மையக்கருத்தாகக்கொண்ட
பாடல் :
குறுந்தொகை 41
அணிலாடு முன்றிலார்
இன்னும்
எவ்வளவு நேரம்தான் இப்படி இந்த அமராவதி ஆத்தங்கரையே கதின்னு கடக்கப்போற
கணிப்பொழில்?
கணி .. கணி .. உன்னைத்தானடி கூப்பிட்டிட்டிருக்கேன்.. என்னதான் ஆச்சுடி உனக்கு. கொஞ்ச நாளா நானும்
கவனிச்சிக்கிட்டு இருக்கேன். அடிக்கடி இங்கன வந்து உக்காந்துக்கிட்டு இந்த ஆறையே வச்ச
கண்ணு வாங்காம யாரையோ எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டு
உட்கார்ந்திருக்கியே .. என்னதான் ஆச்சுடி உனக்கு?
விவரம்
தெரிந்த நாளிலிருந்து அன்றாடம் பார்த்துப் பழகிக்கொண்டிருக்கும் கணிப்பொழில் ஒரு நாளும் இப்படி பித்துப்
பிடித்தவள் போல இருந்தாளில்லை. குழி விழுந்த கண்களும், கருவளையங்களும், பொலிவிழந்த
தேகமும் பல நாட்களாக அவள் சரியான உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறாள் என்பதைக்
காட்டினாலும், இப்படி மௌனமாக, வெறித்த பார்வையோடு இருப்பவளை காணச்சகிக்கவில்லை
அவளுக்கு.
கிட்டத்தட்ட
10 நாட்கள் ஆகிவிட்டன. மயில்விழி சற்றே அச்சத்தில் குழப்பமடைந்தாள். இதற்கு மேலும்
இந்த விசயத்தை கணிப்பொழிலின் பெற்றோரிடம் சொல்லாமல் மறைப்பது சரியல்ல என்று புரிந்தது.
தோழிகள் இருவரும், கைத்தறி மற்றும்
நெசவுத் தொழில்நுட்பம் ( Handloom and textile
technology) பொறியியல் கல்வி படிப்பவர்கள். கல்விசார் திட்டப்பணி ஆதாரத்திற்காக, கரூர் கைத்தறி
நெசவுத் தொழிலகங்களுக்கு 3 மாத பயிலரங்கிற்காக வந்துள்ளனர். முதல் ஒரு மாதம், அந்த
ஞாயிறன்று ஊரைச் சுற்றிப்பார்க்க கிளம்பியவர்கள், அமராவதி ஆற்றிற்கு வரும்வரை எந்தப்
பிரச்சனையும் இல்லாமல்தான் பயிற்சி வகுப்பில் கவனமாக இருந்தனர். போகப்போக
சரியாகிவிடும் என்று இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டது சரியான முடிவு அல்ல என்பதை
சற்று தாமதமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறாள் மயில்விழி.
கொங்குநாடு என்ற அமைப்பு
பொ.ச.மு. 100ஆம் ஆண்டில் ஆய் மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டதாக
கிரேக்க ஆவணங்கள் குறிப்பிடுவதையும், அகண்ட தமிழகமான இந்த நிலப்பகுதி
பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்தது
என்பதிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவள் கணிப்பொழில். பனியுகம் 100,000 ஆண்டுகட்கு ஒருமுறை
தோன்றி உலகக் கடல்கள் வற்றிவிடுவதால், கடல் மட்டம் குறைந்து போயிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகட்டுப் பின்னர்
அந்த பனிக்குன்றுகள் உருகி மீண்டும் கடல் நீர் மட்டம்
உயர்வதும் பூமியில் பன்முறை நிகழ்ந்துள்ளன. இறுதி
20,000 ஆண்டுகளில் அவ்விதம் நிகழ்ந்ததில் கடல் நீர்மட்டம் சுமார் 1000
அடிவரை குறைந்து மீண்டும் உயர்ந்திருக்கும் வகையில் கடற்கரைப்
பகுதிகளில் பல தளங்கள் வெளியில் தெரிந்தும், நீர் உருகி
கடல் மட்டம் உயர்ந்தபோது அவை கடலுக்குள் மூழ்கியும்
இருந்திருக்கின்றன என்பது போன்ற லெமூரியக்கண்ட கோட்பாடுகளிலும் அதீத நம்பிக்கை
கொண்டவள் நம் கதையின் நாயகி கணிப்பொழில். தன்னுடைய பெரும்பான்மையான ஓய்வு நேரங்களை
இந்த ஆய்விலேயே கரைத்திருப்பவள். தமிழ் ஆசிரியரான தம் தந்தையின் மூலமாக பண்டைய
தமிழர் வாழ்வியல் குறித்து அறிய ஆரம்பித்தபோது ஏற்பட்ட ஆர்வம் இன்று இதுவரை
தொடர்கிறது.
அன்று வழக்கம் போல பள்ளிக் குழந்தையாக துள்ளிக் குதித்துக்கொண்டு
கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு வந்தவள், ஆற்றங்கரையை நெருங்கும்போதே மெல்ல
அமைதியாகி ஆழ்ந்த யோசனைக்கு சென்றதாகத் தெரிந்தது. கொஞ்ச நேரத்திலேயே ஏதோ நினைவுகளுக்குள்
ஆழ்ந்தவளாக ஆற்றையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தாள். முதலில் விளையாட்டு
காட்டுவதாகத்தான் நினைத்தாள். ஆனால் போகப்போக அது விளையாட்டு அல்ல என்று
புரிந்துகொண்டாள். மல்லுகட்டி அவளை விடுதிக்கு அழைத்து வருவதே பெரும்பாடாகிவிட்டது.
இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவள் மீண்டும் அவளைக் கட்டாயப்படுத்தி ஆற்றுக்கு
அழைத்து வந்துவிட்டாள். வார இறுதிவரை பொறுத்திருக்கமாட்டாமல் பகல் நேர வகுப்பு
முடிந்த கையுடன் கிளம்பி வந்துவிடுகிறாள். ஆற்றை வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தவளிடம் ஒரு முன்னேற்றம். அங்கும், இங்கும் எதையோத் தேடவும் ஆரம்பித்திருந்தாள்.
ஏதோ முனகலுக்கு இடையே ‘உள்ளி விழவு’ என் கண்ணாளன் உறந்தையரசு” போன்ற வார்த்தைகள்
காதில் விழுந்தாலும் எதைத் தேடிக்கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கேத் தெரியுமா,
இல்லையா என்பதும் புரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பிற்கும் வர மறுத்து இருட்டிய
பிறகும் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கவும்தான் நிலைமையின் தீவிரம் மயில்விழிக்குப்
புரிந்தது.
சற்றும் தாமதிக்காமல் கணிப்பொழிலின் அம்மாவின் கைபேசி எண்ணில்
அழைத்தாள். அதிர்ச்சி அலைகளின் சலசலப்பு சற்று நேரம் இருந்தது. பின் மீண்டும் விவரங்களைத்
தெளிவாகக் கேட்டுக்கொண்டவர், உடனே கிளம்பி அவளையும் அழைத்துக்கொண்டு ஊருக்குப்
புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எவ்வளவோ சொல்லியும்
அவள் கேட்பதாக இல்லை. தான் தவறவிட்டதை அடையத் துடிப்பவளாகக் காட்சியளித்தாள். வேறு
எந்தப் பேச்சும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை. உள்ளதை உள்ளவாறு அவள் அன்னையிடம்
கூறியதால் அவர்களும் சற்றும் தாமதியாமல் உடனே கிளம்பி வந்துவிட்டார்கள். பெற்றோரைப்
பார்த்த பின்பும் எந்த சலனமும் இல்லை அவளிடத்தில். இயன்றவரை பேசியும்
பார்த்தார்கள். சென்னைக்கு அழைத்துச் சென்று அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்கலாம்
என்றாலும் அதற்கான ஒத்துழைப்பு இல்லை அவளிடம். கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல
முயன்றபோது அவளிடம் ஏற்பட்ட பதற்றம் அச்சமூட்டியதால் அங்கேயே ஒரு மனநல
மருத்துவரைப் பார்க்க முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது.
அடுத்த இரண்டு நாட்கள் பரிசோதனை செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஆற்றங்கரையோரம் அழைத்து வந்து ஆலோசனை நடத்தினால்
ஏதாவது கண்டுபிடிக்க முடியலாம் என்று மருத்துவர் ஆலோசனையின் பேரில் மீண்டும் அமராவதி
கரைக்கே அழைத்து வரப்பட்டாள். வந்த நொடியிலேயே அத்தனை பொலிவு அந்த முகத்தில்.
ஆற்றங்கரையில் அன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் சற்று அதிகமாக
இருந்தது. காலையிலிருந்து தொல்லியல் துறையினர் படையெடுப்பு அந்த சுற்று
வட்டாரத்தையே பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த குடியிருப்பில், சற்று
தொலைவில் கிணறு வெட்டத் தோண்டியபோது நடுகல் போன்று ஏதோ முக்கியமான தொல்பொருள்
ஆதாரம் கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததால் மக்கள் அங்கு கூடியிருந்தனர். பழந்தமிழர்தம்
பெருமையின் ஆதாரங்களைக் கண்டு களிப்பதில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்
இக்காலகட்டத்தில் அந்த இடத்தில் இன்னுமொரு அதிசயமான சம்பவமும் நிகழப்போவதை எவரும்
அறிந்திலர்.
தலைவர் மதியழகனின் கீழ் இயங்கும் இக்குழு சமீபத்தில் தமிழ்நாட்டில்
முக்கியமான பல தொல்லியல் தளங்களில் பல ஆதாரங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டவர்கள்.
அதீதமான ஆர்வமும், கடினமான உழைப்பும் கொண்ட அருட்செல்வன், தமக்கு வலதுகரமாகச்
செயல்படுவதாலேயே தன்னுடைய பணிகள் இத்துணை
சிறப்பாக அமைகிறது என்று மதியழகன் முழுமையாக நம்பக்கூடியவர். அருட்செல்வன் எதையும்
தகுந்த ஆதாரமில்லாமல் எளிதாக நம்பக்கூடியவன் இல்லை என்பதோடு, அந்த ஆதாரங்களைப்
பெறுவதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுபவன். உணவு, உறக்கம் என எதையும் பொருட்படுத்தாமல்
கடமையே கண்ணாக இருப்பவன். இந்த இடத்தினுள் நுழைந்தது முதல் ஏதோ ஒரு சக்தியின் பிடியில்
சிக்குண்டது போன்று இறுக்கமாக இருந்தான். கண்கள் அலைபாய்ந்தவாறு எதையோ தேடிக்கொண்டே
இருந்ததையும் கவனிக்கத்தான் செய்தார் என்றாலும் அதைப்பற்றி கேட்டு அவனை தொந்திரவு
செய்ய விரும்பவில்லை. ஏதோ ஒன்றில் இலயித்திருக்கும் மனதை இழுத்துப் பிடித்து இனிமையைக்
கெடுக்க விரும்பவில்லை. ஆனாலும் அருட்செல்வன் பெருங்குழப்பத்தில் இருக்கிறானோ,
என்ன காரணமாக இருக்கும் என்ற ஐயமும் எழுந்தது. பணிகள் ஒரு புறம் தொடர்ந்தவாறு
இருந்தாலும் அருட்செல்வன் மட்டும் குழுவோடு சேராமல் தனிப்பட்ட முறையில் எதையோ தேடிக்கொண்டிருப்பது
போல இருந்தது.
அப்போதுதான் அது நடந்தது. தென்கிழக்கு மூலையிலிருந்து, “சார்,
இங்கு ஒரு கல்வெட்டு இருக்கிறது” என்று குழுவில் ஒருவர் கண்டுபிடித்துச் சொல்ல, எதிர்புறம்
தேடிக்கொண்டிருந்த அருட்செல்வன், “என்ன.. கல்வெட்டா, கிடைத்துவிட்டதா.. எங்கே ..
எங்கே என்று உருண்டு புரண்டு எழுந்து ஓடி வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
மண்ணில் புதைந்து கிடந்த கல்வெட்டை எடுக்க முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு தானே
அதைத் தோண்டி எடுக்க முயன்றதோடு அதன் அடியில் ஏதோ ஒரு பொருளை வைத்தவன் போல
பரபரப்பாகத் தேடிக்கொண்டிருந்தான். அவனிடம் இருந்த வேகமும் கண்ணில் மின்னும் ஆர்வமும்
அனைவரின் கைகளையும் கட்டிப்போடத்தான் செய்தன.
