Thursday, November 11, 2021

ஊழ்வினை

 

 

ஊழ்வினை

 

சிறுகதை

கொரோனாவின் கொடுஞ்சீற்றத்தால் ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் இலக்கியவாதிகள் செவிக்கும், அறிவுக்கும் ஏற்பட்ட பசியைப் போக்கும் வகையில் இணையக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தனர். இன்று நான்காவது நாளாக நடக்கப்போகும் கூட்டத்தில் சிலம்பின் சீர்வளர் செல்வர் எனும் பட்டம் பெற்ற சடகோபனின் பேச்சைக் கேட்க ஆவலாகக் காத்திருக்கிறான் மதிமாறன். மனைவி சந்திரமதியையும் எப்படியும் இதில் ஈடுபடுத்தவும் ஆவல் கொண்டாலும், ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும்,  பட்டிமன்ற பேச்சாளருமான அவளுக்கு சமீப காலமாக அப்படி என்னதான் ஆனது என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறாள். என்ன காரணமாக இருக்கும் என்று அறிய அவன் முயன்றதெல்லாம் வீணாகத்தான் போனது. நாளுக்கு நாள் அவளுடைய நிலை மோசமாகிக்கொண்டே போனது. மன அழுத்தத்தின் விளிம்பில் டிப்ரஷனில் போய்விடுவாளோ என்றுகூட அஞ்ச வேண்டியுள்ளது. ஒரு வேளை ஊரடங்கில் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடப்பதால் வந்த வினையோ என்றால் அதற்கும் வாய்ப்பு குறைவு. பொதுவாகவே அவள் பயணங்களை விரும்பக்கூடியவள் இல்லை. எம்.எட் (M.Ed) முடித்த பின்புகூட பணிக்குச் செல்ல விரும்பவில்லை. அவ்வப்போது பட்டிமன்ற நிகழ்விற்கு அழைப்பு வரும்போது மட்டும் கலந்து கொள்வாள். ஆனால் கொரோனா தொற்று எந்த வகையில் இவளை இந்த அளவிற்கு பாதித்துள்ளது என்று தெரியவில்லை. சாப்பாடு, தூக்கம், வீட்டு வேலைகள் என அனைத்திலுமிருந்து மொத்தமாக முடக்கிப் போட்டுவிட்டதே. கவுன்சலிங், யோகா பயிற்சி, தியானம், மருந்து என எதுவும் பயனளிக்கவில்லை.

எப்படியோ கட்டாயப்படுத்தி அழைத்து வந்து உட்கார வைத்தாகிவிட்டது. சிலப்பதிகாரம், அதுவும் வழக்குரை காதை என்றால் சலிக்காமல் கேட்டுக்கொண்டே, பார்த்துக்கொண்டே இருப்பாள். வந்தவள் அசையாத பதுமையாக உட்கார்ந்திருக்கிறாள். கணீர் என தன் வெண்கலக் குரலில் பொழிய ஆரம்பித்துவிட்டார் சடகோபன். அவ்வப்போது சந்திரமதியை திரும்பிப் பார்த்தவாறு இருந்த மதிமாறானால் அவளிடம் கொஞ்சம், கொஞ்சமாக ஏற்படும் மாற்றங்களைக் கணிக்க முடிந்தது.

சிலப்பதிகாரம்,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை அவர்தம் மேம்பட்ட கலாச்சாரத்தின் அடிப்படையில் தெளிவுற விளக்கும் வரலாற்று நூல்.  இளங்கோவடிகள்,  நற்பண்போடும், மனித குலத்திற்கு பயன்படும் நன்னெறியோடும்,
உயிரையும் துச்சமாக மதித்தாலும் நீதிக்குப் போராடும் உணர்வோடும் வாழ்வரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்” எனும் சத்தியத்தை கண்ணகியின் பாத்திரம் மூலம் உணர்த்தி இருக்கிறார். கற்பனையினூடே பல சத்தியங்களுக்கும் ஆதாரமாக இருப்பது சிலப்பதிகாரம். தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் சிலப்பதிகாரம் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமை வாய்ந்ததாகும். அப்படிப்பட்ட சிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக விளங்குபவை, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்,
 உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற மூன்றுமே. அந்த வகையில் தொடர்ந்து கொண்டிருந்த சடகோபனின் அந்த சொற்பொழிவின் அடுத்தொரு வார்த்தையேதும் சந்திரமதியின் செவிகளில் விழவேயில்லை! ஆம் நினைவுகள் எங்கோ பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தன.

