Showing posts with label தொடர்கதை.. Show all posts
Showing posts with label தொடர்கதை.. Show all posts

Tuesday, December 11, 2012

நம்பிக்கை ஒளி! (10)




ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் உன் வாழ்க்கையிலும் கண் திறந்திருக்கிறான். உனக்கும் ஒரு விடிவு காலம் வந்திருக்கு. தேவையில்லாம விரோதத்தை வளர்த்துக்காதே.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அவிங்கவிங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி போக வேண்டியதுதான். முத்தழகனும் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலையே.. காலம் செய்யுற கோலம் இதெல்லாம்..  இனிமேலாவது உன் வாழ்க்கை நிறைவா இருக்கணும்டா...  எதையும் மனசுல வச்சிக்காதே...” என்று சொன்னது அப்போதைக்கு அவ்ளுடைய கோபத்தை சற்றே தணியச் செய்திருந்தாலும், அண்ணன் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் மட்டும் வர மறுத்துக் கொண்டிருந்தது. சுப்ரஜாவும்  ஓரிரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசியும், பாசம் பெரிதாக வரவில்லை. காலம் மட்டுமே எல்லாவற்றையும் செப்பனிடும் வல்லமை பெற்றதன்றோ?

Monday, December 3, 2012

நம்பிக்கை ஒளி! (9)






பவள சங்கரி

நம்பிக்கைஒளி (8)

சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில், ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும், படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி
புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது.

"மாலு, மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த, உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை உணர்ந்து, “நல்ல காய்ச்சல் இருக்கும் போல இருக்கு மாலு. வாங்க டாக்டர்கிட்ட போய் வரலாம். நானும் வேண்டுமானால் இன்று ஆபீசிற்கு லீவ் போட்டுவிடுகிறேன்என்றாள்.அதெல்லாம் வேண்டாம் ஆர்த்தி, ’மெட்டாசின்மாத்திரை இருக்கு போட்டுகிட்டு தூங்கி எழுந்தா சரியாகிடும். நீங்க அனாவசியமா லீவ் எல்லாம் போட வேண்டாம். கிளம்புங்க ஆர்த்தி, ... இவ்வளவு அக்கறையா சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ்

Monday, November 26, 2012

நம்பிக்கை ஒளி! (8)





பவள சங்கரி

நம்பிக்கை ஒளி!(7)

சுப்ரஜா, வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. பார்ன் வித் சில்வர் ஸ்பூன்என்பதால் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர், கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர். நினைத்ததும், கேட்டதும் உடனே கிடைக்கும் வரமும் பெற்றவள். ஆயினும் தான் வளர, வளர கூடவே  சேர்ந்து தம் செல்வச் செருக்கின் காரணமான  குறும்புகளும் அதிகமாகிக் கொண்டிருந்தது ஒரு நிலையில் அது தந்தைக்கு வேதனை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏழ்மையின் துயர் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவள், அதன் பிடியில் சிக்கித் தவிப்பவர்களின் வேதனையை உணர முடியாமல், மேலும் ரணப்படுத்தக் கூடியவள். தாயின் அதிகப்படியான செல்லத்தினால் எதையுமே தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருப்பவள்.

மகளின் திருமண வயது வந்தபோதுதான் தந்தைக்கு அவள் எதிர்காலம் பற்றிய கவலையும் உடன் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. திருமண வாழ்க்கையின் அனுசரிப்பு தம் மகளுக்கு சாத்தியமாகுமா என்ற கவலையும் இருந்தது. அழகும், அறிவும், வசதியும் ஒருங்கே அமையப் பெற்றதால் ஈயாய் மொய்க்கும் இளைஞர் கூட்டத்திடம் தவறாக மாட்டிக் கொள்ள்க் கூடாதே என்ற கவலையும் அதிகமானது. விட்டுக் கொடுக்கும் சுபாவமே அறவே இல்லாமல் இருப்பவளால் திருமண வாழ்க்கையை சரிவர நடத்திச் செல்ல முடியுமா, தன் பெயருக்கும் சேர்த்து பங்கம் வந்துவிடுமோ என்ற கவலையில் பெற்றோர் இருந்தது நியாயம்தானே. அடிக்கடி இதனைத் தம் நெருங்கிய நண்பனும், உறவினருமான தில்லைராசனிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் தில்லைராசன் கொடுத்த ஊக்கத்தில் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தார் கிருஷ்ணராஜ். இன்னொருவர் வீட்டில் சென்று அக்குடும்பத்தாருடன் அனுசரித்து வாழும் கலை சுட்டுப் போட்டாலும் தம் மகளுக்கு வரப்போவதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர், நல்ல பையனாகப் பார்த்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிவந்தது.

Wednesday, November 21, 2012

நம்பிக்கை ஒளி! (7)






பவள சங்கரி

நம்பிக்கை ஒளி! (6)

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. தான்என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ, மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை, சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது சரி என்ற முடிவிற்கு வர தீர யோசித்துத்தான் செயல்படுகிறாள். ஆனாலும் அனுபவம் இல்லாத சில விசயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமே மிஞ்சுகிறது. உற்ற தோழமையோ, தக்க ஆலோசனை வழங்கக்கூடிய உறவோ இல்லாத வேதனை அப்போதுதான் வெளிச்சம் கொண்டது. தாயையும், தமக்கையையும் நினைத்து மனம் வேதனையடைந்ததுதான் கண்ட பலன்.

Tuesday, November 6, 2012

நம்பிக்கை ஒளி ! (5)



பவள சங்கரி

பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். அதுவும் ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்று இருக்கும் வீடுகளில் கேட்கவே வேண்டாம். நீ முந்தி, நான் முந்தி என்று ஒரே கூத்துதான்.

சாவதானமாக உட்கார்ந்து துண்டு முடிந்துகொண்டு, காலையில் எப்.எம் ரேடியோவில் ஆரம்பித்து பின்பு டீவி சீரியல் ஒன்று பாக்கியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த பரமுவா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எண்ணெய் வழியும் முகமும், பரட்டைத் தலையும் என்று எப்பொழுது பார்த்தாலும் அழுது வடிந்து கொண்டிருந்தவள் இன்று அரை மணி நேரமாக கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பாவம் எத்தனை ஆசையை சுமந்து கொண்டிருந்திருக்கிறது இந்தப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டாள் மாலு. மாநிறமாக இருந்தாலும், நல்ல களையான வட்ட முகம் அவளுக்கு. செதுக்கி வைத்த சிற்பம் போல அளவான நாசியும், துருதுருவென்ற கண்களும், பட்டுக் கன்னமும் அழகாகவே இருந்தாள். பாவாடை தாவணி உடுத்திக் கொண்டு அதைத் திரும்பி, திரும்பி நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். தாவணி கலருக்கு மேட்ச்சாக வளையலும், காது தோடும், கழுத்து மணியும் போட்டுக்கொண்டு , பொட்டும் கூட அதே கலரில் வைத்துக்கொண்டு கிளம்பியதைப் பார்க்க ஆச்சரியமாக் இருந்தது.