ஒரு மணி நேரத்தேடலின் முடிவில், “ஆகா, இதோ கிடைத்துவிட்டதே .. என்
உயிர் இனி என்னிடம் வந்துவிடும்” என்ற அவனுடைய அலறல் அந்த இடத்தையே அதிரச்
செய்தது. அவ்வளவு முக்கியமாக அவன் தேடியடைந்த அந்த கருவூலம் ...
மாம்பிஞ்சுக் கொலுசு, பவளத்தாலி, காலாழி, காப்பு, தோடு, திருகுபூ,
சூடாமணி போன்றவற்றோடு செண்பகப் பூஞ்சோலை சித்திரமாக பொறிக்கப்பட்ட மிகப்பெரிய சூதுபவளமணி
என பெண்களின் அணிகலன்கள் அனைத்தும் ஒரு மண் பானையில் பாதுகாக்கப்பட்டிருந்தன. அதை
எடுத்து அப்படியே அணைத்துக்கொண்டவன், அந்த சூதுபவள மணியை எடுத்து, அன்புடன் வருடியவன்,
“இதோ என் கணிப்பொழிலின் அணிகலன்கள்” (கணிப்பொழில் என்பதன் பொருள் செண்பகப்
பூந்தோட்டம்) என்று புளங்காகிதமடைந்தான்.
இந்த சலசலப்பில் தன் பெயர் ஒலிக்கக் கேட்ட கணிப்பொழிலும் அவள்தம்
பெற்றோரும் விரைந்து வந்தனர். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த நிகழ்வு
நடந்தது. கணிப்பொழில் வேகமாக வந்தவள், அருட்செல்வனைப் பார்த்த அந்த நொடியில் சற்றும் தயங்காமல், வேகமாகச் சென்று, “உறந்தையரசு”
என்று உள்ளம் உருக ஒரு வித்தியாசமான பெயரால் அழைத்தவாறு ஓடிச் சென்று அருட்செல்வனை
அணைத்துக்கொண்டவள்.. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்திருந்து தேக்கி வைத்திருந்த அத்துணை
காதலையும் முத்த மழையாய்ப் பொழிந்து தள்ளிவிட்டாள்.. அதிர்ச்சியில் உறைந்து
நிற்பவர்களை இருவரும் கண்டுகொள்ளவேயில்லை..
இதைவிட ஆச்சரியம், அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த பாடலை அழகாக இசைத்தவன், அன்பு காதலிக்கு உள்ளி விழவில்
அளித்த பரிசாகக் கூற கேட்டவர்கள், இப்படிக்கூட நடக்குமா என்ற வியப்பில் வாய்
பிளந்து நின்றனர் ...
சிரீ
சொர்ணமெனும் மடவாள் அன்னமென
நடைபயில மாவீரனிவன்
மலரம்பு தொடுத்து
மங்கையிவளின்
கொடியிடை நோக துவண்டவளை
கணிப்பொழிலாம்
கன்னியிவளை உள்ளி விழவில்
தொட்டணைத்து தேற்றும்
உறந்தையரசு.
கழுமலத்தில் சேரன் படைத்தலைவனாகிய
கணையன் என்பவனை பெரும்பூட்சென்னியெனும் சோழன் வென்றபோது, அப்போரில் காலாட்படைத்
தலைவனாக இருந்த உறந்தையரசு வீரமரணம் அடைந்ததால் அவனுடைய பத்தினி கணிப்பொழில்
உடன்கட்டை ஏறியதாக அந்த நடுகல் வாசகம் இவர்களின் வரலாறைக் கூறிக்கொண்டிருந்தது. சேர கொங்கர்தம் பாரம்பரிய ஆட்டமான சலங்கை கட்டி
ஆடும் ஆட்டத்தின் எச்சங்கள் பல கதைகள் புகன்றன.
அறிவியலுக்கு
அப்பாற்பட்ட இந்த சம்பவத்தின் எதிர்வினைகள் எப்படியானாலும், இந்த இணைகள் எத்தனைப்
பிறவிகளாக இப்படி சேர்ந்திருக்கிறார்களோ என்ற சிந்தனையே அனைவருக்கும் மேலிட்டது!
முற்றும்
No comments:
Post a Comment