மனித ஆற்றலின் சக்தியைத் திருடும் களவாணி அந்த மனிதனுக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஆட்சி செய்வதை அந்த மனிதனே உணரத் தவறுவதும் இயற்கையாக நடக்கக்கூடியதுதான். ஒரு சில விசயங்களை நம் மனது திட்டவட்டமாக ஒரு முடிவு எடுத்துவைத்துக் கொள்கிறது. அதை உள் மனது ஆழமாக நம்பிக் கொண்டு, இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியான முடிவும் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பிற்காலங்களில் அது உண்மை அல்ல என்று தெரிய வரும்போது, அதாவது அறிவாற்றலின் மீதிருக்கும் அந்தத் திரை விலகும் நேரம் காலங்கடந்த நிலை ஏற்பட்டு விடுகிறது. மனிதாபிமானம் என்பதற்கான பொருள் இன்றைய காலகட்டங்களில் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதும் உண்மை.

பழைய நினைவுகள் புதிய வேதனைகளைச் சேர்த்து பெருங்குழப்பத்தை ஏற்படுத்த, சந்திரமதியின் பக்கமிருந்து லேசான ஒரு விசும்பலாக வெளிவந்தது. தவித்துப்போன மதிமாறன் அவளருகில் சென்று பதட்டத்துடன் அவள் கரங்களை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன், அவள் தலையை மெல்லக் கோதியவாறு தன் தோள்களின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டான். இணையக் கூட்டத்தின் வீடியோ, ஆடியோ என இரண்டையும் மியூட்டில் போட்டு வைத்தது நல்லதாகப் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டான். என்ன ஆயிற்று இவளுக்கு? அப்படி என்ன பேசினார் சடகோபன் இறுதியாக என்று யோசித்தான்.

சிலப்பதிகாரக் கதை புனைந்துரை அன்று, உண்மையில் நிகழ்ந்த வரலாறு என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்டிருப்பவள் என்ற வகையில், ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற சொல்லாடல் அவளை இந்த அளவிற்கு பாதித்திருக்கிறதா, அவை  அவள் தலைக்கு மேல் கூர்வாளாக வீற்றிருப்பது போன்று அவளுடைய உடல்மொழி உணர்த்துவதாகத் தோன்றியது. இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக பூட்டி வைத்திருந்த மனம் திறந்து நன்றாக அழுது தீர்க்கட்டும், துன்பமெல்லாம் கரைந்து நீர்த்துப் போகட்டும் என்று காத்திருந்தான். அழுது ஓய்ந்து களைப்பால் கணவன் மடியில் கண்ணயர்ந்தவளை மெல்ல தலையணையில் சாய்த்து வைத்தான்.

மனசாட்சி என்பது நம் மனதின் ஒரு பகுதி. அவரவர்களின் செயல்பாடுகள்   சரியா அல்லது தவறா என்பதை மனசாட்சியே புரிய வைக்கிறது. ஒருவருக்கு குற்ற உணர்ச்சியை உணரச் செய்தால் அச்செயல் தவறு என்பதை அவர் உணர்கிறார். மனம் தெளிவான நிலையில் இருந்தால், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரிவதால் அவர் குற்ற உணர்ச்சியை உணர்வதில்லை.

அரை மணி நேரம் கழித்து மெல்ல கண் விழித்தவள் வாய் திறக்கவும் முயன்றாள். அவள் மனதை பாதித்த அந்த விசயம் பற்றி அவள் சொன்னதைக் கேட்டபோது ஆச்சரியத்தில் மெய்சிலிர்த்தான் மதிமாறன். அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இருக்கலாம். இவ்வளவு நாட்களாக இந்த அளவிற்கு மனதை முள்ளாகக் குத்தும் இந்த சம்பவத்தை எப்படி கடந்து கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. நடந்த சில தினங்களில் எதுவுமே நடக்காதது போல அனைத்தையும் மறந்துவிட்டு இயல்பாக இவளால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று வியந்த காலமும் நினைவிற்கு வரத்தான் செய்தது.

