Thursday, November 11, 2021

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் மீயடுப்பு மீதிலே

 

 


 

பல்வேறு நேரங்களில் சில வாய்ப்புகள் எழுப்பும் ஓசை நம் மனதின் ஓரங்களில் முடங்கிக் கிடக்கும் நாம் அறிந்திராத சில உணர்வுகளைத் தட்டி எழுப்பிவிடும். மீயடுப்பு மீதிலே எனும் மகாகவியின் அந்த வகையைச் சேர்ந்த இந்த படைப்பும் நம்மை ஒரு புது உலகிற்கு இட்டுச் செல்லக்கூடியது.

 

பொதுவாகவே படைப்பாளிகள், குறிப்பாக கவிஞர்கள் மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு தங்கள் இயல்பிலிருந்து விலகி இருப்பவர்கள் என்ற கருத்தே பரவலாக உள்ளது. பலருக்கு அத்தகைய  மிகை உணர்ச்சிகளே அவர்களை நல்ல படைப்பாளிகளாகவும் அடையாளம் காட்டி அவர்களைத் தொடர்ந்து இயங்கவும் செய்கின்றன. பலர் இந்த  மிகை உணர்ச்சிகளிலிருந்தே தாங்கள் படைப்பூக்க சக்தியைப் பெறுவதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இத்தகைய அடிப்படைக் கூறுகளின் கட்டுப்பாட்டிற்குள் சிக்காமல், தமக்கென ஒரு தனி பாணியை அமைத்துக்கொண்டு அரை நூற்றாண்டுகளையும் கடந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையுலகில் மகுடம் சூடி வலம் வருபவர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.  மனித நேயமிக்க பொதுவுடமைக் கருத்துகளைத் தம் கவிதைகளில்  தாராளமாகக் கையாளும் தமிழன்பன் ஐயா அவர்கள், பாரதிதாசனையும் பாப்லோ நெருடாவையும் இரு கண்களாகப் போற்றுவர். நெருடாவின் மார்க்சியத்தையும், பாரதிதாசனின் தமிழியக்கத்தையும் ஒருசேர பின்பற்றி வருபவர் என்றாலும் இவர்தம் படைப்புகளின் எல்லைகள் இதற்குள் மட்டும் குறுகி விடக்கூடியது அல்ல என்பதும் தெளிவு. அதற்கு இம்மகாகவியின் படைப்புகளின் ஒவ்வொரு தலைப்புகளுமே ஆதாரம். அந்த வகையில் மீயடுப்பு மீதிலே எனும் இந்நூலின் தலைப்பே நம் கற்பனைச் சிறகை வெகு தொலைவிற்கு இட்டுச் செல்லக்கூடியது. போகிற போக்கில் எளிய வகையில் ஆழ்ந்த தத்துவங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அற்புதமானதொரு தொகுப்பு இது என்றால் அது மிகையில்லை. நாகரிகம் வெகுதொலைவிற்கு முன்னேறி வந்துள்ள இந்த 21ம் நூற்றாண்டில்,

மீயடுப்பு எனும் பதத்தின் பொருள் இன்றைய இளைய தலைமுறையினரில் எவ்வளவு பேருக்குத் தெரியும் என்பதை ஒரு பட்டி மன்றமாகவே நடத்தலாம். இன்றும்  கிராமங்களில்  விறகு வைத்து எரிக்கும் மண் அடுப்பு புழக்கத்தில் உள்ளது என்றாலும் அதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதும் உண்மை. மண் அடுப்பில் ஒரே பாத்­தி­ரம் வைக்­கும் அடுப்பு, இரண்டு பாத்­தி­ரங்­கள் வைக்­கும் அடுப்பு உண்டு. இரு பாத்­தி­ரங்­கள் வைக்­கும் அடுப்­பில், ஒரு பகு­தி­யில் விறகு நுழைக்கும் பகுதி இருக்­கும். ஒரு புறத்­தில் இருந்து மற்­றொரு அடுப்­புக்கு தீச் சுடர் செல்ல வழி இருக்­கும். மேற்­ப­கு­தி­யில் பாத்­தி­ரம் நிலை­யாக நிற்க, மூன்று குமிழ்­கள் இருக்­கும். இரட்டை அடுப்­புக்கு சில பகு­தி­க­ளில் கொடியடுப்பு என்று பெயர் உண்டு. இந்தத் தொகுப்பின் தலைப்பு மீயடுப்பு என்று ஏன் வைத்திருப்பார் என்பது அதிலுள்ள கவிதைகள் குறித்து அறிந்தால்தான் உணர முடியும். இம்மாகவி முற்றும் துறந்த முனிவரோ அனைத்தும் உணர்ந்த சித்தரோ என்று எண்ணத் தோன்ற வைக்கும் படைப்பு இது.

 

இறைவன் இருக்கிறானா இருந்தால் அவன் எங்கே இருக்கிறான், இந்த வினா எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழலில் எழத்தான் செய்கின்றது என்றாலும் இறை மறுப்பு கொள்கை கொண்ட நம் மகாகவிக்கும் இந்த ஐயம் தோன்றியிருப்பது ஆச்சரியம்தான்..  இதோ …

1.   எத்தனை மறுத்தும்

ஏன்கடவுள் தடுக்க வில்லை?

எத்தனை தொழுதும் 

எதிரிலேன் தோன்றவில்லை?

புத்தன் மனத்திலும்

பூக்காக் கடவுள்தான்

நித்தம் பணிவதால்

நேர்ப்படல் சாத்தியமோ?

நினைத்துப் பார்மனமே!

 

இன்றைய, தீநுண்மி பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மனம் நொந்து தமது வேதனையை வெளிப்படுத்துபவரின் எண்ணத்தில் ஒருவேளை கடவுள் என்ற ஒருவன் இருந்து மக்கள் முன் தோன்றி அவர்தம் துன்பங்களைத் துடைத்து விடமாட்டாரோ என்ற ஏக்கமே கோபமாக மாறி புத்தன் மனத்திலும் பூக்காத கடவுள் நீ நித்தம் பூசை  செய்வதால் மட்டும் நேரில் வந்து விடுவாரா என்ன என்று ஒரு குழந்தை மன நிலையில் மருகி நிற்பதைக் காண முடிகின்றது.

 

2.   அடுத்து ஒரு கவிதையில்,

ஏது நிகழ்வில்லை

எனினும் விளைவுகள் ஏற்படுமோ

தீது நலமெனப் பேதம் புரிந்திடுமோ?

யாதும் சமமென ஞானம்பிறந்திடுமோ?

மோதும் தர்க்க

முரண்கள் முடிந்திடுமோ?

மோனப் பரவெளிச்

சிறகு முளைத்திடுமோ?

வானம் அளப்பேனோ? என்கிறார்.

 

இங்கு நன்றும் தீதும் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் வாய்க்கப் பெற்ற  கவிச்சித்தரைக் காண்கிறோம். வாத விவாதங்களின் மோதல்கள் விலகி வானம் அளக்கும் மோனப் பரவெளிச் சிறகு முளைக்கும் இச்சை வாய்க்கப்பெற்ற இக்கவிஞர் பெருமானின் வரம் நமக்கும் வாய்க்கும் நாள் எந்நாளோ எனும் ஏக்கம் இதை வாசிக்கும் நமக்கும் தோன்றத்தானே செய்கிறது?

 

ஏனோ இந்த இடத்தில் Walt Witman இன் – song of myself எனும் கவிதையின் ஒரு துளியை நினைவுகூர்ந்து நேசிக்கவும் செய்தது.

 

I am the poet of the Body and I am the poet of the Soul,

The pleasures of heaven are with me and the pains of hell are with me,

The first I graft and increase upon myself, the latter I translate into a new tongue. என்பார்.

 

அடுத்து வரும் இந்த கவிதையில் எத்துணை தத்துவார்த்தமான சிந்தைகள் வெளிப்படுகிறது பாருங்கள் ..

 

3.   தெருக்கள் இருக்கும்

தெருக்களில் மனிதர் இருப்பர்

இருண்ட மனிதரால்

தெருக்கள் மருண்டிருக்கும்

எரியும் விளக்குகள்

இதயமும் அணைந்திருக்கும்

புரியா மனத்துடன்

பகலும் இணைந்திருக்கும்

வெளிச்சம் மறைந்திருக்கும்

விளங்கா மனத்துடனே

தெருக்கள் இருக்க வேண்டிய இடத்தில் தெருக்களும், மனிதர்கள் இருக்க வேண்டிய மனிதர்களும் இருக்கிறார்கள்தான். விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் சாலையிலும் விளங்காத இருண்ட மனத்துடன் அலையும் மனிதர்களால் தெருக்களே மருண்டிருக்கும் அவலத்தை அழகுற காட்சிப்படுத்தும் அற்புதம்தான் இந்தக் கவிதை.

 

அடுத்து மெய்மையின் தேடலில் தவிக்கும் உள்ளம் கொண்ட  இக்கவிஞரை அதே தெரு எங்ஙனம் வருத்துகிறது பாருங்கள் ..

 

4.   மெய்ம்மை மேவியே

வாழுந் தெருவில் வாழ்வேனா?

பொய்களின் ஊர்வலம்

பொழுதெலாம் நடந்ததால்

நைந்த பாதைகளில்

நான்கிடந்து தவிப்பேனா?

உய்வகை இழந்தென்னை

உதறியே எறிவேனா?

செய்வகை தேடுகிறேன்

 

பொய் கெட்டு மெய் ஆனார் என்கிறது திருவாசகம்.

மெய் என்ற சொல்லுக்கு உடம்பு, உண்மை என்ற இரு பொருள்கள் உள்ளன. ஐம்புலன்களாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் இந்த உடல் மாயத் தோற்றமல்ல, மெய் என்ற உடம்பு உண்மை தான். ஆனால் அந்த உடலின் வாழ்வு நிரந்தரமல்லவே. இன்றிருப்பவர் நாளை இருப்பார் என்ற உறுதி இல்லையே. நிலையற்ற அந்த உடல் வாழும் உலகில்தான் அழிவற்ற நம் ஆன்மா வாழ்கிறது. மகாகவி பாரதியோ,

 

தேடிச் சோறு நிதம் தின்று கொடுங்கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதரைப்போல் நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று கூச்சலிடுவான். மெய்யல்லாத இந்த  உடலை மெய்யெனக் கருதி இதைப் பேணுவதேயே வாழ்வின் முக்கிய இலக்காகக் கொள்கிறோம். உடம்பினுக்குள்ளே உறுபொருள் ஒன்று உண்டு என்பதை அறிந்தவர் வெகு சிலரே. பொய்மையே பேசிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையன் என்று தம்மையே சாடிக்கொள்வார் மாணிக்கவாசகப் பெருமான். நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன். யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் என்பார். மெய்யே, உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று மகிழ்வதைப் போன்று உய்வகை இழக்காமல் செய்வகை தேடுகின்றேன் என்கிறார் நம் மகாகவி இங்கு. இதோ ..

 

5.   மெய்யொடு பழகினேன்

பொய்யொடும் பழகினேன் அவ்விதமே

பொய்யெனக்குப் பிடித்துப்

போனதால் மெய்மேலே

நெய்த பிழைகளை

நிறுவினேன் சரியென்றே

மெய்மனம் திரியவில்லை

மெலிந்து மெய் சாகவில்லை

உய்வகை பொய்க்கிலையோ?

 

மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயற்பட்டாலொழிய வரப்போகும் ஆபத்திலிருந்து ஒருவர் தம்மைக் காத்துக்கொள்ள முடியாது என்பதே திருவாசக நெறி நமக்குக் காட்டும் பாதை.

நெய்த பிழைகளை

நிறுவினேன் சரியென்றே

மெய்மனம் திரியவில்லை

மெலிந்து மெய் சாகவில்லை, பொய்யான இந்த மெய்க்கு அதாவது நிரந்தரமில்லாத இந்த மெய்யான மேனிக்கு ஏது நிரந்தரமாக வாழும் வழி என்பவரின் மனவோட்டம் ஒரு சித்த நிலையில் நிலை பெறுகிறது.

 

6.   என்னைத் திறந்திட

எந்தப் பொழுது வருமோ?

ஐந்துநுண்சாவிகள்

உண்டென அறிந்ததுண்டு

இன்பம் திறப்பதை

எவரொளித்து வைத்தார்?

துன்பம் திறப்பதைத்

தொடர்ந்து ஆள்வதார்?

சாவிகளால் உடைவேனா? என்கிறார்.

 

மனம் திறக்கும் பொழுதுகளுக்கு ஏங்கித் தவிக்கும் மகாகவியின் மனவோட்டம் ஞானம் தேடும் உன்னதம். ஐம்புலன்களை கட்டுக்குள் அடைத்து வைத்து பேரின்ப நிலையை எய்துவதற்கு எந்தத் தடையும் வந்து விடக்கூடாது, எச்சாவியும் எந்தவொரு புலனின் கட்டுப்பாட்டையும் உடைத்தெறிந்து விடக்கூடாது என்ற மன உறுதி பேணுகிறார்.

 

An Autumn Day by Lee Si-young – இந்த கொரிய கவிதைதான் உடனே என் நினைவிற்கு வந்தது.

 

A dragonfly sat on the end of a persimmon branch
and dozed off all day.
Even with wind, it did not shake;
even with a cold rain smacking the branch,
it did not move over.
When I quietly approached it,
I was startled to see,
right there, it had arrived in Nirvana.

 

ஆனால் அடுத்தொரு பாடலிலும் இதன் தாக்கம் இருக்கக் காண முடிகிறது,

7.   எந்த விளக்கெரியும்

என்மனம் இருண்டு கிடக்கையில்?

மந்தை நினைவுகளை

மனத்தின் மதில்களுள்

எந்த விளக்கொளி

இங்குவா என்றழைக்கும்?

சந்தையில் தொலைந்தவன்நான்

சபைவிளக் காவேனா? என்ற வினா எழுப்பி நம்மையும் பரிதவிக்கச் செய்கிறார்.

 

அடுத்தொரு கவிதையில் வார்த்தைகளின் வண்ணங்கள் களிநடம் புரிவதை இயல்பாகக் காட்சிப்படுத்துகிறார்.

8.   கட்டுரை செய்தவன் அதாவது கட்டுப்பாடான உரை செய்தவன்

கண்களை மூடி விட்டான்.

கட்டுக் குலைந்ததால் – அந்தக் கட்டுப்பாடு குலைந்த காரணத்தால்,

சிதறிய வார்த்தைகள்

பட்டுப் படாரெனப்

பாதையில் வெடித்ததனால்

தொட்ட துயரொடு

தோழர்கள் துடித்தனர்

வீதியிலே!

என்று ஒரு சிறிய போராட்டக் காட்சியையே அரங்கேற்றுகிறார்.

 

அடுத்தொரு கவிதையில்,

9.   ஏதென்சு ஞானிக்கு

நானே இளையவன்என்றிருந்தேன்

வாத வல்லமை 

பெற்றிருந்தேன்

மோதிய பேர்களை 

முட்டியே சாய்த்திருந்தேன்

ஓதியே உணராத

சாவென்னைத் தூசியாய்

ஊதித் தள்ளியதே!

ஏதென்சு ஞானி சாக்ரடிசுக்கு இளையவன் என்று தம்மை வெளிப்படுத்திக் கொள்பவரின் ஞானம் முற்றும் சாவில் தூசியாய் பறந்து போனதாகச் சொல்கிறார் .. ஒரு வரலாற்று சம்பவமும் நினைவூட்டுகிறது இந்த வரிகள் ..

 சாக்ரடிசுக்கு அகவை முதிர்ந்த போது, “என்னை அறிவாளி என்று அழைக்காதீர்கள்” என்று ஏதென்சு நகர மக்களை கேட்டு கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்; நான் இளைஞனாக இருந்த போது எனக்கு எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் விவரங்கள் பல தெரியத் தெரிய எனக்கு தெரிந்தது கொஞ்சமே என்றும் இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியவை பல உள்ளன என்பதை முதுமையில் தான் புரிந்து கொண்டேன், என்றார்.

ஆம், அதன்பின் ஏதென்சு நகர மக்கள் அவரை ஞானி என்று அழைக்கத் தொடங்கினார்கள். எல்லாம் தெரிந்ததாக சாக்ரடிசு சொன்ன போது அவரை ஏசியவர்கள் அவர் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று சொன்ன பிறகு ஞானி என்று அழைத்தார்களாம்.. அதையும் இங்கு நினைவு கூரச்செய்கிறது.

 

அடுத்து,

 

10.                வெற்றியின் சாவிகள்

விலைக்குக் கிடைப்பதில்லை

நெற்றி வியர்வைகள்

நேரிய உழைப்புகள்

முற்றும் வினைத்திட்பம்

மூளும் துவளாமை

பற்றி எரிகையில்

வெற்றி பறித்திடலாம்

வேண்டாமே தாயத்து!

 

தாயத்தும், மந்திர தந்திரமும் நமக்கு வெற்றியைத் தருவதில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் விழ, வினைத்திட்பத்துடன் உறுதியாகப் பாடுபட்டால் மட்டுமே வெற்றிக் கனியைப் பறித்திட முடியும் என்று மூட நம்பிக்கைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்.

 

நீரின் குடும்பத்தில்

நீக்கப் பட்டு விட்டேன்

விக்கலா காப்பாற்றும் என்னை?

தாகமா மீட்டெடுக்கும் என்னை?

தக்கவர் சூழ்ந்திடத்

தீவாய்த் தழைப்பேனா?

அக்கம் பக்கத்துநீர்

அன்பில் மிதப்பேனா?

யாரிதைச் சொல்வீர்கள்!

 

மனித நேயப் பண்புகளின் ஏதோ தடைகள், உயிர் நீர் இன்றி விக்கல் வாட்டும் பொழுதுகளின் அறச்சீற்றமாக, கவிஞரின் உள்ளார்ந்த ஆதங்கமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. உலக உயிர்களிடத்தில் பாரபட்சமற்ற அன்பு காட்டும் ஆன்ம நேய வள்ளலுக்கு அக்கம் பக்கத்து அன்பிற்கு பஞ்சமா வந்து விடப்போகிறது. விக்கல் தீர்க்கும் உயிர் நீரும் பள்ளம் நோக்கி ஓடி வரத்தானேச் செய்யும்.

பட்டினத்தடிகளின் இந்தப் பாடல் நினைவிற்கு வந்தது.

 

ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப் பானும் ஒருவன்உண்டே தில்லை அம்பலத்தே!


பாப்லோ நெருடாவைப் போல் எளிமையான பாடு பொருள்களை எளிய சொற்களால்  கவியாக வடிக்கும் வல்லமை பெற்றுள்ளவர் இக்கவிஞர் என்றாலும், மீயடுப்பு மீதிலே எனும் இக்கவிதைத் தொகுப்பு, தத்துபித்துவம் போன்று சற்றே வேறுபட்டு இருப்பதாகவேத் தோன்றுகிறது. பெரும்பாலான  கவிஞர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் தொய்வு ஏற்பட்டு எழுத்தை குறைத்துக் கொள்வதைக் காண்கிறோம். வாசிப்பின்மையாலும், மூப்பின் காரணமாகவோ ஒரு சலிப்பும் தேக்கமும் ஏற்படும் நிலை ஏற்படுவது இயல்புதான். ஆனால் நம் மகாகவி அவர்கள் இவையனைத்தும் கடந்ததொரு அதிசயப் பிறவி என்பதே ஆச்சர்யமான உண்மை. அன்றாட உலக நடப்புகளை தொடர்ந்து வாசிப்பதையும், மனிதர்களையும், சமூகத்தையும் உள்ளார்ந்து நேசிப்பதையும்ம்முடைய கொள்கையாகவே வைத்திருக்கும் இவர் அன்றாடப் பிரச்சனைகளை அவ்வப்போது எடுத்தாளும் வல்லமை பெற்றவர். அந்த வகையில் சொந்த நலனை விட்டொழித்து, மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயா போன்று ஊருக்கு உழைக்கும் அந்த ஒரு சிலரே வரலாறுகளையும் உருவாக்குகிறார்கள். பெரும்பாலான ஆளுமைகள் தங்களை உருவாக்க உதவியவர்களை, தன்னலமின்றி ஊருக்கு உழைத்தவர்களை  உண்மையாகக் குறித்து வைப்பதில்லை எனும் பரவலானக் கருத்தை உடைத்தெறிந்து சமூக நலனிற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்துணை ஆளுமைகளையும் தேடிப்பிடித்து கவி மழையால் பாராட்டி மகிழ்பவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

நம் மகாகவியின், சமீபத்திய, என் மனம் கவர்ந்த இந்த மீயடுப்புக் கவிதையுடன் முடித்துக்கொள்ளலாம் .

தாயடுப்பு

விறகிடத்

தணல் சுரக்கும்

வேளையில்

வீயடுப்பும் பற்றுமே!

 

வெப்பமங்கும்

தொற்றுமே!

 

சேயடுப்புத்தூங்குமோ

சீவனுள்ள நெருப்பினால்

போயெடுத்துப்பாரடா

பொங்குமந்தச் சோற்றினைப்

போற்றியிசை பாடடா!

எத்துணை அற்புதமான அறிவியல் சார்ந்த புனைவு இது பாருங்கள்.

தொப்புள் கொடி உறவு என்பதை இங்கு சற்று பொருத்திப் பாருங்கள் .. குழந்தை வயிற்றில் இருக்கும் வரை தாயின் மூலமாக உயிரைக் காப்பதற்கும், உடலை வளர்ப்பதற்கும் உணவு கிடைக்கிறது. ஆனால் குழந்தை வெளியில் வந்த பின்பு தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பதாகத்தானே வாழ்க்கை இருக்கிறது.

அடுப்பு நெருப்பால் சூடு வருகிறது, இந்தச் சூட்டில் சமையல் எப்படி நடக்கிறது?

சமையல் என்பதும் வேதியியல்தானே. வெவ்வேறு பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு, கலந்து வெப்பமேற்றும்போது அவை பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அதன் உருவம், நிறம், மணம், சுவை என்று அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுகின்றன. இதைத் தான் சமையல் என்று சொல்கிறோம். இப்படித்தான் தத்துவம் நிறைந்த இது போன்ற கவிதைகளின் வாசிப்பும். ஆம், போகிற போக்கில் ஒரு நாளில் வாசித்து விட்டு அதன் ஆழ்பொருளைத் தேடிக் கண்டடையும் வாய்ப்பு குறைவே.. வாசித்து வாசித்து உள்ளத்தில் தேக்கி வைத்து, அதை அசை போட்டு அசைபோட்டு அதன் ஆழம் கண்டுணர வேண்டிய படைப்புகள் அத்தனையும் ..

ஆக, நம் மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயாவும் ஒரு சித்தரோ அன்றி புத்தரோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா … இன்னும் இன்னும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய படைப்புகள் இவை என்றாலும், என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில் நான் புரிந்து கொண்டது இம்மட்டே ..  நீங்கள் இன்னும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடுமானால் உங்களுக்கு இன்னும் பல விளக்கங்கள் வெளிச்சமிடலாம்.

 

 

 

 

No comments:

Post a Comment