தமிழை முக்கியப்பாடமாக எடுத்துப்படிப்பதால்,
தமிழ் ஆசிரியர், பேராசிரியர் தவிர வேறு வேலை வாய்ப்புகள் உள்ளனவா?
செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
இணைய வழி கருத்தரங்கில் பங்கு கொள்வதில் மகிழ்கிறேன். வரவேற்புரை வழங்கி அமைந்திருக்கும்
முனைவர் மற்றும் தினேசு குமார் தமிழ்துறை தலைவர் முனைவர் சக்திவேல் அவர்களுக்கும்
முன்னிலை வகிக்கும் தாளாளர் மருத்துவர் பொ.செல்வராஜ் அவர்களு தலைமை உரை வழங்கி செயலர்
முனைவர் கவித்ராநந்தினி பாபு அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கியுள்ள முதல்வர் முனைவர்
ந,ராஜவேல் அவர்களுக்கும், தரவுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் கி.சி அருள்சாமி துணை முத;வர் கெ.கெ. கவிதா துணை முதல்வர் முனைவர்
ப. தாமரைச் செல்வன் துணை முதல்வர் முனைவர் கி.குணசேகரன்
என்னை நன்றாக இறைவன்
அனைவருக்கும் வணக்கம். தமிழர் வாழ்வியல்
ஆய்வு அறக்கட்டளையின் சார்பில் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நண்பர்களுக்கும்,
தமிழால் முடியும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கும் தமிழறிஞர், தகைசால் பேராசிரியர்
முனைவர் வீ. ரேணுகாதேவி அம்மையார் அவர்களையும் வருக வருக என வரவேற்று என் வணக்கத்தையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழால் முடியும்!
தமிழை முக்கியப்பாடமாக எடுத்துப்படிப்பதால்,
தமிழ் ஆசிரியர், பேராசிரியர் தவிர வேறு வேலை வாய்ப்புகள் உள்ளனவா?
மனிதனின் அறிவாற்றலையும், தனித்திறனையும்
வளர்த்துக்கொள்வதையே இலக்காகக்கொண்ட கல்வியின் காலமும் இருந்தது. என்றாலும்
இன்றைய நிலையில் வாழ்வாதாரத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும், வாழ்க்கையை வளமாக்கவும், பொருள் சேர்ப்பதற்காகவும்
வேலைவாய்ப்பை அளிக்கும் வரமாகவே பார்க்கப்படுகிறது இன்றைய கல்வி. விரும்பிய
பாடத்தைக் கற்பதைக்காட்டிலும் நல்ல வருமானம் அளிக்கும் கல்வியைக் கற்க வேண்டும் என்பதே
பெற்றோரின் விருப்பமாகவும் உள்ளது. எந்த பாடம் படித்தால் நல்ல பணியும், நல்ல வருவாயும் கிடைக்கும் என்பதைத் தேடியலைவதே இன்றைய தலைமுறையினரின் சவாலாக உள்ளது. ஆனால்
எந்த படிப்பாக இருந்தாலும் அதற்குரிய தேவையும் வாய்ப்பும்
இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை
உணர்ந்தாலும் தமிழ் மொழிக் கல்வியைப் படித்தால் எதிர்பார்த்த அந்த வேலை கிடைக்குமா என்ற பெரும் ஐயமும் அனைவருக்கும் எழத்தான் செய்கின்றன.
தமிழை
முக்கியப்பாடமாக எடுத்துப்படிப்பதால், தமிழ் ஆசிரியர், பேராசிரியர் தவிர வேறு வேலை
வாய்ப்புகள் உள்ளனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஐயத்தை தெளிவு பெறச்செய்யும்
வகையில் முதலில் பேரா. ரேணுகாதேவி அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். அடுத்து எமது
கருத்துரையும் வழங்கவிருக்கிறேன். நன்றி.
‘என் பையன் ஒரே பிடிவாதமாக பி. ஏ. தமிழ் இலக்கியம்தான் படிப்பேன் என்று
அடம்பிடித்து படிக்கிறான். அவனுக்கு எங்க,
என்ன வேலை கிடைக்கும்னுகூடத் தெரியவில்லையே என்று சில பெற்றோர்
அறற்றுவதைக் கேட்டிருப்போம். இன்றைய உலகமயமாக்கலில் பணிச்சந்தை என்கிற
job market, தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு என்ன
வாய்ப்புகளைத் தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.
இந்த நேரடியான கேள்விக்கு நேரடியான பதில் அறிந்தால்
மட்டுமே மன நிறைவுடன் தமிழ் இலக்கியம் படிக்கமுடியும் என்பதும் உண்மை. முதலில்
ஒரு உண்மையைப் பதிவு செய்துகொள்வோம். தமிழ் இலக்கியப் படிப்பு ஒன்றும்
தரமற்றதோ அல்லது இரண்டாந்தரப் படிப்போ அல்ல என்பது சத்தியம்.
ஒருவேளை அப்படி இருந்தால், பல்கலைக்கழகங்கள் ஏன் அந்த
பாடத்தை வைத்திருக்கப்போகிறார்கள் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
இணைய வழி கருத்தரங்கில் நான் ஆற்றிய உரையின் மறு பதிப்பு இது என்பதையும் குறிப்பிட
விரும்புகிறேன்.
ஒரு
ஆச்சரியமான தகவல் என்னவென்றால் எத்தனையோ புதிய
புதிய படிப்புகள் வந்துகொண்டு இருந்தாலும், ஆண்டுதோறும்,
தமிழ் இலக்கியம் படிப்பில் சேருகிறவர்களின் எண்ணிக்கை பெரிதாகக் குறைவதே இல்லை! இதற்கான காரணம் மிக எளிது. பலர்
தமிழ் படிப்பதற்கு மிக எளிது என்று நினைத்தாலும், பெரும்பாலானவர்கள்
தங்கள் பரம்பரையில் வழிவழியாகத் தமிழ் படிப்பதையே கடமையாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தமிழ் ஆசிரியர் குடும்பம் என்று பேர் பெறுவதில் பெருமிதம் கொள்பவர்கள்
என்ற வகையில் இதற்கு விலையேதும் இருக்கமுடியாது. பழம்பெருமை மிக்க நம் தாய்மொழியாம்
தமிழ் மொழியைப் படித்து அதன் வரலாறு, இலக்கியம், இலக்கணம் என அனைத்தையும் கற்பதை ஒரு
வரமாகவே கருதுபவர்களும் பலர். ஆனால் சிலர் தமிழ் இலக்கியம் மட்டும்
படிப்பதால் எங்கிருந்து வேலை கிடைக்கும்?’ என்கிறார்கள்.
