதரர் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்பக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் கோ.கணேஷ் அவர்களையும் அன்போடு வரவேற்கிறோம்.

சிறப்புரை ஆற்றவுள்ள ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் அர. ஜோதிமணி அம்மையார் அவர்களையும் மகிழ்வோடு வரவேற்கிறோம்.

தமிழைத் தமது உயிராக மதிக்கும் பேரா. அர. ஜோதிமணி அம்மையார் இயற்கையையும், இறையையும் ஒருசேரப் போற்றி வாழ்பவர். மாணவர்களுக்குக் கல்வியோடு அறச்சிந்தையையும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதைத் தம் கடமையாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருபவர். உடல் மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற தெளிந்த சிந்தையும் அதற்கான சீரிய முயற்சியும் மேற்கொண்டிருப்பவர். இன்று நீர் மேலாண்மை குறித்து தமது சிந்தைகளை நம்மோடு பகிர்ந்துகொள்ள இசைந்துள்ளார்கள்.

 

 

உலக நீர் நாள்

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

என்பார் வள்ளுவப் பெருந்தகை.

 

புவி இயக்கத்தின் அனைத்து நிலைகளிலும் பெரும் பங்காற்றுவது நீர் என்பது நாம் அறிந்தது. அந்த வகையில் இப்புவியின் கட்டமைப்பிற்கு நீரின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நீர் மேலாண்மையில் நாம் சிறந்திருந்தோம் என்பதை ஹாரப்பா நாகரிகம் மூலம் அறிகிறோம். நீர்நிலைகள், குளங்கள் என நம் முன்னோர்கள் நிறையவே உருவாக்கி வைத்துள்ளனர்.

 

மாதம் மும்மாரி பொழிந்து கொண்டிருந்ததாக நம் பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுவதெல்லாம் பழங்காலக் கதை என்றாகி, இன்று வெறும் கனவாகிக் கொண்டும் இருக்கின்றன. பெருகியோடும் ஆறுகளுடனும், நதிகளோடும் செழிப்பான நீர் வளத்துடன் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்த நம் இந்திய சமுதாயம்தான் இன்று தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலின் முன்னிலையில் இருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டில் மட்டும் நாம் பெறும் தண்ணீரின் அளவு 70% சுருங்கிவிட்டதாக புள்ளி விவரங்களும், ஆய்வுகளும் அச்சுறுத்துகின்றன.

 

உலகளவில் மொத்தம் 97.5 சதவீதம் நீர் உப்பு சுவை கொண்டதாக உள்ளது. மீதமுள்ள அந்த 2.5 சதவீதம் மட்டுமே சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரை மட்டுமே குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதிலும்  பெரும்பகுதி  கழிவு நீரால் மாசடைந்து விடுகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள், நீரை மாசுபடுத்தி வருகின்றன.. இதனால், பெருமளவு மழையை  மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

 

உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீரோ அல்லது. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான குடிநீரோ கிடைப்பதில்லை என்றும் உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் சுமார் 200 நகரங்களில் தண்ணீர் பஞ்சமும் மிக அதிகமாக இருக்கிறது.  தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஈரான், கம்போடியா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், லிபியா உள்ளிட்ட 11 நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள்தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலும் இதில் 33 சதவீதம் மட்டுமே பயனளிக்கிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் நம் தண்ணீர் தேவை ஆண்டுக்கு 54 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டர். ஆனால் நமக்குக் கிடைப்பதோ 46 ஆயிரத்து 540 மில்லியன் கன மீட்டர் மட்டுமே.  ஆண்டுக்கு ஆண்டு மழையின் அளவு குறைதல்,  புவி வெப்பம் போன்ற காரணங்களால் இந்த நிலை உருவாகிறது.


ந்த நிலையிலாவது நாம் தண்ணீரைச் சேமிக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்தாமலும் அலட்சியமாக இருந்தால், அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடந்து விடுமோ என்ற அச்சமும் எழத்தான் செய்கிறது.
இவைகளைக் கருத்தில் கொண்டே உலக நீர் நாள் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றில் ஒரு பகுதி கடுமையான நீர் பற்றாக்குறையால் அவதிப்படப்போகிறது என்று ஐ நா சபை எச்சரித்துள்ளது. மிக அதிகமாகப் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய செய்தி. மேலும் அந்த அறிக்கை விரைவிலேயே இந்தியாவின்  21 நகரங்களில் முற்றிலுமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் என்றும் எச்சரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக இந்தியா 4000 பில்லியன் கியூபிக் மீட்டர் மழைநீர் பெறுகிறது. இதில் 1137 கியூபிக் மீட்டர் நம் அன்றாட பயன்பாட்டிற்குப் போக எஞ்சியுள்ளவை நதிகளில் கலக்கின்றன.

 

நிலத்தடி நீரை உறிஞ்சிப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கிராமப்புற, நகர்ப்புற மக்களின் அன்றாட பயன்பாட்டின் 80% நிலத்தடி நீர் மூலமே பெறப்படுவதால் அடுத்த 20 ஆண்டுகளில் நிலத்தடி நீர் கணிசமாக வறண்டுபோய் விவசாய உற்பத்தியும் 25% குறையும் வாய்ப்பும் உள்ளதாகவும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இங்கு 3 கோடிக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் வெட்டப்பட்டுள்ளனவாம்.

 

1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று நடைபெறும் உலக நீர் தினம், நன்னீரின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

உலக நீர் தினம் தண்ணீரைக் கொண்டாடுவதோடு பாதுகாப்பான நீரைப் பெறாமல் வாழும் 2.2 பில்லியன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது உலகளாவிய நீர் நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது பற்றியது.

