Thursday, June 7, 2012

தில்லைத் திருக்கோவில் - சிதம்பரம் (தல புராணம்)

தில்லைத் திருக்கோவில் - சிதம்பரம்


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

திருமூலர்




பூலோகத்தின் புனிதபூமி, சொர்க்கம் என்று போற்றப்படுகிற நம் தமிழ்திருநாட்டில் தெய்வ மணங்கமழும், சிவாலயங்களில் தலைசிறந்து விளங்குவது தில்லைச்சிற்றம்பலம்.. சிவாயநம என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லைஎன்பதற்கிணங்க சோழ மன்னர்களும்,பாண்டிய மன்னர்களும் எண்ணிலடங்கா கோவில்களை எழுப்பியுள்ளனர். எத்தனையோ கோட்டைகளும், கொத்தலங்களும், பல்வேறு காரணங்களால் அழிந்து பட்டாலும்,இறைவனுக்காக எழுப்பப்பட்ட ஆலயங்கள் நிலைபெற்று பல்லாயிரம் ஆண்டுகளாக நின்று கொண்டிருப்பதே அவனருளிற்கு சாட்சியல்லவா?


தில்லைவனம்என்று பெயர் கொண்ட இத்திருத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்தில்,கொள்ளிடம் என்னும் காவிரியின் பிரிவுக்கு வடக்கிலும், மணிமுக்தா நதிக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளிக்கும் உள்ள பிரதான இரயில் பாதையின் இடையே உள்ளது. சிதம்பரம் நிலையத்திலிருந்து சுமார் 1கி.மீ தூரம் மேற்கே சென்றால் நகரத்தின் மையப்பகுதியில் நான்கு கோபுர வாயில்களுடன் கூடிய திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.


சம அளவிலான கோபுரங்கள்:


நான்கு இராஜ கோபுரங்கள் உள்ள இத்திருத்தலத்தில் அனைத்து கோபுரங்களும் 135 அடியாக சம உயரம் கொண்டவைகளாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.ஏழு நிலைகளைக் கொண்ட இந்த கோபுரங்களில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கீழ்ப்பகுதியில், 90 அடிநீளமும், 60 அடி அகலமும் கொண்ட, வளைந்த தோற்றம் கொண்ட கோபுர சிகரங்களைக் கொண்டுள்ளது. 40அடி உயரம் கொண்டதாகவும் அமையப்பெற்றுள்ளது. பரத நாட்டியக்கலைத் தொடர்பான மிக அழகிய சிற்பங்களும் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளன. தெற்கு கோபுரத்தின் மீது சுவாமியின் கொடி கட்டப்பட்டுள்ளது.


தில்லை எனும் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் இத்தலம் தில்லை வனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் கிழக்கில் உள்ள பிச்சாவரம் எனும் பறவைகள் சரணாலயத்தின், அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் இன்றும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பெரும்பற்றப் புலியூர் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது. கோவில் என்று சொன்னாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். வில்லிப்புத்தூராழ்வார் மொழிந்தது போன்று, “பொன்னம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்என்பதன் மூலம் சிதம்பரத்திற்கு பொன்னம்பலம் என்ற பெயரும் வழங்கிவருவது தெரிகிறது. சித் + அம்பரம் = சிதம்பரம். சித்என்றால் அறிவு. அம்பரம்என்றால் வெட்டவெளி. ஆகையால் ஞானாகாசம்என்று இத்தலம் வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு புலியூர், வியாக்கிரபுரம், பூலோக கைலாசம்,புண்டரீகபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.


தல பெருமை:


செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே. (திருஞானசம்பந்தர்)


இத்தலத்தின் தல விருட்சம் - தில்லைமரம். திருமூலட்டானக் கோவில் மேற்குப் பிரகாரத்தின் மேல்பால், கருங்கல் வடிவில் இருக்கின்றது. சிதம்பரம்,பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக அமைந்து விளங்குவது.

மாணிக்கவாசக சுவாமிகள், சிவத்தலங்கள் அனைத்தும் வழிபட்டுக் கொண்டு வந்தவர்,தில்லையம்பதியை அடைந்தவர், இத்திருத்தலத்திலேயேத் தங்கி , தில்லைக்கூத்தனை வழிபட்டு, கண்டபத்து, குலாப்பத்து, மூன்று அகவல்கள், குயில்பத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி,திருத்தோணோக்கம், திருத்தெள்ளேணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார்,அன்னைப்பத்து, கோயில்பதிகம் கோயில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்தமாலை திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து முதலியன பாடியருளினார். மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவேஎன்று போற்றிப்ப்ரவுகிறார்.


இத்தலத்து திருக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருந்தாலும், சிவன், விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகளும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படிஅமையப்பெற்றது தனிச்சிறப்புடையதாம். பிரம்மா,விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள ஒரேதலம் இஃதாம்.


மாணிக்கக் கூத்தனை வந்தில்லைக் கூத்தனைப்

பூணிற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்

சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை

ஆணிப்பொற் கூத்தனை யார்உரைப் பாரே.

திருமந்திரம்.


ஓம் என்னும் பிரணவத்தின் வடிவான தில்லைக்கூத்தன், ஐந்தெழுத்துச் சொரூபியான நடராசப் பெருமானின் திருக்கூத்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உணர்த்துகின்றது. உலகம் விராட்புருடன் வடிவம்; திருவாரூர் அதன் மூலாதாரம், திருவானைக்கா கொப்பூழ், திருவண்ணாமலை மணிப்பூரகம், திருக்காளத்தி கண்டம்,காசி புருவமதியம், சிதம்பரம் இருதயம் என்பர். உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே நடைபெறும் ஆனந்தத் தாண்டவத்தை, அடியார்களின் பொருட்டு, இருதயத்தானமாகிய சிதம்பரத்தில் ஆடிக்காட்டியருளுகின்றார். சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் அமைந்து விளங்கும் பத்துத் தீர்த்தங்களில் சிவகங்கை என்னும் தீர்த்தம் சிவ வடிவமாகவே அமைந்து விளங்குவதாக சிதம்பர மான்மியம் கூறுகிறது.


அப்பரடிகள், தில்லையம்பலத் திருக்கோயிலின் முற்றத்திலும், திருவீதிகளிலும், உழவாரப்பணி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், ’கருநட்ட கண்டனைஎன்னும் திருவிருத்தமும், ‘பத்தனாய்ப் பாட மாட்டேன்என்னும் திருநேரிசையும், ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்என்னும் திருக்குறுந்தொகையும் பாடியருளினார்.


திருத்தொண்டர் புராண வரலாறு:


அருண்மொழித்தேவர் என்னும் பெரியார், ’சேக்கிழார்குடி’, எனும் குடியில், தொண்டை நாட்டுக் குன்றத்தூரில் பிறந்த சிவநெறிச்செல்வராவார். சேக்கிழார் என்றே வழங்கப்பட்ட இவர்,அநபாயன் என்றும், திருநீற்றுச் சோழன் என்றும் புகழப்பெற்ற இரண்டாம் குலோத்துங்க சோழனின் தலைமை அமைச்சராக பணிபுரிந்து வந்தார்.


சமணம் பரவிவந்த அக்காலத்தில் அமைச்சர் சேக்கிழார், சிவத் தொண்டர்களின் வரலாற்றை அழகுற எடுத்தியம்ப, மன்னனும் மனம் மகிழ்ந்து, தொண்டர்தம் வரலாற்றையெல்லாம் தொகுத்து ஒரு காவியமாக்கும்படி பணிக்க, சேக்கிழார் பெருமானும், தில்லை வந்து அம்பலவாணரைப் பரவி நிற்க, ஐயனும் உலகெலாம்என்று அடியெடுத்துக் கொடுக்க அதனையே தம் காப்பியத்தின் தொடக்கமாகக் கொண்டு, திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து, ‘திருத்தொண்டர் புராணம்என்கிற அருள் மணம் கமழும் அரிய பெரியபுராணத்தைப் பாடியருளினார். அகம் மகிழ்ந்த குலோத்துங்க மன்னனும் சேக்கிழாரையும்,திருத்தொண்டர் புராணத்தையும் யானை மீது ஏற்றி நகர் வலமாகக் கொணர்ந்து சிறப்பிக்க,தில்லையிலேயே அக்காப்பியம் அரங்கேறியது.


சிவநெறிப் பெரியார்களாகிய திருநீலகண்டர், கோச்செங்கட்சோழர், கணம்புல்லர், கூற்றுவர் முதலான நாயன்மார்களும், மறைஞான சம்பந்தராகிய சந்தான குரவரும், இரணியவர்மனும் வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சுகர் முதலிய முனிவர்களும், இத்தலத்தில் முக்தியடைந்த பெருமைகளும் கொண்டது தில்லைத்தலம்.


இறைவன் - இறைவி பெயர்கள்:


இறைவனின் திருநாமங்கள்!: மூலட்டானேசுவரர், திருமூலநாதர்.

சிவாலயங்கள் அனைத்திலும் அர்த்தசாம பூசைகள் முடிந்த பின்னர் எல்லாத் திருக்கோவில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதால் இம்மூர்த்திக்கு மூலட்டானேசுவரர்எனும் பெயர் வழங்கலாயிற்று.


மேலும், சபாநாயகர், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், ஆகிய காரணப்பெயர்களும் வழங்கப்படுகிறது. மேலும் இலக்கியங்களில், திருச்சிற்றமபலமுடையார்,தில்லை நாயகத் தம்பிரான், ஆனந்தத் தாண்டவப் பெருமான், பொன்னம்பலக் கூத்தர் என்னும் திருப்பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.


இறைவியின் திருநாமங்கள்!


உமையம்மையார், சிவகாமசுந்தரி.

இத்தாயாரின் ஆலயம் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில், சிவகங்கைத் திருக்குளத்தின் மேற்குப்புறத்தில் மிக அழகாக அமைந்துள்ளது.


திருக்கோவிலின் அமைப்பு:


இத்திருக்கோவில் ஐம்பத்தியொரு ஏக்கர் நிலப்பரப்பில், கிழக்கு,மேற்கு, தெற்கு, வடக்கு எனும் நான்கு பக்கங்களிலும் கம்பீரமான இராச கோபுரங்கள் அமைந்து அழகூட்டுகின்றன. இந்நான்கு இராச கோபுரங்கள் ஒவ்வொன்றும் 135 அடி (405மீ) உயரமும், ஏழு தளங்களும், பதின்மூன்று பெரிய செப்புக கலசங்களும் கொண்டது. இவ்விராச கோபுரங்கள் 90 அடி(27மீ) நீளமும், 60அடி(15மீ) அகலமும் உள்ள நீண்ட சதுர அமைப்புடன் கூடிய அடிப்பகுதியை உடையவை. 36அடி உயரம் வரை நேராகவும், கருங்கல்லாலும் கட்டப்பட்டவை. அதன் மேல்பகுதிகள் சிறிது சிறிதாக நேராகச் சென்று சிகரத்தில் முடிகின்றன. இக்கோபுரத்தின் சிகரங்கள் வ்ளைத்த கூரை போன்ற அமைப்புடையவை.

நான்கு இராச கோபுரங்களின் கீழ் அமைந்துள்ள கோபுர வாயில்கள் நான்கும் மிகவும் உயரமானவை. ஒவ்வொரு இராச கோபுர வாயிலும் 40 அடி (12மீ) உயரம் கொண்டு விளங்குகிறது. இராசகோபுர வாயிலின் இரு புறங்களிலும் நாட்டிய முத்திரை என்கிற பரதக்கலை சிற்பங்கள் அழகாகக் காணப்படுகின்றன. நடராசப் பெருமானார் தெற்கு முகமாக திருநடனம் புரிந்தருளுவதால் தெற்கு கோபுரத்தின் மீது சுவாமியின் கொடி கட்டப்பட்டிருக்கிறது. கோவிலின் உள் நுழைந்ததும் கோபுரத்தின் இரு புறங்களிலும், தென்பக்கத்தில் விநாயகப் பெருமானும், வடப்பக்கத்தில் சுப்பிரமணியரும் கிழக்கு முகமாகக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கக் காணலாம். தெற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தாலும் விநாயகரும், சுப்பிரமணியரும் சிறிய திருவுருவங்களில் காட்சி தருகிறார்கள். மேல் பாகத்தில் இரு புறங்களிலும் சுவாமியின் துவார பாலகர்களில் முதல்வர்களாக, ஆட்கொண்டார்,அய்யாக்கொண்டார் சந்நிதிகள் இருக்கின்றன. நான்கு கோபுரங்களைச் சுற்றியும் சுமார் 30அடி (9மீ) உயரமுள்ள கருங்கல்லாலான மதிற்சுவர், வீரப்ப நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


தெற்கு கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் சென்றால் தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக முக்குறுணி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. சுமார் 8 அடி உயரமுள்ள் இவ்விநாயகர் போன்று பெரிய உருவமுள்ளவராகவும், மூர்த்திகரமாய் உள்ள திருவுருவை வேறு எந்தத் தலத்திலும் காண இயலாது.

கற்பக விநாயகர் கோவில்:

தல விநாயகரான கற்பக விநாயகர் சந்நிதி வெளிப்பிரகாரத்தின் வலப்பக்கமாகச் சென்றால் மேற்கு கோபுரத்தை அடுத்து வெளிப்புறமாக அமைந்துள்ளது.இப்பெருமான் ஏழு திருக்கரங்களுடன் நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.

சுப்பிரமணியர் திருக்கோவில்:

மேற்கு கோபுரத்தின் உட்புறத்தில் வடக்குப் புறத்தில் கிழக்கு முகமாக பாலசுப்பிரமணியர் திருச்சந்நிதி அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டிக்கு ஆறு நாளும், சூரசம்ஹார விழாவும் நடைபெறுகிறது.

சோமசுந்தரர் கோவில்:

வெளிப்பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால் மதுரை சோமசுந்தரக்கடவுள் திருச்சந்நிதி அமைந்துள்ளது. அதற்கு வடக்கில் நூற்றுக்கால் மண்டபமும் அம்மண்டபத்திற்கு அருகில் ஒற்றைக்கால் மண்டப விநாயகர் எனப்படுகின்ற திருமூல விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளது. இச்சந்நிதிக்கு எதிரில் சிவகங்கைத் தீர்த்தமும் (குள்ம்), இதைப் போன்றதொரு பெரியதாகவும், நாற்புறமும் படிக்கட்டுகள் அமைந்ததாகவும் வேறு தலத்தில் எங்குமில்லை.

சிவகாமசுந்தரி அம்பாள் கோவில்:

மூன்றாம் பிரகாரமாகிய இவ்வெளிப்பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால், ஞானசக்தியாகிய சிவகாமசுந்தரி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. வேறு எத்தலத்திலும் இல்லாத சித்ரகுப்தர் சந்நிதி இக்கோவிலில் அமைந்துள்ளது. கொடிமரம் இருக்கும் மண்டபம் மிக விரிவானது. இடைத்தாங்கல் ஏதுமின்றி இவ்வளவு அகலமான கருங்கல் மண்டபம் வேறு எங்கும் காண முடியாது. கருங்கல் தூண் மரத்தூண் போல வேலைப்பாடு அமைந்திருப்பதும், தொங்குகின்ற கருங்கல் சங்கிலியும், சிற்ப வேலைப்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

பாண்டிய நாயகர் கோவில்:

இம்மூன்றாம் பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால் வடக்கு முகமாக துர்க்கையம்மன் சந்நிதி அமைந்துள்ளது. இதன் வடக்கே சண்முகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தேர்போல கருங்கல் சக்கரங்கள் யானைகள் ஆகியவற்றுடன் அமைந்து அழகுற காட்சியளிக்கிறது.

இக்கோவிலின் வடக்குப் புறத்தில் தெற்கு முகமாக உள்ள சண்முகர் சந்நிதிக்கு கிழக்கில் நவக்கிரகங்களால் பூசிக்கப்பட்ட நவலிங்கக் கோவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஐந்து சபையில் அன்னமய கோசமான ராசசபை என்னும் ஆயிரக்கால் மண்டபம் அமைந்துள்ளது. இங்கிருந்து தெற்கே சென்றால் கோவிலுக்குள் செல்லும் வழி அமைந்துள்ளது.

உட்பிரகாரத்தை அடைந்தவுடன் தெற்குப்புறமாக வலப்பக்கம் சென்றால் கிழக்குப்பிரகாரம் முடிந்து தெற்குப் பிரகாரம் தொடங்குகின்றது. இங்கு காலசங்காரமூர்த்தி சந்நிதி மனோமய கோசமாகிய நிர்த்தன சபையில் காளியுடன் ஆடிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. இந்நிர்த்தன சபையும் ஒரு தேர் வடிவில் அமைந்துள்ளன. தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் மிக அழகாக அமைந்துள்ளன.

அங்கிருந்து நடராசமூர்த்தியின் கொடிமரத்துக்கு வந்து ஆனந்த நடராசரைத் தரிசித்துக்கொண்டு மேலும் வலமாக வந்தால் இலக்குமி சந்நிதியையும், தண்டாயுதபாணி சந்நிதியையும் கண்டு வழிபடலாம். மேற்குப் பிரகாரத்தில் தேவாரம் இருந்த இடத்தைக் காண்பித்த , திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதியும் , பொல்லாப் பிள்ளையார் சந்நிதியும் அமைந்துள்ளது. மேற்குப் பிரகாரத்தில் கடைசியில் கிழக்கு முகமாக அப்பர், ஞானசம்பந்தர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வர் சந்நிதியும் அமைந்துள்ளது.

வடக்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, மல்லிகேசுவரர், வல்லப கணபதி, மோகன கணபதி ஆகியோர்கள் சந்நிதி அமைந்துள்ளன. நடுவில் உள்ள வடக்கு முகமாகச் சென்றால் விநாயகர்,சிவலிங்கம், கருங்கல்லில் சமைக்கப்பெற்ற இத்தலத்துப் புனிதமரம் ஆகியவை அமைந்துள்ளன.

இங்கு 63 நாயன்மார்களும்,இவர்கட்கு எதிரில் சுவரின்மேல் சிவபிரானின் 26 மூர்த்தங்களும்,ஸ்ரீசக்கரங்களும், ஸ்ரீதேவியின் அம்சமும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இங்கு சண்டேசுவரர் சந்நிதியும், கிழக்கே அருணாலாசலேசுரர் சந்நிதியும் அமைந்துள்ளன.

அருணாலேசுரர் சந்நிதியிலிருந்து தெற்குப் பக்கமாக வந்தால், ஆதிமூலமாயும், சுயம்பு மூர்த்தியாகவும் உள்ள மூலட்டானேசுவரர் சந்நிதி உள்ளது.

இக்கோவிலின் மிகப்பழமையான கல்வெட்டு திருமூலநாதர்பற்றியதுதான் ஆதித்த சோழன் திருமூலட்டானத்துப் பெருமானடிகளுக்கு நந்தா விளக்கு அளித்தது பற்றியது. வடமொழிப் புராணமான சூத சம்கிதை வாயு சங்கிதைகளில் மூலட்டானேசுவரர் பற்றி உள்ளதால் இதன் தொன்மையை உணரலாம். அடுத்து ஐயப்பன் சந்ந்தியும், திருவிழா மண்டபமும், யாகசாலையும் காணப்படுகிறது.

தேவசபை என்கிற பேரம்பலம்மேற்கு நோக்கிச் சென்றால் காணப்படும். உற்சவ மூர்த்தங்கள் இங்குதான் இருக்கின்றன. மேற்குப்புறத்தில், சட்டநாதர் சந்நிதி, சனீசுவரர் சந்நிதி,நவக்கிரகங்கள் சந்நிதி, அர்த்தசாம அழகர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன.

முதற் பிரகாரத் திருக்கோவில்:

முதற்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் சிற்றம்பலத்தின் தங்க ஓடுகள் வேய்ந்த விமானம் தெரியும். இங்குதான் ஆனந்த நடராஜ மூர்த்தி சிவகாம சுந்தரியுடன் நித்தியமும் ஆனந்தத் தாண்டவம் ஆடியருளுகிறார்.

பொன்னம்பலத் தத்துவம்:

ஞானசபை என்கின்ற பொன்னம்பலம், சிற்றம்பலம் என்பது, சித்சபையும், கனகசபையும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதாகும். சித்சபை எனப்படுகின்ற பொன்னமபலத்தின் மேல் ஒன்பது சக்திகளான தங்கக் கலசங்கள் உள்ளன. பொன்னம்பலத்தில் 64 கைம்மரங்கள் உள்ளன. இவை64 கலைகளாகும். மனிதனால் ஒவ்வொரு நாளும் விடப்படுகின்ற சுவாசங்களின் எண்ணிக்கையை உணர்த்துவதாக 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. மனிதனுடைய சுவாச சஞ்சார ஆதாரமான நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்துவதாக 72,000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.


கனகசபையில் உள்ள பதினெட்டுத் தூண்களும், பதினெண் புராணங்களை உணர்த்துவன. ஐந்து வெள்ளிப்படிகளும் ஐந்தெழுத்துக்களை உணர்த்துவன. வெள்ளிப் பலகணிகள் தொண்ணூற்றாறும், தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. சித்சபையில் உள்ள ஐந்து தூண்களும் நான்கு வேதங்களை உணர்த்துவன. பிரமபீடத்தின் உள்ள பத்து தூண்களில் கீழ் ஆறு தூண்களும் ஆறு சாத்திரங்களை உணர்த்துவன. மேல் இருக்கும் நான்கு தூண்களும் நான்கு வேதங்களை உணர்த்துவன.

சிதம்பர இரகசியம்:

சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு, ஆராத்தி காட்டப்பெறும் போது, திருவுறுவம் ஏதும் தோன்றாமல், தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டு காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலே வில்வதளம் தொங்குவதன் இரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே ஆகும்.


சிவன் விஷ்ணு சந்நிதிகள்:


சித்சபையில் நடம்புரியும் நாதனை தரிசித்துவிட்டு, பிரகாரமாக வந்தால், விநாயகர்,இலிங்கோத்பவர், சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி அருகிலுள்ள வழியில் மேலே சென்றால் ஆகாயலிங்கத்தை வழிபடலாம். பின்னர் கீழே வந்து பள்ளியறைக்கு அருகில் ஜைமினி,பிட்சாடனர், பைரவர், சந்திரர், குரியர், சண்டேசுவரர் சந்நிதிகளையும் காணலாம். இப்பிரகாரம் வழியாக வந்து மீண்டும் நடராசர் சந்நிதி அடைந்து எதிரில் உள்ள படிகளின் மீது நின்று பார்த்தால் தெற்கு முகமாக உள்ள நடராசர் சந்நிதியையும், கிழக்கு முகமாக உள்ள கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியும் கண்டு வழிபடலாம். இவ்வாறு ஒரே இடத்தில் நின்று,சிவன், விஷ்ணு இரு தெய்வங்களையும் வழிபடும் வகையில் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

இப்புனித தலத்தில் மிகச் சிறப்புற்று விளங்குவது, சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம்,நிருத்த சபை, ராசசபை என்கின்ற ஐந்து சபைகளாகும்.