நாம் முதலில் சிந்திக்க வேண்டியது வேறு எந்த படிப்பாக இருந்தாலும்,
பொறியியல், அழகுக்கலை, மருத்துவம், என எதுவாகவும் இருக்கலாம், அவைகளைப் படித்துவிட்டால்
மட்டும் உடனடியாக வேலை கிடைத்து விடுகிறதா..என்பதுதான். பணிச்சந்தையில்,
தமிழ் இலக்கியம் அல்லது பொருளாதாரம், கணிதம்
என்று வேறுபாடு காணும் அளவிற்கு பெரிதாகப் பிரித்துப்
பார்ப்பதில்லை. இந்த வேலைக்கு இந்த திறன் சரிப்பட்டு வருமா என்பதை
மட்டுமே பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
சற்று சிந்தித்துப் பாருங்களேன். ஒரு நகராட்சி பள்ளி. ஆசிரியர் பணியிடத்திற்கு ஒரு பணி வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரிலேயே, நல்ல வருவாயுடன் நிரந்தரமான வேலை கிடைத்தால் மகிழ்ச்சிதானே. யார்தான்
வேண்டாம் என்பார்கள். ஆனால் இந்த வேலைக்கு தமிழ் இலக்கியம் படித்து, ஆசிரியர்
பயிற்சி பெற்றவர் பொருத்தமாக இருப்பாரா..? அல்லது,
‘பி. ஈ.’ என்ற பொறியியல் பட்டம் பெற்றவர் பொருத்தமானவராக
இருப்பாரா என்பதை யாரைக் கேட்டாலும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்தான்
சரியான தேர்வு என்று சொல்லிவிடுவார்கள் இல்லையா.
அப்படியானால், பி.
ஈ. பட்டம் இரண்டாந் தரமாக ஆகிவிட்டது என்று கொள்ள முடியுமா
என்றால் நிச்சயமாக இல்லை என்றுதானே சொல்ல முடியும். காரணம் அந்தந்த பணிக்கும்
அதற்கேற்ற கல்விக்கும்தான் முன்னுரிமை
கிடைக்கும். அதற்காக மற்றவை எல்லாம் வேண்டாத படிப்புகள்
அல்ல. இந்தப் பணிக்குப் பொருந்தி வராதவை என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
தொழிற்கல்வி, பொதுக்கல்வி எனும் இருவகைக் கல்விகளில், பொறியியல், மருத்துவம் ஆகியன தொழிற்கல்விகள். ஏதேனும் ஒரு தொழிலுக்கான நுட்பங்களைக் கற்றல் என்றாலும்
ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கான ஆற்றலைத் தருகிற கல்வி,
பிற தொழில்களுக்கு அதிகம் பயன்படாமல் போய்விடுவதுண்டு. அந்த வகையில் எந்த வகையான கல்வியாக இருந்தாலும் அதற்குரிய பலனும்
இருக்கத்தான் செய்கின்றன.
தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற ஒருவர் அலுவலக
உதவியாளர் பணியில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டால் அவரால் அங்கு
என்ன பெரிதாக சாதித்துவிட முடியும்..? இன்றைய காலகட்டத்தில், தான் தேர்ந்தெடுத்துப் படித்த துறைக்கு வெளியே, ஒரு
தொழிற் கல்விப் பட்டதாரிக்கு வேலையில் முன்னுரிமை கிடைப்பது என்பதும் மிகவும் அரிதாகத்தான் உள்ளது.
ஆனால் இலக்கியம் போன்ற பொதுவான
இவ்வகைக் கலைப் படிப்புகள், ஒருவரை, எல்லா
சூழல்களுக்கும் பொருந்துகிற மனிதனாக மாற்றுகிறது என்பதுதான் உண்மை. கல்வி, வேலை வாய்ப்புத் தளங்களில் இதுபோன்ற தவறான புரிதல்களாலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக தமிழ் ‘இலக்கியம்’ என்றவுடன் ஏதோ பழங்கதைகள் பற்றிய படிப்பு என்று
சிலர் தவறான எண்ணம் கொள்கின்றனர். மொழியியல் கல்வியான
இதில் இளங்கலை, முதுகலைப் பட்டம், ‘பி.எச்டி’ எனும் முனைவர் பட்டம் வரை பல நிலைகள் உள்ளன.
இலக்கியம் கற்றல் என்பது மொழி ஆராய்ச்சி தொடர்ந்து வளர்ந்து வருகிற ஒரு துறை என்பதால் மிகவும் சிறப்பு
பெறுகிறது. அதிலும் தமிழ் போன்ற வளம் செறிந்த மொழியில்
ஆராய்ச்சிகளுக்கான பணிகள் அதிகளவில்
இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆசிரியர் பணிக்குச் செல்ல
மிகச்சரியான பாதை என்றால் அது இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் என்கிற ‘பி. ஏ.’ ‘எம்.ஏ.’ எம்.ஃபில்’, ‘பி.எச்டி. போன்றவைகள்தான்.
இந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும்
தொன்று தொட்டு இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம்,
சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும்
பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ்மொழி. தமிழ்மொழியின்
அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த
துறைகளில் கல்வி கற்பது பலரின் ஆழ்மன விருப்பமாகவும் உள்ளது.
இந்திய நாகரிகத்தின், பண்பாட்டின் ஊற்றுக்கள் அனைத்தையும்
ஆழமாகவும், விரிவாகவும் ஆராய வேண்டுமென்ற எண்ணமுள்ளவர்கள்
மகிழ்ச்சியோடு வரவேற்பது தமிழ் இலக்கியத் துறையைத்தான்.
இலக்கியத்
துறையில், கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம்
போன்ற 5 புலங்களும்,
சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை, ஓலைச்சுவடித்துறை,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை, கல்வெட்டியல்துறை, நீரகழாய்வு மையம், அயல்நாட்டு தமிழ்க்கல்வித்துறை,
மொழிபெயர்ப்புத்துறை, அகராதியியல் துறை, சமூக அறிவியல் துறை, அறிவியல் தமிழ்-தமிழ்
வளர்ச்சித்துறை, இலக்கியத்துறை, மொழியியல் துறை, தத்துவமையம், பழங்குடி மக்கள் ஆய்வு
மையம், இந்திய மொழிகள் பள்ளி, நாட்டுப்புறவியல் துறை, சித்தமருத்துவத் துறை, தொல்லறிவியல்
துறை, தொழில், நிலறிவியல் துறை, கணிப்பொறிவியல் துறை, கட்டடக்கலைத்துறை, சுற்றுச்சூழல்,
மூலிகை அறிவியல் துறை, கல்வியியல், மேலாண்மையியல் துறை ஆகிய 25 துறைகளைப்
பெற்றுள்ளன.