 

 நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

 

பெருகி வரும் மக்கள் தொகை, வேகமா வளர்ந்துவரும் தொழில் துறை உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வரும் அதேசமயம்,  மழைப்பொழிவும் குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு, பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பல நாடுகளில் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலை தொடருமானால் தண்ணீரின் மதிப்பு மிகவும் அதிகரித்து சாமான்யர்களுக்கு கிடைப்பது அரிதாகிவிடும்.

 

நிலத்தடி நீரை சேமிக்க சிறந்த வழிமுறை என்றால் அது மழைநீர் சேமிப்புதான். 100 சதுர மீட்டர் நிலத்தில் விழும் 80% மழை நீரை சேகரித்தால் ஆண்டொன்றுக்கு  48000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.

 மரங்கள் வளர்ப்பு மூலம் நீராதாரத்தை அதிகரிப்பது, மழை நீரை சேகரிப்பது, நீரின் உபயோகத்தைக் குறைத்துக் கொள்வது, மறுசுழற்சி முறையில்  நீரை மீண்டும் பயன்படுத்துவது என தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

 

பருவ மழை தவறியதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. கோவை உள்ளிட்ட பல நகரங்கள் தண்ணீருக்குத் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. கோவை நகரின் தற்போதைய தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 247 மில்லியன் லிட்டராக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில்  25 சதவீதம்  உயரக்கூடும். கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 முதல் 1,000 அடிக்கும்கீழே போய்விட்டதும் கருதத்தக்கது.

கடல் நீர் மட்டத்தின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் கணக்கிலடங்கா புவி மாற்றங்களில் முக்கியமான ஒன்று சுனாமி போன்ற பேராபத்து நிகழ்வுகள்.

 

இன்று, அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம் மக்களிடம் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, விவசாயம், தொழில்துறைகளின் அதிகரித்துவரும் கோரிக்கைகளும், காலநிலை மாற்றங்களும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

 

 உலக நீர் தினம் என்பது மக்களுக்கு நீர் என்றால் என்ன, அதன் உண்மையான மதிப்பும்,  இந்த முக்கிய வளத்தை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என்பதும் பற்றியது. தண்ணீரின் மதிப்பு அதன் விலையை விட மிக அதிகம் - நீர் நம் வீடுகள், கலாச்சாரம், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், நமது இயற்கை சூழலின் ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு மகத்தான மதிப்பைக் கொண்டுள்ளது. இந்த மதிப்புகளில் ஏதேனும் ஒன்றை நாம் கவனிக்கத் தவறினால், இந்த வரையறுக்கப்பட்ட, ஈடுசெய்ய முடியாத வளத்தையும் தவறாக நிர்வகிக்க வேண்டிவரும். ஊடகங்கள், இணையத் தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, விவாதங்களில் ஈடுபடுவதன் மூலமும் தண்ணீர் சேமிப்பு மற்றும் சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த உரையாடல்களை முன்னெடுக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் எச்சரிக்கைகளை கவனிக்காததால் பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன.

 

பெரும்பான்மையான ஏரி குளங்கள் தூர் வாராமல் கிடப்பதால் மழை நீரை சேமிக்க வழி இல்லாமல் போய்விடுகிறது.

தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டு ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதையும் உணர்ந்து அதைச் சரிசெய்ய முயல வேண்டும்.

நிலத்தடி நீரை எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவும் வழியாகிவிடுகிறது.

 இயற்கை மாசுபடுவதால் பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

விவசாயத்தை முதுகு எலும்பாக கொண்ட நம் நாட்டில் 60% விவசாயிகள் உள்ள நாட்டில் தண்ணீருக்கான தேவைகள் எவ்வளவு அதிகம் என்பதை உணர வேண்டியது அவசியம்.

இன்று நம் நாடு கடுமையான வறட்சியை எதிர்கொள்கிறது என்று தரவுகள் சுட்டிக்காட்டுகிறது, இதன் விளைவாக 2030 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது, அந்த ஆண்டுக்கு நீர் தேவை இரு மடங்காக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 17 நதிப் படுகைகள் உள்ளன, அதில் காவிரி முக்கிய படுகையாக உள்ளது.

 

டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவில் 21 நகரங்கள் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீரை இழந்துள்ளதால், இது சுமார் 100 மில்லியன் மக்களை பாதிக்கும் என்று என்ஐடிஐ ஆயோக்கின் சமீபத்திய அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல், பூர்வீகமானதும், வறட்சியை தாங்கும் தாவரங்களை நடவு செய்தல் மற்றும் பழைய சாதனங்களை மாற்றுவது ஆகியவை நீர் மேலாண்மை கொள்கையை பின்பற்ற வழிவகுக்கும். பொது மக்களிடமும், மாணவர்களிடமும் நீர் மேலாண்மை குறித்த செய்திகளை பரப்புரை செய்வது அவசியம்.

 

சென்னையில் ஏற்படும் வெள்ளம் ஒரு எச்சரிக்கை என்றாலும் உலகம் வெப்பமடைகையில், இந்தியா நீருக்காகச் சார்ந்திருக்கும் மழை ஒழுங்கற்றதாகி அடிக்கடி வரத் தவறிவிடுகின்றன. அந்த வகையில் குறைந்து வரும் வளங்களால் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல விட முடியாது.

 

வேகமாக நகரமயமாக்குதலும், வளர்ந்து வரும் இந்தியா தமது நகரங்களை வறட்சியடையாமலும் விவசாயத்தைப் பாதுகாக்கவும் பகுத்தறிந்து செயல்பட வேண்டும். நிலத்தடி நீர் நிரப்புவதற்கான வழிமுறைகளுடன், நீர் அறுவடை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment