Thursday, November 11, 2021

வெளிச்ச தேவதை

 

 


கவிஞர் திரு பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வாசித்துள்ளேன். ‘அரிநெல்’ எனும் கவிதைத் தொகுப்பு, நறுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிநயம் படைத்த நவீன கவிதைகளின் தொகுப்பு. அடுத்து மனித நேயச் சிந்தையின் உயிர்ப்பாகத் தீட்டப்பெற்ற ‘அந்த நான் இல்லை நான்’ எனும் கவிதைத் தொகுப்பு.

 

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இரட்டைக்காப்பியம் என்று தலைப்பில் குறிப்பிட்டிருப்பது ஒரு எதிர்பார்ப்புடன் வாசிக்கத் தோன்றுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப் பெறுகின்றன.

 

‘‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

உரைசாலடிகள் அருள மதுரைக்

கூலவாணிகள் சாத்தன் கேட்டான்”

(சிலப்பதிகாரம், பதிகம். 87-88)

இளங்கோ பாட சாத்தனார் கேட்டார்’ என்ற பதிகச் செய்தி இதற்குக் காரணமாகலாம் என்பதோடு சிலப்பதிகாரம் முன்கதை; அதன் தொடர்ச்சியான பின்கதையாக அமைவது மணிமேகலை. துறவு பூண்ட மணிமேகலைக் காதையும் குறிப்பிடப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது.

 

 ‘விளக்கு எரிகிறது’ எனும் கிராமத்து வாய்மொழியை அழகாகக் காட்சிப்படுத்தும் ஆரம்ப வரிகள். விளக்கின்றி இருண்டு கிடக்கும் வறுமைக் காட்சியை வெப்பமாக வீசும் சுவாசத்தை, ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க சொற்கள்.

 வறுமையின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தும் அலங்கோலங்களை, நரக வாழ்க்கையின் அச்சுறுத்தல்களைக் காட்சிப்படுத்தும் சொல்லாடல்கள். எளிமையும், வலிமையுமான முத்துக்களை அழகு மாலையாகக் கோர்க்கும் வல்லமையை இயல்பாகப் பெற்றவர் இக்கவிஞர் என்பதை இவருடைய பல்வேறு படைப்புகள் ஏற்கனவே கட்டியங்கூறி நிற்பதை வாசித்து அறிந்த வகையில் இந்தப் படைப்பும் அந்த வரிசையில் முன்னணி இடத்தில் பொருந்தியிருப்பதைக் காண முடிகின்றது.

 

அடுத்த பத்தியில் அங்கமெல்லாம் பசுமைச்சேலை உடுத்தி வசீகரமாய் காட்சியளிக்கும் வயல்களை வர்ணிக்கும் அற்புதக் காட்சியமைப்புகள். பசையோடு குதூகலமாக வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தின் கடந்தகால நினைவோடைகள். கூட்டுக் குடும்பம் பிரிந்ததால் ஏற்பட்ட பின்விளைவுகள், நன்செயும், புன்செயும் புன்னகைத்து விடைபெற்றதும் திக்குத்தெரியாத பயணமாய் தொடரும் வாழ்க்கை என இயல்பான காட்சிகள்.

கால மாற்றங்களில், பருவ மாற்றங்களில் எந்த மாற்றமுமில்லாமல் இயற்கை ஓடிக்கொண்டிருந்தாலும், நெருப்பு பூக்காத அடுப்புகளும், நச்சுப் பாம்பாகத் தீண்டிப் போகும் இரவும், பகலும் என சாபமான, இருந்தும் இல்லாமையில் உழலும் இந்த வாழ்க்கை ஒரு சாபமாகிப் போனதை உணர்வுப் பெருக்கால் உயர்த்திப் பிடிக்கிறார் கவிஞர்.

கொஞ்சம் கொஞ்சமாய் மாறும் நிலையால் பஞ்சமும் விரைந்தோடி மனையிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை விதையும் தூவப்படுகிறது.

ஆடை அணிகலனும் சேர்ந்து பொன்னும் மணியும் ஒளிவீசும் ஆசையில் நாணயம் புரளத் தவிக்கும் மனம் முன்னேற முனைப்பு காட்டுவதும் இயற்கைதானே..

அடுத்த பத்தியில், வரும்வரை உழைத்து எதிர்காலத்தை புதிதாய் சமைப்பதற்கான வழியையும் அலசுகிறார். முனைப்பும், துடிப்பும் துணையாய் நின்றால் வீட்டு வேலையும் செய்யலாம், தாய், சேய், நாய் என அனைவரையும் பேணவும் மனமும் உண்டு, நல்ல உழைப்பும் உண்டு என்பவர் மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார். அச்சத்தை துச்சமென மதித்து முன்னேற முயன்றாலும் மனிதர்கள் தெய்வங்களாகவும், மனிதர்களாகவும், விலங்குகளாகவும் மெய்ப்பித்ததை விதியின் வழி என்கிறார். உழைப்பு எனும் வல்லமையில்லாத நல்லவரான அப்பாவினால் நிறைமாத கர்ப்பிணியாய் கடன் சுமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத கணவனே கண்கண்ட தெய்வமெனும் வெகுளியான அம்மா. அக்காவும், தங்கையும் படிக்கவேண்டி ஆர்வமிருந்தும் இடையில் இருப்பவள் வேலைக்குச் செல்ல நேர்ந்த அவலம். குடும்பத்திற்காக தியாகியான பாவப்பட்ட பிறவி. தாய் மீது பாசம் கொண்ட தாய்மாமன்களின் பரிவும் பெறமுடியாத தடையாக கௌரவம். இத்தகையச் சூழலில் இடர் களைய வீசும் மெல்லிய பூங்காற்றாக தோழமை காட்டி தங்களுக்காக கரைந்த அக்காவின் தோழி அன்புடன் அளித்த நகை அடகுக் கடையில் பணமாக மாறி, முகவருக்கு கொடுத்து பெருமூச்சு விட இன்னல் தீர்க்க கைகொடுத்தது. இரண்டு நாட்களில் சிங்கப்பூர் பயணம். உறவினர் வீட்டில் தங்கல், அங்கே சென்னை உறவுகள் வருகை என விரைவாக அடுத்தக் கட்டம் நோக்கி நகரும் வாழ்க்கை. விமான நிலையப் பிரம்மாண்டம், முன்பின் அறியாதவருக்கான காத்திருப்பு, புதிராய்த் தெரியும் முகங்கள் என தெளிவான காட்சிகள்.

 

முகவரின் பாராமுகமும், பார்த்தும் அசட்டையான போக்கும், அவன் பின்னால் ஓடும் துர்பாக்கியமும், துணைக்கு வந்த தம்பியையும் காணமுடியாமல் விலகி ஓடிவந்த இறுதி நிலை. அடுத்து நுழைவுச் சீட்டு, குடிநுழைவுச் சீட்டு என ஓடி ஓடி உடன் வந்த உடன்பிறப்பைப் பார்த்துக் கையாட்டவும் முடியாமல் இதயத்தில் கனத்தை சுமந்தவாரு பயணம். விமானப் பயணத்தின் வாடிக்கையான செயல்பாடுகளை ஆச்சரியமாகப் பார்க்கும் சீவனின் எண்ணவோட்டங்கள், மனித நேயம் செத்துவிடவில்லை என உதாரணமாக நிற்கும் பெரியவர், புதிய காட்சிகள், புதிய முகங்கள், புதிய வாழ்க்கைமுறை என விரியும் காட்சியில் அரண்டு நிற்கும் பேதை எனக் காட்சி விரிகிறது.

 

தன்னை அழைத்துச் செல்ல வரும் பெண்ணிடம் முதல் முறையாக தன் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொள்ளத் துடிக்கும் மதியரசி. ஆகா, ‘இரவின் நரை’ கவிதைத் தொகுப்பின் சிங்கப்பூர் அழகியல் வர்ணனைகள் காட்சியாக விரிய மகிழுந்தில் அமர்ந்தவாறு இரசித்துக் கொண்டு வந்துகொண்டிருக்கிறாள். தமிழர்களைக் கண்ட பூரிப்பில் மிதக்கும் பூவிழியாள். உடன் நம்மையும் சிங்கப்பூர் அழகுக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டி மகிழச் செய்கிறார்.

 

மருத்துவப் பரிசோதனையில் தன் உடல்நிலை குறித்து, குறையைக் குறித்து இடித்துப் பேசவும், அச்சப்படுத்தவும் செய்தவைகளில் ஆரம்பித்து அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்தவளின் அற்றைய நிலையையும் நன்றாகவே காட்சிப்படுத்துகிறார். அவர்கள் ஏன் அப்படி நடந்தார்கள் என்றும், அப்படி நடந்தவர்கள் யார் என்றும், அவளுடைய குறைதான் என்ன என்ற பலப்பல வினாவை சேர்த்துக்கொண்டே போகிறார்.