இவற்றோடு அறிவியல்–
வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதி, தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் உருவாக்குதல் போன்றனவும்,
பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம்
பேணல் போன்றவைகள் தொடர்பான பல பணிகளும் உள்ளன.
தமிழ் மீது ஆர்வம் கொண்டு மொழியைக் கற்கும்
ஆவலுடன் உலகளாவி வருவோர்க்கெல்லாம் தமிழ்மொழியை, தமிழர் பண்பாட்டை, தமிழர் நாகரிகத்தை, கலைநலங்களைக் கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்பவர்கள் அதற்கான வாய்ப்புகளைப்
பெற முடிகிறது. இந்திய ஆட்சிப்பணியான ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர்களுக்குத்
தமிழ்மொழிப் பயிற்சி வழங்கும் வாய்ப்பும் அமைகிறது.
அறிவுலகமும் ஆராய்ச்சியுலகமும் பாராட்டிப்போற்றும்
பல்வேறு பணிகளை நிறைவேற்ற வழிவகுக்கும் இலக்கியக் கல்வியை சிறப்பான முறையில்
பயின்றவர்கள் பெரும் சாதனையாளராகின்றனர். இன்று பதிப்புத்துறை மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிற வகையில்
இதற்கான சுய தொழில் வாய்ப்புகளும், பணிகளும் பெருகி வருகின்றன. சுய தொழில் செய்யும்
ஆற்றல் உள்ளவர்களால் மேலும் சிலருக்கு பணி அளிக்கவும் இயலும்.
மண்ணின் மரபின் மணத்துடன் ஊன்றிய அற்புதமான நாடகப் படைப்புகளுக்கு உந்து திறனாக விளங்கும்
நாடகத்துறைக்கும் நல்ல வரவேற்பு இருக்கின்றன. தொலைக்காட்சி தொடர் நாடகங்களுக்கு
இன்று எவ்வளவு வரவேற்பு உள்ளது என்று நாம் அறிவோம். தமிழ் இசையில் தமிழரின் பங்கினை அறிந்துகொள்ளவும்,
அதைத் திறம்பட கற்பித்தலிலும் முதன்மை நோக்கோடு இசைத்துறை
செயற்படுகிறது. இதில் நல்ல பாண்டித்யம் உள்ளவர்களுக்கு பல்வேறு பணி சார்ந்த
வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
சிற்பத்துறையில் வல்லமை பெறுவதன் மூலம் வரலாற்று நெறியிலான படிமப்பாங்குகள், படிமக்கலை
ஆய்வுகள், கோயிற் சிற்பங்கள் தொடர்பான சிற்ப நுணுக்க
ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற கலைகளை திறம்பட கற்பிக்கலாம் அல்லது ஆய்வுக் கூடங்களையும்
நிறுவலாம்.
கல்வெட்டுகள், தொல்லியல் அகழாய்வுத் துறை சார்ந்த கல்வி தமிழ்நாட்டின் பழங்கால, இடைக்கால வரலாற்றை ஆராய்தல் போன்ற கல்வெட்டியல்
துறையின் பணிகளையும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. கடலுக்கடியில்
புதைந்து கிடக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும்
முற்பட்ட வளங்களை வெளிக்கொணர்ந்து ஆய்வு செய்து பழம்பெருமைகளை நிலைநாட்டும் நீரகழாய்வுத் துறை சார்ந்த கல்வியும் மிகவும் வளம் சேர்ப்பவை. இதற்கெல்லாம்
நல்ல வாருவாயும் உண்டு.
தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுத்து
அறிவியல் முறைப்படி பாதுகாத்தல், அருஞ்சுவடிகளை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிடல், சுவடி
ஆய்வு செய்து அரிய நூல்களை மீளவும் வெளியிடல் போன்ற சிறப்பான பணிகளுக்கு வழிவகுப்பவை ஓலைச்சுவடித்துறை. அரிய கையெழுத்துச் சுவடிகளைத் திரட்டுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் அச்சுவடிகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றை
ஆராய்வதும் ஆர்வலர்களின் தனிச்சிறப்பான அரிய முயற்சியாக
இருக்கும். இதற்கு பல்கலைக்கழகங்களின் உதவியும் பெறலாம்.
1982 ஆம் ஆண்டிலிருந்து,
தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, அமெரிக்கக் குடியரசு, பிரிட்டன் ஆகிய நாடுகளில்
குடியேறி வாழ்ந்து வரும் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் அறிந்து போற்றவும், மலேசியா,
சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளில் வாழும்
தமிழர்கள் தமிழில் உயர்கல்வி பெற்று மேம்பாடு அடையவும்
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை பணியாற்றி வருகிறது. இந்தப் பணிக்கான தகுதியை
சிறப்பாக வளர்த்துக் கொள்பவர்களுக்கு நல்ல பணி வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
அறிவியல் தமிழ், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் வழி அறிவியல் பரப்புதல், அறிவியல் துறையில்
தமிழின் பயன்பாடுபற்றி ஆராய்தல் போன்று உயரிய நோக்கங்களைக்
கொண்டு கற்றல் மிகச்சிறப்பான பணிகளுக்கு
வழியமைக்கும். பொதுவாக அறிவியல் ஆய்வுகள் அனைத்தும் தமிழில் ஆவணப்படுத்தும் முயற்சியை
அரசு முன்னெடுக்க வழிவகுக்க வேண்டியது அவசியம் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
அப்படி செய்யும்போது இவை சார்ந்த பணி வாய்ப்புகளும் பெருகும்.
அடுத்து மொழிபெயர்ப்புத்
துறையைப் பொருத்தவரை, தமிழ் மொழியை வளப்படுத்தும் சீரிய நோக்கம் கொண்டதொரு துறை என்பதால் இது
பரந்த பணி வாய்ப்பிற்கும் வழியமைக்கக்க்கூடியதாக உள்ளது.
பொதுவான, சிறப்பு நிலை அகராதிகள், பல வகைப்பட்ட
ஆய்வடங்கல்கள், சொற்றொகுதிகள், சொற்பொருள்
அடைவுகள், தொடரடைவுகள் முதலிய நோக்கு நூல்களைத் தொகுக்கும் தொகுப்பியல் துறையின் மூலம் பணியைப் பெறலாம்.
சமூகவியல், பொருளாதாரம் போன்ற இயல்களிலும்
தமிழ்மொழி வழியாக நூல்கள் எழுதுவதற்காகவும், சிற்றூர்ப்புறச் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும்
அவற்றின் அடிப்படைச் செய்திக் கூறுகளைத் திரட்டுவதற்காகவும்,
அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பயன்மதிப்பீட்டுத் திட்டங்களை ஆராயவும் செயல்படும் சமூகவியல் துறையில் ஆற்றலை வளர்த்துக்கொள்பவர்களுக்கு சிறப்பான பணி காத்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களின் உயராய்வுகளை மேற்கொள்ளுதல்,
மொழியியல் துறையின் மூலமாக தமிழ் மொழியமைப்பின் பல்வகைக்
கூறுபாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
பொதுவாக தமிழ் இலக்கியம்
கற்போருக்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால், பலர் தமிழ் படித்தால் எதிர்காலமே இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இளங்கலை தமிழ் இலக்கியம் கற்பவர்களுக்கும், கணிதம், இயற்பியல், வரலாறு உள்ளிட்ட மற்ற பாடங்கள் கற்கும் மாணவர்களுக்கும் உரிய அனைத்து வேலைவாய்ப்புகளும் பொதுவானவையே என்பதே உண்மை.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வு முதல் இளங்கலைப்
பட்டத்தைத் தகுதியாகக் கொள்ளப்படும் அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகளையும் தமிழ் கற்போரும் எழுதி வேலைவாய்ப்பு பெற்றுக்கொண்டுதான்
இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் வங்கித் தேர்வுகள், இரயில்வே தேர்வுகள் போன்றவைகளையும் தமிழ் படித்தோர்
எழுதி பணி வாய்ப்பு பெறலாம். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1,
2 உள்ளிட்ட தேர்வுகளையும் எழுதலாம். பி.எட் அல்லது புலவர் பட்டயம் படித்திருந்தால்
உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணிக்குச் செல்லலாம். எந்தவொரு
கல்வியையும் கடமைக்காகக் கற்காமல், அதை எந்த வகையில் கற்று முழுமையாகப் பயன் பெறமுடியும்
என்பதை நன்கு அறிந்துகொண்டு கற்க முற்பட்டால் சிறப்பான பயனடையலாம். எடுத்துக்காட்டாக முதுகலையில் தமிழ் இலக்கியத்தில் உள்ள இதழியல்
உள்ளிட்ட பல்வேறு விதமான படிப்புகள் உள்ளன. முதுகலை இதழியல்
படித்தோருக்கு பத்திரிகை, ஊடகத் துறையில் செய்தியாளர்,
உதவி ஆசிரியர் உள்ளிட்ட பலவிதமான பணி வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது பெரும்பாலும் இணைய இதழ்களுக்கு
அதிகமான வரவேற்பு உள்ளதையும் அறிவோம். இணையம் தொடர்பான சிறந்த பயிற்சி உடையவர்களுக்கு
இதுபோன்ற பணிகள் எளிதாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இதற்கு மிக முக்கியமான ஒன்று,
தமிழைப் பிழையின்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும்
வல்லமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். இத்தகையோரின் தேவைகள் பெருமளவில்
உள்ளன. ஊடகத் துறை சார்ந்த தொலைக்காட்சி, வானொலி, பண்பலை (எப்.எம்) போன்றவைகளில் செய்தி வாசிப்பவர், நிகழ்ச்சி அறிவிப்பாளர்,
நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்ற பணியிடங்களும்
அதிகமாகவே காத்திருக்கின்றன. ஆங்கில மொழியிலும் ஓரளவிற்கேனும்
பயிற்சி பெற்றிருப்பவர்களுக்கு, நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீனா,
மொரீசியசு, சப்பான், இலண்டன் உள்ளிட்ட பல
வெளிநாடுகளில் வானொலியில் தமிழ் அறிவிப்பாளராகவோ, நிகழ்ச்சித்
தொகுப்பாளராகவோ பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கலாம். செய்தி இதழ்/செய்தித்தாள், சின்னத்திரை, வானொலி, பண்பலை, இவற்றிலும் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் படித்தோருக்கு நல்ல
வாய்ப்புகள் உண்டு.
தமிழில் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள்
பெற்றவர்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் பேராசிரியர்களாக மட்டும்தான் செல்ல முடியும் என்பதல்ல. தமிழ் இலக்கியத்துடன் சேர்த்து கல்வெட்டு ஆய்வு, சுவடி வாசித்தல், சுற்றுலாவியல் போன்றவற்றில் பட்டயங்கள் என்கிற டிப்ளமாவும் பெற்றால் தமிழக அளவில் தொல்லியல் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
தமிழ் மொழியோடு ஆங்கில
மொழியிலும் நல்ல புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழ்
மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கும் பணிகளுக்கான வாய்ப்புகளும்
அதிகமான உள்ளன. திறமைக்கு ஏற்ற அளவிற்கு வருவாயும் பெருகும். இலக்கியம்
உள்ளிட்ட பிற தகவல்களை, பிற
மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி
பெயர்ப்பது, பல்வேறு கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும்
பல்கலைக்கழக மானியக்குழு (UGC) நிதியுதவியுடன் மொழி
பெயர்ப்பியலில் சான்றிதழ், டிப்ளமோ, உயர்
டிப்ளமோ படிப்புகள் கற்றவர்களுக்கு இந்த வாய்ப்புகள் சிறப்பாகவே உள்ளன.
கடந்த சில
ஆண்டுகளாக பி.பீ.ஓ., கால் சென்டர்களில்
ஆங்கிலம், ஆங்கில இலக்கியப் பட்டப்படிப்பு
படித்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இத்தகைய காரணங்களால் ஆங்கிலப்
பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்
கொண்டே வருகிறதென்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும் இன்று
பல பி.பீ.ஓ. மையங்கள் தமிழ் மொழியிலும் சேவை
செய்ய முன்வருவதோடு, தமிழ் மொழி கற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை
சமூக ஆர்வலர்கள் பரிந்துரை செய்து வருவதும் நம்பிக்கைக்கு உரிய செய்தியாக உள்ளது.
தமிழர்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்வதிலேயே ஆர்வமாக உள்ளார்கள் என்ற கருத்தும் அதிகமாகவே நிலவுகிறது. வேலையை உருவாக்கும் சூழலை உருவாக்கும் எண்ணம் கொண்டவர்களே
சிறந்த வெற்றியாளர்களாக ஆகின்றனர். தமிழ்மொழியை அலுவல் மொழியாகக் கொண்டு தங்கள் நிறுவனங்களை உருவாக்க தமிழர்கள்
முன்வர வேண்டும்.
தமிழ் கற்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும்
என்பதெல்லாம் கடந்த காலம். இன்று பல
நிலைகளில் தமிழ் கற்பதால் சிறப்பான பணிகளையும் பெறும் வாய்ப்புகள் உள்ளன. தமிழோடு பண்மொழி /வணிகவியல் அறிந்திருந்தால் உலகில்
தமிழர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் வைப்பகம் /
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணி செய்யமுடியும்.
தனியார் தொலைக்காட்சிகள் இன்று புற்றீசலாக உருவாகிக் கொண்டிருக்கும் இன்றைய
காலகட்டத்தில் நிகழ்ச்சித் தொகுப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சித்
தயாரிப்பு போன்ற பணிகளில் தமிழ் இலக்கியப் பட்டதாரிகள் சிறப்பாக பணியாற்ற முடியும். மரபார்ந்த
செம்மையான தமிழறிவோடு கணினி அச்சுத் தொடர்பான பயிற்சியும் இருந்தால் பழந்தமிழ்
இலக்கியங்களை அச்சிடுதல், மின்னுருவேற்றல் போன்றவற்றில் பணியாற்றும் வாய்ப்பு பெறலாம்.
அறநிலையத் துறை மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள
பல்வேறு கோவில்களில் தமிழிசையில் வழிபாட்டுப் பாடல்கள்
பாட ஓதுவார்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழில் அர்ச்சணை செய்யவும் பணியமர்த்தப்படுகின்றனர்.
வெளிநாடுகளிலும் பணிவாய்ப்புகள் பெருகி வருகின்றன. தமிழர்கள் உலகம்
முழுவதும் தற்போது தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய
நாடுகள், ஆசுத்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு
நாடுகளிலும் பணி காரணமாக குடிபெயர்ந்து வசிக்கின்றனர்.
உலகநாடுகளின் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் குழந்தைகளுக்கு
தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் கற்பிக்கும் பள்ளிகளில்
சேர்க்கின்றனர். அங்கும் தமிழாசிரியர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். தமிழோடு பிறமொழி அறிவும் இருப்பின் சிறப்பான ஊதியம் பெறலாம். மொழிபெயர்ப்பு பெரிய அளவில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது. வெளிநாட்டு மக்கள் தமிழ் மொழியின் தொன்மை காரணமாகவும், இலக்கிய நயம் குறித்த ஆர்வத்தினாலும்
தமிழ் மொழியை ஆழ்ந்து கற்பதற்கு முன்வருகிறார்கள். அவர்களுக்கு இணையம்
மூலமாக நேரலையில் காயலை என்கிற Skype போன்ற தளங்கள் மூலம் தமிழ் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். பலர் பகுதி நேர வேலையாகவும் செய்து பொருள் ஈட்டுகிறார்கள்.
சிறப்பாக பணியாற்றி
பெயர்பெற்ற பி.பி.சி, சீனா, சப்பான், இலங்கை,
ஆசுத்திரேலியா, அமெரிக்க
வானொலிகளில் தமிழ் மொழிப் பிரிவு உள்ளது. அங்கும் தமிழ்
கற்றறிந்தோருக்கு அதிகப்படியான ஊதியத்துடன் கூடிய பணிகள்
கிடைக்கின்றன. விளம்பரத் துறையிலும் தமிழ்ப் பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் காணப்படுகின்றன. அடிப்படையான
பட்டப்படிப்புடன், மின் பதிப்புத் துறைக்கான கணினி சார்ந்த
குறுகிய காலப் படிப்புகளை கூடுதலாக மேற்கொண்டால் ஊடகத்துறைக்குள் தடம்
பதிப்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம். படைப்புகளை எழுத, சரிபார்க்க, பிழை திருத்த, செய்திகளைச்
சேகரிக்க, தொகுத்து வழங்க.. என காட்சி ஊடகங்களில் திரைக்கு
முன்னேயும் பின்னேயும் வேலைவாய்ப்புகள் அதிகமுண்டு.
முகநூல்,
புலனம் [WahtsApp], தேடலி (கூகுள்),
கீச்சகம் [டுவீட்டர்], கோரா [Quora] இவ்வாறு பல செயலிகள் தமிழ் மொழியை அலுவல்மொழியாக ஏற்றுள்ளன. இவைகள் மூலமாகவும் பணி வாய்ப்புகள் பெறலாம்.
கணனி மென்பொருள் நிறுவனங்கள், பெரிய அழைபேசி நிறுவனங்கள்,
போன்றவைகளும் தமிழ் மொழியை தங்கள் நிறுவனங்களின் அலுவல் மொழியாக இணைக்கின்றன.
தமிழும், ஆங்கிலமும் நன்கு அறிந்தவர்கள் இப்பணியில் வாய்ப்பு
பெறலாம். எந்த மொழியாக இருந்தாலும், எந்தப்
பாடமாக இருந்தாலும், ஒருவர் எவ்வளவு நன்றாகக் கற்றுத் தெளிவு
பெறுகிறாரோ, அதற்கேற்ப மட்டுமே
வேலைவாய்ப்பு இருக்கும்.
இனி வருங்காலத்தில் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே வேலைவாய்ப்பு அதிகம்
என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. தொழில்நுட்பக் கல்வியில்
சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் என்றாலும் அவர்களிடம் Soft
Skils எனப்படும் Communication Skills அதிகம்
எதிர்பார்க்கப்படுகிறது; மொழிப்பாடம் கற்றவர்களுக்கே அது எளிதில் வரும்.
எந்த படிப்பு
படித்தாலும் பாடத்திட்டத்தை தவிர்த்து பாடம் சார்ந்த மற்றும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தின்
அத்தியாவசியத் தேவையான கணினி சார்ந்து ஏதாவது ஒரு பகுதி நேர படிப்பை
மேற்கொள்ள வேண்டியது அவசியம். மாற்று மொழியறிவை வளர்த்துக்
கொள்ளவும் பயிற்சி எடுக்க வேண்டும். இது
மட்டுமன்றி தங்களின் துறையில் அவ்வப்போது எந்த
வகையான ஆராய்ச்சிகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் திறனை
வளர்த்துக்கொள்ள முயலலாம்.
ஆசிரியர் துறைக்கு நிகராக வேலை வாய்ப்புகள் கொண்டது
ஊடகத் துறை. அச்சு, காட்சி, பண்பலை வானொலி, இணையம், விளம்பரத்துறை
என பரந்து விரிந்திருக்கும் ஊடகத் துறையின் மீது ஆர்வமும், திறமையும்
உள்ளவர்களுக்கு மென் பொருள் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையான ஊதிய வாய்ப்புகள்
பொதிந்திருக்கின்றன.
சொற்பச் செலவில் படித்து நல்ல வேலை வாய்ப்பைப் பெற
மொழிப்பாடப் பட்டங்கள் உதவுகின்றன.
ஆசிரியர் துறையில் மொழிப்பாடம் படித்தவர்களுக்கு
ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிலும், முன்னுரிமைக்காகக் காத்திருக்காது,
தகுதித் தேர்வை எழுதித் தனக்கான அரசுப் பணியை உறுதி செய்துகொள்ளும்
இளம்வயதினர் அதிகரித்துள்ளனர். அரசுப் பணி மட்டுமல்ல, தனியார்
துறையிலும் அதற்கு நிகரான ஊதியம் கிடைக்கும் என்ப தால் மொழி, கலைப் படிப்புகளில் தகுதியை பெருக்கிக்கொள்ளலாம்.
உண்மையில் உலகம் இன்று திறந்தவெளி பொதுச்சந்தையான பிறகு
மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது. எழுத்து சார்ந்து
மட்டுமல்ல, தொலைக்காட்சி, திரைத்துறை
எனப் படைப்பு சார்ந்த அனைத்து வகையிலும் மொழிபெயர்ப்பாளர்கள் திறம்பட செயலாற்றுகிறார்கள். இரண்டு மொழிகளில் நல்ல புலமை அவசியமாகிறது. ஒப்பிலக்கியத் துறையிலும் பணிக்கான வாய்ப்புகள் அதிகமாக
உண்டு.
இலக்கியத்தில் இளநிலையில் படிக்கும் பாடத்தையே முதுநிலையிலும்,
ஆராய்ச்சியிலும், இதே மொழி அல்லது இலக்கியத்தைப் பாடமாக
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கல்வெட்டியல், சுவடியியல்,
நாட்டுப்புறவியல், மகளிரியல், இதழியல்... எனத் தளங்களை மாற்றிக்கொள்ளலாம்.
மொழி ஆராய்ச்சி, அருங்காட்சியகம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை போன்ற சர்வதேச அளவிலும் வேலை வாய்ப்புகள்
காத்திருக்கின்றன. பொறியியல் படித்தவர்கள் வெளிநாடுகளில் பெரும் ஊதியத்திற்கு
நிகராக தமிழ் படித்தவர்களும் அங்கு சம்பளம் பெறலாம். சர்வதேச அளவில் புலம்
பெயர்ந்த தமிழர்கள் சிறப்பாக பணி புரிவதையும்
காண முடிகின்றது.
தட்டச்சு செய்வதோ அல்லது மொழிபெயர்ப்போ, பிழை திருத்தமோ
என ‘பக்கத்துக்கு இவ்வளவு’ என்று வீட்டிலிருந்தபடியும், வேறு பணியிலிருந்தபடியே பகுதி நேரமாகவும் சம்பாதிப்பவர்கள்
அதிகரித்துள்ளனர். இது தவிர, இல்லத்தரசியாக இருந்தோ, பகுதி நேரப் பணியாகவோ இணையம் வாயிலாக ஆசிரியராக பணியாற்றி கணிசமாகச்
சம்பாதிப்பவர்கள் நகர் பகுதிகளில் அதிகரித்திருக்கிறார்கள். அரசு மற்றும் தனியார்
துறையில் மக்கள் தொடர்புத் துறை பணிகள், கொள்கை விளக்கங்கள்,
பிரசாரங்கள், பிரசுரங்களை உருவாக்குவது
போன்றவற்றிலும் கணிசமான வேலை வாய்ப்புகள் உண்டு.
இது
மட்டுமின்றி, தமிழ், படிப்பவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பெருமளவு வெற்றி பெறுகிறார்கள்
என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தங்களது மனதுக்குப் பிடித்த கல்வியைத்
தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல சாதனையாளராக உருவெடுக்க முடியும். அரசுப் போட்டித்
தேர்வுகள் எழுதுவதால் உயர் பொறுப்புகளுக்கும் செல்ல முடியும்.
இதுவரை நாம் உரையாடியவைகளின் அடிப்படையிலான
சாரங்களைப் பார்க்கலாம்..
·
நமது தாய்மொழியான தமிழின் சிறப்புகளை
அறியவும்,
அதை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் தமிழ் இலக்கிய படிப்புக்கள்
உதவுகின்றன. தமிழில் இளங்கலை (பி.ஏ.) முதல் முனைவர் (பிஎச்.டி.) பட்டம் வரை
பயிலலாம். உடன் கல்வியியல் பட்டமும் படிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள்
காத்திருக்கின்றன. ஆசிரியர் பணிக்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
·
தமிழ் படிப்பவர்களுக்கு தமிழாசிரியர், பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கும் என்பதெல்லாம் பழைய காலம். எண்ணற்ற
மாற்று வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அதற்கு தேவையானதெல்லாம்
பரந்துபட்ட அறிவும், அதற்கான முயற்சியும்தான். அதாவது பல நிலைகளில்
தமிழ் படித்தால் சிறப்பான பணிகளைப் பெறலாம்.
·
கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கான
ஸ்லெட்,
நெட் தேர்வுகளில் தமிழ் ஆய்வு பயிலும் மாணவர்களுக்கு அவர்கள்
கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 12,000
வரை பல்கலைக்கழக மானியக் குழு ஊக்கத் தொகை தருகிறது.
·
அதேபோல, திருவாரூர்
மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் பட்டப்படிப்பில் சேருவோருக்கு என தனியாக
கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
·
தமிழ் இலக்கியம் படித்தால் இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் பொது அறிவு இரண்டையும் வளரத்துக் கொள்ள
வேண்டும். நாளிதழ்கள் படிக்க வேண்டும்.
இணையத்தமிழில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு என்றாலும் அதற்கான முயற்சிகளும்
தேவை. இலக்கியங்கள் படிப்பதுடன் நின்றுவிடாமல்
1) கணிணியில் தமிழ்
2) செல்போனில் தமிழ் செயலிகள் உருவாக்குதல்
3) தமிழில் விளம்பரம் வடிவமைத்தல்
4) புத்தகம், பதிப்பித்தல் துறையில் தவறு
திருத்தல், ப்ரூப் ரீடிங், போன்ற செயலாக்கப் பணிகளை ஊக்குவிக்கும் துறைகளில் கவனம் செலுத்தினால் நிச்சயம்
வேலைவாய்ப்பு அதிகம்.
தமிழ் மொழி மட்டும் படிப்பதால் வேலை
கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா, ஆங்கிலக் கல்வியும் வேண்டுமா என்பதே பலருக்கு பெரும் ஐயம். இன்று உலகளாவி
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், ஹூண்டாய் கார்களைத் தயாரிக்கும் தென்கொரிய நாடு
ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எந்த நிலையில்
இருந்தது, என்பதை சிந்தித்துப்பாருங்கள். தற்போது இதே
கொரிய நாட்டில் அனைவரும் கொரிய மொழியிலேயேதான் உயர்கல்வி
கற்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்கள் இந்த
அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளதற்கு அவர்கள்
தாய்மொழிக் கல்வியில் கற்றதன் மூலம் ஆழ்ந்த ஞானம் பெற்றதால்தான்
என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் எழுதப்படும் முக்கியமான பல அறிவியல் நூல்களை இவர்கள் கொரிய மொழிக்கு
மாற்றம் செய்கிறார்கள். பிரஞ்சுக்காரர்களைப்போல
மொழிப்பற்று மிகுந்த கொரியர்கள், பழம்பெருமை மட்டுமே பேசாமல்,
மொழியையும், தங்களையும், தங்கள் நாட்டையும் முன்னேற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதுபோல அங்கு வந்தாலும்,
அந்நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அவர்கள் தங்கள்
கொரிய மொழியை ஒருநாளும் புறக்கணிப்பதில்லை.
உழைப்புக்கும், சுறுசுறுப்புக்கும் பெயர்போன சப்பானியர்களும் இப்படித்தான்
மொழிப்பற்று கொள்கிறார்கள். எம்.என்.சி என்கிற பன்னாட்டு நிறுவனங்களில்
பணிபுரிய ஆங்கிலக்கல்வியே தேவை என்ற கருத்து இருந்தாலும் தமிழ்
மொழி படித்தவர்கள் அந்த வேலைக்கு தகுதியற்றவர்கள் அல்ல என்ற கருத்தும் உண்மைதானே. கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் அமெரிக்காவின் பிடியில் இருந்து அவர்களால்
முன்னேற்றம் கண்ட நாடு ஜப்பான் அல்லவா. ஆனால்
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் என்ன நடந்தது. அவர்கள் விழித்துக்
கொண்டார்கள். இன்று தங்கள் தாய் மொழியை
விட்டுவிட்டு ஆங்கிலத்தைத் தழுவவில்லை. இதனால் அவர்களுடைய சாதனைகளுக்கு எந்த குறையும் இல்லை.
தமிழில் பயின்றாலும் சரியான
பாதையைத் தேர்ந்தெடுத்து முயன்றால் நிச்சயம் முன்னுக்கு வரலாம்.
வெளிநாடுகளுக்குச் சென்றும் தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக்கொள்ளலாம். அதற்காக வேற்று மொழிகளைக் கற்க வேண்டியதில்லை
என்பதில்லை. எத்தனைக்கெத்தனை மொழிகள்
கற்கிறீர்களோ அத்தனைக்கத்தனை உங்களுடைய சிக்கல் அவிழ்க்கும் திறன் அதாவது [problem-sovling
skills] அதிகம் பெருகும் என்று ஆய்வாளர்கள் உறுதியளிக்கிறார்கள்.
தமிழ் இலக்கியம் மட்டுமே படிப்பதால்தான்
எல்லைகள் விரிவடைவதில் சிக்கல் ஏற்பட்டு வாய்ப்புகள் குறைகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.
இதற்கான சில மாற்று வழிகளையும் கல்வியாளர்கள் முன் வைக்கின்றனர். அவற்றுள் சிலவற்றை
பார்க்கலாம்.
தமிழ் மொழியை இலக்கணம், இலக்கியம் என்ற
வகையில் மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு தொழில்நுட்பத்துடன் தமிழை
இணைத்தால் மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகின்றன என்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, பிக் டேட்டா (BIG DATA) போன்ற ஒரு தொழில்நுட்பத்துடன் தமிழை உட்படுத்தினால் மிகப்பெரிய
வாய்ப்புகள் தமிழிலயே உள்ளனவாம். ஒரு பல்பொருள் அங்காடியின்
நிறுவனத் தரவுகளை முழுமையாக எடுத்து அவைகளை இந்த பிக்டேட்டா நுட்பத்துடன் இணைத்து அந்தத்
தரவுகளை மொத்தமாக அலசி ஆராய்ந்தால் அந்த பல்பொருள் அங்காடியில் எந்தெந்த பொருட்கள்
அதிகமாக விற்பனை ஆகியிருக்கின்றன என்பதைக் கண்டறியும் வகையில், அந்தப் பொருட்களின்
தயாரிப்பாளர்களுக்கு அவைகளை ஆதாரங்களுடன் நிறுவினால், அவர்களிடமிருந்து பல்வேறு சலுகைகள்
பெற்றுத்தர முடியும். இதை நுட்பமாக உணர்ந்து, இது போன்று எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு
பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இட்டால் உங்கள் வருவாய் எந்த அளவிற்கு உயரும் என்று
சொல்ல வேண்டியதில்லை.
அரசின் உதவியுடன் சில திட்டங்களை மேற்கொண்டு மாற்றங்களைக் கொண்டுவர முயலலாம்.
பயன்பாட்டுத் தமிழ் என்கிற "அப்ளைட் தமிழ்" போன்ற படிப்பை
உருவாக்கி, "கணிணி+ தமிழ், வணிகம்+
தமிழ், பதிப்பகம்+ தமிழ்" போன்ற வாழ்வியலுக்குத்
தேவையான விருப்பப் பாடத்திட்டங்களை
உருவாக்கி பயிற்சி அளிக்கலாம். விளம்பரம், தகவல் தொடர்பு போன்ற வணிக மொழிகளை தமிழில், சுவையாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படுத்தும்
முறையை ஆய்ந்தறிந்து பயிற்சி அளிக்கலாம்.
