Tuesday, July 14, 2020

முரண்பாடு




அன்னச்சத்திரம் ஆயிரமும் ஆளின்றி
அடுப்பும் தணலின்றி பூத்துக்கிடக்க
அங்கோர் ஏழையும் சோறின்றி
சோர்ந்து சுயநினைவின்றி கிடக்க
கருவாட்டு வாடை தேடியலையும்
திருட்டுப் பூனையும் பட்டினிதான்
வேலையற்ற பொழுது நீண்டுகிடந்தும்
சோலையற்ற சாலையாய் புழுங்கிக்கிடக்கும்
மனதை கொத்தித்தின்னும் புல்லுருவிகள்
சுகமான பொழுதுபோக்கின் வேண்டிய
எல்லாமிருந்தும் ஏதுமில்லா போக்குகள்
பூபாளமும் சுகராகமும் சேர்ந்திசைக்க
புதுப்புனலாய் இணையும் உடனிருந்தும்
அணியும் அணிகலனுமற்ற கீதமாய்
வாயில்கள் சாத்தப்பட்ட கோயில்களாய்
களையிழந்த இல்லங்கள் ஆயிரமாயிரம்
கார்கால இருளில் முடங்கிக்கிடக்கும்
முட்டுச்சந்தும் போர்காலச் சூழலை
முன்னிறுத்தி மூச்சுமுட்டச் செய்து
முடிச்சவிழ்க்கும் வழியறியாத வினாக்களின்
வேள்வியாய் வேதனையின் பல்லவியாய்
பாரெங்கும் பரிதவிக்கும் பாமரராய்
மக்களை மாக்கள் ஆளுங்காலமாய்
மூதின்மகளிரும் முக்காடிட்டு மூச்சடக்கும்
முரண்பட்ட வாழ்க்கைக் கோலம்
பாழ்பட்ட தொற்றின் நீசம்
பரிதவிக்கும் மனிதகுலம்!


மூதின் மகளிர்







வீரம், அஞ்சாமை, மனவுறுதி கொண்டாலும் இப்பெண்கள் போர்க்களம் நோக்கிச்சென்று போரிட்டவர்கள் அல்லர் என்கிறது புறநானூறு.

கெடுக சிந்தை; கடிதிவள் துணிவே
மூதின் மகளி ராதல் தகுமே;
மேநாளுற்ற செருவிற் கிவடன்னை,
யானை யெறிந்து களத்தொழிந் தனனே;
நெருநல் லுற்ற செருவிற் கிவள்கொழுநன்,
பெருநிறை விலங்கி யாண்டுப் பட்டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துஉடீஇப்
பாறுமயிற் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகனல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே
புறநானூறு, 279
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை
துறை: மூதின்முல்லை
போரின் முதல் நாளிலேயே பகைவரின் யானையைக்கொன்று தானும் இறந்தான் தந்தை, மறுநாளே கணவனும் குதிரைகளைக் கொன்று தானும் மாண்டு போகிறான். ஆயினும் மூன்றாம் போர்ப்பறை ஒலித்தவுடன் சற்றும் மனங்கலங்காது, தயக்கமின்றித் தன் ஒரே மகனையும் துணிந்து போர்க்களத்திற்கு அனுப்புகிறாளாம் அந்த மூதின் மகள்.