Friday, September 2, 2011

பசித்திரு! தனித்திரு! விழித்திரு!

இசையில் இனிமையும், இறைமையையும் ஒருங்கேக் கண்ட வள்ளல் பெருமான்!

இசை என்பது மனித வாழ்வில் உடன் பிறந்த ஒரு சங்கதியாகும். குழந்தை பிறந்தவுடன் முதன் முதல் கேட்கும் தாலாட்டுப் பாடலின் ஓசையே முதல் இசையாகும் அந்த ஆழ்ந்த இசை நம்மை இறை இன்பத்தை நோக்கிச் செலுத்தும் அன்றோ? அதற்கு நல்லதோர் சான்றாக நம் முன்னே நிற்கும் பெரியார்கள் தியாகராயரும், அருணகிரிநாதரும் மற்றும் வள்ளல் பெருமான் போன்றோரும் ஆவர்.

ஸ்ரீ தியாகராயரின் இசைக் கீர்த்தனைகளின் சக்தி நாம் அறிந்ததே. அவர்தம் கீர்த்தனைகளால் ஸ்ரீராமபிரானையே நம் கண் முன் நிறுத்துபவர். அடுத்து தம் இசையின் மூலம் இறைவனையே தாலாட்டும் வல்லமை பெற்ற அருணகிரியார்! அவர் பாடலை மனமுறுக பாட ஆரம்பித்தாலே அந்த முருகப் பெருமான் கண் முன்னே தோன்றியது போன்ற உணர்வையே ஏற்படுத்தக் கூடியதாகும்!

தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் …… தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் …… தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் …… குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் …… பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் …… கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் …… பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் …… கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் …… களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் …… பெருமாளே.

அன்புக் கடல் வள்ளல் பெருமானோ, இசையுடன், மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு நெறியையும் வகுத்தளித்தப் பாங்கு ஏழிசையினையும் உள்ளடக்கிய பக்திப்பரவச நிலையாகும்!

கீழ்காணும் பாடலின் மூலம் கந்தப்பெருமானை வள்ளலார், தனி மனித ஒழுக்க நெறியை வேண்டி இசைக்கும் பாங்கு இனிமை கூட்டுவதாகும்! இப்பாடலை இசைக்கும் போது மனித நேயமும் இறை பக்தியும் இயைந்து இன்பம் சேர்க்க வல்லதாகும்.

“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்றஉத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மைபேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்பிடியா திருக்க வேண்டும்

மருவுபெண் ணாசையை மறக்கவேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணிசண்முகத் தெய்வ மணியே!”


பிற உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணும் கருணை உள்ளம் கொண்டவர் வள்ளலார்.அது மட்டுமன்றி ஓருயிர் உள்ள பயிர்களின் மீது கூட அன்பு செலுத்தி ,வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாகக் குறிப்பிடுவார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான்

சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ!

இறையுணர்வுடன், மனித நேயமும் கூடிய இத்தகைய தாக்கம் வள்ளலார் தவிர மற்றும் வேறு ஆன்மீக ஞானிகளுக்கு இருந்ததா என்பது ஐயமே. “கல்லார்ர்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”.“அப்பனே, எனக்கு அமுதனே ஆனந்தனே, அகம்நெக அள்ளூறு தேன் ஒப்பனே” போன்ற பாடல்களின் மூலம் மிக எளிமையான இசையின் மூலம் இறை இன்பம் பெறவழி வகுத்துள்ளப் பாங்கு போற்றுதற்குரியதாகும்.

சுத்த சன்மார்க்க சங்கத்தின் வாயிலாக ஐயன் வள்ளலார் உபதேசித்த மூன்று இன்றியமையா மந்திரங்களே, பசித்திரு! தனித்திரு!விழித்திரு! என்பதாகும்.
பசித்திரு என்பதற்கான பொருள், பசியுடன் இரு என்பது அல்ல. அளவிற்கு அதிகமான உணவை விடுத்து, தேவையான அளவு மட்டுமே உண்டு, அதாவது அரை வயிறு மட்டுமே உண்டால் போதுமானது என்கிறார். இதையேதான் தற்கால மருத்துவரும் சொல்கின்றனர். இதனை வள்ளல் பெருமானார்:
“நான் பசித்த போதெல்லாம் தான் பசித்ததாகி

நல்லுணவு கொடுத்தென்னைச் செல்வம் உறவளர்த்தே

ஊன் பசித்த இளைபொன்றும் தோன்றாத வகையை

ஒள்ளியதென் அமுதெனக்கிங் குவந்தளித்த ஒளியே!”

என்றருளுகிறார்.
தனித்திரு என்பது ‘சும்மா இரு’, என்ற பொருள் கொண்டதாகும். புற இன்பங்களில் மயங்கி பொழுதைக் கழிக்காமல் ‘தனித்திருப்பதன்’ மூலம் ஆன்ம பலம் பெறலாம் என்பதனை:
இன்று வருமோ நாளை வருமோஅன்றி

மற்றொன்று வருமோஅறியேன் எம் கோவே

துன்றுமல வெம்மாயை அற்றுவெளிக்கு

வெளிமிடத்துசும்மா இருக்கும் சுகம்”.

சும்மா இருப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. எந்த உலக விசயத்திலும் மனம் செலுத்தாமல் இருப்பது என்பது மிக சிரமமான காரியம் என்றாலும், தனித்திரு என்பது, இறைவனுடன் இணைந்து, தியானத்தில் இருப்பது என்பதாகும். புறப்பற்றிலிருந்து கிடைக்கக் கூடிய இந்த தனிமையைத்தான், “தனித்திரு” என்னும் தாரக மந்திரமாகக் கூறுகிறார்.இதன் மூலம் ஒருவர் பெறுகின்ற பேராற்றல் அளப்பரியதாகும்.

அடுத்து வருவது “விழித்திரு” என்பதாகும். தூங்குவதை முற்றும் துறக்க வேண்டுமென்பது இதன் பொருளல்ல. அளவாகத் தூங்கி, வளமான விழிப்பு நிலையில் மனதையும் , அறிவையும் செம்மையாக வைத்துக் கொள்ளல் என்பதாகும்………ஆன்மீக ஞானிகள் தூக்கத்தை அறவே ஒழித்த மகான்களாயினும் அவர்கள் நூறாண்டுக் காலங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். ஆண்டவனின் பூரண அருளைப் பெறும் பொருட்டு, ஊன், உறக்கம் அனைத்தும் துறந்தவர்களாகவே இருந்துள்ளனர். வள்ள்ல் பெருமான் இதையே:

“தூங்குகநீ என்கிறாய் தூங்குவனோ எனதுதுரைவரும் ஓர்தருணத்தில்

தூக்கமுந்தான் வருமோஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால்என்னுடைத்

தூக்கமெலாம் நின்னுடையதாக்கிஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழிஎன்னிரு

கண்மணி அணையாரெனை அணைந்த உடனேஓங்குறவே நான் அவரைக் கலந்தவரும்

நானும்ஒன்றானபின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே!” என்கிறார்.

ஆக பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்கிற தாரக மந்திரங்கள், ஆன்மீக ஞானிகளுக்காக மட்டுமல்லாது, சாமான்ய மனிதருக்கும் நன்மையளிப்பதாகும். வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க இயக்கங்கள் மூலம் இன்றும் அவருடைய சன்மார்க்கத் தத்துவங்கள் பரவலாக போற்றப்படுகின்றன. இன்றும் வடலூரில் அன்னதானங்கள் வள்ளலார் சோதியில் ஐக்கியமான தினத்தன்று பெரிய அளவில் நடை பெறுகின்றன.
வள்ளலார் அண்மைக் காலத்தில் தோன்றியவராயினும், அவ்ர்தம் ஞானக்குரு திருவாதவூரர்,மாணிக்கவாசகர் ஆவார். அவர் மூலமாகவே ஆன்மீக ஞானத்தைப் பெற்றவர்.மாணிக்கவாசகரின் பாடல்களில் இருக்கும் எளிமையும், இனிமையும், இறைமையும் இவர் பாடல்களிலும் நிறைந்திருப்பதைக் காண முடிகிறது. திரு அருட்பாவில், ‘ஆளுடைய அடிகள்’ என்னும் பாடல் மூலம் இதனை நன்கு உணர முடியும்.

”தேசகத்தி லினிக்கின்ற தெள்ளமுதே – மாணிக்க

வாசகனே யானந்த வடிவான மாதவனே

மாசற்ற நீ திருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின்

ஆசகன்ற வனுபவந் தனுபவிக்க வருளுநீயே!”

“ வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவைகலந்தென்

ஊன்கலந்து வுயிர் கலந்து வுவட்டாம லினிப்பதுவே

வருமொழிசெய் மாணிக்கவாசகநின் வாசகத்தில்

ஒருமொழியே யென்னையுமென் நுடையனையு மொன்றுவித்துத்

தருமொழியா மென்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன்

குருமொழியை விரும்பியியல் கூடுவதேன் உறுதியே

வாட்டமிலா மாணிக்கவாசகத்தின் வாசகத்தைக்

கேட்டபொழு தங்கீருந்த கீழ்பறவைச் சாதிகளும்

வேட்டமுறும் பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான

நாட்டமுறு மென்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!”


ஐயன் மாணிக்கவாசகரின் வாக்கை சத்திய வாக்காகவும் அவரையே ஆன்மீகக் குருவாகவும் கொண்டு தம் பாடல்களை இயற்றி இம் மனித சமுதாயம் தழைத்தோங்கச் செய்த வள்ளல். தன் ஞானகுரு மாணிக்கவாசகர் பற்றிக் கூறும் போது, ஐந்தறிவு படைத்த வாயில்லா சீவன்கள் கூட மாணிக்கவாசகரின் தெயவ மொழி கேட்டால் மெய் மறந்து மெய்ஞ்ஞானத்தில் நாட்டமுறும் போது எனக்கு அந்த மெய்ஞ்ஞானம் சித்திப்பதில் என்ன வியப்பு இருக்கிறது என்பார். இதிலிருந்து அவர்தம் குருபக்தி நன்கு விளங்குகிறதன்றோ. மாணிக்கவாசகரின் திருவாசகமே தன் ஆத்ம ஞானப் பாதையின் வழிகாட்டி என்ற வள்ளலாரின் சத்திய நெறி நித்யமானதாகும்.

இததகைய ஆன்மீக ஞானம் பெற்ற வள்ளலாருக்கும் சோதனை ஏற்படாமல் இல்லை. ஆம் சோதனைகள் தானே மனிதரின் வாழ்க்கையை புடம் போட்ட தங்கமாக மின்னச் செய்கிறது.

வள்ளல் பெருமான் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் வகையில் திரு அருட்பா, இயற்றி போதித்து வந்த வேளையில், பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ‘மருட்பா’ என்கிற அமைப்பில் ஓர் அணி திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மருட்பா என்கிற போராட்டம் 1873 ஆம் ஆண்டு தொடங்கி 1907 ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்த எதிர்ப்பு வள்ளலாரின் இறுதிக் காலங்களில் கனன்று, தீம்பிழம்பாய் எரிந்து, ஐயன சோதி வடிவாக கரைந்த பின்பும் கங்காய் கனன்று கொண்டிருந்தது. பல அறிஞர்கள் இப்போராட்டத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்டாலும், போகப் போக பகலவனைக் கண்ட பனித்துளியாய் உறுகிப் போயினர். அருட்பாவில் அமிழ்ந்து போயினர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அந்நிகழ்வைப் பற்றிக் கூறுகிறார். இலக்கிய உலகில் முன்பின் காணாத ஓர் வித்தியாசமான வழக்கு என்பார். வழக்கைத் தொடுத்தவரோ ‘தமிழ் செம்மல் – சைவப் பெரியார்’ என்றழைக்கப்பட்ட, வையகமே போற்றும், வாழ்வாங்கு வாழ்ந்த பெரியார், ஆறுமுக நாவலர் ஆவார். வழக்குக்கான அடிப்படை ஆறுமுக நாவலரின் உள்ளம், வள்ளல் இராமலிங்க அடிகளாரின் சன்மார்க்க நெறியை ஏற்றுக் கொள்ள இயலாமையே காரணமாகும்.மஞ்சக் குப்பம் நீதி மன்றத்தில் நடந்த வழக்கைக் காண மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர்.

ஆறுமுக நாவலர் வழக்கறிஞர் வைத்து வாதாட, இராமலிங்க அடிகளாரோ, அன்பே கடவுள் என்றுணர்ந்த தன்மையால், வழக்கறிஞர் மூலம் எவர் மனதையும் புண்படச் செய்ய விரும்பாமல் ஆன்ம ஞானமே துணையாகக் கொண்டு தானே வழக்காட எண்ணி நீதி மன்றம் வந்த வேளை, தெய்வீக ஒளி வீசும், வெண்ணிற ஆடை கொண்டு மெய்யுணர்வுடன் தேவனைப் போன்று வந்து நின்ற அடிகளாரைக் கண்ட மனிதர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்ப, நீதிபதியும் தன்னிலை மறந்து எழுந்து கைகூப்பி நிற்க, வழக்கு தொடுத்த ஆறுமுக நாவலரும் எழுந்து நின்று இரு கரம் கூப்பித் தொழுதாராம்!
வழக்கு ஆரம்பித்த பொழுது, நீதிபதி, ஆறுமுக நாவலர் எழுந்து நின்று இரு கரம் கூப்பி வணங்கியதன் காரணம் கேட்க, அதற்கு ஆறுமுகனாரும், ”தாங்களே எழுந்து நின்று கைகூப்பி வணங்கியது கண்டு நானும் அனிச்சையாக நின்று வணங்கி விட்டேன்” என்றாராம்.

“ உங்களுடைய அனிச்சை செயலே இராமலிங்கனாரின், அருட்செயலை எமக்குத் தெளிவாக உணர்த்துகிறதே” என்று நீதிபதி கூறியதும் மன்றமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, வழக்கு நிறைவடைந்தது……….சைவப் பெரியாரான ஆறுமுக நாவலர் திருமறைக்குட்பட்டது அல்ல ‘திரு அருட்பா’ என்ற உணர்வு கொண்டவராக இருந்தது மட்டுமே இவ்வழக்கிற்கான காரணமாக இருந்தது.

ஆனால் இன்று மருட்பா என்ற பொய்மை மறைந்து, அருட்பா என்ற மெய்ம்மை ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் காட்டிய வழி, அன்பும், கருணையும் இணைந்த ஆன்மீக நெறி என்பதை உணர்ந்து அம்மெய்வழி நடந்தவர் அனைவரும் வாழ்வில் சிறப்புற்று, அமைதியும், வெற்றியும் பெற்று வாழ்வதையும் காண முடிகிறது. நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய ஆணவம், கன்மம், மாயைகளாகிய திரைகள் நீங்கப் பெற்றால் அருட்பெரும் சோதியை தரிசிக்கலாம்!

அருட்பெருஞ் சோதி, அருட் பெருஞ் சோதி

தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் சோதி