மூர்த்தி தலம், தீர்த்தம் என்னும் மூன்றன் பெருமையுடைய இத்தில்லைத் தலத்தில் விசேடமான தீர்த்தங்கள் பத்து. அவைகளாவன: சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமடு, குய்ய தீர்த்தம்,திருப்பாற்கடல் ஆகியவைகளாகும்.


கல்வெட்டுகள்:


தில்லைச் சபாநாயகரின் கீழைக் கோபுரத்தில் இரண்டு கல்வெட்டுப் பாடல்கள் உள்ளன. இதிலிருந்து குலோத்துங்கன் திருமாலின் அம்சமாகத் தோன்றினான் என்பதும், இவன் தில்லைநாய்கரின் கோவிலை விரிவாக்கக் கருதி தன்னுடைய ஆட்சியின் 26ம் ஆண்டில் தில்லைத் திருப்பணியைத் தொடங்கினான் என்றும் தெரிகின்றது.


குலோத்துங்கனின் 46,47 ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள் திருமூலத்தானரின் கோவில் புறச் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தன. பின்னர் நடராசன் - கோவிந்தராசன்கோவில்களை வளைத்துப் புதிதாக எடுக்கப்பட்ட திருச்சுற்று மாளிகையின் வடசுவரில் பொறிக்கப்பட்டன. திருமூலத்தானர் கோவில் இக்காலத்தில் புதுப்பிக்கப் பெற்றது.


தில்லையின் சபாநாயகர் கோவிலின் முதல் திருச்சுற்று மேற்குப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டில் வடமொழிப்பாடல்கள் 31ம், தமிழ் வெண்பாக்கள் 36-ம் இடம் பெற்றுள்ளன.


தில்லை நடராசப் பெருமானுக்கு நாள் தோறும் ஆறுகால பூசைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி, திருவனந்தல் என்னும் பால் நைவேத்தியம் என்ற சிறப்பு நைவேத்தியமும் வழங்கப்படும்.


திருவிழாக்கள் :


நடராசப்பெருமானுக்கு ஓர் ஆண்டில் இரண்டு பெரிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை ஆண்டுதோறும் மார்கழித் திருவாதிரையிலும், ஆனி உத்திரத்திலும் நிகழ்ந்து வருகின்றன. ஆனித்திருமஞ்சனம், மார்கழித் திருவிழா, சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிரதோஷம், வெள்ளிக்கிழமை, கார்த்திகை ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும். அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்தியடைந்த நாட்கள் ஆகிய நாட்களில் விசேட பூசைகள் நடைபெறும்.


சித்சபையில் விளங்கும் நடராசப் பெருமானின் திருவுருவம்,விஞ்ஞானம், சமயம், கலை அனைத்தையும் ஒன்றாக்கி விளக்கும் ஓர் உண்மை ஒளியாகும். சோழப்பேரரசன் இராசராசன் காலத்தில்தான் இத்திருவுருவம் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதன் பின்னரே அனைத்து சிவாலயங்களிலும் இத்திருவுருவம் அமையலாயிற்று என்கின்றனர்.


நன்றி.: தகவல் தொகுப்பு உதவி - டாக்டர் ச.மெய்யப்பன் அவர்களின் புத்தகம்.

Tuesday, June 5, 2012

மாறியது நெஞ்சம்!


கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன தொழில் முறையில் இராட்சச இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கியிருந்தன. இன்று புதிதாக கட்டப்படும் ஷெட்டிற்கு மேலே சிமெண்ட்டு அட்டை போடுவதற்காக இரும்பு கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 30 அடியில் நெடிதுயர்ந்த கட்டிடம். நெருப்பில் வேலை செய்யக்கூடிய இடமாக இருப்பதால் அவ்வளவு உயரம் இருந்தால்தான் பாதுகாப்பு, வெப்பமும் சற்று மட்டுப்படும்.. 20 ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் முத்து கார்ப்பெண்ட்டர் வேலை பார்ப்பவர். கைதேர்ந்த வேலைக்காரன். இவர்களுடைய ஐந்தாவது கட்டிடம் இன்று இவன் வேலைபார்ப்பது.. அனாவசியமாக வாய் பேசாமல், காரியத்தில் கண்ணாய் இருப்பவன். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பவன்.

அன்று கத்திரி வெய்யில் காலம். 112 டிகிரி... மண்டையைப் பிளக்கும் வெய்யில். மேலே ஏறி கம்பி கட்ட வேண்டும். வெய்யில் என்று பார்த்தால் வேலையாகுமா.. பெரிய இராட்சத இரும்பு கிரில் மேல் தளத்தின் மீது, வேலை செய்வதற்கு தோதாக, இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டு பாதுகாப்பாக மேலே ஏறி, கம்பி கட்டி, ஆணியும், ஸ்குரூவும் வைத்து முடுக்க வேண்டும். இரும்பு கம்பியுடன் சேர்த்து பெல்ட்டை கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். உயரம் அதிகம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடு அது.

மனைவி தன்னைப்போல கட்டிட தொழிலுக்கு வந்து வெய்யிலிலும், மழையிலும் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது, அவளுடைய சிவந்த மேனி மெருகு கலையாமல் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அவளை ஜவுளிக்கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தான். அன்று வாடிய முகத்துடன் வேலைக்கு வந்தவன் ஒருவரையும் கண்டு கொள்ளாமல் வழக்கத்திற்கு மாறாக உம்மென்று அவன் பாட்டிற்கு பெல்ட்டை எடுத்து இடுப்பில் மாட்டிக் கொண்டு மளமளவென மேலே ஏற ஆரம்பித்தான். மணி கிட்டத்தட்ட மதியம் 12ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. முத்து திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை, இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டான். கீழே நின்று கொண்டிருந்த சிட்டாளுக்கு இவன் ஏன் இப்படி பெல்ட்டை அவிழ்க்கிறான் என்று சந்தேகமாக இருந்தது.. உஸ்...உஸ்ஸ்.. என்று உஷ்ணம் தாங்காமல் சப்தம் எழுப்பியதால், பெல்ட் உறுத்துவதால் கழட்டி விட்டான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள் அவள்...

அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்க திடீரென அம்மா...... ஐயோ... என்று பேரிரைச்சல். மரண ஒலி என்றால் இதுதான் என்று அனைவரும் உணரும் வேளையில் 30 அடி உயர கட்டிடத்திலிருந்து தொம்மென்று கீழே விழுந்த சத்தம்.. ஐயோ என்று அனைவரும் ஒருசேர கத்திக் கொண்டு சத்தம் வந்த திசை நோக்கி அருகில் ஓட.. அங்கே.. மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கார்ப்பெண்ட்டர் முத்து! மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.......

ஏம்மா, உனக்கு எத்த்னை த்டவை சொல்றது.. இப்படி ஒரு நாளைப்போல லேட்டா வறியே, இது உன் அப்பன் வீட்டு கடைன்னு நினைப்பா... பேசாம வேலையை விட்டு நின்னுக்கோ. எப்பப் பார்த்தாலும் இதே கழுத்தறுப்பா இருக்கு உன்கிட்ட

சார், மன்னிச்சிடுங்க சார், குழந்தைக்கு உடம்பு சரியில்ல, அஸ்பத்திரியில ஏகப்பட்ட கூட்டம்.கியூவில நின்னு மருந்தும் வாங்கிட்டுவர நேரமாயிடிச்சு சார், இந்த ஒரு முறை மன்னிச்சிசுடுங்க சார்

பேசும்போதே கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அவளால் அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை கம்மிவிட்டது. மேனேஜருக்கும் பரிதாபம் வந்ததோ என்னவோ, “போம்மா.. போய் வேலையைப் பாரு. இனிமே இப்படி லேட்டால்லாம் வராதேஎன்று சொல்லி அனுப்பி வைத்தார்..

அந்தப் பெரிய ஜவுளிக்கடையில் விற்பனையாளர் பிரிவில் பில் போடும் வேலை பார்க்கும் இந்த மல்லிகாவிற்கு அந்த வேலைதான் தனக்கும் தன்னை நம்பி இருக்கும் இரண்டு குழந்தைகள், மாமனார், கணவன் ஆகிய அனைவருக்கும் சோறு போடும் அன்னலட்சுமி. இந்த வேலையிலும் பிரச்சனை வந்தால் பிறகு அனைவரும் வயிற்றுக்கு ஈரத்துணிதான் கட்டிக் கொள்ளவேண்டும்..

காலையில் எழுந்திருக்கும் போதே இன்று ஏனோ மனதில் சொல்ல முடியாத வேதனை.. துவண்டு கிடக்கும் தன் இரண்டு வயது குழந்தை திவ்யாவிற்கு நான்கு நாட்களாக காய்ச்சல். கைவைத்தியமாக ஏதேதோ செய்தும் ஒன்றும் பிரயோசனமில்லை. மாமனாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ஓடி வந்துவிடுகிறாள் வேலைக்கு. பாவம் பெரியவர் குழந்தையை வைத்துக் கொண்டு படாத பாடுபடுகிறார். குழந்தையை வேறு பெரிய தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கையில் காசும் இல்லை. சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ குறுகுறுப்பாக இருக்கவே திடீரென சுயநினைவிற்கு வந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.. சேல்ஸ்மேன் சின்னப்பன், தன்னையே விழுங்குவதுபோல பார்த்துக் கொண்டிருந்தான். உடல் இளைத்துப் போனதால், இரவிக்கை உடம்போடு ஒட்டாமல் தனியாக தொங்கிக்கொண்டிருக்க, குழந்தை பற்றிய நினைவில் தன்னிலை மறந்தவள், சேலை ஒருபுறம் விலகிப்போனதும், தெரியாமல் யோசனையில் மூழ்கிக் கிடந்திருக்கிறாள். இந்த வேதனையையும் சேர்த்தே அந்த கழுகுக்கண்கள் விழுங்கிக் கொண்டிருந்தது... அருவெறுப்பாய் அவனைப் பார்த்த ஒரு பார்வையில் அவன் கூனிக்குறுகிப் போனான்.

காலையிலேயே இன்று கந்து வட்டி ராசு வந்து வீட்டின் முன்னால் நின்று மானம் போக கத்திவிட்டான். இரண்டு மாதமாக வட்டி கொடுக்காவிட்டால் சும்மாவா விடுவான் அந்தப் பாவி.. வாங்கிய பணத்திற்கு மேலேயே வட்டி கொடுத்தாகிவிட்டது. ஆனாலும் முதல் கொடுக்க முடியாதலால் அவன் பேசிய பேச்சு, கணவன் முத்துவை புரட்டிப் போட்டதும் நிசம்தான்.. மனைவியையும், குழந்தைகளையும், அப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த அக்கரை காட்டுபவன். இத்தனைக்கும், குடியோ, கூத்தியோ அல்லது சூதாட்டமோ எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. கார்ப்பெண்ட்டர் வேலையில் நல்ல வருமானமும் உண்டு. நல்ல தொழில் தெரிந்த வேலைக்காரன் என்று மேஸ்திரி பலமுறை புகழ்ந்து, விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி இருந்தும் கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்கும் அளவிற்கு அப்படி என்னதான் பிரச்சனை இவனுக்கு, வீட்டிற்கும் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை. அவ்வப்போது ஏதோ 50ம், 100ம் கொடுப்பதோடு சரி. ரொம்ப நாள் புரியாத புதிராக இருந்த இந்த விசயத்தை துப்பறிந்துதான் கண்டுபிடித்தாள்..

நாட்டில் லாட்டரி சீட்டு ஒழிந்துவிட்டது என்று சட்டம் போட்டாலும், திருட்டுத்தனமாக விற்பவர்கள் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பெரிய நெட் ஒர்க்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 3000 கொடுத்தால், 5000க்கு சீட்டு கொடுப்பார்களாம். காலையில் நோட்டை எண்ணிக் கொடுத்துவிட்டு நாள் முழுவதும் லட்சக்கணக்கில் பணம் வரப்போகிறது மனைவியையும், குழந்தைகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கப் போகிறோம் என்ற கற்பனைக் கோட்டையுடன் வலம் வருவான். மாலையில் பார்த்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று விழும். பல நாட்கள் அதுவும் கிடையாது. இப்படியே வாழ்க்கை ஓடுகிறது. 100 லட்சமும், கோடியும் ஆகும் நாள் தூரத்தில் இல்லை என்று நம்பிக்கை மட்டும் பெரிதாக இருந்தது. மாலையில் மனம் நொந்து அத்தனை சீட்டுகளையும் கிழித்துப் போட்டுவிட்டு முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வருவான். தன் கூலிப்பணத்தை வேட்டு விட்டவன், மெல்ல மெல்ல ஊரைச்சுற்றி கடன் வாங்கவும் ஆரம்பித்து விட்டான். இன்று கந்துவட்டியில் வந்து முடிந்திருக்கிறது. அவன் மிகக் கேவலமாக தன் மனைவியை சம்பந்தப்படுத்தி பேசவும் அதைத் தாங்க முடியாமல் நொறுங்கிப் போய்விட்டான் முத்து. இரண்டு குழந்தை பெற்றவள் போலவா இருக்கிறாள்..இவ்வளவு ஏழ்மையிலும் அவளுடைய அழகு மட்டும் குறைவில்லாமல் தானே அனைவரின் கண்களையும் உறுத்துகிறது என்று வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டான்... பாழாய்ப்போன இந்த லாட்டரி சீட்டுப் பழக்கம் சம்பாதிக்கிற காசு அனைத்தையும் முழுங்குவதோடு, கந்து வட்டிக்குக்கூட கடன் வாங்கச் செய்கிறது. என்றாவது ஒரு நாள் மொத்தமாக பெரியதாக பரிசுப்பணம் அடிக்கத்தான் போகிறது தாமும் குடும்பத்தாருடன் பெரிய பொழைப்பு பிழைக்கப் போகிறோம் என்ற கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான்..

என்றும் இல்லாத மோசமான நாளாக அன்று தானும் கணவனை கண்டபடி திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு பெண் எவ்வளவு நாட்கள்தான் பொறுமை காக்க முடியும்.... கோபத்தில் சற்று வார்த்தைகள் நெருப்புத் துண்டாய் வந்து விழுந்ததை அவளாலேயே தடுக்கவும் முடியவில்லை. உள்ளதைக் கொண்டு நிம்மதியாக வாழுவதை விட்டுவிட்டு இப்படி பேராசைப்பிடித்து குடும்ப அமைதியையே குலைக்கிறானே என்று கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்ததும் உண்மைதான். தான் பேசிய அத்தனைப் பேச்சிற்கும் மௌனமே பதிலாக வார்த்தை ஏதும் பேசாமல் தலை குனிந்தவாறே இருந்தானே என்று நினைத்து, நினைத்து மனதில் குமைந்து கொண்டிருந்தாள். அன்று பண்டிகைக்காலம் ஏதும் இல்லாத சமயமாதலால், அந்த உச்சி வெய்யில் நேரத்தில் கடையில் எந்த வியாபாரமும் இல்லாதலால் இவளுடைய சிந்தனை ஓட்டத்திற்கு தடையேதும் இருக்கவில்லை..

ஏய்யா.. நீயெல்லாம் ஒரு மனுசனா.. கட்டிக்கிட்டு வந்தவளுக்கு இப்படி ஒரு அவப் பெயரை வாங்கிக் கொடுத்துப்போட்டியே.. நாண்டுக்கிட்டு சாவலாம் போல இருக்குதுய்யா.. இரண்டு குழந்தைகளை பெத்துப் போட்டுட்டனே.. அதுக அனாதையா தெருவுல நிக்குமேன்னு பல்லைக் கடிச்சிக்கிட்டு உசிரை பிடிச்சிக்கிட்டு இருக்கேன்யா.. த்தூ... நீயெல்லாம் ஒரு மனுசனா...?”

இதுதான் தான் காலையில் இறுதியாக கணவனிடம் பேசியது. திடீரென அந்த ஏ.சி. குளுகுளு அறையிலும், தெப்பமாய் வியர்த்துக் கொட்டியது அவளுக்கு.

ஐயோ, தப்பு செய்துட்டோமே.. இப்படி பேசியிருக்கக்கூடாது. பாவம் மனுசன் எவ்ளோ வேதனைப்பட்டிருப்பாரு.. இன்னும் கொஞ்சம் நிதானமா வார்த்தையை விட்டிருக்கலாம். நரம்பில்லாத இந்த நாக்குல ஏதோ சனிதான் பிடிச்சிப்போச்சி போல. இல்லேன்னா இந்த 10 வருச வாழ்க்கைல ஒரு நாள்கூட இப்படியெல்லாம் தான் பேசியதே இல்லையே..!

மாலை போய் கணவனை சமாதானம் பண்ணும் வரை தன் மனம் ஓயப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாலும் அதைத் தவிர்க்க முடியவில்லை. சிலந்தி வலையாய் பின்னிய நினைவுகளினூடே சிக்கிய புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். தன் மேசை மீதிருக்கும் இண்டர்காம் ஒலிப்பது கூட காதில் விழவில்லை அவளுக்கு. பக்கத்து செக்‌ஷன் விற்பனைப்பெண் வந்து அவளை உலுக்கி, “போன் அடிப்பது கூட தெரியாமல் அப்படி என்னக்கா நினப்பு உனக்கு.. மேனேஜர் கூப்பிடுவாரு போல.போனை எடு.. நீ உம்பட சீட்டுல இல்லைன்னு நினைச்சு கண்டமேனிக்கு திட்டுவாரு.. சீக்கிரமா எடுத்து பேசுக்காஎன்று போனை எடுத்து கையில் கொடுத்தாள்..

சார்.. சார். என்ன சார். என்ன சொல்றீங்க சார். ஐயோ அப்படியா. கடவுளே...... எஞ்சாமி..என்று அலறியவள் அப்படியே மயக்கம் போட்டு சாய்ந்து விட்டாள்.. அருகிலிருந்த பெண் தாங்கிப்பிடித்து, அதற்குள் மற்றவர்களும் வந்து முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிவித்து விசயம் அறிந்து, மேனேஜரின் அனுமதியுடன் மல்லிகாவை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

மருத்துவமனையின் வாசலில் தங்கள் ஏரியாவின் அத்துனை கட்டிடத் தொழிலாளிகளும் நின்று கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இயந்திரமாக யார் பின்னாலோ அப்படியே சென்றவள் கணவனை தீவிர சிகிச்சைப்பிரிவு அறையின் கதவின் கண்ணாடி வழியாக பார்த்தவள் ஓ வென அலற ஆரம்பித்து விட்டாள். சுற்றி மருத்துவர்கள் புடைசூழ தன் அன்புக் கணவனின் உடல் தூக்கிப் போடுவதையும் மருத்துவர்கள் முகத்தில் அபாயரேகை ஓடுவதையும் உணர முடிந்தது அவளால்.. என்னமோ நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது அவளுக்கு. வெளியில் வந்த மருத்துவர்களில் ஒருவர், “யாரும்மா மல்லிகா .. நீதானம்மா. மனசை தேத்திக்கம்மா. உன் கணவன் பிழைப்பது அரிது. எங்களால் ஆன எல்லாம் செய்துட்டோம். இனி ஆண்டவன் கையில்தான் உள்ளது அவர் பிழைப்பது. உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று ரொம்ப நேரமா துடிக்கிறார் பாவம். போய் பேசிவிட்டு வாம்மா. அவருக்கு தைரியம் சொல்வதுபோல் பேசும்மா. அழுது ஆர்ப்பாட்டம் செய்துடாதே, அதுவே அவருக்கு எமனாப் போயிடும் சரியா.. போம்மா போய் பேசிட்டு வா..

உள்ளே சென்றவள் அழுகையை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் எடுத்தாள். சத்தம் கட்டுப்பட்டாலும், கண்ணீர் ஆறாய் பெருகி ஓடியது.. சில துளிகள் கணவனின் மீதும் விழ அவன் உடலில் லேசாக ஏற்பட்ட அதிர்வை அங்கிருந்த மானிட்டர் மூலம் அறிய முடிந்தது அருகில் இருந்த செவிலியருக்கு..

என்ன சாமி ஆச்சு. ஜாக்கிரதையா இருக்கப்படாதா.. உன்னைய நம்பித்தான ராசா நாங்கள்ளாம் இருக்கோம். உனக்கு ஒன்னியும் ஆவாது. நீ பிழைச்சு வந்துடுவேன்னு டாக்டருங்க சொல்றாங்க. தைரியமா இருய்யா.

அணையப்போகும் தீபம் சுடர்விட்டு பிரகாசிப்பது போல மிகத்தெளிவாகப் பேசினான் முத்து. தன் முடிவுக் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தும் இருந்தவன் போலத்தான் இருந்தது அவன் பேச்சு.

மல்லிகா, என்னை மன்னிச்சுடு புள்ள.. உன்னைய ராணியாட்டமா வச்சிக்கிடனும்னுதான் நானும் இத்தனை வருசமா போராடிட்டிருக்கேன். ஒரு பிரயோசனமும் இல்ல.. உனக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டமா குடுத்துப்பிட்டேன். இனிமே உனக்கு வாழ்க்கைல கஷ்டமே இருக்கக் கூடாதுன்னுதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். வழியில வரும்போதே மேஸ்திரிகிட்ட எல்லாத்தையும் புரிய வச்சிருக்கேன் முடிஞ்சவற.. அவரு எப்படியும் கூட்டத்தை சேர்த்தி முதலாளிகிட்ட கனிசமா ஒரு தொகை வாங்கித் தருவாரு. அதை வச்சு சூதானமா பொழைச்சுக்கோப் புள்ள.. என்னால முடிஞ்சது அவ்ளோதான். நான் உனக்கு பண்ணது பெரிய பாவம் என்னைய மன்னிச்சிடும்மா. குழந்தைகளை நல்லா படிக்க வைய்யி தாயி.. அப்பாவை நல்லபடியா பார்த்து எடுத்துப் போட்டுடு.. இனியாவது கடன் இல்லாம நிம்மதியா இரும்மா.. மொத்தமா 50 ஆயிரம் கடன் இருக்கும். யார் யாருக்கு கொடுக்கனும்னு எம்பட இரும்பு பொட்டில கணக்கு இருக்கு பாரு. அவிங்களுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை பத்திரமா பேங்கில போட்டுக்கோ. குழந்தைகள நல்லபடியா பாத்துக்கோ தாயி... என்னைய மன்னிச்சிடும்மா.. என்று சொல்லும் போதே திணறல் அதிகமாகி தூக்கிப் போட ஆரம்பித்தது கண்டு நடுங்கிப்போய் விட்டாள் மல்லிகா. அதற்குள் டாக்டர்கள் வந்து சூழ, மெல்ல மெல்ல அவன் மூச்சு அடங்க ஆரம்பித்தது. டாக்டர்கள் தன் கணவனின் மார்பை வைத்து அழுத்தும் கொடுமையை கண்ணால் பார்க்கச் சகிக்க முடியாமல் தலையை திருப்பிக் கொண்டாள். ஒரு நர்ஸ் வந்து அவளை கையைப்பிடித்து வெளியில் கொண்டுவந்து விட்டதுதான் தெரியும்.. உலகமே இருண்டு பிரம்மை பிடித்தது போல ஆகிவிட்டது அவளுக்கு.

எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து கிடந்தாளோ தெரியவில்லை.. சங்கத்துக்காரர்கள் முதலாளியிடம் தகராறு செய்து கொண்டிருப்பது மட்டும் நன்றாகப் புரிய ஆரம்பித்தது அவளுக்கு. கணவனின் உயிர் பிரிந்து, மூட்டை கட்டி எடுத்துப்போக தயார் நிலையில் இருந்தும் மேஸ்திரியும் மற்ற ஆட்களும் முதலாளியிடம் 5 இலட்சம் கொடுத்தால்தான் ஆச்சு என்று தகராறு செய்து கொண்டிருப்பது புரிந்தது. பணம் கொடுக்காமல் உடலை வாங்க முடியாது என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். மல்லிகா தன் அழுகையை நிறுத்திவிட்டு, தெளிவாக ஒரு முடிவிற்கு வந்தவளாக மளமளவென எழுந்து சென்றாள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் மரத்தடியை நோக்கி.. அவ்வளவு பெரிய முதலாளி பாவம் மரத்தடியில் நின்று கொண்டு சமாதானம் பேசிக்கொண்டிருந்தார். இன்று ஒருவருக்கு இப்படி தங்கள் மேல் தவறே இல்லாதபோதும் 5 இலட்சம் கொடுத்தால் இதுவே ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று அவர் வாதம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். முதலாளியின் அருகில் சென்ற மல்லிகா,

ஐயா, என் புருசன் மேலத்தான் தப்பு ஐயா. அவரு மனசு அறிந்துதான் தானே பெல்ட்டை கழட்டி விட்டு கீழே விழுந்து உயிரை விட்டிருக்கார். அதனால நீங்க விருப்பப்பட்டதை குடுங்க சார். அனாவசியமா த்கராறெல்லாம் வேண்டாம்.

என்றாள் தெளிவாக.

மேஸ்திரி அவளைப் பார்த்து சத்தம் போட முயன்ற போது கையமர்த்தி, அவர்கள் யாரும் இந்த விசயத்தில் தலையிட வேண்டாம் என்று தெளிவாகக் கூறிவிட்டாள். அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க தயாராகிவிட்டாள். மாமனாருக்கு தகவல் சொல்லி வீட்டை தயார் நிலையில் வைக்க ஆள் அனுப்பிவிட்டு, கணவனின் உடலை ஆம்புலன்சில் ஏற்றியவுடன் அமைதியாக அருகில் சென்று அமர்ந்தவள்.. அதற்குமேல் தாங்க முடியாமல் அழுகை வெடித்துவிட்டது.

இறுதி காரியங்கள் அனைத்தும் முடிந்து, உறவினர்கள், பழகியவர்கள் என அனைவரும் அவரவர் வேலையைப்பர்க்க போய்விட்ட பின்புதான் வருங்காலம் குறித்த பாரம் நெஞ்சை அடைத்தது. மேஸ்திரியும் பிழைக்கத் தெரியாதவள் என்று கண்டபடி திட்டிவிட்டு சென்று விட்டார். அப்போதுதான் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. முதலாளி அனுப்பியதாக சொல்லி, அவருடைய காரியதரிசி ஒரு பையில் பணம் கொண்டுவந்து கொடுத்தார். கணவன் சொன்ன அதே ஐந்து இலட்சம் பணம் மட்டுமில்லாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் எவ்வளவு படிக்க விரும்பினாலும் அதன் மொத்த செலவையும் தங்கள் கம்பெனி டிரஸ்ட் ஏற்றுக் கொள்வதாக சட்டப்பூர்வமாக எழுதிக் கொடுத்திருந்தார்கள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.. எல்லாம் கடவுள் செயல் என்று மட்டும்தான் எண்ணமுடிந்தது அந்த நேரத்தில்..

காரியதரிசிக்கு மட்டும் பலமான ஆச்சரியம். முதலில் பணம் கொடுக்க மறுத்த முதலாளி, பின்பு பணமும் கொடுத்து, அந்தக் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதன் காரணம் புரியாமல் முதலாளியிடமே சென்று கேட்டும் விட்டார். ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்த முதலாளியின் மனதில், லாட்டரி சீட்டின் நெட் ஒர்க்கின் பிரதான தலைவர் பொறுப்பில் இருக்கும் தன்னால் இப்படி எத்துனை குடும்பங்கள் சீரழிந்ததோ தெரியவில்லையே.. இப்படி ஒரு கோணத்தில் இதுவரை தான் சிந்திக்கவே இல்லையே என்று நொந்ததுடன் நிற்காமல் உடனடியாக அந்தத் தொழிலிருந்து விலகுவதாக முடிவும் எடுத்தார்.. முத்துவின் ஆன்மா தன்னை வாழ்த்தும் என்றும் நம்பினார் அவர்!

நன்றி : திண்ணை வெளியீடு


Sunday, June 3, 2012

ஆயுளைக்கூட்டும் அருமருந்து!


அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அன்புடைமை - குறள் 73


அன்பும், இரக்கமும் இணைபிரியா தோழிகள். அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இரக்கம் இருக்கும். இரக்கம் இருப்பவர்கள் நோய்க்கு விடை கொடுத்து ஆயுளையும் கூட்டிக் கொள்கிறார்களாம். இப்படி சமீபத்திய உளவியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆம் இந்த இரக்க குணம் மகிழ்ச்சியை மட்டும் அல்லாது நம் ஆயுளைக் கூட்டவும் வழிவகுக்கிறதாம்..வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ கண்மூடித்தனமான பள்ளங்களையும், முகத்திலடித்தாற் போன்ற நிகழ்வுகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது நம் சூழலையும் நிம்மதியையும் எந்த அளவிற்கு பாதிக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. ஒரு சிறு கற்பனையை தட்டிவிட்டுப் பாருங்களேன்.. ஒரு ஐந்து நிமிடம் இந்த உலகம் முழுவதும் அன்பிற்கு கட்டுப்பட்டு இரக்க குணத்துடன் செயல்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று. போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஒதுங்கி வழிவிடும் நல்ல எண்ணம், அங்காடியில் நீண்ட வரிசையின் இறுதியில் நிற்பவருக்கு, அவருடைய அவசரம் கருதி முன்னேறிச்சென்று பில் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கும் இரக்க குணம், பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவருக்கு தன் பயணச்சீட்டை விட்டுக்கொடுக்கும் உன்னத குணம், இப்படியெல்லாம் நடந்தால் வாழ்க்கை எல்லோருக்கும் எவ்வளவு எளிதாக இருக்கும்?

’தக்கன பிழைத்து வாழ்தல்’ என்ற கோட்பாடு போன்று ‘நல்லன பிழைத்து வாழும்’ என்ற புதிய கோட்பாடை தம்முடைய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார், பேராசிரியர் சேம் பௌல்ஸ் என்ற அமெரிக்க நாட்டின் சாண்ட்டா ஃபீ நிறுவனத்தின் பண்டைய சமுதாய வாழ்க்கை முறைகள் பற்றிய ஆராய்ச்சியாளர். சுருங்கச் சொன்னால், நாம் நமக்குள்ளேயே அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையக் கொண்டவர்களாகவே இருக்கிறோமாம், குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்காகவாவது அக்குணம் தாராளமாகவே கொண்டிருக்கிறோம் என்கிறார்.