 

வீட்டு வேலையில் குறை சொல்லியே குதறி எடுக்கும் எசமானனின் நீச எண்ணமும் விளக்கம் பெற்றுள்ளது. புயலாய் வீசிய பெற்றோர்களுக்குத் தென்றலாய் வீசும் பிள்ளைகள்!  பாவம் ஊருக்குத் திரும்பிச் செல் என்ற முகவரின் ஆணைக்கு அடிபணிய மனமின்றி கடன் தீர்க்கத் தொடர்ந்து வேலை வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடும் மதியரசி நரகத்தைக் கண்டுவிட்ட மோசமான நிலையில்... அடித்து முகத்தை வீங்க வைத்த கொடுமையின் இறுதியில் முகவருக்குச் செய்தி போக திரும்பிப்போக எத்தனித்துவிட்டாள்.

ஆனால் அடுத்து வட இந்தியர் வீட்டுக்கு பணிக்குச் சென்றவளின் வாழ்க்கையில் சற்றே நிம்மதி கிடைத்திட 13 ஆண்டுகளாக காலம் கடந்து கொண்டிருக்கிறது.

மூன்றாவதாக சென்ற வீட்டில் ஒரு பாட்டியை கவனித்துக்கொள்ளும் பணியில் நிறைவு பெறுகிறாள். கடன் சுமையும் குறைய ஆரம்பிக்கும் கருணைக் காலம். இந்தப் பெண்ணின் தியாகம் பெற்றவர்களின் கடமையில் ஏற்றம், வீட்டில் தீப ஓளி மின்ன குடும்பமே குதூகலமாய் இருக்கும் நிலை ஏற்பட்டது. நரகத்தைப் பார்த்தவளுக்கு நந்தவனமாக மாறி 8 ஆண்டுகள் வாழவைத்தது. தன்னைப் பெற்றெடுக்காமலே தாயாக மாறிப்போனவளின் அன்பில் கரைந்து உருகி பிறந்த பயனை அடைகிறாள். அந்தத்தாய், ‘செத்துங்கொடுத்தான் சீதக்காதி’ என்பது போல இறந்த பின்னும் 5000 வெள்ளி பங்கீடு அளித்து தெய்வ நிலைக்கு உயர்ந்தவளின் பேரை விளக்கிச் சொன்ன விதம் இனிமை. நரகம் கண்ட மதியரசி சொர்கத்தில் வாழ்ந்து நிம்மதி அடைகிறாள். தம் குடும்பத்தின்மீது அவள் வைத்திருந்த அகக்கறை இல்லாத அக்கறை அவளை வெளிச்ச தேவதையாக்கியுள்ளதை அழகான சொற்களால் கவிமாலை தொடுத்துள்ளார் கவிஞர். பல்வேறு விதமான சூழலில், பல்வேறு வாழ்வியல் பின்னணியில் பிழைப்பிடம் நாடி வந்திருக்கும் பல்வேறு பணிப்பெண்களின் இலக்கணங்களும், முதலாளி வர்கமான பணக்காரர்களின் சில்லறைத்தனமான புத்திகளும், சுடத்தான் செய்கின்றன. கரையாத மனசுக்காரர்களோடுதான் கரைகாண வேண்டிய, முள் வேலியில் விழுந்த சேலையைப் போன்ற, பணிப்பெண்ணின் வாழ்க்கையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ள வசனக் கவிதை. ஒவ்வொருவர் வாழ்வும் அதிசயம் நிறைந்த இரகசியப்பேழை என்று சிந்திக்க வைக்கிறார். அந்த பேதைப் பெண்ணின் உடற்குறையால் தனிமரமாகி நிற்பதையும் நாசூக்காகச் சொல்லிச் செல்கிறார்.

குடும்பத்திற்காக மெழுகுவர்த்தியாகத் தம்மைத்தாமே உருக்கிக்கொண்டாலும், நிறைநிலவாக வாழும் மௌன விளக்கான, வெளிச்ச தேவதையான ஒரு பேதைப்பெண்ணின் பரிதாபமான சுயசரிதையே இந்த நவீன வசனக் கவிதை.

 

நம்பிக்கை நார் மட்டும்

நம் கையில் இருந்தால்

உதிர்ந்த பூக்களும்

ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்

கழுத்து மாலையாய்

தன்னைத்தானே கட்டிக்கொள்ளும்!

என்ற மு.மேத்தாவின் நம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளையும், கண்ணீர்ப் பூக்களையும் நினைவூட்டத் தவறவில்லை கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இந்த படைப்பு.

 

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...