Wednesday, January 25, 2012

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா…?

பவள சங்கரி

அன்பு நண்பர்களே,

இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!

நம் இந்தியத் திரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரையும் ஈந்து, தம் சந்ததியினர் சுதந்திரக் காற்றைச் சுகமாக சுவாசித்து நல் வாழ்வு வாழ அரும் பெரும் தியாகங்கள் செய்த நல் உள்ளங்கள் எத்தனையோ! அவர்களை இந்நன்னாளில் நினைவு கூர்ந்து, நன்றி பாராட்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஓடியாடி விளையாடி, உல்லாசமாக இருக்கக் கூடிய பதின்மப் பருவத்தில் , தாய்த்திரு நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக , சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு , ஆங்கிலேயர்களால், நரக வேதனையை அனுபவித்ததோடு, அவ்வினிய பதின்மப் பருவத்திலேயே தம் இன்னுயிரையும் ஈந்த உத்தமப் பிறவியாம் தில்லையாடி வள்ளியம்மையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆறுதல் அடையலாம் அல்லவா?

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! .. (சுதந்திரப் பயிர்)
பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ?
சுதந்திர தாகம்)
விண்ணில் இரவிதனை விட்டுவிட்டு எவரும்போய்
மின்மினி கொள்வாரோ ? ….
மண்ணில் இன்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை இழப்பாரோ ?
(சுதந்திரப் பெருமை)

மகாகவி பாரதியார்

தில்லையாடி வள்ளியம்மை – (1898 – 1914)

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல, வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதே சரித்திரம் ஆகிறது. அந்த வகையில் தான் வாழ்ந்த மிகக் குறைந்த 16 ஆண்டுகால வாழ்க்கையில் , நம் நாட்டை அடிமைத்தளையிட்டு வைத்திருந்த ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, தம் இன்னுயிர் நீத்த முதல் விடுதலைப் போராளி, வீரச்சுடர் வள்ளியம்மை என்கிற வனிதாமணி ஒரு தமிழ்ப்பெண்.

நஞ்சை புகழ் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்தில் முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் தம்பதியருக்கு 1898ஆம் ஆண்டில் பிறந்தவர் இவ்வீராங்கனை வள்ளியம்மை.

தில்லையாடியில் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்த முனுசாமி, ஆங்கிலேய பிரிட்டிஷ் ஆட்சியில் ஆலைத்துணி இறக்குமதியால், நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில், ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக கங்காணியர் தமிழ் நாட்டுத் தொழிலாளர்களை தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக அனுப்பப்பட்டவர்தான் முனுசாமி. அங்கு ஜோகன்ஸ்பர்க் என்னும் ஊரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கியவர். அங்குதான் வள்ளியம்மை பிறந்தார்.

பல இன்பக்கனவுகளுடன் நாடு விட்டு நாடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் , ஆங்கிலேயர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். ஒவ்வொரு இந்தியரும் மூன்று பவுன் தலைவரி கட்ட வேண்டும். அவர்கள் அங்கு பல தடைகளுடன் வாழ வேண்டியிருந்தது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழைய முடியாது. வாக்குரிமை கொடுக்கப்படவில்லை. வெள்ளையர்களுடன் சமமாக அமர முடியாது, அவர்களுடன் பள்ளியில் கூட நம் குழந்தைகள் படிக்க முடியாது. இந்தியர்கள் வாழும் இடங்கள் சுகாதாரமற்ற சேரிகளாகவே காட்சியளித்தன.

வெள்ளையரின் அடக்குமுறையாலும், அதிகாரத்தாலும் இந்தியர்கள் மட்டுமன்றி அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோ மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாவதைக் கண்ட இளம் பெண்ணான வள்ளியம்மை உள்ளம் நொந்து போனார். இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு வந்தவர், 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலாக) அங்கேயே தங்கிவிட்டார். அங்கே இந்தியர்களுக்கும், நீக்ரோக்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறி, அநீதியை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.

தென்னாப்பிரிக்காவின் கிறித்துவ மதச்சடங்குபடி திருமணப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியாகாது என்று 1913ல் மார்ச் மாதம் 14ந் தேதி , கேப் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்து மக்களை மிகவும் பாதித்தது. அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது என்பதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமையும் இல்லை என்றாயிற்று. இதனால் இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் காந்தியடிகள், ஜோகன்ஸ்பர்கில், 3000 மக்கள் திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் அகிம்சை முறையிலான போராட்டத்தை நடத்தினார்.

இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மையும் சென்று வந்து கொண்டிருந்தார். காந்தியடிகளின் சொற்பொழிவுகள் அச்சிறுமியின் மனதில் மிக எளிதாக விடுதலைக் கனலை மூட்டி விட்டன. இந்தியர்கள் புதிதாக வந்து குடியேறுவதைத் தடுக்கும் பொருட்டு டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையை பதிவு செய்ததைக் கண்ட வள்ளியம்மையின் தன்மான உணர்வு துடித்தது. அதுவே, அச்சிறுமியை காந்தியடிகளின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தூண்டியது, அந்த 16 வயதேயான இளம் மங்கைக்கு!

இந்தப் போராட்டத்தில் முதன் முறையாக காந்தியடிகள் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். காரணம் இவ்வன்கொடுமைச் சட்டத்தினால் நேரடியாக, அதிகளவில் பாதிக்கக் கூடியவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். பெற்றவர்களின் தடையையும் மீறி இப்போராட்டத்தில் வள்ளியம்மை கலந்து கொண்டார்.

1913 ல் ஜோகன்ஸ்பர்க் நகரில், அக்டோபர் முதல் வாரத்தில், வெள்ளையர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து அன்னை கஸ்தூரிபாய் தலைமையில் , பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை திரண்டது. இந்த அணியின் முதல் வரிசையில் கஸ்தூரிபாய்க்கு இணையாக வள்ளியம்மையும் அவருடைய தாயாரும் நின்றனர். “ வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தின் தளைகளைத் தகர்த்தெறிவோம் வாருங்கள் “ என்ற அவருடைய முழக்கம் ஏனைய சத்யாகிரகிகளையும் எழுச்சியுறச் செய்தது.

“ எங்கள் தேசத்தின் கதிரவனுக்கு அஸ்தமனம் என்பது எப்போதுமில்லை” என்ற இறுமாப்புடன் மார்தட்டிக் கொண்டிருந்த காலனி ஆதிக்கம் ஆட்டம் காணத்தொடங்கியதும் அப்போதுதான். வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன், ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு முன்னேறியது. வழியில் சார்லஸ் டவுன், டண்டி,லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கியமான இடங்களில் தங்கிச் சென்ற அனைவருக்கும், சிறுமி வள்ளியம்மை அனைத்து சேவைகளும் ஓடியாடி செய்தார்.

காந்தியடிகளின் முழக்கத்தைக் கேட்ட நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகள் அவர் சொல்படி வேலை நிறுத்தமும் செய்த தமிழர்களைக் கண்டு மேலும் உற்சாகமானார் வள்ளியம்மை. தடையை மீறி டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்த பெண்கள் அணியினர் கைது செய்யப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற சூழலும், உணவும் அவர்தம் உடல்நிலையை பெரிதும் பாதித்தது. வயிற்று வலி, காய்ச்சலில் அவதிப்பட்டார். அத்தோடு போலீசாரின் கடுமையான சித்ரவதைக்கும் ஆளானார். அபராதத்தொகை கட்டிவிட்டுச் செல்லும்படிச் சொன்ன அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாமல், அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு என்ற காரணம் காட்டி, சிறையை விட்டு வெளியில் போகாமல், அங்கேயே இருந்ததால், அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட , மருத்துவர்களின் எச்சரிக்கையினால், 1914 பிப்ரவரி 14ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து பாடுபட்டவர், அண்ணலின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை. இந்தியருக்குத் தேசியமும் இல்லை…தேசியக் கொடியும் இல்லையென கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்கள் தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறைச்செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார். “ சிறை சென்றதற்கு வருந்துகிறாயா?” என்று கேட்ட அண்ணலின் கேள்விக்கு, தம் தளிர்க்கரங்களைக் கூப்பி வணங்கி, “ வருத்தமெல்லாம் இல்லை. இப்போது தாங்கள் கட்டளையிட்டாலும், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்லச் சித்தமாயிருக்கிறேன்” என்றாராம். அண்ணல், சிறை சென்றால் உயிர் பிரிந்து விடுமே?” என்றதற்கு, “ மரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. தாய்த்திருநாட்டிற்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார்?” என்றார்.