கல்லூரியிலேயே வணிகத்துறையும், தமிழ்த்துறையும் இணைந்து இதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதும் சிறந்த பயனுள்ள திட்டமாக இருக்கும். தமிழ் அறிஞர்களும், கல்வியாளர்களும், கணினித் துறை வல்லுநர்களும்
இணைந்து குழு அமைத்து அதற்கான ஆய்வுகளையும், திட்டமிடலையும் மேற்கொண்டு அவைகளை பெரிய
நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுத்தலாம்.
தமிழை படிப்பவர்கள் அதோடு
நின்றுவிடாமல் மேற்கொண்டு நிரலாக்கம் (Programming)
தொடர்பான படிப்புகளையும் படிப்பதால் தமிழ்-கணினி, தமிழ்-செல்பேசி
தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கும்
பயனுள்ள வகையில் அமையும். இன்று இணையமும், கைபேசியும் இல்லாமல் வாழ்க்கையே இல்லை
என்றாகிவிட்டது. பல இடங்களில் உள்ள கணினிகளைச் செயற்கைக்கோள் மூலம்
இணைப்பதே இணையம் என்ற இண்டர்நெட். தமிழ்
வளர்ச்சிக்கும் இந்த கணினி, இணையத்
தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் இன்று பெரிதும் பயன்படுகின்றன.
ஆசிய அளவில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழுக்கே அதிகமான இணைய அமைப்புகள்
உள்ளன. தமிழில் சுமார் 2,000 இணைய அமைப்புகளும் ஒரு கோடி
பக்கங்களும் உள்ளன.
இதனைத் தமிழில் படிப்பதற்காக அமுதம், லதா, பாமினி, மயிலை, பூபாளம்,
முரசு ஆகிய மென்பொருள்கள் இணையம் மூலமாகக் கிடைக்கின்றன. இணையம் மூலமாகவே தமிழர், தமிழ் பண்பாடு, தமிழர் வரலாறு தொடர்பான பல்வேறு
தகவல்கள், கடல் கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன்
கடத்தப்படுகிறது. இந்த வாய்ப்புதான் இன்றைய முக்கியமான
வேலை வாய்ப்பாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும், பல தமிழ் மென்பொருள்கள்
உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளன. இணையம் மூலம்,
மின்னூலாக சேமிக்கப்பட்டுள்ள சங்க கால இலக்கியங்கள் மட்டுமல்லாமல் தற்கால புதுமைப் படைப்புகள் வரை பலப்பல அரிய நூல்களைக் கண்டடைய முடிகிறது. இதற்கான திட்டப்
பணிகளையும் அதற்கான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு முன்னெடுப்பதன் மூலமும் வருமானம்
பெறலாம்.
இணைய வளர்ச்சியால் தமிழ்க் கல்வியை எளிமைப்படுத்தி
வழங்கும் வகையில் பல இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன.
சொந்தமாக ஒரு இணையதளத்தையோ அல்லது blogger,
wordpress போன்ற இலவச வலைப்பதிவு சேவைகளைப் பயன்படுத்தியோ உங்கள்
அறிவாற்றலையும், தனித்திறமைகளையும் உலகறியச்
செய்வதன் மூலமும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
விளம்பரங்களாலும் வருமானம் பெறலாம்.
ஃபைவர் (Fiver) , அப்வொர்க் (Upwork) போன்ற
சுயாதீன வேலைவாய்ப்புத் தளங்கள் (Freelancing websites) மூலமாகவும் பல தமிழ் மொழி சார்ந்த பணிகள் பெறலாம். இது போன்ற இணையதளங்களின் மூலமாக மொழிபெயர்ப்பு
பணிகள் பெறவும் வாய்ப்புகள் உள்ளன. மொழிப்புலமை உள்ளவர்கள் அதற்கான
முயற்சியையும் தங்கள் வலைப்பூ மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் முயன்று நல்ல
வருமானம் பெறலாம்.
Freelancer -
Hire & Find Jobs என்ற தளத்தில்
ஒரு கணக்கை தொடங்கி வைத்தால், தமிழில் புத்தகம், கட்டுரைகள், வேறு படைப்புகள் எழுத தேவை இருப்பவர்கள் அவர்களைத் தொடர்பு கொள்வர். 1000 முதல் 1500 வார்தைகள் கொண்ட ஒரு கட்டுரைக்கு $
5 முதல் $ 10 வரை கிடைக்கும். வீட்டில் இருந்து வேலை செய்யவும் பல இணையதளங்கள்
உள்ளன. கூகுள் மூலம் அவைகளைக் கண்டறிந்து தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களுக்கு ஒரு பக்கம் தட்டச்சு செய்ய 100 ரூபாய்
கிடைக்கும்.
இந்தியாவில் ஃப்ரீலான்ஸர்கள் (Freelancer) ஆண்டிற்கு ரூ. 60 லட்சம் வரை சம்பாதிப்பதாகக் கூறுகிறார்கள். இதற்கு
இன்றைய இணையதள வளர்ச்சியே உறுதுணையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்கள்
மூலமாகவும் வருமானம் ஈட்டலாம்.
உங்கள் வலைத்தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்றால் உங்கள் வருமானம்
பலமடங்காக இருக்கும் என்கிறார்கள். வலைத்தளத்தில் பாடல்கள்,
காணொலிச் செய்திகள், காணொலிகள், இணைய விளையாட்டுகள், ஆண்ட்ராய்டு
அப்ளிகேஷன் போன்ற கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் இணைய தளத்தை
அதாவது (Blogger or Website) உருவாக்க வேண்டும். அதில்
பதிவிறக்கம் செய்ய வரும் பார்வையாளர்கள் பதிவிறக்க பொத்தானை அழுத்தும் போது
விளம்பரம் வரும் எனவே இது மூலமாக நல்ல வருமானம் பெற முடியும். உங்களுக்கு வருகின்ற
பார்வையாளர்களை பொறுத்து உங்களின் தினசரி வருமானம் நிர்ணயிக்கபடும். அதேபோல
இன்று YouTube சேனல்
ஆரம்பிப்பது கூட ஒரு இணையவழி தொழில்தான். இப்படி எண்ணற்ற வாய்ப்புகள் கடல்போல்
விரிந்திருக்கின்றன. பொறுமையுடன் அவைகளைக் கண்டடைவதுதான் என்று நம்முன் இருக்கும் சவால்.
உழைப்பின்றி உயர்வு ஏது. எதற்கும் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.
வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள் என்கிறார் அப்துல் கலாம்.
No comments:
Post a Comment