Thursday, November 11, 2021

கண்ணதாசனும் சித்தர்களும்!

 

 


 

பவள சங்கரி

 

உலகறிந்த உன்னத கவியரசர் கண்ணதாசன். தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவர்த்தியாய் அமர்ந்துகொண்டு வாத பிரதிவாதங்கள் அனைத்தையும் தமக்கே சாதகமாக்கிக்கொண்டு கற்பனை உலகிலேயே வாழுபவர்களே கவியரசர்கள்! இவர்களுக்குச் சற்றும் சளைத்தவரல்லர் நம் கவியரசர் கண்ணதாசன்! ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், ஆன்மீக நூல்கள் உட்பட 232 நூல்களை எழுதியுள்ளர் கவிஞர் கண்ணதாசன்.  சங்க இலக்கிங்களின் செழுமை, வாழ்வியல் தத்துவங்கள், அனுபவங்கள், சமூகம், அரசியல் என பல்வேறு தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படைப்புகளை பாமரனுக்கும் விளங்கும் வண்ணம் எளிமையான மொழியில் வழங்கியவர் கவியரசு கண்ணதாசன். இவருடைய 'சேரமான் காதலி'  எனும் புதினம் 1980ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்ற புதினம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் இந்த கவியரசர் முக்காலமும் உணரத் துடிக்கும் அந்த சித்தர்களின் இராச்சியத்திற்குள் எங்ஙனம் நுழையக்கூடும் என்பதுதான் நம் அனைவரின் மனதிலும் எழக்கூடிய இயல்பான ஒரு ஐயம். காரணம், சித்தர்களின் உலகம் என்பது ஒரு தனிப்பட்ட உலகம். நம் பாரத நாட்டின் பெருமைக்குரிய அடையாளச் சின்னங்கள் அவர்கள். 3000 ஆண்டுகளாக திருமூலர் தொடங்கி எத்தனையோ சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்து சரித்திரம் படைத்திருக்கிறார்கள். மரணமில்லாத பெருவாழ்வு உடையவர்கள் இன்றும் எங்கோ எந்த உருவிலோ  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் பலரின் நம்பிக்கை. ஆனால் இரசனைகளின் பிடியில் சிக்குண்டு ஏதோ ஒரு மயக்கத்தில் கட்டுண்டுக் கிடப்பவர்கள் என்ற இலக்கணத்திற்குப் புறம்பாக இந்த கண்ணதாசனுக்கு மட்டும் அந்த முப்பரிமான வாழ்வியல் முறைமைகள் எங்ஙனம் சாத்தியமானது என்பது ஆகச்சிறந்த அறிஞர்களின் சபை ஆய்வுகள் நடத்தி கண்டுபிடிக்க வேண்டிய விடயம். சாமான்யர்கள் எளிதாக நுழைய முடியாத அந்த உலகிற்குள் நுழைந்து ஆதியோடு அந்தமாக அள்ளிப் பருக யத்தனிக்கும் இன்னொரு சித்தராகக் காட்சியளிக்கும் இந்த கண்ணதாசன், தத்துவத்தின் சித்துக்களை நயம்படப்பாடி மக்களின் செவிக்கும், சிந்தனைக்கும் ஊக்கத்தை அளித்தவர். பட்டினத்தார் பத்திரகிரியார் போன்றோரின் வரலாற்றை எழுத முனைந்த வகையில் அவர்களுடைய தத்துவங்களை உள்வாங்கிய வகையில் அவற்றின் பிரதிபலிப்பு கண்ணதாசன் எழுதிய பாடல்களில் வெளிப்பட்டது. ஆனால் தத்துவ ஞானிகள் கூறியவற்றை எளிமையாக்கி பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் திரைப்படப் பாடல்களில் புகுத்தினார் பாருங்கள் அங்குதான் மக்கள் மனதில் நிரந்தரமாக சிம்மாசனமிட்டு அமரும் வாய்ப்பு பெறுகிறார்.

சங்க இலக்கியம், திருக்குறள், தேவாரம், கம்ப ராமாயணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம், சித்தர் இலக்கியம் முதலான பழைய இலக்கியங்களின் கருத்துக்களைப் பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிமைப்படுத்திக் கூறும் கலையிலும் கைதேர்ந்தவராக விளங்கியுள்ளார் கண்ணதாசன்.

வேறு நாட்டில் பிறந்திருந்தால் இந்த வாழ்வியல் சிந்தனையாளன் நோபல் பரிசை எளிதாகத் தட்டிச் சென்றிருப்பான். ஆனால் நம் நாட்டில் அப்படியான வாய்ப்புகளின் போராட்டத்தில் வெல்பவர் குறைவுதானே .. சரி தலைப்பிற்கு வருவோம் ..

 

மனித உடல் நிலையில்லாதது என்றும், அது எந்த நேரத்திலும் அழியக்கூடியது என்றும் கூறுவர். இந்த நிலையாமைத் தத்துவத்தைத்தான் இந்து மதமும், சித்தர் பாடல்களும் வலியுறுத்துகின்றன. இதற்கு நம் கண்ணதாச சித்தரும் விதிவிலக்கா என்ன?

அழுகுணிச் சித்தர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா .. 

வேதாந்தம், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளவர் அழகுணிச் சித்தர். இவர் இலக்கின்றி எங்கெல்லாமோ சுற்றி அலைந்து கொண்டிருப்பவர். எவரிடமும் பேசவும் மாட்டார். கேட்பதை செவிமடுக்கவும் செய்யார். அழகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கப் பெற்ற  இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில்  வல்லவர். அவர் கண்கள் மட்டும் அழுது கொண்டே இருக்குமாம். இதனாலேயே இச்சித்தருக்கு அழுகண் சித்தர் என்று பெயர் காலப்போக்கில் அழுகுணிச் சித்தர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.    இந்தச் சித்தர்தான்  ஊரைப் பார்த்து, உலகையும் பார்த்து, தன்னையேப் பார்த்தும்  இப்படி அழுதார்.