இதற்கு ஆதரவாக கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியை சோஞ்ஞா இதனை நிரூபிக்கும் வகையில் குத்து மதிப்பாக சிலரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வுகளை ஊக்குவித்திருக்கிறார். இவருடைய முடிவுகள் இந்த கோட்பாட்டிற்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகளை நடைமுறைப்படுத்தும் காலங்களில் அவர்களுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். அதாவது எவர் ஒருவர் அடுத்தவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ, எரிச்சலோ இல்லாமல் உண்மையான அன்புடன், இரக்கம் செலுத்துகிறாரோ அவருடைய மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

அதாவது அடுத்தவருக்கு அவ்ர் முன்பின் அறியாதவராக இருப்பினும், கதவை திறந்துவிட்டு அவர் முன்செல்ல வழிவிட்டு ஒரு வினாடி பொறுத்து தாம் பின் செல்லும் போது அளவற்ற ஒரு ஆனந்தம் உள்ளொளி பெருக்கி வருவதை உணர முடியும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் செய்யும் உதவிகளாலும்,அன்பு காட்டுவதாலும் இது போன்றதொரு ஈடில்லா இன்பம் கிடைக்கப்பெறுவதில்லை என்பதையும் சொல்கிறது இந்த ஆய்வறிக்கை. அதெல்லாம் கடமையில் சேர்ந்துவிடும் போல. முன்பின் அறியாத ஒருவரிடம் நாம் காட்டும் அன்பும், இரக்கமும், அவருக்குச் செய்யக்கூடிய சேவையும், தம்மையே தாம் நல்ல குணவான் என்று உள்ளூர எண்ணி மகிழ்ச்செய்யுமாம்.. இந்த நற்குணம் புது நட்புகளை உருவாக்குவதோடு, பரந்த மனதோடு நன்றி பாராட்டச் செய்யும் இனிய தருணமும் கிடைக்கப்பெறும் என்கிறார்.

இரக்கம் காட்டுவதன் மூலம் நம் மனநிலையில் நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைகிறதாம். மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிற வாதங்களும், விவாதங்களும், அதிக கோபத்தை ஏற்படுத்தி, அது இருதய பாதிப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தலும், போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதாம். அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், ஸ்ரீஅரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டிணத்தடிகள் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருந்தாலும் அதனைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை.

அன்போடு இயைந்த இந்த இரக்க அலையை தம்மைச் சுற்றி பரவச்செய்யும் போது மிக வெளிப்படையான மகிழ்ச்சி அலை பரவுவதையும் உணர முடியும். இதையே உலகத்தின் அனைத்து மதங்களும் உணர்த்துவதும் கூர்ந்து நோக்கத்தக்கது. அன்பும், இரக்கமும் இணைந்து கொடுக்கிற அந்த மகிழ்ச்சியின் மூலம் நாம் அடைவது ஏராளம்.

“மகிழ்ச்சியான தன்மையினை வெளிப்படுத்துவதன் மூலம் உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட தொல்லைகளை நீக்கிவிடலாம் அல்லது வென்றே விடலாம்” என்கிறார் ஆங்கில நூலாசிரியர் ஆர்ஷர் ஹெல்ப்ஸ். ஜோசப் அடிசன்,”மகிழ்ச்சியான மனநிலை நோய்களின் அல்லது வேறு குறைபாடுகளின் கடுமையினைக் குறைக்கும்” என்கிறார்.

பெண்களுக்கு வயோதிகத்தின் சுருக்கங்கள் வெளிப்படாமல் இருக்க வேண்டுமானால் டாட்லர் என்ற நிபுணரின் கூற்றையும் கவனிக்க வேண்டும்.. “மகிழ்ச்சியான மனப்போக்கும், எதிலும் நிதானமான சுபாவமும், உங்கள் முகத்தின் பொலிவை அதிகமாக்குகிறது” மகிழ்ச்சியான மனோபாவம், இளம்வெய்யிலைப் போன்று எல்லாவற்றின் மீதும் ஒளிபாய்ச்சுவதாம்

.இது சம்பந்தமாக வெற்றிச் சிந்தையைத் தூண்டும் எழுத்தாளர் காப்மேயர் சொல்வதைப் பாருங்கள். “பேச்சு, எழுத்து, செயல் - இந்த மூன்று வார்த்தைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணத்தை வெற்றி இன்ஷ்யூரன்ஸ் ஆக்கிக் கொள்வதற்கு இவை வழிகாட்டும் விசயங்கள்” என்கிறார். மேலும் இது குறித்து,“நீங்கள் பேசப்போவதும் எழுதப் போவதும் செய்ய்ப்போவதும் நல்லெண்ணத்தைத்தான் தோற்றுவிக்கும் என்ற உறுதியான பதில் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் செய்யப்போவது எவ்வளவு புத்திசாலித்தனமானதாகவும், அவசரமானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால்கூட அதைச் செய்யாதீர்கள் - புத்திசாலித்தனம் வெளிப்படுகின்ற வாய்ப்பு தடைப்படடு, தன்னுணர்வு பாதிப்புக்குள்ளானாலும் தவறான எண்ணம் ஏற்படுத்துகிற பாதிப்புகளைவிட இது அதிகம் இல்லை என்கிறார் உறுதியாக. இதனால் மகிழ்ச்சி என்பது முற்றிலுமாக தடைப்பட்டுவிடும் என்கிறார் காப்மேயர்.

ஸ்ரீஅரவிந்தர் எவ்வாறு இந்தியப் பண்பாடு அதனுடைய ஆன்மாவின் ஒரு வெளிப்பாடாகவே விளங்குகிறது என்பதை விளக்கும் போது, “குறுகிய எந்த நோக்கின்படியும் நாம் தன்னந்தனியாக உலகில் இருக்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள நவீன உலகை நன்கு அறிந்துகொள்வது, அதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியமாகும். இன்றேல் நாம் வாழ்வதே கடினமாகிவிடும்” என்கிறார். அந்த வகையில் பரந்த நோக்கம் கொண்ட அன்பும், இரக்கமும் நம் சகமனிதர்களின் நேசத்தைப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கும்.

அன்பும், இரக்கமும் வேண்டி நிற்போர் பலர். அவர்களில் முதியோர் இல்லத்தில் விடப்பட்டு உறவுகள் இன்றி தனிமையில் வாடுபவர்களுடன் நம்மால் இயன்றவரை ஒருசில மணித்துளிகளாவது நம் பொன்னான நேரத்தை செலவிட்டு அன்பாகவும், ஆதரவாகவும் பேசலாம் அல்லது உள்ளறை விளையாட்டு ஏதேனும் அவர்களோடு சேர்ந்து விளையாடலாம், மருத்துவமனையில் உதவியின்றி சிரமப்படும் அனாதை நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம். இப்படி எத்தனையோ சின்ன, சின்ன விசயங்களில்கூட இரக்கம் காட்டும் போது நம் உள்ளம் பேருவகை கொள்வதை நம்மால் உணர முடியும். குழந்தைகளுக்கு இயல்பாகவே இரக்க குணமும், அன்பை தன்னலமற்ற முறையில் வெளிப்படுத்தவும், உதவும் குணமும் இயல்பாகவே அமைந்துள்ளது. வளரும் காலங்களில் அதனை நாம் நல்லவிதமாக சொல்லி வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் கலையை நாமும் பயின்று நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தி அனைவரும் மகிழ்ச்சியாக நோயற்ற வாழ்வை வாழ்வோமே.

நன்றி : அதீதம்