இவர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் காலியாக இருந்த எதிர் வீட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் குடி வந்திருந்தனர். அதற்கு முன்பு இருந்த ஒரு தாத்தாவும், பாட்டியும் தங்கள் மகனுடன் வெளிநாட்டிற்கேச் சென்றுவிட திட்டமிட்டு வீட்டை இவர்களுக்கு விற்றுவிட்டு சென்றுவிட்டனர். ஒரு கணவன், மனைவி, கல்லூரிக்குச் செல்லும் ஒரு பெண், அவள் பாட்டி என சின்ன குடும்பம்தான். மிக அன்பாகப் பழகக்கூடியவர்களாக இருந்ததால் நிம்மதியாக நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் வீட்டில் அவ்வப்போது அந்தப் பாட்டியின் சத்தமும், மருமகளின் சத்தமும் கேட்க ஆரம்பித்தது. அவர்களிடம் விசாரித்தபோது, மோகன் என்ற அந்த குடும்பத் தலைவர், தன் தாய்க்கு அல்சைமர் எனும் ஞாபகமறதி வியாதி என்றும், தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்துவிட்டு ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வார்கள் என்றும் அதனால் வீட்டில் பிரச்சனை என்றும் கூறினார். இதனாலேயே இதற்கு முன்னால் இரண்டு வீடு மாற்ற வேண்டியதானதையும், அதனாலேயே இந்த முறை மிகவும் சிரமப்பட்டு சொந்த வீடு வாங்கிக்கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆரம்பத்தில் பரிதாபமாகத் தோன்றிய அவர்கள் நிலை 6 மாதத்திலேயே எரிச்சலூட்டுவதாக மாறிப்போனது. அந்தப் பாட்டி தன் வீடு எது என்பதையே மறந்துவிட்டு அடிக்கடி இவர்கள் வீடு திறந்திருக்கும் போதெல்லாம் உள்ளே வந்துவிடுவதும், நேராக கழிவறைக்குள் சென்று கையை அலம்பிக் கொண்டே இருப்பதும், என்று இப்படி ஏதாவது செய்ய ஆரம்பித்த பின்பு இவர்களுக்கும் சலிப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இத்தனைக்கும் அவர்கள் கதவை பூட்டியேதான் வைத்திருந்தாலும் திறக்கும்போதெல்லாம் வந்துவிடுவார். முக்கியமாக கையில் ஏதோ ஒட்டிக்கொண்டது போல அசூசையாக உணர்வதுபோல முகத்தை வைத்துக்கொண்டு சோப்பை போட்டு கையை கழுவிக்கொண்டே இருப்பார். சந்திரமதி மெல்ல மெல்ல கோபம் கொள்ள ஆரம்பித்தபோதெல்லாம் மதிமாறன், ‘நம் வீட்டில் இப்படி ஒரு பெரியவர் இருந்தால் என்ன செய்ய முடியும், கொஞ்சம் பொறுத்துக்கொள்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டிருப்பான்.

அன்று ஏற்கனவே கணவனுடன் ஏதோ கருத்து வேறுபாட்டினால் மனக்குழப்பத்தில் சமையலும் செய்யாமல் இருந்த நேரத்தில் அந்தப் பாட்டி வழக்கம்போல் வீட்டிற்குள் வந்து கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, ஃபிளஷ் செய்யாமல் அப்படியே வந்திருக்கிறார். கோபத்தின் எல்லைக்கேச் சென்றுவிட்ட சந்திரமதி செய்த தகராறில் அவர்கள் வீட்டில் பெரும் பிரச்சனையாகி, அவருடைய மருமகளும் ஒரே பிடியாக, இதற்கு மேல் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தியே ஆகவேண்டும், இல்லையென்றால் தான் அந்த வீட்டில் இருக்க முடியாது என்றும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். இறுதியில் வேறு வழியில்லாமல் அவருடைய மகன் மோகன் தன் தாயை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்தார். ஆனால் மகனையும், பேத்தியையும்  மட்டும் மறக்க முடியாமல் புலம்பிக்கொண்டே இருந்த அந்தப் பாட்டி சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் விரைவிலேயே அங்கேயே உயிரையும் இழந்துவிட்டார்.

ஆனால் சந்திரமதிக்கு அன்றிலிருந்து தான் ஏதோ பெரிய பாவம் செய்துவிட்டது போலவும், தன்னால்தான் அந்தப் பாட்டி முதியோர் இல்லம் செல்லவேண்டி வந்ததோடு, உயிரையும் இழந்துவிட்டார் என்று பெரிய குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. நாளடைவில் மெல்ல மெல்ல மறந்துவிட்டு தன் குடும்பக் கடமைகளில் ஆழ்ந்துபோய் இருந்தாலும், இன்று இந்த கொரோனா தொற்று அனைத்தையும் மீண்டும் வெளியே கொண்டு வந்துவிட்டது. சுய நினைவின்றி கையை திரும்பத் திரும்ப கழுவிக்கொண்டே இருந்த அந்தப் பாட்டியை அவ்வளவு வெறுத்ததன் பயனே இன்று சுய நினைவோடு அடிக்கடி கையை கழுவிக்கொண்டே இருக்கிற நிலைமை வந்ததோ என்று தன்னையறியாமல் ஒரு அழுத்தம் அவளை பாதித்துள்ளதை ஒரு வழியாகப்  புரிந்து கொண்டதால் இனி அவளை எப்படியும் சமாதானம் செய்து பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு அழைத்துச் சென்று படுக்க வைத்தான். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதெல்லாம் கதைதான் என்று அவனைப்போலவே நாமும் நம்பத்தானே வேண்டும்? தவறே செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. வாழ்க்கையில் நாம் செய்யும் சில தவறுகள் மட்டுமே நம் குணாதிசயங்களை வரையறுப்பதில்லையே!

 

No comments:

Post a Comment