அன்னச்சத்திரம்
ஆயிரமும் ஆளின்றி
அடுப்பும்
தணலின்றி பூத்துக்கிடக்க
அங்கோர்
ஏழையும் சோறின்றி
சோர்ந்து
சுயநினைவின்றி கிடக்க
கருவாட்டு
வாடை தேடியலையும்
திருட்டுப்
பூனையும் பட்டினிதான்
வேலையற்ற
பொழுது நீண்டுகிடந்தும்
சோலையற்ற
சாலையாய் புழுங்கிக்கிடக்கும்
மனதை
கொத்தித்தின்னும் புல்லுருவிகள்
சுகமான
பொழுதுபோக்கின் வேண்டிய
எல்லாமிருந்தும்
ஏதுமில்லா போக்குகள்
பூபாளமும்
சுகராகமும் சேர்ந்திசைக்க
புதுப்புனலாய்
இணையும் உடனிருந்தும்
அணியும்
அணிகலனுமற்ற கீதமாய்
வாயில்கள்
சாத்தப்பட்ட கோயில்களாய்
களையிழந்த
இல்லங்கள் ஆயிரமாயிரம்
கார்கால
இருளில் முடங்கிக்கிடக்கும்
முட்டுச்சந்தும்
போர்காலச் சூழலை
முன்னிறுத்தி
மூச்சுமுட்டச் செய்து
முடிச்சவிழ்க்கும்
வழியறியாத வினாக்களின்
வேள்வியாய்
வேதனையின் பல்லவியாய்
பாரெங்கும்
பரிதவிக்கும் பாமரராய்
மக்களை
மாக்கள் ஆளுங்காலமாய்
மூதின்மகளிரும்
முக்காடிட்டு மூச்சடக்கும்
முரண்பட்ட
வாழ்க்கைக் கோலம்
பாழ்பட்ட
தொற்றின் நீசம்
பரிதவிக்கும்
மனிதகுலம்!
No comments:
Post a Comment