Monday, October 29, 2012

நம்பிக்கை ஒளி! (4)





பவள சங்கரி

நம்பிக்கை ஒளி (3)


உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது.... அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள், கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை நினைவில் கொண்டுவந்தாள். பளிச்சென்ற ஒரு ஒளியுடன் ஒரு முகம் நினைவில் தோன்றியது. அது தன் தாயின் முகமோ அல்லது அக்காவின் முகமோ என்று தெரியாதவாறு இரண்டும் கலந்த ஒரு தோற்றமாகக் காட்சியளித்தது. தெய்வமாக இருந்து தன்னை எப்படியும் வழிநடத்துவாள் என்ற நம்பிக்கையும் தெம்பைக் கொடுத்தது. மறக்க நினைப்பதைவிட மனக்கோவிலில் தெய்வமாக்கி பூஜிப்பது எளிதாகவே இருந்தது! வாழ்ந்தாக வேண்டுமே... அதற்கு ஒரு பிடிமானமும் தேவையாக இருக்கிறதே...

சின்னம்மா மாலுவின் விடுமுறைக்கான காரணத்தை நேரில் சென்று அவள் வேலை பார்க்கும் பள்ளியில் சொல்லிவிட்டு வந்திருந்தாள் என்றாலும் அதிகமாக விடுமுறை எடுப்பது அவ்ளுடைய வேலைக்கு மட்டுமல்லாது மன ஆறுதலுக்கும் சரியாகாது என்பதால் அவளை எப்படியும் உடனடியாக திரும்ப வேலைக்குப் போகச் செய்வதே நல்லது.. அதற்காக அவளைத் தயார்ப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மாலு குளித்துவிட்டு வெளியே கிளம்பியதைக் கண்ட பரமுவும், சின்னம்மாவும் ஆச்சரியத்தில் கண் அகல பார்த்துக் கொண்டிருந்தனர். முகத்தில் அபரிமிதமான களைப்பும், வேதனையும் தெரிந்தாலும் அது அனைத்தையும் மீறி ஒரு தெளிவும் இருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் ,

மாலு, நானே சொல்லணும்னு நினைச்சேன். வேலைக்குப் போனால்கூட மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமேன்னு. இப்படியே படுத்துக்கிட்டே அழுதுகிட்டே இருந்தாலும், மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை. நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்துதானே ஆக வேண்டும்.

அக்கா உன்னைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்குக்கா... எல்லா விசயத்திலும் போல இதிலேயும் நீ பக்குவமா நடந்துக்கிறது ஆச்சரியமாவும் இருக்கு. எவ்வளவு பெரிய இழப்பு. எத்தனை பெரிய அதிர்ச்சி! இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகி வெளியே வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியல...

என்ன செய்யிறது பரமு, வேற வழியில்லையே ...  வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்ல... எல்லாமே ஒரு சுழற்சிதானே.. சுற்றிவரும் பூமியைப் போல நல்லதும், கெட்டதும் மாறி மாறித்தானே வருது. என்ன ஒரு சிலருக்கு கெட்டது கொஞ்சம் அதிகமா தங்கிப் போகுது. முதல் நாள் இரவு கோடீஸ்வரனாக பஞ்சு மெத்தையில் பகட்டாகப் படுத்து இருந்தவர் மறுநாள் குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்ததே. குஜராத்தின் பூகம்பத்தின் நில அதிர்வில் பயந்து அலறியடித்துக் கொண்டு வெளியில் வந்து நின்றவர்களின் கண் முன்னாலேயே பரம்பரையாகச் சேர்த்த அத்தனை சொத்தும் தரைமட்டமாகி கட்டிடத்துடன் சேர்ந்து அவர்களின் எதிர்காலமும் தூள், தூளாகி, மண்னோடு மண்ணாகிப்போனதே?   அவர்களெல்லாம் பிழைக்காமலா போனார்கள். கடலோரத்தில் சொகுசு விடுதியில் சுகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை சுனாமி மொத்தமாக அள்ளிக் கொண்டு போகவில்லையா? எஞ்சியவர்கள், முழு குடும்பத்தையும் இழந்தவர்களும் எப்படியோ பிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இதுதானே யதார்த்தம்.... வேதனையை மென்று கொண்டே, முன்னேறிக் கொண்டே இருக்கத்தானே வேண்டும். சில இழப்புகள் இறுதிவரை மறக்கவே முடியாதது. இதயத்தில் குத்திக் கொண்டிருக்கும் ஊசிமுனை போன்றது. அம்மா, அப்பாவை இழந்ததைவிட அதிக சோகம்தான்..  அம்மாவாக வளர்த்த அக்காவை இழந்தது.என்று சொன்னவளின் கண்களில் மாலையாகக் கண்ணீர் வழிந்தோடியது. அதனை மறு புறம் திரும்பி அப்படியே துடைத்துக் கொண்டு கடினமான புன்சிரிப்புடன் கோவிலுக்குச் சென்று வருவதாகக்கூறி கிளம்பினாள். அக்கா, மாமா மற்றும் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய மனமார பிரார்த்தனை செய்து கொண்டு திரும்பியவள், மளமளவென வேலைக்குக் கிளம்பத் தயாரானாள்.

பள்ளியில் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிக்கும்போதும் பொத்துக் கொண்டு வந்த அழுகையை வெகு சிரமத்திற்குப் பிறகே கட்டுப்படுத்த முடிந்தது. மனதில் இருந்த இலட்சியங்களின் உறுதி அவளை மேற்கொண்டு அடி எடுத்து வைக்கும் வலலமையையும் வழங்கியது. தலைமையாசிரியர் அழைத்து ஆறுதல் சொன்னதோடு, ம்னதைக் கட்டுப்படுத்தி வேலையிலும், படிப்பிலும் முழு கவனம் செலுத்தினால் மனமும் தானாக ஒருநிலைப்படும், துக்கமும் கட்டுக்குள் வரும் என்று சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தாள்.

அரசுக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பிரிவில் சேர்ந்து படிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் பிரகாசமாக இருந்தாலும், ஏனோ அவளுக்கு அதில் நாட்டமில்லாது போனது.  தன்னைப் போன்று ஆதரவில்லாமல் தவிப்போருக்கு உதவும் வகையில் தம் எதிர்காலம் அமைய வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததால், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கத் தயக்கமாக இருந்தது. சொந்த நாட்டையும், உதவியை நாடும் உறவுகளையும் விட்டு பணி நிமித்தம் வெகுதூரம் செல்லவேண்டிய தேவையை எதிர்கொள்ள மனமில்லை என்பதும் முக்கிய காரணமானது. திரைகடல் ஓடாமலும் திரவியம் தேட நம் நாட்டிலேயே வழியும் இருப்பதாகத் தோன்றியது. மாலை கல்லூரியில் சேர்ந்து படித்ததில் பகல் நேரத்தில் பள்ளி வேலைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விடுமுறை நாட்களில் டியூசன் வகுப்பு எடுப்பதற்கும் ஏற்பாடு செய்து கொண்டாள். கடந்து போன கடினமான நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க நேரமில்லாத நெருக்கடியைத் தானே உருவாக்கிக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுடன், குழந்தையாகப் பழகும்போது மனது லேசாகிப்போவது நிம்மதியளித்தது.

சின்னம்மா அசந்து தூங்கிக் கொண்டிருப்பது போன்று தெரிந்தது. பாவம் இந்த வயதில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்துபோய்க்கிடக்கிறாரே என்று வருத்தமாக இருந்தது. இன்று நாமே சமைக்க்லாமே என்று சமையலறைப் பக்கம் போக எத்தனித்தவள், அங்கு ஏதோ உருட்டும் சத்தம் கேட்டுத் தயங்கி நின்றாள். கையை எட்டி மெதுவாக மின் விளக்கைப் போட்டாள். வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களைக் கண்டும் அஞ்சாமல் மீண்டு வர முடிந்தவளுக்கு இந்த சிறு எலியின் மீது அப்படி ஒரு அச்சம். விளக்கைப் போட்டுவிட்டு அது ஓடி மறையக் காத்திருந்தாள். உள்ளே சென்று அரிசிப் பானையிலிருந்து இரண்டு ஆழாக்கு அரிசியை எடுத்து முதலில் தண்ணீரில் கொட்டினாள். அதற்குள் விளக்கு வெளிச்சமும், உருட்டும் சத்தமும் கேட்டு வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தாள் சின்னம்மா.

அடடா.... இன்னைக்கு என்னமோ இப்படி தூங்கிப்போயிட்டேனே... என்னமோ ஒரே அசதியா இருந்ததுஎன்று ஏதோ பெரிய தவறு செய்தவள் போல சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள். சின்னம்மா எழுந்து வந்துவிட்டால் இனி தன்னை எந்த சமையல் வேலையும் செய்யவிடமாட்டார் என்று தெரிந்தாலும்,

அம்மா, இன்னைக்கு நானே சமைக்கிறேனே.. நீ இன்னும் கொஞ்ச் நேரம் படுத்து ஓய்வெடுக்கலாமில்ல.. ஏன் இப்படி அரக்கப்பரக்க எழுந்திரிக்கணும்?” என்றாள்.

இல்லம்மா, நல்லாத்தானே இருக்கேன். நான் பல்லை விளக்கிப்புட்டு போய் பால் வாங்கியாறேன். வந்து காபி போட்டுட்டு சமைக்கிறேன். நீ போய் உன் வேலையைப்பாரும்மா.. இதெல்லாம் நான் பாத்துக்கறேன்என்று கையைப்பிடித்து சமையல அறையிலிருந்து வெளியே கூட்டி வந்துவிட்டாள். என்ன கெஞ்சினாலும் இனி தன்னை வேலை செய்ய விடமாட்டாள் என்று தெரிந்ததால், கொஞ்ச நேரம் பாடம் படிக்கலாம் என்று புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

சின்னம்மா பால் வாங்கிவந்து சுடச்சுட, மணக்க, மணக்க காப்பியுடன் வந்தபோது, பரமுவும் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்திருந்தாள்.மூவரும் ஒன்றாக அமர்ந்து கொஞ்ச நேரம் காபியுடன் சுகமாக அளவளாவிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.

வழக்கம் போல துண்டு முடிந்து கொண்டிருந்த பரமுவிடம் மாலை தான் பள்ளி வேலை முடித்து வரும்போது, வெளியில் செல்லத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள், மாலு.  வெகு சிரத்தையுடன் காலையிலேயே தம் கடமையைத் துவங்கிவிட்ட, பரமுவைப் பார்த்து பெருமிதமாக இருந்தது. ஏதாவது சிறு நூல்முனை கிடைத்தாலும் முன்னுக்கு வந்துவிடுவாள் அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டு என்று நினைத்துக் கொண்டாள். எங்கு போகப் போகிறோம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும் அக்கா, அவளாகவே சொல்லுவாள என்று முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பரமு. மாலு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் மாலை கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். சின்னம்மா கொடுத்த தக்காளி சாதம் டப்பாவை எடுத்து கைப்பையினுள் திணித்துக் கொண்டே மாலை முதலாளியிடம் சொல்லிவிட்டு சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிவிட்டால் மூவரும் சேர்ந்தே வெளியில் செல்லலாம்  என்றும் கூறிவிட்டுச் சென்றாள். சின்னம்மா அவசரமாகக் காரணம் கேட்டதற்கும் புன்னகைத்துவிட்டு, ”சாயந்திரம் வாங்க பேசிக்கலாம்என்று ஒத்தை வரியில் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அன்று மாலை கல்லூரியும் விடுமுறையாக இருந்ததால் வசதியாகப் போய்விட்டது.

ஒரு துக்கம் நடந்த வீட்டில் உடனடியாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முயற்சிப்பார்கள். அந்த சூழ்நிலை மாற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதற்காக.

பரமுவை ஆட்டோவில் ஏற்றுவதற்கு இருவரின் உதவியும் தேவையாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரு வாய் காப்பித் தண்ணீர் கூடக்குடிக்காமல் அத்துனை அவசரமாக மகள் எதற்காக இரண்டு பேரையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாள் என்பது சஸ்பென்சாகவே இருந்தது. இருந்தாலும் மாலு எதைச் செய்தாலும் அது அனைவரின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருந்ததால் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போனது. ஆட்டோ ஒரு எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவமனை வாசலில் போய் நின்றபோது குழப்பம் கொஞ்சம் வந்தது. அம்மாவிற்கு ஒருவேளை ஏதும் உடம்பு முடியவில்லையோ என்று எண்ணிய போது கொஞ்சம் டென்சன் ஆனாலும், அம்மாவைப் பார்த்தால் நல்லாத்தானே இருக்குன்னு குழப்பம் அதிகமானது.. அதற்குள் செவிலியர் வந்து, “யாரும்மா இங்க பரமேசுவரிங்கறது?”  என்று கேட்கவும் அடுத்த வார்த்தை பேச முடியாமல் மாலு அக்காவின் பின்னால் அமைதியாக அம்மாவும் மகளும் நடந்தார்கள்....

போலியோ நோயினால் வலுவிழந்து சூம்பிப்போன கால்களுக்கு விசேசமான  காலணிகள் அணிந்து நடக்கப்போகும் தன்னுடைய கனவு நடைமுறைக்கு வரப்போகிறது என்ற இன்ப அதிர்ச்சி, மருத்துவமனையினுள் நுழைந்து அதற்கான ஏற்பாடுகள் செய்தபோதுதான் தெரிந்தது. தன்னையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். முதன்முதலில் கால்களுக்கு பெரிய தெம்பு வந்ததுபோல் உணர்ந்தாள். இரண்டு கைகளின் அடியில் கச்சிதமாகப் பொருந்தும்படியான பஞ்சுப்பொதி வைத்த குச்சியும், தொடைப்பகுதியில் அணைப்பாக பெல்ட் போட்டு  கட்டி, அதனை இடுப்புடன் மற்றொரு பெல்ட்டுடன் சேர்த்துக் கட்டி, ஒரு வழியாக எழுந்து நிற்க வைத்துவிட்டார்கள். வானளவு உயர்ந்து நிற்பது போல ஒரு உணர்வு வந்தது முதன்முதலில் எழுந்து நின்ற அந்த இனிய பொழுதில்.. தெய்வமாக மாலு தன் வாழ்வில் வந்து ஒளியேற்றி வைத்ததை நினைக்க நினைக்க கனவா, நனவா என்றே தெரியாமல் மயக்கத்தில் கிடந்தாள் அவள்..

அக்கா, வங்கியில் கணக்கு ஆரம்பித்து, ஏதோ கொஞ்சம் சேமித்து வருகிறாள் என்று தெரிந்தாலும் அது அவளுடைய படிப்பிற்காக என்றுதான் எண்ணியிருந்தாள். ஆனால் அதெல்லாம் தனக்காகத்தான் என்று தெரிந்தபோது அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது. இழுத்து, இழுத்து நகர்ந்து பின்புறமெல்லாம் தேய்ந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிக்மாக நகரக்கூட முடியாமல் சிறைக்கைதியாய் அடைந்து கிடந்தவளுக்கு சுவர்கலோகமே கண் முன்னால் தெரிந்ததில் ஆச்சரியமில்லையே! இவ்வளவு பெரிய தொகையை தனக்காக மனமுவந்து செலவு செய்தவளை நினைக்கும் போது நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அதைவிட அடுத்து நடந்தது மேலும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆம், மருத்துவமனையில் இவர்களுடைய ஏழ்மை நிலையை உணர்ந்தவர்கள் தொண்டு நிறுவனம் மூலம் உதவி கிடைக்க செய்த ஏற்பாட்டினால், செலவு செய்த தொகையில் பெரும் பகுதி திரும்பக் கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாலு அதை வாங்க மறுத்தாள். தங்களைவிட சிரமத்திலிருப்பவர்களுக்கு உதவக்கூடுமே என்றே மறுத்தாள். ஆனாலும் சின்னம்மாவும், பரமுவும் வற்புறுத்தியதால் அரை மனதுடனே வாங்கிக் கொண்டாள். ஆனால் அதுவும் நல்லதாகவேப் போய்விட்டது.

ஆம்... பரமுவிற்கு தான் செய்ய நினைத்த அடுத்த முக்கியமான கடமையும் நிறைவேறியது, அந்தப் பணத்தின் மூலமாக. பரமு, வானுலக தேவதையாக உலா வருவது போல உணர்ந்தாள். அடுத்தடுத்து நடந்தவைகள் பரமுவின் தன்னம்பிக்கையை உரமிட்டு வளர்ப்பதாகவே அமைந்தது. ஆம், மாலு செய்த அடுத்த நல்ல காரியம், பரமுவிற்கு ஊனமுற்றோருக்கான பொது தொலைபேசிச் சேவையை வாங்கிக் கொடுத்ததுதான். மற்றவர்களைப் போன்று தம் மகளும் எழுந்து நடந்து வேலைக்குச் செல்வதைக் கண்ட அந்தத் தாயின் மனம் பூரிப்பில் நிறைந்துதான் போனது. மாலுவைக் கட்டிக்கொண்டு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினாள். அந்தக் கணம் இளம் வயதிலேயே தம்மை அனாதையாக விட்டுச்சென்ற தாயே திரும்பி வந்துவிட்டதாக உணர்ந்தாள் மாலு ..... அதுவே அடுத்தடுத்த அவளுடைய செயல்பாடுகளுக்கு ஒரு டானிக்காகவும் அமைந்து விட்டது.

இளங்கலை பட்ட வகுப்பில் முதல் நிலையில்  தேறியவள், மேற்கொண்டு உயர்கல்வி பெறவும் முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் மேற்கொண்டாள். பெரிய சிரமம் இல்லாமல் எம். ஏ. வகுப்பில் சேர்ந்தும்விட்டாள்.

அன்று கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பரமுவையும் கூட்டிவந்து விடலாம் என அவளுடைய பூத்திற்குச் சென்றவள், பேருந்தை விட்டு இறங்கியவுடனே சற்று தொலைவிலிருந்த பரமுவின்  தொலைப்பேசிச் சாவடி நன்கு தெரியும். கம்பீரமாக மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருப்பவளைப் பார்க்க பெருமையாக இருந்தது. அவளுடைய முகத்தில் இருந்த அந்த நிறைவு இவ்வளவு நாளைய வேதனையைப் பறைசாற்றியது. கிட்டே நெருங்கும் போது ஒரு இளைஞன் அவளிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இவனை இதற்கு முன்பும் ஒரு சில முறைகள் பார்த்தது போலத்தான் இருந்தது. ஆனால் இன்று அவர்களுடைய பழக்கத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. இது நல்லதற்கா அல்லது தீமை விளையக்கூடியதா என்ற தெளிவு தனக்கே இல்லாதலால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றிருந்தாள் மாலு. 16 வயது தளதளப்பு நன்றாகவேத் தெரிந்தது. ஏழ்மையோ, வறுமையோ எதுவும் பருவ வளர்ச்சியை பெரிதாக தடை செய்வதில்லை.  ஊனமில்லாத மனதில் அனைத்து உணர்வுகளும் எதார்த்தமாக வருவதும் இயற்கை. இதெல்லாம் நினைவில் வந்தபோது, பரமுவின் பாதுகாப்பு பற்றிய கவலையும் உடன் வந்தது!

தொடரும்

நன்றி : திண்ணை

Monday, October 15, 2012

நம்பிக்கை ஒளி! (3)





பவள சங்கரி 

நம்பிக்கை ஒளி (2)

 தாயின் அன்பிற்கு இணையாகச்  சொல்வதற்கு, இந்த உலகில் தாயன்பைத் தவிர வேறு ஏதுமில்லை. தாயில்லாத மாலுவிற்கு தாய்க்குத் தாயாக இருந்தவள் சாரு அக்கா. மாலுவிற்கும், சாருவிற்கும் இரண்டு வயதே வித்தியாசம் என்றாலும் தான் மூத்தவள் என்ற பெருமையுடன்  தாய் என்ற அந்தப் பதவியைத் தானே எடுத்துக் கொண்டவள், சாரு. ஆசிரமத்தில் மைதானத்தில் உள்ள வீணை மீட்டும் கலைவாணியின் திருஉருவிற்கு அன்றாடம் மலர்தூவி அருச்சித்து வணங்கும் சாருவின் பிரார்த்தனையில். தங்கை மாலுவிற்கு நல்ல வழி காட்ட வேண்டும், அவள் பெரிய படிப்பு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற வேண்டுதலே பிரதானமாக இருக்கும். இன்றும் அதை நினைத்தால் மாலுவின் மனதிற்குள் அன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

காலையில் 5 மணிக்கெலலாம் எழுந்து, பல் துலக்கி, முகம் அலம்பி, பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். பிரார்த்தனை முடிந்தவுடன் பால கொடுப்பார்கள். குடித்த பிறகு அவரவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட பணியை முடித்து, குளித்து, கிளம்பி, காலை உணவருந்திய பிறகு பள்ளி செல்ல வேண்டும். ஆசிரமத்துத் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் தானியங்களைக் கொண்டே பெரும்பாலும் அங்குள்ளவர்களுக்கான உணவைச் சமைப்பார்கள். சோளத்தை ரவையாக உடைத்து அதில் கோதுமை ரவையில் செய்வது போன்று உப்புமா செய்வார்கள். பெரும்பாலும் இதுவே காலை உணவாக இருக்கும். மாலு இந்த உப்புமா என்றால் காததூரம் ஓடுவாள். அதனால் சாரு, காலையில் தனக்குக் கிடைக்கும் பாலையும் சேர்த்து மாலுவிற்குக் கொடுத்துவிடுவாள். விசேச தினங்களில் கொடையாளிகள் வழங்கும் தின்பண்டங்களில் தன் பங்கையும் சேர்த்து மாலுவிற்குக் கொடுத்துவிடுவாள். இப்படி அனைத்திலும் மாலுவின் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்றிருப்பாள்.. வாழ்க்கை அக்காவின் தயவால் வேதனையின்றி ஓடிக்கொண்டிருந்தது மாலுவிற்கு.

சாரு பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதி முடித்து வந்தவுடனே, அதில் தேறமாட்டோம் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தவள், திரும்பவும் படிக்கவும் ஆர்வம் இல்லாத நிலையில் தையல் பயிற்சியில் சேர்ந்து ஒழுங்காக கற்றுக் கொண்டால், டைலரிங் தொழிலாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தாள். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. பயிற்சி வகுப்பு மட்டும்தான் இலவசமே தவிர, அதற்கான துணிகள் மற்றும், கத்தரிக்கோல், பட்டன், ஊக்கு, ஊசி போன்றவைகளெல்லாம் வாங்குவது அவரவர் பாடு என்று சொல்லிவிட்டார்கள். சின்னம்மாவை கேட்டுத் தொல்லை கொடுக்க விரும்பாதவள் வேறு வழியின்றி சித்தப்பாவின் தொலைபேசிக்கு அழைத்து உதவி கேட்டாள்.

மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து பணம் அனுப்பியவர், பிறகு என்ன நினைத்தாரோ, படித்தது போதும் ஊருக்குத் திரும்பி வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். எப்படியிருந்தாலும் 12ம் வகுப்பு படித்து முடிக்கும் வரைதான் ஆசிரமத்தில் இருக்கமுடியும் என்பதால் சித்தப்பா சொல்லும்போதே போனால் ஏதாவது வழி பண்ணுவார் என்ற நம்பிக்கையில் மாலுவைக்கூட அவள் படிப்பு முடிய வேண்டும் என்பதற்காகத் தனியே விட்டுவிட்டு ஊர் திரும்ப முடிவெடுத்தாள். மாலு வருவதற்குள் தான் ஓரளவாவது செட்டில் ஆகிவிட்டால், அவளுக்கும் ஆதரவாக இருக்கும் என்றே கணக்குப் போட்டது அந்தப் பேதை மனது. ஆனால் நடந்ததெல்லாம் வேறு. சாரு ஆசிரமத்தை விட்டு வெளியேறியவுடன் முதல் முறையாக மாலு தனிமையை உணர்ந்தாள். பல நாட்கள் சரியான உணவும், உறக்கமும் இல்லாமல் தவித்தாள். வார்டன் அம்மாவின்  அரவணைப்பினால் மெல்ல, மெல்ல் தேறிவந்தாள்.

ஊருக்குத் திரும்பிய சாருவிற்கு சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சி காத்திருந்தது. சித்தப்பாவின் வீட்டில் உறவினர்கள் சிலர் கூடியிருந்தனர். உள்ளே வந்தவுடன், தூரத்து உறவினர் ஒருவர், “அட இதுதான் சாருலதாவா, புள்ளை அப்படியே அம்மாவை உரிச்சி வச்சிருக்காளே.. தங்க விக்கிரமாட்டமில்ல இருக்கா.. சந்திரன் கொடுத்து வச்சவந்தான்..என்று கண் சிமிட்டிய போதுதான் அந்தப்புறம் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞனின் பார்வை தன்மீது வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. வெட்கத்தினால் குறுகுறுவென்றிருக்க, தலை கவிழ்ந்து நின்றாள்.

ஒன்றுமே புரியாமல் அலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளுக்கு சற்று நேரம் கழித்துதான் மெல்லப் புரிய ஆரம்பித்தது, கல்யாணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், திருமணம் என்ற பந்தம் தனக்கு  பல புதிய உறவுகளைச் சேர்க்கப்போகிறது என்ற உற்சாகத்தில் தலைகால் புரியாமல் இருந்தாள். மாப்பிள்ளையும் மிகவும் அன்பானவராகத் தெரிந்ததால் சம்மதம் சொல்வதில் எந்த்த் தடையும் இல்லை. அடுத்த பத்து நாட்களுக்குள், எளிமையாக, குறிப்பிட்ட சில உறவினர்களின் முன்னிலையில், மாலுவின் மகிழ்ச்சியுடனும், குல தெய்வம் கோவிலில் வைத்து திருமணம் முடித்து வைத்தார்கள். 16 வயது என்பது திருமணத்திற்கு தோதான வயதில்லை என்றாலும் அவளுடைய சூழ்நிலைக்கு அது மட்டுமே நல்ல முடிவாக இருந்தது. கணவனும் அவளைத் தன் சக்திக்கு ஏற்றவாறு உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொண்டுதானிருந்தான். உறவினர்கள் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் என்று 10 பவுன் நகைபோட்டு கட்டிக் கொடுத்திருந்தனர். பையன் ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளையாக  இருந்தான்.

வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால், மற்றொரு சன்னலாவது திறக்கும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்தவளுக்கு, இப்படி ஒரு சுவர்க்க வாசலே திறக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை சாரு. ஆம் தம்மீது உயிரையே வைத்திருக்கும் அப்படி ஒரு அன்பான கணவன். எள் என்றால் எண்ணெயாக நிற்பவன். அளவான வருமானமும், நிறைவான மனதும் கொண்டு சுகமான இல்லறம் அமைந்தது ஆண்டவன் அருள், தாயின் ஆசீர்வாதம் என்றெல்லாம் புளங்காகிதம் அடைந்திருந்தாள் சாரு.. ஆனால் அனைத்தும் அணையப்போகும் தீபத்தின் பிரகாசம் என்பதை அவள் முதலிலேயே உணராததும் நல்லதாகப்போய் விட்டது. ஏதோ அந்த சொற்ப காலமாவது வாழ்க்கையின் மென்மையான பகுதியை அனுபவித்தாளே பாவி மகள்.

திருமண பந்தத்தின் சுகமான இராகத்தின் பலனாக உருவான கருவை எண்ணிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் இருவரும். இன்னும் 6 மாதத்தில் தங்கள் கையில் தவழப்போகும் மழலையின் கற்பனை வடிவைக்கண்டு ஆனந்தம் கொண்டிருந்த வேளையில்தான் அந்த  பயங்கரம் ஆரம்பித்தது. ஒருநாள் வேலைக்குச் சென்றுவிட்டு மழையில் நனைந்து கொண்டு வந்த சந்திரனுக்கு சரியான காய்ச்சல் வந்துவிட்டது. சாதாரண சளி, காய்ச்சல்தானேன்னு நினைத்து பக்கத்தில் இருந்த டாக்டரிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாட்பட சரியாகாமல், காய்ச்சல் விடாமல் அடித்துக் கொண்டிருக்கவும், டாக்டர் எடுக்கச் சொன்ன பலவகையான சோதனைகளின் முடிவு அவர்களின் வாழ்க்கையின் மறு பகுதியை தீர்மானித்துவிட்டது.

ஆம், சந்திரனுக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து வெள்ளை அணுக்கள் கோடிக்கணக்கில் பெருகிக் கொண்டிருக்கிறதாம்... அவைகள் சிவப்பு அணுக்களைத் தின்று கொண்டிருக்கிறதாம். மருத்துவ மொழியில் லூக்கீமியா என்று பெயர் சொன்னார்கள். இரத்தத்தில் புற்று நோய். ஏதோ பெரிய நோய்தான் என்றாலும், மருத்துவத் துறையின் வளர்ச்சியால் எதையும் சரிபண்னி விடலாம் என்றுதான் நம்பிக்கையோடு இருந்தார்கள் இருவரும். ஆனால் அவை எல்லாம் ஒரு சில முறைகள் இரத்த மாற்று சிகிச்சை செய்யும் வரைதான் நீடித்தது. அந்த காலகட்டத்தில் ராய வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மட்டுமே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனால் அடிக்கடி வேலூர் சென்றுதான் வைத்தியம் பார்க்க வேண்டியிருந்தது. வேலைக்கும் ஒழுங்காகப் போக முடியாமல், மருத்துவ செலவு, போக்குவரத்துச் செலவு என கண் முழி பிதுங்க  வேண்டிய சூழல் வெகுசீக்கிரமே வந்துவிட்டது. வயிற்றுப் பிள்ளைதாச்சியை சத்தான உணவு கொடுத்து கவனிக்கக்கூட முடியவில்லையே என்ற வேதனை ஒருபுறம். இருவரும் நொந்து போனாலும், வெளியில் யாரிடமும் சொல்லாமல் சமாளித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக மாலுவிற்குத் தெரிந்தால் அவள் தாங்க மாட்டாள், படிப்பும் கெட்டுவிடுமே என்றே, மூடி மறைத்துக் கொண்டிருந்தாள். பிரசவ நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. மிக இறுக்கமான சூழலில் செய்வதறியாது தவித்துப்போன சந்திரன் ஒருமுறை இரவு, சாரு அசந்து தூங்கும் நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஃபேனில் தூக்கு போட்டுக்கொள்ள முயற்சி செய்தான். அந்த நேரம், பாத்ரூம் போக எழுந்திருந்த சாரு, அருகில் கணவன் இல்லாதலால் தேடிக்கொண்டு வெளியே வந்தவள், அங்கு நடந்த கொடுமையைக் கண்டு வாயடைத்து நின்றாள். சத்தம் போட்டால் அக்கம் பக்கத்தில் தெரிந்து பிரச்சனை ஆகிவிடும் என்ற அச்சத்தில், அவன் காலைப்பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் சாரு. அன்பு மனைவியை மகாராணியைப்போல வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவ்னுக்கு அவளுடைய கதறல் மரண வேதனையைக் கொடுத்தது.  அப்போதே தன் முடிவை மாற்றிக் கொண்டான்.

ஆனாலும் நாட்கள் செல்லச்செல்ல பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் சாரு.

 குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. இதற்குள் வாழ்க்கை ஆறு யுகமாக நீண்டது. குழந்தையை மனதாரக் கொஞ்சிக் குலவி சுகம் காணும் சூழல்கூட இருக்கவில்லை.  கணவனின் நோயின் தாக்கம அதிகமாகவும், மருந்தின் வீரியமும், கதிர்வீச்சும் அவனை உருக்குலையச் செய்ததும், வெளியில் தெரிய ஆரம்பித்தது. மாலுவை வீட்டில் அண்டவிடாமல் தடுத்து வைத்திருந்ததும் இதனால்தான்.

அன்று மாலு குழந்தைக்கு சட்டைத்துணி வாங்கிக்கொண்டு, அதைக் கொடுக்க அக்கா வீட்டிற்குப் போகலாம் என்றிருந்தவளைப் பார்க்க, அவளே குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதில் சந்தோசம் இருந்தாலும், அவள் முகத்தில் இருந்த குழப்பமும், அவள் பேசிய பேச்சும் விபரீதமாகப் பட்டது மாலுவிற்கு. அந்த வார இறுதியில் எப்படியும் சாரு வீட்டிற்குச் சென்றுவர எண்ணியிருந்தாள். ஆனால் அதற்குள் பூகம்பம் வெடித்தது போல செய்தி வந்துவிட்டது. ஆம், அன்று வெள்ளிக்கிழமையும் அதுவுமாக காலையில் பரபரபபாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரம், ப்க்கத்து வீட்டு செல்வி தன் செல்பேசியைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள் பதட்டமாக. போனில் கேட்ட அந்த செய்தி மண்டையைப் பிளக்கச் செய்தது. அக்கா வீடு நோக்கி ஆட்டோ பிடித்து சின்னம்மாவுடன் ஓடினாள். அங்கு அவள காட்சி ஈரக்குலையே நடுநடுங்கிப் போனது.

வீட்டை நெருங்கும் போதே, கூட்டமாகவும், போலீசும் வேறு இருந்தது. கூட்டத்தை விலக்கி யாரோ இவளை உள்ளே கூட்டிச் சென்றார்கள். அங்கு வரிசையாக கணவன், மனைவி, இடையில் ஆறு மாதக்குழந்தை  என நீட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்.... பிணமாக. 

கணவனின் நோய் அதிகமானதாலும், மேற்கொண்டு வைத்தியம் செய்துகொள்ள வசதி இல்லாதலாலும், அவருடைய உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையில், கணவனைப் பிரிந்து எங்களால் வாழமுடியாது என்பதாலும், மூவரும் சேர்ந்தே போய்விட முடிவு செய்துவிட்டோம். குழந்தையும் அனாதையாக இந்த பூமியில் வளர்வதில் எங்களுக்கு விருப்பமில்லாதலால் வேறு வழியின்றி அந்தப் பிஞ்சையும் நஞ்சு வைத்து அழிக்கிறோம். அந்த இறைவன் எங்களை மன்னிப்பாராகஎன்று தபால் எழுதி வைத்திருந்தாள், கண்னில் படும்படியாக.. முத்து, முத்தான அக்காவின் கையெழுத்தைப் பார்த்து ஓவென்று அழுது புலம்பி மயங்கி விழுந்தாள் மாலு.

துரத்தித் துரத்தி அடித்த சுனாமியாக விதி செய்த வதையைக் கண்டு துவண்டு வீழ்ந்துவிடுவாளா...... அல்லது   திரும்பி நின்று அதை விரட்டியடித்து வெற்றி காணப் போகிறாளா இந்த மாலதி?  பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்.

நன்றி : திண்ணை

Tuesday, October 9, 2012

நம்பிக்கை ஒளி (2)


பவள சங்கரி

நம்பிக்கை ஒளி - பகுதி (1)


மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது. உறவுகளுக்காக ஏங்கும் இந்த மனதை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது. அறிவுக்கு தெரிந்த பல விசயங்கள் உணர்விற்கு எட்டுவதில்லை. அதற்கு கட்டுப்படுவதும் இல்லை. யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது மட்டுமே மன அமைதிக்கு வழிவகுக்கும் என்பதே அனுபவப்பாடம். கீதையின் சாரங்களும், நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளும், பைபிளின் வாசகங்களும் எத்தனையோ கேட்டு கேட்டு மனம் பண்பட்டிருந்தாலும், இப்போது நடந்ததை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. சமீபத்தில் படித்த ‘when there is no cure, endure' என்கிற வரிகள் நினைவிற்கு வர, தீர்வு இல்லாத ஒன்றை தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும். இந்த எண்ணம் வந்தவுடனே, ஒரு அமைதியான தென்றல் வீசி உள்ளம் குளிர ஆரம்பித்தது. அப்படியே, உள்ளே.... உள்ளே .. ஆழ்ந்து செல்லச் செல்ல வானில் சிறகடித்துப் பறக்கும் இனிய அனுபவம். கீழே இறங்கும் நினைவே இல்லை. எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்போம் என்று தெரியாத நிலையில், குழந்தை அழும் சத்தம் எங்கோ கேட்க, மெல்ல மெல்ல வெளியே வந்தாள். ஆசிரமத்தில் பழகிய பல நல்ல பழக்கங்களில் மிக முக்கியமானது தியானம். மனதை என்றும் அன்று பூத்த மலராக பசுமையாக வாழ வைக்கவல்லது.

Friday, October 5, 2012

நம்பிக்கை ஒளி! (1)




பவள சங்கரி

அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா... அம்மா.. அம்மா...

அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.

இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. அம்மா எழுப்பச் சொல்லிச்சுதானே..

அப்பிடியா.. சரி எனக்குந்தான் பசிக்குது . சரி வா இரண்டு பேரும் சேந்து எழுப்பலாம். அப்பதான் அம்மா சீக்கிரமா எந்திரிக்கும்.. இல்லியா.. அப்பா வந்தா வேற திட்டுமில்ல. அம்மா ஏன் சோறாகலன்னு.. சீக்கிரமா எழுப்பலாம்..

Thursday, April 26, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(34)



அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்து சேரும் அநத நீண்ட பயணம் துளியும் சலிப்பு தட்டவில்லை இருவருக்கும். தங்களின் காதல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உன்னத தருணம் அல்லவா அது! இத்தனை நாட்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த கண்களும், குழந்தைச் சிரிப்பும், கன்றின் துள்ளலும் எங்குதான் மறைத்து வைத்திருந்தாளோ தெரியவில்லையே என்று, தன் தோளின்மீது தலைசாய்த்து சுகமாக உறங்கும் அந்த வளர்ந்த குழந்தையை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன் செய்கை தனக்கே சங்கடத்தை ஏற்படுத்த மெல்லிய புன்னகையுடன் பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டான். அதற்குள் பயணம் முடிந்துவிட்டதா என்று லேசான வருத்தம் கூட வந்தது. இன்னும் 10 நாட்கள்தானே நம் உடமையாகப் போகும் பொக்கிசம்தானே என்று மனதை தேற்றிக் கொண்டு, விமான நிலையத்தில் அவந்திகாவின் உறவினர்களுடன், தன் சகோதரனையும் சந்திக்கத் தயாரானார்கள் இருவரும். அவந்திகாவின் சிவந்த கன்னங்கள், வெட்கத்தினால் மேலும் சிவந்து அவள் அழகின் உச்சத்தை வெளிக்கொணர்ந்தது.

அன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நாளில் இளமாறன் மற்றும் அவந்திகா இருவருக்கும், காலை சுப வேளையில் நிச்சயதார்த்தம் முடிவுசெய்யப்பட்டிருந்தது. மங்களம் அழகாக பச்சைப்பட்டு மடிசார் புடவையில் மங்களகரமாக வந்து நிற்க, ராமச்சந்திரன் மிகுந்த அதிர்ச்சியுடன்,

”நான் தான் உன்னை பச்சை பட்டு மட்டும் உடுத்த வேண்டாம் என்று சொன்னேனே, அதற்குப் பிறகும், அதே பச்சைப் புடவையை உடுத்திக் கொண்டுவந்து நிற்கிறாயே.. ஒரு தடவை சொன்னா புரியாதா நோக்கு…”?

“இல்லண்னா இது புது புடவை அதான் ஆசையா உடுத்திண்டேன். உங்களுக்குப் பிடிக்கலேன்னா, மாத்திண்டு வந்திடவா…”?

“பின்ன… அதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்லிண்டிருக்கேன். புரியலயோ நோக்கு.? போய் சீக்கிரமா மாத்திண்டு வா, மணியாறது பார்..”

சரி என்று சொல்லிய்வாறே மளமளவென்று புடவையை மாற்றிக்கொண்டு கிளம்பினாள். அதற்கு மேல் எந்த விளக்கமும் அவரிடம் எடுபடாது என்று நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததால், எந்த வாதமும் செய்யாமல் சட்டென்று சிகப்பு வண்ண ஆடையை மாற்றிக்
கொண்டு, தலை நிறைய பூவுமாக, முகம் நிறைய பூரிப்புமாக, மலர்ந்த முகத்துடன் கிளம்பினாள்.

உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் ஒன்றுகூடி, ஒரு சிறு ராமநாம பஜனையும் முடித்துவிட்டு, மணமேடையில் சுவாமியும், அம்மனும் போல சர்வ அலங்காரத்துடன் மாறனும், அவந்திகாவும் அமர்ந்திருக்க, மூத்தோர் கூடி நிச்சயதார்த்த ஓலையை வாசித்து, அதில் இரு வீட்டாரும் கையொப்பமிட்டு, மணமகனையும், மணமகளையும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்படி அழைத்தனர். முதலில் மாப்பிள்ளையின் பெற்றோரை அழைத்தனர் பாதபூசை செய்வதற்கு. பெற்றவர்களின் காலில் பூ போட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். மங்களம் மாமி உறவினர்களுக்கு பூவும், தாம்பூலமும் கொடுத்துக் கொண்டிருந்தார். கணவர் அழைப்பதைக் கேட்டவர் தாம்பூலத்தட்டை அனுவைக் கூப்பிட்டுக் கொடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு மணவறை நோக்கி அடியெடுத்து வைத்தவ்ர், சற்று உயரமான மேடையாக இருந்த காரணத்தினால், ஓரத்தில் இருந்த சின்ன இரும்புத்தூணைப் பற்றிக் கொண்டு மேடையின் மீது ஏற எத்தனிக்க …. உடனே வீல் என்ற அலறல் சத்தம் மண்டபத்தையே புரட்டிப் போட்டது. சற்று நேரம் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. திடீரென்று மாறனின் பெரியப்பா, யாராவது உடனே மெயினை ஆஃப் பண்ணுங்கோ.. சீக்கிரம் என்று கத்தியவுடன் தான் அந்த அபாயம் புரிந்தது அனைவருக்கும்.. யாரோ வெளியில் இருந்தவர்கள் சட்டென்று மின் இணைப்பைத் துண்டிக்க, அப்போதுதான் மங்களம் மாமியைப் பிடித்திருந்த மின்சாரம் பட்டென்று தூக்கிப் போட்டது. ராமச்சந்திரன், ”ஐயோ மங்களா…” என்று அலறி விழப்போக மாறன் ஓடிவந்து தந்தையைத் தாங்க, அதற்குள் மற்ற உறவினர்கள் அவசரமாக மங்களம் மாமிக்கு காற்று விசிறி தண்ணீர் தெளிக்க முயல, அதற்குள் யாரோ ஆம்புலன்சிற்கு போன் செய்ய, மண்டபமே பரபரப்பாக செயல்பட்டது. ஆம்புலன்சில், மங்களம் மாமியை தூக்கிப் படுக்க வைத்துக் கூட்டிச் சென்றனர். ராமச்சந்திரனும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தானும் ஓடிச்சென்று ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். மாறனும், அவந்திகாவும், மாலையைக் கழட்டி வைத்துவிட்டு, மருத்துவமனை செல்லத் தயாரானார்கள் மற்றொரு காரில்.

மாலை நான்கு மணிக்கு மேல் மங்களம் மாமி கண் விழித்த பின்புதான் அனைவருக்கும் உயிரே வந்தது. ஆனால் கீழே விழுந்ததில் முட்டி எலும்பு விலகி, அத்தோடு கெண்டைக்கால் எலும்பிலும் ஒரு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், மாவுக்கட்டு போட்டால் ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றும் மருத்துவர் சொன்னதைக் கேட்டவுடன் அனைவருக்கும் மிக்க வருத்தம் தான். திருமணத்திற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது என்ற பெருங்கவலை ஆட்கொண்டது. அதைவிட அவந்திகாவின் பெற்றோரும், பாட்டி, தாத்தாவும், இப்படி ஒரு சம்பவம் நடந்தது அபசகுனமாகக் கருதி ஒருவேளை திருமணத்தை நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்று மிகவும் கவலை கொண்டு விட்டனர்… மாறனும், அவந்திகாவும், அதிர்ச்சியின் உச்சத்திலிருந்து இன்னும் மீளாமலே இருந்தனர். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை இருவரின் முகத்திலும் தெரிந்தது.

எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு கூடிய திருமணம் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் ஒரு புறமும், ஆரம்பத்திலிருந்தே அப்பா பயந்தது போலவே ஆகிவிட்டதே… இனி அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ தெரியவில்லையே, இவ்வளவு தூரம் வந்த பிறகு கட்டாயம் இத்திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு கல்மனது கொண்டவரல்லர் என்றாலும், அம்மாவிற்கு ஏதாவது ஒன்று என்றால் துளியும் தாங்க மாட்டார். எப்படியும் சமாதானம் செய்து விடமுடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது..

அவந்திகாவின் குடும்பத்தாரின் முகத்திலும் அதே அளவு அச்சம் இருந்தது. தங்கள் மகளின் வாழ்க்கை என்னாகுமோ என்று.

மங்களம் மாமி கண் முழித்தவுடன் தான் ராமச்சந்திரன் முகத்தில் இருந்த கவலை ரேகைகள் சற்றே குறைந்தது. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது நல்ல வேளை.. அப்பாவின் முகத்தையும், அம்மாவின் நிலையையும் மாறி, மாறி பாவமாக பார்த்துக் கொண்டிருந்த மகனின் எண்ணோட்டங்களைப் புரிந்து கொண்ட அவர்,

“மாறன், அவந்திகாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு ஒருநடை சென்று வந்துவிடு” என்று சொன்னவுடன் தான் அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவே வந்தது.. நல்ல வேளையாக அவர் எந்த தப்பான முடிவும் எடுக்கவில்லை என்பதில் பெருமகிழ்ச்சிதான் என்றாலும், அம்மாவால் ஓடி ஆடி வேலை செய்ய முடியாதே என்று கவலையாகவும் இருந்தது. திருமணத்தை 3 மாதங்கள் தள்ளி வைத்துவிடலாம் என்று கூட நினைத்தான் மாறன். ஆனால் ராமச்சந்திரன் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று அத்துனை உறுதியாக இருந்த அப்பாவே, இப்படி ஒரு சம்பவம் நடந்து, அம்மா படுக்கையில் இருக்கும் வேளையில்கூட, பதட்டம் கொள்ளாமல் நிதானமாக யோசித்து ஒருவரையும் பாதிக்காமல் நல்ல முடிவாக எடுத்திருப்பதைக் கண்டு பூரிப்பாக இருந்தது. உரிமையுடன், திருமண காரியங்கள் அத்துனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அம்மாவின் இடத்தில் இருந்து தன்னலம் கருதாமல் செய்து கொண்டிருக்கும் அனுவைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது மாறனுக்கு. நட்பாகட்டும், உறவாகட்டும் தன்னைச்சுற்றி உள்ள அத்தனை பேரும் தன்மீது உண்மையான பாசம் கொண்டு, இருப்பதைக் காணும்போது தன் பலம் பன்மடங்கு கூடிப்போனதை அவனால் உணர முடிந்தது. அந்த வரிசையில் இன்று அவந்திகாவும் இணைந்து கொள்ள, ஆனந்தக் கண்ணீருடன், அர்த்தமுள்ள பார்வையை அவள் மீது வீசியபோது, அதனை உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாக அவன் கைகளைப் பற்றி ஓர் அழுத்தம் கொடுத்தாள். நல்வரமாக அமைந்த தம் வாழ்க்கையை எண்ணி மனதார அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான் மாறன்.

சுபமாக நிறைவுற்றது.

படங்களுக்கு நன்றி:

http://cameras.about.com/od/digitalphotographycontest/ig/March-2006-Photo-Gallery/Lovers–Moon.htm

http://spdigitalstudio.blogspot.in/2011/10/marriage.html

நன்றி : வல்லமை

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...