Sunday, June 3, 2012

ஆயுளைக்கூட்டும் அருமருந்து!


அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அன்புடைமை - குறள் 73


அன்பும், இரக்கமும் இணைபிரியா தோழிகள். அன்பு இருக்கும் இடத்தில் மட்டுமே இரக்கம் இருக்கும். இரக்கம் இருப்பவர்கள் நோய்க்கு விடை கொடுத்து ஆயுளையும் கூட்டிக் கொள்கிறார்களாம். இப்படி சமீபத்திய உளவியல் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆம் இந்த இரக்க குணம் மகிழ்ச்சியை மட்டும் அல்லாது நம் ஆயுளைக் கூட்டவும் வழிவகுக்கிறதாம்..வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ கண்மூடித்தனமான பள்ளங்களையும், முகத்திலடித்தாற் போன்ற நிகழ்வுகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது நம் சூழலையும் நிம்மதியையும் எந்த அளவிற்கு பாதிக்கக்கூடியது என்பது நாம் அறிந்ததே. ஒரு சிறு கற்பனையை தட்டிவிட்டுப் பாருங்களேன்.. ஒரு ஐந்து நிமிடம் இந்த உலகம் முழுவதும் அன்பிற்கு கட்டுப்பட்டு இரக்க குணத்துடன் செயல்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று. போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வேளையில் ஒதுங்கி வழிவிடும் நல்ல எண்ணம், அங்காடியில் நீண்ட வரிசையின் இறுதியில் நிற்பவருக்கு, அவருடைய அவசரம் கருதி முன்னேறிச்சென்று பில் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கும் இரக்க குணம், பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவருக்கு தன் பயணச்சீட்டை விட்டுக்கொடுக்கும் உன்னத குணம், இப்படியெல்லாம் நடந்தால் வாழ்க்கை எல்லோருக்கும் எவ்வளவு எளிதாக இருக்கும்?

’தக்கன பிழைத்து வாழ்தல்’ என்ற கோட்பாடு போன்று ‘நல்லன பிழைத்து வாழும்’ என்ற புதிய கோட்பாடை தம்முடைய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார், பேராசிரியர் சேம் பௌல்ஸ் என்ற அமெரிக்க நாட்டின் சாண்ட்டா ஃபீ நிறுவனத்தின் பண்டைய சமுதாய வாழ்க்கை முறைகள் பற்றிய ஆராய்ச்சியாளர். சுருங்கச் சொன்னால், நாம் நமக்குள்ளேயே அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையக் கொண்டவர்களாகவே இருக்கிறோமாம், குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்காகவாவது அக்குணம் தாராளமாகவே கொண்டிருக்கிறோம் என்கிறார்.

இதற்கு ஆதரவாக கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியை சோஞ்ஞா இதனை நிரூபிக்கும் வகையில் குத்து மதிப்பாக சிலரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வுகளை ஊக்குவித்திருக்கிறார். இவருடைய முடிவுகள் இந்த கோட்பாட்டிற்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகளை நடைமுறைப்படுத்தும் காலங்களில் அவர்களுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். அதாவது எவர் ஒருவர் அடுத்தவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியோ, வெறுப்போ, எரிச்சலோ இல்லாமல் உண்மையான அன்புடன், இரக்கம் செலுத்துகிறாரோ அவருடைய மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.

அதாவது அடுத்தவருக்கு அவ்ர் முன்பின் அறியாதவராக இருப்பினும், கதவை திறந்துவிட்டு அவர் முன்செல்ல வழிவிட்டு ஒரு வினாடி பொறுத்து தாம் பின் செல்லும் போது அளவற்ற ஒரு ஆனந்தம் உள்ளொளி பெருக்கி வருவதை உணர முடியும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் செய்யும் உதவிகளாலும்,அன்பு காட்டுவதாலும் இது போன்றதொரு ஈடில்லா இன்பம் கிடைக்கப்பெறுவதில்லை என்பதையும் சொல்கிறது இந்த ஆய்வறிக்கை. அதெல்லாம் கடமையில் சேர்ந்துவிடும் போல. முன்பின் அறியாத ஒருவரிடம் நாம் காட்டும் அன்பும், இரக்கமும், அவருக்குச் செய்யக்கூடிய சேவையும், தம்மையே தாம் நல்ல குணவான் என்று உள்ளூர எண்ணி மகிழ்ச்செய்யுமாம்.. இந்த நற்குணம் புது நட்புகளை உருவாக்குவதோடு, பரந்த மனதோடு நன்றி பாராட்டச் செய்யும் இனிய தருணமும் கிடைக்கப்பெறும் என்கிறார்.

இரக்கம் காட்டுவதன் மூலம் நம் மனநிலையில் நேர்மறை எண்ணங்கள் வளர்ச்சியடைகிறதாம். மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிற வாதங்களும், விவாதங்களும், அதிக கோபத்தை ஏற்படுத்தி, அது இருதய பாதிப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்தலும், போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறதாம். அடுத்தவரிடம் இரக்கம் காட்டுவது என்பது நல்லொழுக்க நெறி என்பதை புத்தர், ஸ்ரீஅரவிந்தர், விவேகானந்தர், தாயுமானவர், பட்டிணத்தடிகள் போன்ற தவசீலர்கள் பலவகையில் எடுத்துரைத்திருந்தாலும் அதனைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை.

அன்போடு இயைந்த இந்த இரக்க அலையை தம்மைச் சுற்றி பரவச்செய்யும் போது மிக வெளிப்படையான மகிழ்ச்சி அலை பரவுவதையும் உணர முடியும். இதையே உலகத்தின் அனைத்து மதங்களும் உணர்த்துவதும் கூர்ந்து நோக்கத்தக்கது. அன்பும், இரக்கமும் இணைந்து கொடுக்கிற அந்த மகிழ்ச்சியின் மூலம் நாம் அடைவது ஏராளம்.

“மகிழ்ச்சியான தன்மையினை வெளிப்படுத்துவதன் மூலம் உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட தொல்லைகளை நீக்கிவிடலாம் அல்லது வென்றே விடலாம்” என்கிறார் ஆங்கில நூலாசிரியர் ஆர்ஷர் ஹெல்ப்ஸ். ஜோசப் அடிசன்,”மகிழ்ச்சியான மனநிலை நோய்களின் அல்லது வேறு குறைபாடுகளின் கடுமையினைக் குறைக்கும்” என்கிறார்.

பெண்களுக்கு வயோதிகத்தின் சுருக்கங்கள் வெளிப்படாமல் இருக்க வேண்டுமானால் டாட்லர் என்ற நிபுணரின் கூற்றையும் கவனிக்க வேண்டும்.. “மகிழ்ச்சியான மனப்போக்கும், எதிலும் நிதானமான சுபாவமும், உங்கள் முகத்தின் பொலிவை அதிகமாக்குகிறது” மகிழ்ச்சியான மனோபாவம், இளம்வெய்யிலைப் போன்று எல்லாவற்றின் மீதும் ஒளிபாய்ச்சுவதாம்

.இது சம்பந்தமாக வெற்றிச் சிந்தையைத் தூண்டும் எழுத்தாளர் காப்மேயர் சொல்வதைப் பாருங்கள். “பேச்சு, எழுத்து, செயல் - இந்த மூன்று வார்த்தைகளையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணத்தை வெற்றி இன்ஷ்யூரன்ஸ் ஆக்கிக் கொள்வதற்கு இவை வழிகாட்டும் விசயங்கள்” என்கிறார். மேலும் இது குறித்து,“நீங்கள் பேசப்போவதும் எழுதப் போவதும் செய்ய்ப்போவதும் நல்லெண்ணத்தைத்தான் தோற்றுவிக்கும் என்ற உறுதியான பதில் உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் அதைச் செய்யலாம். நீங்கள் செய்யப்போவது எவ்வளவு புத்திசாலித்தனமானதாகவும், அவசரமானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால்கூட அதைச் செய்யாதீர்கள் - புத்திசாலித்தனம் வெளிப்படுகின்ற வாய்ப்பு தடைப்படடு, தன்னுணர்வு பாதிப்புக்குள்ளானாலும் தவறான எண்ணம் ஏற்படுத்துகிற பாதிப்புகளைவிட இது அதிகம் இல்லை என்கிறார் உறுதியாக. இதனால் மகிழ்ச்சி என்பது முற்றிலுமாக தடைப்பட்டுவிடும் என்கிறார் காப்மேயர்.

ஸ்ரீஅரவிந்தர் எவ்வாறு இந்தியப் பண்பாடு அதனுடைய ஆன்மாவின் ஒரு வெளிப்பாடாகவே விளங்குகிறது என்பதை விளக்கும் போது, “குறுகிய எந்த நோக்கின்படியும் நாம் தன்னந்தனியாக உலகில் இருக்க முடியாது. நம்மைச் சுற்றியுள்ள நவீன உலகை நன்கு அறிந்துகொள்வது, அதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியமாகும். இன்றேல் நாம் வாழ்வதே கடினமாகிவிடும்” என்கிறார். அந்த வகையில் பரந்த நோக்கம் கொண்ட அன்பும், இரக்கமும் நம் சகமனிதர்களின் நேசத்தைப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கும்.

அன்பும், இரக்கமும் வேண்டி நிற்போர் பலர். அவர்களில் முதியோர் இல்லத்தில் விடப்பட்டு உறவுகள் இன்றி தனிமையில் வாடுபவர்களுடன் நம்மால் இயன்றவரை ஒருசில மணித்துளிகளாவது நம் பொன்னான நேரத்தை செலவிட்டு அன்பாகவும், ஆதரவாகவும் பேசலாம் அல்லது உள்ளறை விளையாட்டு ஏதேனும் அவர்களோடு சேர்ந்து விளையாடலாம், மருத்துவமனையில் உதவியின்றி சிரமப்படும் அனாதை நோயாளிகளுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம். இப்படி எத்தனையோ சின்ன, சின்ன விசயங்களில்கூட இரக்கம் காட்டும் போது நம் உள்ளம் பேருவகை கொள்வதை நம்மால் உணர முடியும். குழந்தைகளுக்கு இயல்பாகவே இரக்க குணமும், அன்பை தன்னலமற்ற முறையில் வெளிப்படுத்தவும், உதவும் குணமும் இயல்பாகவே அமைந்துள்ளது. வளரும் காலங்களில் அதனை நாம் நல்லவிதமாக சொல்லி வளர்க்க வேண்டியதும் பெற்றோரின் கடமை. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் கலையை நாமும் பயின்று நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தி அனைவரும் மகிழ்ச்சியாக நோயற்ற வாழ்வை வாழ்வோமே.

நன்றி : அதீதம்

5 comments:

 1. //முன்பின் அறியாதவராக இருப்பினும், கதவை திறந்துவிட்டு அவர் முன்செல்ல வழிவிட்டு ஒரு வினாடி பொறுத்து தாம் பின் செல்லும் போது அளவற்ற ஒரு ஆனந்தம் உள்ளொளி பெருக்கி வருவதை உணர முடியும்..

  எப்படி? எங்க போறதுனு தெரியாம அவர் திண்டாடுறதக் கவனிச்சா? ரொம்ப மோசங்க நீங்க. கலிபோர்னியா அம்மாத்தான் கிண்டலா எதுனா சொன்னாங்கனு பாத்தா.. நீங்களும் ஒப்புக்க வேண்டியிருக்குதுன்றீங்களே?

  ReplyDelete
 2. ஆயுளைக் கூட்டும் மருந்தை நமக்குள்ளேயே வைத்துக்கொண்டு மருத்துவர்களையும், மனநல ஆலோசகர்களையும் நாடி வீண் செலவு செய்வானேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் திரு கவிசெங்குட்டுவன்,

   தங்கள் வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 3. //அன்போடு இயைந்த இந்த இரக்க அலையை தம்மைச் சுற்றி பரவச்செய்யும் போது மிக வெளிப்படையான மகிழ்ச்சி அலை பரவுவதையும் உணர முடியும்.//

  அன்பு....சொல்லும்போதே இதற்காக எதையும் இழந்துவிடலாம் போன்ற உணர்வு.அதுவே மருந்துமாகிறது.நல்ல ஒரு கருத்துப் பொழிவு.நன்றி பவளா !

  ReplyDelete
 4. அன்பின் ஹேமா,

  மிக்க நன்றி. அன்பு என்ற வார்த்தை ஒன்றுதானே நம்மையெல்லாம் எங்கிருந்தெல்லாமோ இணைக்கிறது.. மிக்க மகிழ்ச்சி தோழி.

  அன்புடன்
  பவளா

  ReplyDelete