     “பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து   
   மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்  
    மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்   
   பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா - பாழாய் முடியாதோ.

 

பையூர் என்பது அன்னையின் கருப்பை. பாவ, புண்ணியங்கள் நிறைந்த இந்த மண்ணை பாழூர் எனும் சித்தர் மெய்யூர் எனும் இறைவனின் மெய்மையூருக்குச் செல்வதற்கு வேதாந்த வீடு அறியவில்லையே என் கண்ணம்மா என்று இறைவனை விளிக்கிறார். இப்போது நம் கவியரசர் கண்ணதாசன் பாடல் ஒன்று நினைவிற்கு வரவேண்டுமே..

 ஆம், அழுகுணிச் சித்தர் கோடு போட்டால் நம் கவியரசர் நெடுஞ்சாலையே போட்டு உலாவச் செய்கிறார் பாருங்கள் …
கவிஞர் இந்தப் பாடலில் 19 முறை  ஊர்களைக் குறிப்பிடுகிறார்.  ஆனால் இதெல்லாம் ஊர்களின் பெயர்களா என்றால் இல்லை .. உடலூர், உறவூர், கருவூர், மண்ணூர், கண்ணூர், கையூர், காலூர், காளையூர், வேலூர், விழியூர், பாலூர், காதலூர், காட்டூர், கன்னியூர், கடலூர், பள்ளத்தூர், மேட்டூர், கீழூர், மேலூர் என்றெல்லாம் குறிப்பிடுவதை உணர்வோடு உள்வாங்கிக் கேளுங்கள்.. நீங்களும் நம் கவியரசர் போல அந்த சித்தர் உலகினுள் நுழையக்கூடும் .. 

 

எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா! 


 திரைப்படம்: காட்டு ரோஜா 1963 இல் வெளிவந்த  இந்தப் பாடலைப் பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், இசை: கே.வி. மகாதேவன்.

 

2. கவியரசர் கண்ணதாசனுக்கு பட்டினத்தடிகளின் தாக்கம் பெருமளவில் அவர்தம் உள்ளத்து உணர்வுகளோடு ஒன்றிப்போய் உள்ளதை அவருடைய பல பாடல்களின் வாயிலாகக் காணமுடிகின்றது.  அர்த்தமுள்ள இந்து மதம் 5-ம் பாகத்தில் 'ஞானம் பிறந்த கதை' என்னும் தலைப்பில் பட்டினத்தாரின் வாழ்க்கையை நம் கவியரசர் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளதே இதற்கு ஆதாரம். 

 

விட்டுவிடப் போகுதுயிர்! விட்டஉடனே உடலைச்

சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்அட்டியின்றி

எந்நேர மும்சிவனை ஏற்றுங்கள்; போற்றுங்கள்;

சொன்னேன் அதுவே சுகம்

என்பார் பட்டினத்தார். நிலையாமை என்னும் தத்துவம் இந்து மதத்தில் நிலைத்த ஒன்று. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என இம்மூன்றும் வாழ்வில் நிலையில்லாதவை என்பர் ஆன்றோர். பட்டினத்தடிகள் மேலும் கூறுவதைக் கேட்போம்,  

“ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஓட்டமும் ஒரு நாள் ஓயும்போது, கூடுகிற கூட்டம் தான் சொல்லும் நீ யாரென்பதை .. 

 

“காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே”

 

மனையாளும் மக்களும் வாழ்வும்
தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயானம்
மட்டே வழிக் கேது துணை

     

“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே,

விடி அன்பொழுக மெத்திய மாந்தரும்

வீதி மட்டே, விம்மி விம்மி

இரு கைத்தல மேல் வைத்தாலும்

மைந்தரும் சுடுகாடும் மட்டே

பற்றி தொடரும் இரு தினை

புண்ணியமும் பாவமுமே”

 

இப்படிப் போகும் பட்டினத்தாரின் தத்துவங்கள்.

அதாவது, “உலகியல் பந்தங்கள் அனைத்தும் நிலையற்றவை. ஒருவனின் இறுதிப் பயணத்தின்போது மனைவி, மக்கள், உற்றார், உறவினர், என எவரும் உடன் வரமாட்டார்கள். பொன், பொருள், சொத்து, சுகம் என எதுவும் உடன் வரப்போவதில்லை. ஆனால் ஒருவர் செய்த பாவ புண்ணியம் மட்டுமே உடன் வரும்” என்பது பொருள்.

 

இப்போது எளிமையாக நமக்குப் புரியும்படியான நம் கவியரசரின் பாடல் ஒன்று நினைவுக்கு வரவேண்டுமே. ஆம். அதேதான்..

படம் பாதகாணிக்கை – எம் எஸ் விசுவநாதன் இசையில் டி எம் சௌந்தர்ராஜன் அவர்கள் 1962 ஆம் ஆண்டில் பாடிய பாடல்!

 

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
 வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?”

 

3. “ஆசையே அத்தனைக்கும் காரணம், ஆசையை அறுத்துவிடு என்றார் புத்தர். “ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்பார் திருமூலர்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே”

என்கிறது பன்னிரு திருமுறை திருநாவுக்கரசர் தேவாரம்.

எல்லாவற்றையும் இழந்த ஒருவன் மீண்டும் இறைவனிடம், இழந்தவற்றையெல்லாம் கொடு என்றுதானே மன்றாடிக் கேட்பான்? ஆனால் இன்னும் இன்னும் நன்மை செய்து துன்பத்தை வாங்கும் உள்ளத்தைக் கொடு என்று கண்ணனிடம் கேட்கிறார் கவியரசர். அதற்கான விடையையும் அடுத்துவரும் சரணத்தில் இப்படி அளிக்கிறார்.

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

உள்ளத்தில் உள்ள ஒளியே உலகம். அதுவே கடவுள். அதுவே எல்லாமும். அதனை உணர்ந்துகொண்ட நொடியில் துன்பங்கள் அனைத்தும் தானாய் விலகும்... என்று சித்தர் தத்துவ நெறியில் நின்று பாடலின் முடிவில் நம் துன்பங்களையும் துடைத்தெறிகின்றன கவியரசரின் கரங்கள்.

மனிதன் செய்யும் தவறுகளுக்கெல்லாம் ஆசையே காரணம் எனும்

வள்ளலாரும் இப்படி சொல்கிறார்,

பாட்டுவித்தால் பாடுகின்றேன்

பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்

குழைகின்றேன் குறித்த ஊணை

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்

உறங்குகின்றேன் உறங்கா தென்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்

சிறியேனால் ஆவ தென்னே’ என்கிறது திருவருட்பா.

இப்போது தெரிந்திருக்குமே கவியரசரின் எந்தப் பாடலை குறிப்பிடுகிறோம் என்று .. அதேதான் .. 

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா

ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா

அவன்தான் மனிதன் எனும் படத்தில் எம்.எஸ்.விசுவநாதன் அவர்களின் இசையமைப்பில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய பாடல் இது.

 

 

4. சிவவாக்கியர் என்றொரு சித்தர் அனைவராலும் அறியப்பட்டவர். சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் சாரமாக்கி அளித்துள்ளர். இவருடைய பாக்களில் ஒரு விதமான உற்சாகத் துள்ளல் ஓசை நயமும், ஞானக் கருத்துக்களும்,  வாழ்வியல் தத்துவ வினாக்களும் இணைந்திருக்கும். இவருடைய பாடலின் சில வரிகளைச் சொல்கிறேன். அதை நம் கவியரசர் எப்படி எங்கு கையாண்டிருக்கிறார் என்று தெரிகிறதா பாருங்கள்.

 

 

“நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை

நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ

அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்”

 

மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;

எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;

கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-

நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடா

 

என்பவர் சிவவாக்கியர்.

இந்தப் பாடலின் முதல் வரியே சித்தர்களின் அடிப்படைத் தத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும். இப்போது புரிந்திருக்கும் அல்லவா. ஆம், அதே பாடல்தான்,

 

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

 

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்

மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

எனும் வரிகள், ‘எல்லாம் அவன் செயல்’ எனும் சித்தர்களின் தத்துவங்களின் சாரமாக உள்ளவை.

 

நெஞ்சில் ஒரு ஆலயம் எனும் 1961 இல் வெளிவந்த திரைப்படத்தில் எம்.எஸ்.விசுவநாதன் அவர்களின் இசையில் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய பாடல் இது. கேட்டுப் பாருங்களேன், உள்ளுணர்வின் பல்வேறு வாசல்கள் திறக்கும்.

 

 

5. பாம்பாட்டிச் சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். பாம்புகளைக் கையாளும் வல்லமை பெற்றவர் அவர் என்பதால் அப்
பெயர் பெற்றார். யோகநெறியில் குண்டலினியைப் பாம்பு என்ற குறியீட்டால் குறிப்பிடுவதால், இவர் குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதாலும் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.

மனம் என்னும் பாம்பை அடக்கி ஆளவேண்டும் என்ற கருத்தில் இவர் பல அழகான பாடல்களை இயற்றியுள்ளார். தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோல் மனத்துக்குள் இருக்கும் பாம்புக்குப் பல அறிவுரைகளைச் சொல்வதாக அவரது பாடல்கள் அமைந்துள்ளன.

 

இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்தச் சூளை
அரைக்காசுக் காகாதென்று ஆடுபாம்பே!’
என்பது அவரது அழகிய கவிதைகளில் ஒன்று.

 

“அறுபத்து நாலுகலை யாவுமறிந்தோம்

அதற்குமேலொரு கலையானதறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமில்லா மனமுடையோம்

மன்னனே ஆசானென்றாடு பாம்பே”.

 

அடுத்து சிவப்பிரகாச சுவாமிகளின் இன்னுமொரு பாடல்,

மெலியோர் வலிய வரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தாம் மருவில் – பலிஏர்
கடவுள் அவிசடைமேல் கட்செவி அஞ்சாதே
படர்நிறைப் புள்அரசைப் பார்த்து!

(கட்செவி – பாம்பு  புள் அரசு – கருடன்)

நன்னெறி என்ற நீதி நூலில் சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி  எனும் நீதி நூலில் மேற்கண்ட இந்த பாடல் உள்ளது. பொதுவாக பாம்புகள் கருடனுக்குப் பயப்படும். ஆனால் சிவபெருமானின் சடாமுடியிலே இருக்கின்ற பாம்பு  சிவபெருமானின் அருகில் இருக்கும் தைரியத்தில் பறவைகளுக்கு அரசனான கருடனைப் பார்த்துப் ஒரு போதும் பயப்படாது என்றார் அவர். இப்போது தெரிந்திருக்குமே எந்த பாடல் என்று … 

சூரியகாந்தி படத்தில் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் டி.எம். சௌந்தர்ராஜன் பாடிய பாடல் ஒன்று. பாம்பின் மூலம் கருத்தைச் சொல்லிக் கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலை கண்ணதாசனே பாடுவதாகக் காட்சி அமைக்கப்பட்டது.  இதுதான் அந்த பாடல்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா..
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. 
கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. 

 


6. மீண்டும் பட்டினத்தார்..

மனமொன்று நினைக்க

வாய் ஒன்று சொல்ல

மெய் ஒன்று செய்ய

என் செய்வேன்

கச்சி ஏகம்பனே! –  என்பார் பட்டினத்தார் திருவேகம்பமாலையில் ..

ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம் நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு தோற்ற மயக்கமே. காட்சிப் பிழையே. மனஉணர்வுகளின் புறவெளிப்பாடே. பொய்மையின் பிம்பமே. பிரும்மத்தின் நிழலே. இனிய கனவுகளின் மாயத் தோற்றங்களே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டும் கண்கட்டு வித்தை. காரணம் அனைத்து செயல்களும் இறைவனின் திருவிளையாடலே. கர்மங்களால் எந்தப் பயனும் இல்லை.  'நான் யார்' என்ற ஆத்ம விசாரணை செய்யாமல் மெய்ப்பொருளை உணர முடியாது என்பதே ஆதிசங்கரரின் தத்துவம். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதாம்..  நம் கவியரசரின் தத்துவத்திற்கு வருவோம் ..

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற கவியரசரின் சொற்கள் எங்கு போய் முடிகிறதென்று பாருங்கள் .. எந்தப் பாடல் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் .. ஆம்.

சுமைதாங்கி எனும் திரைப்படத்தில் – 1962இல், விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் பி.பி. ஸ்ரீனிவாசன் பாடிய பாடல்

மயக்கமா .. கலக்கமா.. மனதிலே குழப்பமா…

வாழ்க்கையில் நடுக்கமா..

இப்போது கேட்டுப்பாருங்கள்.



7. வள்ளுவர்,

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள் – 247) என்பார்

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையிலே வாராமற் கா

என்றார் பட்டினத்தார்.

 இதையே “பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் என்கிறார் கவியரசர் கண்ணதாசன்!

 பத்தும் பசி வந்திடப் பறந்து போம் ,

கொடிது கொடிது வறுமை கொடிது! அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்றார் நம்  ஒளவைப் பிராட்டியார்!

 பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்

இளமையில் கொடுமையிந்த வறுமையம்மா என்றார் இந்தக் கவிச்சித்தர் கண்ணதாசன்.

ப்போது பாடலை எளிதாய்க் கண்டுபிடித்திருப்பீர்கள்.  சரஸ்வதி சபதம் படத்தில் வரும் தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா பாடல்தான் அது.  கே.வி மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடிய பாடல்.


 

8 கடுவெளிஎன்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளிச் சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அறிந்த பெரும்பாலானவர்கள் நன்கு அறிந்திருப்பர்.

 

“நல்ல வழிதனை நாடு - எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"

 

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

கிடைத்தற்கரிய ஒன்று இந்த மானிடப் பிறவி என்றார் அப்பர் சுவாமிகள்! உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்! நம் கவியரசரோ,

இருக்கும்   இடத்தை  விட்டு  இல்லாத  இடம்  தேடி

எங்கெங்கோ  அலைகின்றார்  ஞானத்தங்கமே !  – அவர்

ஏதுமறியாரடி    ஞானத்தங்கமே ! – என்கிறார்.

 

திருவருட்செல்வர் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் கேட்டுப் பாருங்கள் ..

 

 


9.  சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்றார் பட்டினத்தார். ஒவ்வொரு வினைக்கும் மறு வினை உண்டு என்பது உலக நியதி. நாம் செய்யும் வினை யாவும் ஊழ்வினை என்னும் பெயரிலும் விதி என்னும் பெயரிலும் நம்மை பின்தொடர்ந்து வருகின்றன. அதாவது நாம் செய்யும் வினைகள் பக்குவம் அடைந்ததும் உரிய காலத்தில் நம்மை வந்து அடையும் என்பதும் உலகநியதி. 

ஒரு சட்டிக்குள்ளே இருக்கும் ஒரு விளக்கு, அதன் சூட்டினால் சட்டி உடைகிறது, விளக்கும் அணைகிறது. இவ்வளவுதானே வாழ்க்கை இல்லையா. சித்தர் மனநிலையில் ஆழ்ந்து அனுபவித்த இந்த கவிஞருக்கு ஏற்கனவே சொன்னது போன்று அகப்பேய் சித்தர், கடுவெளிச் சித்தர், பட்டினத்தார் என அனைவரின் தாக்கங்களும் இப்பாடலில் வரிசைகட்டி நிற்பதைப் பாருங்கள்.

பந்த பாசம் எனும்  சேற்றினால் செய்த சட்டி சூடேறி கைநழுவி உடைவது போல் காமத்தால் சூடேறிய தேகம் கெடுகிறது. (சட்டி சுட்டதடா கை விட்டதடா. புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா.) உடைந்த ஓட்டைச் சட்டியில் தெருத்தெருவாய் அலைந்து  பிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும், ஒழுகிப்போன அந்த சுவையில்லாத சோற்றை நாய் கூட ஏற்காதே. காமப் பசியாலும், பழகிய ருசியாலும் காமமும், தாபமும், கோபமும் வெறுப்பும் கொண்டு சக்தியிழந்த வெற்று உடம்பால் என்னதான் பயன். உயிர் பொருள் எதுவோ அதுவே உயர் பொருள் என்பதே சத்தியம் என்பதே சித்தர்களின் தத்துவ நெறி.

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க
யானை வந்ததடா...
என்ற ஆழ்ந்த வரிகள் இந்த கண்ணதாசனை சித்தனுக்குச் சித்தனாக அடையாளப்படுத்துகிறது இல்லையா.. 