கிழிந்த நாராக , ஒரு சமுக்காளத்தில் சுற்றப்பட்டு வீட்டில் கொண்டுவந்து கிடத்தப்பட்ட சிறுமி வள்ளியம்மையின் உடல் நிலை மேலும் மோசமடைந்து, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், அவர் பிறந்த அதே நாளில், இறைவனடி சேர்ந்தார்.

1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள்.வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதித்த போது உணர்ச்சிவசப்பட்ட மகாத்மா கண் கலங்கி, வண்டியை விட்டு இறங்கி, கீழே குனிந்து இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.

என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் மிக மோசமானவை. அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப்போராட்டம்…. இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி
வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அண்ணல் காந்தியடிகள் தில்லையாடிக்கு 1915 ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் 5 ஆம் நாளன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில்தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகமும் செயல்பட்டு வருகின்றது.கைத்தறி நெசவாளர் சங்கம் சென்னையில் அமைத்த விற்பனை நிலையத்திற்கு, ‘தில்லையாடி வள்ளியம்மை மாளிகை’ என்று அவர் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று அண்ணல் காந்தியடிகளைக் காப்பாற்றிய வள்ளியம்மை _ இருந்திருந்தால் ஒரு வேளை கோட்ஸே சுட்டுக் கொல்லும்போது _ குறுக்கே பாய்ந்து காப்பாற்றியிருப்பாரோ என்னவோ.. அதற்குள் அவ்வளவு சிறிய வயதில் அந்த தியாகச் சுடரை இயற்கை அழைத்துக் கொண்டதுதான் கொடுமை.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள், இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

படங்களுக்கு நன்றி :

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88

Sunday, January 22, 2012

இந்தியத் திருநாட்டின் சமுதாய மறுமலர்ச்சியில் பெண்கள் - பகுதி - 10



முத்துலட்சுமி ரெட்டி (1886 - 1968)


டாக்டர் முத்துலட்சுமி 1886 ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை , ஒரு இரு பாலர் பள்ளியிலும், பள்ளி இறுதித் தேர்வை தன் தந்தையின் கற்பித்தலின் மூலம் கற்றுத் தேர்ந்தார். மிக வைதீகமான குடும்பத்தில் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி, தங்கள் சமூக வழமைக்கு எதிராக புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல் பெண் மாணவியாக உள்ளே நுழைந்த பெருமையும் இவருக்கு உண்டு. 1907 ஆம் ஆண்டில் முதல் மற்றும் ஒரே மருத்துவ மாணவி இவரே! அரசாங்க மருத்துவ மனையின் முதல் பெண் மருத்துவரும் இவர்தான். அது மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினர், 1937 இல் சென்னை கார்ப்பரேஷனின் முதல் பெண் துணை மேயர் என்று இப்படி பல முதல் இடங்களைப் பிடித்தவர்.


அக்காலத்திய ஒரே பெண் மருத்துவராக இருந்த காரணத்தினாலேயே இவருடைய சேவையின் தேவையும் மிக அதிக அளிவிலேயே இருந்தது. டாக்டர் சுரேந்திர ரெட்டி என்பவரை மணந்து , இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தாயானார். மகாத்மா காந்தியடிகள் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் ஆகியோரின்பால் ஈர்க்கப்பட்ட காரணத்தினால், வாழ்க்கையின் மற்றொரு கோணத்தை ஊடுறுவதன் மூலம், தன்னுடைய முழு நேரம் மற்றும் சக்தியையும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் செலவிட முடிவு செய்தார். பொது வாழ்விற்கு பெண்கள் முன் வருவது என்பது மிக அரிதாக இருந்த காலம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெண்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்தார். இடைவிடாத மருத்துவப் பணி மற்றும் குடும்பப் பொறுப்புகளின் இடையிலும் அவர் நலிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொண்டாற்ற நேரம் ஒதுக்கினார். இங்கிலாந்தில் மேற்படிப்பிற்காகச் சென்று திரும்பியவுடன்,1926ல் பாரிஸ் சர்வதேச பெண்கள் காங்கிரசுக்கு முக்கிய விருந்தாளியாக அழைக்கப்ப்பட்டார். தன்னுடைய மருத்துவப் பணியையும் விட்டு, சென்னை சட்டமன்ற பேரவை உறுப்பினரானார்.முழுமனதாக தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முத்துலட்சுமி 1917லிருந்து இந்தியப் பெண்கள் கூட்டமைப்பில் இணைந்திருந்தார். அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தினால் ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடைகள் மற்றும் கல்வி கிடைக்க வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தார். 1930ல் அவ்வை இல்லம் என்ற பெயரில் இலவச தங்கும் விடுதியும் ஆரம்பித்தார். இன்றளவிலும் அந்நிலையம் பல ஆதரவற்ற பெண்களுக்கு கல்வியும், தொழிற்பயிற்சியும் வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சமுதாய முன்னேற்றத்திற்கான அவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘சட்டமன்ற உறுப்பினராக என் அனுபவங்கள்’ என்ற அவருடைய நூல் சட்டமன்றத்தின் அவருடைய சேவைகள் அனைத்தையும் தெளிவாக பதிவிட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் மகளிர் பாதுகாப்பு, கைக்குழந்தைகளுக்கான சத்தான உணவுப் பழக்கம், சிசு மரணத்திற்கான காரணங்கள், இந்தியப் பெண்களின் வாக்குரிமை, குழந்தைகள் பாதுகாப்பு நலம், பால்ய விவாகத்தின் கேடுகள், புற்று நோயின் தன்மைகளும், அதைத் தடுக்கும் முறைமைகள் குறித்தும் , ஏன் இந்து கோவில்களில் தேவதாசி முறைகளை ஒழிக்க வேண்டும்? , மகளிர் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் என்று இப்படி பல நூல்கள் இயற்றியுள்ளார். தம் சுயசரிதையை ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். இந்திய மாதர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஸ்திரிதர்மா’ என்ற இதழின் ஆங்கில மற்றும் தமிழ் இதழ்களின் பொறுப்பாசிரியராக 1931 முதல் 1940 வரை பதவி வகித்தார்.


சென்னை, திருவல்லிக்கேணியில் இயங்கும் தாய்- சேய் நல விடுதியான அன்னை கஸ்தூரிபா மருத்துவமனை, ஒரு சிறப்பான சட்டம் இயற்றியதன் மூலமாக இன்றளவும் ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. அப்போதைய அரசாங்கம், மகப்பேறு மருத்துவமனையில் , குழந்தைகள் மருத்துவப் பிரிவும், செயல்பட வேண்டும் என்ற இவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டனர். அனைத்து நகராட்சிப் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைத் திட்டங்களைச் சிபாரிசு செய்தார்.

ஒவ்வொரு முறையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஏதோவொரு சட்டத்தை பரிந்துரை செய்யும் போதும், பொது மக்களின் பேராதரவைத் திரட்டி அதன் மூலம் அச்சட்டத்தை நிறைவேறச் செய்தது சிறப்பான செயல். அக்காலத்தில் கோவில்களில் நாட்டியமாடும் தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. பெண்களை இழிவுபடுத்தக் கூடிய இந்த முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டி இவர் எடுத்த முயற்சி, இவருடைய சாதனைகளின் மகுடம் எனலாம். இதற்காக பெருந்திரளானப் பெண்களை இவர் திரட்டிக் கொண்டு அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டார். காரணம் அப்போதைய பல காங்கிரசு கட்சி உறுப்பினர்கள்கூட இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதே நிதர்சனம். அவ்வளவு பெருந்திரளான பெண்டிரைத் தன் சட்டத்திற்கு ஆதரவாக ஒன்று திரட்டி , அவர்களை சட்டமன்றத்திற்குள் அழைத்துச் செல்லும் முயற்சியில் அவர் மூளை ஒரு கணிணியாகவேச் செயல்பட்டது என்கின்றனர் அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்த திருமதி சரோஜினி வரதப்பன் போன்றவர்கள்.


அகில இந்தியப் பெண்கள் மகாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றார். மாநில சமுதாய நலஆலோசனைக் குழு உருவாகுவதற்கு காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். 1930 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சுய மரியாதை மாநாட்டில் பெண்கள் பிரிவிற்கு தலைமைப் பொறுப்பேற்றார். 1937 முதல் 1939 வரை சென்னை மாநகராட்சியில் , நியமனக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். 1933 முதல் 1945 வரை இந்திய மாதர் சங்கத்தின் தலைவியாக இருந்தார். மீண்டும் 1947 முதல் 1949 வரையிலும் அதே பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இக்காலகட்டத்தில்தான் மாதர் சங்கக் கிளைகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டது. பல பெண் பிரமுகர்களை தன் சங்கத்தில் இணைக்கும் பெரு முயற்சியும் மேற்கொண்டார். திருமதி ருக்மணி இலட்சுமிபதி, சரோஜினி வரதப்பன், வே.இராமதாஸ், இராதாபாய் சுப்பராயன், அம்மு சுவாமிநாதன், எழுத்தாளர் வசுமதி ராமசாமி, போன்றவர்கள் அம்மையாருடன் இணைந்து பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1926ல் இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தையும் நிறுவினார். இஸ்லாமிய சமுதாயப் பெண்களுக்கான ஒரு விடுதியும் , தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கான உதவித் தொகையையும் தன் தொடர்ந்த பெரு முயற்சியால் பெற்றுத் தந்தார். இவருடைய பரிந்துரையில்தான் 1928 ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களின் திருமண வயது முறையே 21 மற்றும் 16 ஆக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.


திருமதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 1949 ஆம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண நிதி அமைப்பு அமைத்ததன் பிண்ணனி ஒரு துயரமான நிகழ்வாகும். ஆம், புற்று நோய்க்கான சரியான வைத்திய முறை இல்லாத காலகட்டமது. அம்மையாரின் இளைய சகோதரி சுந்தராம்பாள் என்பவர் தன்னுடைய 23 வது வயதில் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு பெருந்துன்பத்தில் அவதிப்பட்டார். இச்சமயத்தில்தான் இக்கொடுமையான நோய்க்கான நிவாரணம் பெற வேண்டுமென உறுதி பூண்டார். இந்திய மாதர் சங்கம் மூலம் நிதி வசூல் செய்தார். தி.க.சண்முகம் குழுவினர் ஔவை நாடகம் நடத்தி அதன் மூலம் நிதி வசூல் செய்தனர். 12 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சிறிய மருத்துவமனைக்கு தமிழக அரசு ஒரு இலட்ச ரூபாய் நிதி அளித்ததோடு 1952ல் இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார். இன்று இந்தியாவில் முதன்மையான புற்று நோய் ஆராய்ச்சிக்கான தேசீய மையமாகச் சிறந்து விளங்கும் இம்மருத்துவமனைதான் தென் இந்தியாவில் புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முதல் முயற்சி. 2004 ஆம் ஆண்டு இம்மருத்துவமனையின் பொன் விழாவை அப்போதைய ஜனாதிபதி மாண்புமிகு டாக்டர் அப்துல்கலாம் துவக்கி வைத்தார். இப்போது பல நாடுகளிலிருந்தும் , நேபாளம், மலேசியா போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்காக அவ்வை கிராமப்புற மருத்துவக்கூடத்தையும், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் ஆகியோருக்கான சிறிய குடியிருப்புகளையும் தன்னுடைய நகைகளை விற்று கட்டி முடித்தார். மேலை நாடுகளில் புற்று நோய் பற்றிய முதுகலை படிப்பு படித்து முடித்த இவரது இரண்டாவது புதல்வர் டாக்டர் எஸ். கிருட்டிணமூர்த்தி என்பவர் அவ்வை மருத்துவ நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சேவா கிராமில் பயிற்சி பெற்ற இவரது மருமகள் திருமதி மந்தாகினி கிருட்டிணமூர்த்தியும் அவ்வை இல்லத்தில் பொறுப்பிலுள்ளார்.


1956 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அம்மையாருக்கு ,’பத்ம பூசன்’ விருது வழங்கப்பட்டது. அடையார் புற்று நோய் மருத்துவமனைக்காக அரசாங்கத்திடமிருந்து போராடி ஒரு சிறு நிலத்தைப் பெற்றார். காரணம் அப்போதைய சுகாதார அமைச்சர் , சரி செய்ய முடியாத புற்று நோய் போன்ற வியாதிகளுக்காக நிதியை வீணடிக்க வேண்டியதில்லை என்ற கருத்தைக் கொண்டவராக இருந்தார். ஆனாலும் அவரிடம் பலத்த விவாதங்களின் மூலமாகவே காந்தி நகரில் ஒரு துண்டு நிலத்தைப் பெற்றார். பெருத்த சவால்களுக்கிடையே அம்மருத்துவமனையின் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.


காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கையில் அவருக்கு ஆதரவு கொடுத்ததோடு ,அனைத்து அரசு விடுதிகளிலும் கல்வி நிலையங்களிலும் இக்கொள்கை செயல்படுத்த வேண்டியும் போராடினார். மதுவிலக்கு, கதர் உபயோகம் , தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றிற்காகப் போராடினார். ஏராவாடா சிறையில் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்து , அவர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்காக தொழுகைக் கூட்டம் நடத்த அம்மையார் முற்பட்டபோது, காவல் துறை அதிகாரிகள் தடை விதித்த போதும், அதை மீறி அவர் கொடியேற்றி தொழுகை நடத்தி தம் நாட்டுப் பற்றையும், துணிச்சலையும் காட்டினார். 1966 ஆம் ஆண்டில் அனைத்து மகளிர் நிறுவனங்களும் இணைந்து அம்மையாருக்கு அவர்தம் 80 வது வயது பிறந்தநாளை ராஜாஜி ஹாலில் கொண்டாடி அவரைக் கௌரவித்தனர். முதியோர் இல்லம் அமைக்கும் விருப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தில் வெளியிட்டார். தில்லியிலுள்ள அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின், மார்கரெட் கசின்ஸ் நூலகத்திற்கு பல படைப்புகளை வழங்கியிருந்தார்.


மிக எளிமையான தோற்றமும், அன்பான குணமும், தாய்மை உணர்வும், தலைமைப் பண்பும் ஒருங்கே அமையப் பெற்ற உன்னத ஆத்மாவான, அன்னை முத்துலட்சுமி ரெட்டிக்கு, தம் இறுதிக் காலங்களில் கண் பார்வை இழந்த போதும், தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் உன்னிப்பாகக் கவனம் கொண்டிருந்ததோடு, உலகின் எந்த மூலையிலும் பெண்களுக்கான அநீதி இழைக்கப்படுவது அறிய வந்தால் முதல் எதிர்ப்புக் குரல் இவருடையதாகவே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எந்த கட்சியோ, எந்த அரசாங்கமோ, எதைப் பற்றிய அச்சமும் இல்லாமல் துணிச்சலாகத் தம் எதிர்ப்புகளை வெளியிடத் தயங்க மாட்டார்.


தம்முடைய பிள்ளைப்பிராயத்திலிருந்தே, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பல சவால்களை எதிர் கொண்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர். அம்மையாரின் உன்னதமான சேவைகளைப் போற்றும் வகையில் தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு முதல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏழ்மை நிலையில் இருக்கும் கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ 200 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. 1968ல் சூலை 22ம் நாள் அம்மையாரின் இன்னுயிர் இப்பூவுலகை விட்டு நீங்கியது.


‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் என்றால் அது மிகையாகாது. அனைத்து மகளிர் இயக்கத்தின் முன்னோடியான அம்மையாரின் சேவை என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒன்று. சாதனை மகளிரின் வரலாறுகளில், முத்துலட்சுமி அம்மையாருக்கென்று ஒரு தனிப்பட்ட இடம் இருப்பதை ஒருவராலும் மறுக்க இயலாது என்பது திண்ணம்!