ஆகா அற்புதமான இந்த சித்தனின் பாடலைக் கேட்டுப்பாருங்கள்..  ஆலயமணி படத்தில் 1962 இல் விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் .

 

10. சித்தர் வழியில் சென்று வாழ்வில் ஏற்படும் தோல்விகளையும், துன்பங்களையும் நினைத்து வருந்தாமல் எதையும் எளிதில் எடுத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பவர்  உலக நிலையாமையை உணர்ந்து , நேரிய வாழ்க்கை நம்பிக்கை என்று வாழ்வியல் தத்துவங்கள் நமக்கு உணர்த்துகிறார் இக்கவிஞர்.

பட்டினத்தாரின் திருவேகம்பமாலை ,

“பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை

பிறந்துமண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோதில்லை

இடைநடுவிற்

குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று

கொடுக்கறியாது

இறக்குங்குலாமருக்கு

என்சொல்வேன் கச்சி ஏகம்பனே..” என்கிறது.

மேலும்

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே என்கிறது.

இவையனைத்திற்கும் மேலாக, இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்ட கவிஞர் இவராகத்தான் இருக்க முடியுமோ என்றுதான் தோன்றுகிறது. எத்துணை துணிவு வேண்டும் இதற்கு..  ஒரு முறை தானே, தன் நெருங்கிய உறவுகள், நட்புகள் என அனைவருக்கும் தான் இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்பிவிட்டு உட்கார்ந்திருக்கிறாராம்..

அவருடைய சுய இரங்கற்பாவின்  இறுதி பத்தி இப்படி முடியும்…

போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்

   என்றவன்வாய் புகன்ற தில்லை;

சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்

   என்றவன்வாய் சாற்ற வில்லை;

கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்

   படுத்தவனைக் குவித்துப் போட்டு

ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்

   அவன்பாட்டை எழுந்து பாடு!

 

தனக்கே ஒரு கவிஞன் இரங்கற்பா பாடிக்கொண்ட புதுமையைச் செய்தவர் கவியரசு கண்ணதாசன். ஆம் ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் உயர்ந்தது அன்றோ. அந்த வகையில் கவியரசர் கண்ணதாசன் ஒரு சித்தர் மன நிலையிலேயே சதாசர்வ காலமும் இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. 

அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” – தன்னைப் பற்றிய சுயசரிதையில் எழுதிய வரிகள் தான் இது!

 

இப்போது இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

 

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

படம் : கவலை இல்லாத மனிதன் - 1960
பாடல் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர் : சந்திரபாபு

 

 

11. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். என்கிறது வள்ளுவம்.

சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது பாருங்கள் ..

 

பசு என்று அழைக்கப்படும் உயிரானது பாசம் என்னும் கயிற்றால்  கட்டப்பட்டு அதாவது மும்மலங்களால் வழி நடத்தப்பட்டு  இறைவனை அடையமுடியாத நிலைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆசை எனும் மாயையை, உயிர் அளவிற்கு அதிகமாக விரும்புவதால் அடுத்தடுத்து வரும் பிறவிகளில் வெவ்வேறு வடிவங்களை பெற வேண்டியுள்ளது. ஆக, ஆசையே துன்பத்திற்கு காரணம் என்னும் புத்தரது கோட்பாட்டை இங்கு ஆராய்ந்தால் மனதால் செய்யக்கூடிய ஆசை, அழுக்காறு என்னும் இரு பாவங்களை தவிர்த்து வாழும் மனித இனம் இறைவனை எளிதில் அடையமுடியும். ஆனவம், கன்மம் போன்ற மலங்கள் ஆசை என்னும் குணத்திற்கு மாறானவை அல்ல. ஆசை அதிகரிக்கும்போது ஆனவமும், கன்மமும் நெறிபிழந்து மனித இனத்தை சிதைத்து விடுகின்றன. ஆசை இல்லாத உயிர்கள் இல்லை என்ற போதிலும் அளவிற்கு அதிகமான ஆசையே அழிவிற்கு காரணம்.

 

“அறுபத்து நாலுகலை யாவுமறிந்தோம்

அதற்குமேலொரு கலையானதறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமில்லா மனமுடையோம்

மன்னனே ஆசானென்றாடு பாம்பே”,  என்பவர் பாம்பாட்டிச் சித்தர்

 

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: திருச்சி லோகநாதன்
ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன்மேலே

இப்பாடலில் முதல் சரணத்தில் மனிதன் வாழ்வின் பருவ வயதையும்இரண்டாம் சரணத்தில் முதுமை வாழ்வையும் எளிதாக விளக்கி இருக்கிறார் பாருங்கள் கவிஞர்.

 

12. அகப்பேய் சித்தர் என்று ஒருவர் இருந்தார். அலைபாயும் மனத்தை, பேயாக உருவகம் செய்து பாடியதால் அவரை அகப்பேய்ச் சித்தர் என்றழைத்தனர்.  மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவர் இவர்.

அப்போது தன்னைப் பார்த்தே,

ஏ! என் அகமே!

ஆசையால் ஆடுகிறாய்;

ஆணவத்தால் ஆடுகிறாய் ;

பாசத்தால் ஆடுகிறாய் ;

வேஷத்தால் ஆடுகிறாய்

இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே !

அடங்கிக் கிடக்க மாட்டாயா?”

என்று குமுறுகிறார்.

    “நஞ்சுண்ண வேண்டாமே - அகப்பேய்
    நாயகன் தாள் பெறவே     
நெஞ்சம் அலையாதே - அகப்பேய்
    நீ ஒன்றும் சொல்லாதே

என்று பாடி, மனம் பேய் போன்று அலைவதைத் தடுத்து நிலைநிறுத்தி விடவேண்டும் என்கிறார். இந்த நுட்பமான கருத்துகளை ஆழ்ந்து உள்வாங்கிய நம் கவியரசர் என்ன பாடுகிறார் பாருங்கள் ..

(1963) தர்மம் தலை காக்கும் என்ற படத்தில் கே.வி.மகாதேவன் இசையில், டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய

 

ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா

என்ற பாடலை கேட்டுப் பாருங்கள்.

 

-      13. மனதை மயக்கும் பாடல்கள், தத்துவப்பாடல், காதல் பாடல், பாடியவர் இந்த பட்டினத்தாரை எப்படி ஆழ்ந்து உள்வாங்கியிருக்கிறார் பாருங்கள் ..

 

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே  (திருவேகம்பமாலை)

 

மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலை கீழாய்த் தான் நடந்து கெட்டேனே;

 

வழக்கத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே

 

கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்துக் கெட்டேனே.

 

பட்டப் பகலில் வெளிமயக்கே செயும் பாவையர் மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் றைவா கச்சி ஏகம்பனே


உருகி எலும்பு கருகி அடங்கி ஓர் பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

 பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கிரங்கிப்
பரவையாருடைய மாற்ற ஏவலாளாகி இரவெலாம்
உழன்ற இறைவனே ஏக நாயகனே

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

இப்படி நீளும் பட்டினத்தாரின் பாடல்வரிகள் .. 

கண்கெட்ட பின்பு சூரிய வணக்கம் செய்யும் கவிஞன் இவன்… இதோ விளக்கம் இந்த கண்ணதாசச் சித்தன் தானே கொடுக்கிறான் பாருங்கள் ஒரு தனிக்கவிதையில் ..

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்;
ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன். 


இப்போது பாடலையும் கேட்டுவிடுங்கள் ..

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!

1962     இல் வெளிவந்த வானம்பாடி படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடல்.

 

14. தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே

வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதையென்ன…

 

“எப்படியெல்லாம் வாழ்க்கூடாதோ

அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே

இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய

யோக்கியதை எனக்கு உண்டு” என்று துணிவாக பதிவு செய்தவர் இந்தக் கவியரசர்.

அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு 

வெண்பாவில்,

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

வீடு என்றால் விடுபடுதல். அதாவது இந்த உலகப் பற்றை விட்டுவிட்டால்  உயிர் பேரின்ப வீட்டை அடைகிறது என்கிறார். இதனாலேயேவீட்டைவீடுபேறு எனக் குறித்தனர் அறவோர்

வீடு  என்பது துன்ப நீக்கம் என்றும், பேறு என்பது இன்ப ஆக்கம் என்றும் சொல்கிறது  சித்தாந்த சைவம்.

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன்செயல் என்று உணரப்பெற்றேன்
இந்த ஊனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ
இங்ஙனம் வந்து மூண்டதுவே [பட்டினத்தார் ]


“கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி” என்ற பழமொழியின் வாயிலாக இந்த பாடலில் கவியரசர் சொல்ல வருவது என்ன?

 

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

திருக்குறள்

 

கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறியதைப் பார்ப்போம்,

உயிர்களைக் கொன்ற பாவிகளை அவர்களின் இறப்பிற்குப் பிறகு எம தூதர்கள், நரகத்திற்குக் கொண்டு போய் கிடத்துவார்கள். அங்கு அந்தப் பாவிகளின் மாமிசத்தை அறுத்து, அவர்கள் வாயில் ஊட்டி, மாமிசத்தை உண்டவனே! உன் மாமிசத்தை நீயே சாப்பிடு’ என்று சாப்பிட வைப்பார்கள். உயிர்களை வதைத்துத் தின்ற பாவமானது, தன் சதைகளை தின்றால்தான் தீரும். இதுதான் அந்தப் பழமொழியின் உட்பொருள். அதனால் தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்று கூறி வைத்தார்கள்

 

"பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்,

இறக்கும்பொழுது கொடுபோவதில்லைஇடைநடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது"

அறம்பொருள்இன்பம்வீடு என்னும் அறவுரையைத் தகுதி வாய்ந்தவர்கட்கே 

உபதேசிக்கவேண்டும் என்பார் ஞானசம்பந்தர்திருமுதுகுன்றத் தேவாரத்தில் 

இதனைக் காணலாம்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழிச்

சழிந்த சென்னிச் சைவவேடந் தான் நினைந்து ஐம்புலனும்,

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

திருமூலரோ,

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய

சுகத்தைச்சொல் என்றால் சொல்லுமாறு எங்ஙனே?

என்கிறார்.

 உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள் 339)

 

வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக்
கேதாரமெ னீரே

ஏழாம் திருமுறை – சுந்தரர் தேவாரம்

 

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர்
    வஞ்ச மனத்தீரே
யாவ ராலு மிகழப் பட்டிங்
    கல்லலில் வீழாதே
மூவ ராயும் இருவ ராயும்
    முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி
    யென்ப தடைவோம்

 

காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி

ஓடே எடுத்தென்ன உள்ளன்பில்லாதவர் ஓங்குவிண்ணோர்

நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்

வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே.

-     பட்டினத்தார் பாடல், திருவிடைமருதூர்

 

 சந்ததமும் எனதுசெயல் நினதுசெயல் யானெனுந்
தன்மைநினை யன்றியில்லாத்
தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த்த
சமரச சுபாவமிதுவே
இந்தநிலை தெளியநான் நெக்குருகிவாடிய
இயற்கைதிரு வுளமறியுமே
இன்நிலையி லேசற் றிருக்கஎன் றால்மடமை
இதசத்ரு வாகவந்து
சிந்தைகுடி கொள்ளுதே மலமாயை கன்மந்
திரும்புமோ தொடுவழக்காய்ச்
சென்மம்வரு மோஎனவும் யோசிக்கு தேமனது
சிரத்தைஎனும் வாளும்உதவிப்
பந்தமற மெய்ஞ்ஞானதீரமும் தந்தெனைப்
பாதுகாத் தருள்செய்குவாய்
பார்க்குமிட மெங்குமொருநீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.

தாயுமானவர் சுவாமிகள்

 

கவியரசரின் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் சித்தர் தத்துங்கள் ஒளிசிந்தக் காணலாம். இந்தப் பாடல் எழுத முற்படும்போது இப்படத்தின் இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள்  கவிஞரிடம், இது ஒரு முழுமையான தத்துவப்பாடலாக அமைய வேண்டும். 18 சித்தர்களும் பட்டினத்தாரும் தந்த தத்துவங்களைக் கொட்டிக்கவிழ்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சித்தர்களின் தத்துவங்களில் திளைத்திருக்கும் கவிஞரின் சிந்தையில் உதித்த அற்புதமான பாடல் இது.

2003ஆம் ஆண்டு கண்ணதாசன் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் இந்தப்பாடல் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டபோது தனது சிறப்புரையில்  திரு.கே.ஜே.யேசுதாஸ் முன்னிலையில்,

காவிரிமைந்தன் சொன்னதுபோல்.. இந்தப்பாடலை ஒரு தத்துவப்பாடலாக தரவேண்டும் என்று கவிஞரிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் உண்மைதான்.. அதுசரி.. கண்ணதாசனைவிட இந்தச் சூழலுக்கு பாடல் எழுதத் தகுதி உடையவர் யார்” ன்றும் தன் உரையில் முத்திரை பதித்தார் அந்தப் பெருமகன்! என்கிறார் கவிஞர் காவிரிமைந்தன்,   நிறுவனர் – பொதுச்செயலாளர், கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் பம்மல்.

அந்தப் பாடல், அவள் ஒரு தொடர்கதை எனும் திரைப்படத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், 1974 ஆம் ஆண்டு,  கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் இது.


தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?”
என்ற பாடல்.

 

 

 

15.  ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி
சிரிக்கும் பச்சைக்கிளி
ஓடிவந்தான் மேடையிலே
ஆட்டம் ஆட
ஆட வந்த வேளையிலே
பாடவந்த என்னைமட்டும்
அழவிட்டு ஓடிவிட்டான்
கூட்டத்தோட

 

திரைப்படம் – ராஜபார்ட் ரங்கதுரை

வருடம் - 1973

இசை –  எம்.எஸ். விசுவநாதன்

பாடியவர் – டி.எம்.சௌந்தர்ராஜன்

 

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
          அடுத்துஊர்வது அஃது ஒப்பதுஇல் -"(குறள் -621)

 

"இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான் 
        துன்பம் உறுதல் இலன் -(குறள் -628)

 

புத்தரின் "மையப்பாதையும்"
இதைத்தான் உணர்த்துகின்றன .

 

என்செயல் ஆவது யாதொன்றும் இல்லை
இனித் தெய்வமே உன்செயல் என்று உணரப்பெற்றேன்
இந்த ஊனெடுத்த பின்செய்த தீவினை யாதொன்றும் இல்லை
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ
இங்ஙனம் வந்து மூண்டதுவே

 

அடுத்தவர்களின் அழுகை ஒலி கேட்டு
நீயே அழுவதாக எப்போது உணர்கிறாயோ,
அப்போது நீ ஞானியாகி விட்டாய்

பாம்பு, சட்டை கழற்றுவது போல், ஆன்மா இந்தக் கூண்டை ஒரு நாள் கழற்றி விடுகிறது.

[பட்டினத்தார் ]

 

"மரப்பாவை போலொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டி
திறக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே"
- பாம்பாட்டிச்சித்தர் -

 

மாதா உடல் சலித்தாள்;

வல்லினையேன் கால் சலித்தேன்
வேதாவுங் கைசலித்துவிட்டானே

நாதா இருப்பையூர் வாழ்சிவனே,
இன்னுமோ ரன்னை கருப்பையூர் வாராமற் கா!

 

கண்டங் கரியதாங் கண்மூன் றுடையதாம்

அண்டத்தைப் போல வழகியதாந் – தொண்டர்

உடலுருகத் தித்திக்கு மோங்குபுக ழொற்றிக்

கடலருகே நிற்குங் கரும்பு.

 

மூலம் அறியேன் முடியும் முடிவறியேன்

ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா!

 

பே.கரும்பு எந்த இடத்தில் இனிக்கிறதோ அந்த இடத்தில் உனக்கு முக்தி கிடைக்கும் என்பது பட்டினத்தடிகளுக்கு இறைவன் அளித்த வாக்கு. வாழ்வின் நிலையாமை குறித்து தெளிந்த ஞானம் பெற்றவரின் வாக்குகள்…

 

இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை நினையாதே பருத்த தொந்தி நமது என்று நாமிருக்க நாய்நரிகள் பேய் கழுகு தம்மது என்று தாம் இருக்கும் தாம்!

வாழ்கின்ற போது நெஞ்சமே நீ ஒருவருக்கும் தீமையை செய்யாதே!

தீங்கினை நினைக்காதே ! அடுத்தவனை கெடுத்து வாழாதே பிறரை சோகப் படுத்தி நீ சுகப்படாதே! அடுத்தவரை காயப்படுத்தி நீ களித்து இராதே!

மேல் புறத்தில் கசப்பு கீழ்ப்புறத்தில் இனிப்பு இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு என்ற கவியரசரின் தத்துவப் பாடல் வரிகளுக்கான பொருள் இப்போது விளங்கும் அல்லவா!
நமக்கும் பேய்க்கரும்பு இனிக்கிறது!

 

''மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற

எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்

கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்

ஐயா திருவை யாறா''

 

முடிவுரை:

 

பத்திரிகையாளர், அரசியல்வாதி, திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் என்ற பல அவதாரங்களை எடுத்தவர் என்றாலும் கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் சித்தர்கள் பாடல்கள் மட்டுமன்றி, தாயுமானவர், வள்ளலார் போன்றோர்,  கலிங்கத்துப் பரணி, குறுந்தொகை, நாலடியார்,  நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், திருக்குறள், திருவாசகம், தேவாரம், முத்தொள்ளாயிரம், குற்றாலக் குறவஞ்சி என்று பல்வேறு தமிழ் இலக்கிங்களின் தாக்கத்தினைக் காண முடியும்! பட்டினத்தார் பத்திரகிரியார் போன்றோரின் வரலாற்றை எழுதியதாலோ என்னவோ அவர்களுடைய தத்துவங்களின் பிரதிபலிப்பு கண்ணதாசனின் பெரும்பாலான தத்துவப் பாடல்களில் வெளிப்பட்டது. தத்துவ ஞானிகள் கூறிய செய்திகளை எளிமையாக்கி பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் திரைப்படப் பாடல்களில் புகுத்தியவர் கண்ணதாசன். ஐயாயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள் மட்டுமின்றி, தனிக்கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், இலக்கியத் திறனாய்வுகள், நாடகங்கள், சுயசரிதை என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களிலும் பகலவனாய் பரிமளித்தவர் கவியரசர்.

 

மகிழ்ச்சியோ, கோபமோ, வேதனையோ அல்லது அன்போ எதுவாகிலும் அதனை அபரிமிதமாகக் காட்டும் வல்லமை பெற்ற கவியரசர்கள் ஆச்சரியத்திற்குரியவர்கள்.  பக்தியும், காதலும், ஊடலும், உன்மத்தமும் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் அழகைக் கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர்க்க இயலாது! அந்த வகையில் நம் கவியரசரின் சில பாடல்கள் நம் உள்ளத்தை உருக்கிக் கொள்ளை கொண்டுவிடும் என்பதே சத்தியம். இது ஒருநாள் நிகழ்வு அல்ல என்பதே உச்சம். ஆம், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்கும்போது ஏற்பட்ட அதே அதிர்வு ஏற்படத்தான் செய்கிறது. இது எங்கனம் சில கவிஞர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது என்று சிந்திக்கும்போதுதான், சிலர் பிறவி ஞானம் பெற்று வருபவர்கள் என்ற கூத்தை ஒப்புக்கொள்ள வேண்டியவராகிறோம்.

 

கவிஞர் கண்ணதாசன், தன்னைத்தானே கொஞ்சமும் தயவு  தாட்சண்யமில்லாமல், ஆய்வு  செய்து  கொண்டு அவர் வெளியிட்ட சில  அறிக்கைகள் பலவுண்டு… அதில் சில…

 

நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்

நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்

 

மனிதர்களின் எல்லையற்ற கவலைகள், நோய்கள், தேடல்கள், தவிப்புகள் போன்ற அனைத்தையுமே சமநோக்கோடு பார்த்ததன் விளைவாகக்  கவிஞர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான சொற்களே இவை.

 

காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்

யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்

 

சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்

மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன

 

கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே

கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்

இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு

இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு

 

எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்

உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்  

கோடைநாளின்  சாலைவழிப் பயணத்தின் களைப்பான வேளையில் வழியில் தென்படும் படர்ந்த குளிர் நிழல்போன்ற இதமான வரிகள் இவை.

 

உலகில் தான் கண்ட எத்தனையோ விசயங்களின் மூலம்  தனக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி கவிஞர் சொல்வதைப் பாருங்களேன்…

 

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்”

 

 

கன்னித்தமிழுக்குக் காவியமண்டபம் அமைத்து

பண்ணிசையால் பூமாலையும் தொடுத்து

ஆன்மீகம், ஆனந்தம், காதல், தத்துவம், சோகம்,

சுகமென, அனைத்தும் அடித்தளமாய் அமைத்து

கவிச்சொல் வீச்சினால் இப்புவியனைத்தையும்

ஆளும் பெருங்கவி! ‘படைப்பதால் நானும் இறைவன்’

நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும்

எனக்கு மரணமில்லை” என்ற கவிச்செருக்கு

அவன் உடன்பிறப்பு! கவித்துளிகள் காலக்காற்றில்

கரைந்தொழியும் கற்பூரமாயிராமில்லை, எதிர்க்காற்றில்

ஏறிப்பறக்கும் காற்றாடியாய் காவியமானவன், கண்ணதாசன்!!

 

தம்மை மறந்து தம்மையே அதனுள் கரைத்து

தன்னூன் கலந்து உயிர் கலந்து பொருளுணர்ந்து

இசையோடு இயைந்து இனிமையும் கலந்து

கருத்துடன் கவியாய்ப் புனைந்து சிந்தையள்ளும்

வன்மையுடாயாய்! கன்னித் தமிழ்நாட்டின்

வளமையான கழனியில் விளைந்த வளமான

செங்கரும்பின் அடிச்சுவையவன்! தனிக்கனியவன்!!

தரணிபோற்றும் தங்கமகன்! மனம்தளராச் சிங்கமவன்!!! …. பவளா

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment