Tuesday, October 9, 2012

நம்பிக்கை ஒளி (2)


பவள சங்கரி

நம்பிக்கை ஒளி - பகுதி (1)


மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது. உறவுகளுக்காக ஏங்கும் இந்த மனதை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது. அறிவுக்கு தெரிந்த பல விசயங்கள் உணர்விற்கு எட்டுவதில்லை. அதற்கு கட்டுப்படுவதும் இல்லை. யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது மட்டுமே மன அமைதிக்கு வழிவகுக்கும் என்பதே அனுபவப்பாடம். கீதையின் சாரங்களும், நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளும், பைபிளின் வாசகங்களும் எத்தனையோ கேட்டு கேட்டு மனம் பண்பட்டிருந்தாலும், இப்போது நடந்ததை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. சமீபத்தில் படித்த ‘when there is no cure, endure' என்கிற வரிகள் நினைவிற்கு வர, தீர்வு இல்லாத ஒன்றை தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும். இந்த எண்ணம் வந்தவுடனே, ஒரு அமைதியான தென்றல் வீசி உள்ளம் குளிர ஆரம்பித்தது. அப்படியே, உள்ளே.... உள்ளே .. ஆழ்ந்து செல்லச் செல்ல வானில் சிறகடித்துப் பறக்கும் இனிய அனுபவம். கீழே இறங்கும் நினைவே இல்லை. எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்போம் என்று தெரியாத நிலையில், குழந்தை அழும் சத்தம் எங்கோ கேட்க, மெல்ல மெல்ல வெளியே வந்தாள். ஆசிரமத்தில் பழகிய பல நல்ல பழக்கங்களில் மிக முக்கியமானது தியானம். மனதை என்றும் அன்று பூத்த மலராக பசுமையாக வாழ வைக்கவல்லது.

திருப்பூர் நகரில் எப்பொழுதும் கடைத்தெரு ஜே.. ஜே என்றுதான் இருக்கும். இது வீடுகள் இருக்கும் பகுதி என்பதால் சற்று அமைதியாகத்தான் இருந்தது. குழந்தைகளும் பெரியவர்களும் அங்கங்கு நடமாடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். பின்னலாடை ஏற்றுமதி கம்பெனிகள் நிறைய இருப்பதால் வேலைக்குப் பஞ்சமிருக்காது. மாலதி தெருவில் இறங்கி தெம்பாக நடை போட்டாள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து சிரித்துக்கொண்டே நடந்தாள். மிக எளிமையான மக்கள் வாழுகிற அரசு குடியிருப்பு வீடுகள் உள்ள பகுதி. சின்னமாவின் வீடு கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. எந்த மாற்றமும் இல்லாமல், அழுக்கடைந்து, கிட்டத்தட்ட முழுவதும் வெளுத்துப்போன நிலையில் சுவர்கள் எப்போது வீழ்ந்துவிடுமோ என்று எண்ணும் வகையில் இருந்த அதே ஓட்டுவீடு. வீட்டை நெருங்கும் போது வீட்டின் முன்னால் ஒரு ஆள் ஏதோ சத்தமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மாத மளிகை பாக்கியை உடனே எடுத்து வைக்கும்படி மரியாதை இல்லாமல் பேசிக்கொண்டிருந்தான்.

உப்பு போட்டுத்தானே சோறு திங்கறே, உணத்தி வேணாம், எத்த்னை வாட்டி  நடக்குறது. உன்னால முதலாளிகிட்ட நான் பேச்சு திங்கறேன். போம்மா போய் ஏதாச்சும் வழிபண்ணி பணத்தை எடுத்து வை, அப்பத்தான் இந்த இடத்தை உட்டு போவேன் ஆமா..

ஏப்பா, திடுதிப்புனு வந்து பணத்தை எடுத்து வையின்னா, நான் என்னா பன்றது. பிள்ளைக்கு ஒரு வாரமா உடம்புக்கு முடியல, அவளை ஆசுபத்திரில சேத்திருந்தேன். கையில இருந்த காசும் செலவாப் போச்சு. இந்த வாரம் வேலைக்குப் போனாத்தான் கூலி வரும். கட்டாய்ம் அடுத்த வாரம் குடுத்துப்போடுவேன். கொஞ்ச நான் சொல்றத கேளுப்பா.. புண்ணியமாப் போகும

இதப்பாரும்மா, அதெல்லாம் முடியாது. உன் நொண்டிப் புள்ளைய பத்தி இப்ப என்னா.. தண்டத்துக்கு உக்காந்துகிட்டு இருக்குது. அதுக்கு ஏன் வெட்டியா செலவு பண்ணிக்கிட்டு இருக்கே..

இங்க பாரு தேவையில்லாம பேசாத.. தெரீதா, போயிட்டு அடுத்த வாரம் வா, இப்ப நீ தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் ஒத்த பைசா இல்ல எங்கிட்ட. எம்பட புள்ளயப் பத்தி ஏதும் பேசறத உட்டுப்போட்டு வந்த வழியே போய்ச் சேரு ஆமா

அக்கம் பக்கத்திலிருப்பவர்கள், இது வாடிக்கையாக நடக்கும் கூத்துதானே என்பது போல அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள் எதையும் கண்டு கொள்ளாம்ல. மாலதி வீட்டை நெருங்கி தயங்கி நின்றாள். அவளைப் பார்த்த சின்னம்மா, “ மாலதி., வாம்மா. வாம்மா உள்ளே வா சாமி..முகம் மலர வரவேற்றாள். தயங்கியவாறு வந்தவனை பார்த்துக்கொண்டே உள் நோக்கி நகர்ந்தாள்.

அதற்குள் மளிகைக் கடைக்காரன், “:சரி, சரி நான் முதலாளிகிட்ட போய்ச் சொல்லறேன். அடுத்த ஞாயித்துக் கிழமை வருவேன். பணம் குடுக்காட்டி தெரியும் சேதி ஆமா..என்று சொல்லிக்கொண்டே போனான்.

சின்னம்மா... என்று இழுத்துக் கொண்டே உள்ளே சென்றவளின் கண்கள வீட்டைச் சுற்றி வட்டமடித்தது. அதனைப் பார்த்தவுடன் புரிந்துவிட்டது சின்னம்மாவிற்கு, மாலதியின் கணகள் யாரைத் தேடுகிறது என்று.

பரமு.. பரமு, இங்க பாரும்மா யாரு வந்திருக்காங்கன்னு

சரக்.. சரக்கென்று, முரட்டுக் காரையில் சீட்டி பாவாடை உரச, பின்புறம் தரையில் சகட்டுக்கு உராய, மறத்துப்போன உணர்வில் வேகமாக போலியோவில் துவண்டு போன இரு காலகளையும் சேர்த்தே இழுத்துக்கொண்டு வந்தாள்.. அக்காஎன்று பாசமுடன் அழைத்துக்கொண்டே வந்தவளைப் பார்க்க மகிழ்ச்சியுடன் சேர்த்து பரிதாபமும் உறுத்தியது. பாரமாக மனதை ஏதோ அழுத்தியது. பழைய நினைவுகளில் ஆழ்ந்து போன சின்னம்மாவும் கண்கலங்கி சற்று நேரம் தடுமாறி பின் நிகழ் காலத்திற்கு வந்தார். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது ஆசிரமம் சென்று மாலுவை பார்த்துவிட்டு வருவாள். கடைசியாக சென்று வந்து 5 மாதங்கள் இருக்கும். படிப்பு முடிந்ததும் நேராக இங்கு வந்துவிடச் சொல்லிவிட்டுத்தான் வந்தார் என்றாலும், சித்தப்பாவைப் பார்த்துவிட்டு, மேற்படிப்பிற்கு ஏதேனும் உதவி கிடைக்கலாம் என்ற நப்பாசையில்தான் நேராக அங்கு சென்றாள். அதற்குரிய பலனையும் அனுபவித்துவிட்டாள்.

ஏம்மா ஒரு தபால் போட்டிருந்தால் நான் வந்து உன்னை கூட்டியாந்திருப்பேனே. எதுக்கு தனியா வந்து கஷ்டப்படோணும்

இல்லைம்மா, எனக்கு ஒன்னும் சிரமமா இல்லை. எங்க ஆசிரம வார்டன் அம்மா வழியெல்லாம் சொல்லி அனுப்பினாங்க. வீட்டு அட்ரஸ் எனக்குதான் தெரியுமே, அப்படியே வந்திட்டேன்என்றாள்.

ஆசிரமத்திலிருந்து நேராக வரும் பெண்ணிற்கு வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று மனது பரபரத்தாலும் மாதக்கடைசியானதால் காலியாகிப்போன மளிகைப்பொருட்கள் தடை போட்டது. சற்று யோசித்தவள் மாலதியை முகம் கைகால் அலம்பிக் கொண்டு வரும்படி பின்புறம் உள்ள குளியலறையைக் காட்டி அனுப்பிவிட்டு, ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு பக்கத்திலிருந்த மளிகைக்கடைக்கு விரைந்தாள். அரை கிலோ பட்டண் ரவையை  வாங்கிக்கொண்டு வந்தாள். மகள் குளித்து நெற்றிக்கு சின்னதாக திலகம் இட்டுக்கொண்டு வரும்போது தன் அக்காவே நடந்து வருவது போல தெரிய அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு அம்மாவை அப்படியே உரிச்சி வச்சிருக்கியே என் ராசாத்தி, நல்லாயிருடா..என்று திருஷ்டி முறித்துப் போட்டாள். குளித்துவிட்டு சித்தப்பா கொடுத்த அதிர்ச்சியால் உள் மனம் பட்ட ரணத்தை சுத்தமாக துடைத்தெறிய வேறு உபாயம் தெரியவில்லை. ஆயிரம் ஊசிகள் உடல் முழுவதும் ஒன்றாகக் குத்தியது போன்றிருந்த தெருவில் நின்ற அந்த கணத்தின் நினைவுகள் மறைய சில காலம் பிடிக்கும்தான்.

என்னம்மா அப்படி யோசனை என்று கேட்டுக்கொண்டே தளரத் தளர சூடாக ரவை உப்புமாவுடன் வந்த சின்னம்மாவிடம் நடந்ததைக் கூறிவிடலாமா என்று யோசித்த மறுகணம் அதனால் என்ன பயன் விளையப்போகிறது என்று அமைதியாக இருந்துவிட்டாள். இருக்கும் வேதனை போதாதென்று  சித்தப்பாவைப் பற்றி சொல்லி மேலும் வருந்த வைக்க வேண்டாம் என்றே தோன்றியது. ஆசிரமம் பற்றியும், தோழிகள் பற்றியும் கேட்க வேண்டும் என்று நினைத்த போதும், அக்கா ஏதோ யோசனையில் இருக்கிறாளே இனி மெதுவாக கேட்டுக்கொள்ளலாமே, இங்குதானே இருக்கப் போகிறாள் என்று நினைத்து அமைதியானாள் பரமு. மூவரும் அதிகம் பேசவில்லை, விதவிதமான காட்சிகள் அவரவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பாயில் படுத்து புரண்டு கொண்டே இருந்தவளை அருகில் இருந்த பரமேசுவரி, “என்னக்கா தூக்கம் வரலியாஎன்றாள்.

இல்லை பரமு, மனசு சங்கடமாயிருக்கு. அப்பா இறந்தபின்பு குடும்பம் எப்படி நடக்குது. அண்ணன் பணம் அனுப்புவ்தில்லையா”?

அம்மா எப்பவும்போல கார்மெண்ட்சு கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டுதான் இருக்குது. அண்ணனை முதலாளி பெரகாம்பூர் கடையில் வேலை பார்ப்பதற்காக அனுப்பியிருக்காங்க. அண்ணனுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கு. 2 வயசு ஆகுது. அண்ணன் கரெக்டா 4ந்தேதி ஆனா பணம் அனுப்பிடும். 3000 ரூவா அனுப்பும். சம்பளம் கம்மியாத்தான் வாங்குது. அதுக்கும் மேல  முடியாது பாவம்.. இதையே சிரமப்பட்டுத்தான் அனுப்பும்னு நினைக்கிறேன்... எனக்கு கால் நல்லாயிருந்தா நானும் வேலைக்குப் போயி சம்பாதிச்சிருப்பேன். அண்ணனுக்கு தொந்திரவு கொடுக்காம இருந்திருக்கலாம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சூம்பிப்போன கால்களை வெறித்தாள்.

அம்மா வருமானமும் சேர்த்தாலும் குடும்பச் செலவை சமாளிக்கிறது கஷ்டமாச்சே, அம்மா என்ன பன்றாங்க..?”

அக்கா நான் துண்டு முடிவேன். அதுல கொஞ்சம் காசு வரும். சமாளிக்கலாம் அக்கா. நீ கவலைப்படாதே

மாலதிக்கு சித்தப்பாவை நினைத்து கண்கலங்கியது. எவ்வளவு வித்தியாசம் இருவருக்கும்.

அக்கா, நீ நல்ல மார்க் வாங்கியிருக்கேன்னு அம்மா சொல்லிக்கிட்டிருந்திச்சி. நீ மேல படிக்கனும்க்கா. நான் இனிமேல் இன்னும் கொஞ்சம் சேர்த்தி துண்டு எடுத்துக்கறேன். கொஞ்சநாள் சமாளிக்கலாம். அப்பறம் நீ படிச்சு வந்தீன்னா நல்ல வேலை கிடைக்குமில்லியா.

மாலதி அவளை அப்படியே கட்டிக்கொண்டாள். எவ்வளவு நல்ல மனசோட ஆண்டவன் படைச்சிருக்கான் இந்தப் பெண்ணை என்று நினைக்கும் போது ஏனோ கடவுள் மீது கோபமும் வந்தது. இப்படி ஒரு குறையை கொடுத்து விட்டானே என்று துக்கம் தொண்டையை அடைத்தது. அதற்கு மேல் பேச நா எழ்வுமில்லை. யோசனையில் ஆழ்ந்தவள் தெளிவான ஒரு முடிவுக்கு வந்ததால் தூக்கமும் வந்தது.

உடனடியாக ஒரு வேலை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாலும், எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று ஒரே யோசனைதான். சின்னம்மாவிடம் மெல்ல விசயத்தைச் சொல்லியபோது அவர் அதிர்ச்சியுடன், ”ஏம்மா... இவ்ளோ நல்ல மார்க் வாங்கிட்டு வேலைக்குப் போறேங்கறே.. எப்படியாவது ஃபிரீ சீட் வாங்கி படிச்சிட்டா உன் எதிர்காலம் நல்லாயிருக்கும்டா. தப்பான முடிவு எடுத்துட்டு பின்னாடி வருத்தப்படக் கூடாது.என்று கண்டிப்பாகக் கூறினார்.

பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் என்று  சமாதான்ம் சொல்லி வைத்தாள்.

சரி அப்படீன்னா எங்க முதலாளிகிட்டயே சொல்லி உனக்கும் ஒரு வேலை போட்டுக்கொடுக்கச் சொல்ல்லாமா என்றாள்.

யோசித்து சொல்வதாகக் கூறினாலும், ஒன்றுமே புரியாத ஒரு வெறுமை ஆக்கிரமித்தது. வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காலத்தில் பிளஸ் டூ மட்டுமே படித்த தனக்கு என்ன வேலைதான் கிடைக்கும் என்று மலைப்பாக இருந்தது.  பத்தாம் வகுப்பு விடுமுறையிலேயே , தட்டச்சுப் பயிற்சியும், கணினியில் சில அடிப்படைப் பயிற்சிகளும் எடுத்துக் கொண்டதும் ஒரு தெமபைக் கொடுத்தது. எப்படியாவது உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்தாக வேண்டியது அவசியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

ஒரு வாரமாக நர்சரி பள்ளிகள், கம்ப்யூட்டர் செண்ட்டர் என அலைந்து எங்கும் வேலை கிடைக்காமல் அலுத்துப் போனவள், ஆசிரமத்தில் வார்டன் அம்மாவிடம் பேசினால் ஏதும் வழி கிடைக்க்லாம் என்ற எண்ணத்தில் ஆசிரம போன் நம்பரை எடுத்துக் கொண்டு  போன் பூத்திற்குச் சென்று பேசினாள். நலம் விசாரித்த வார்டன் அம்மா, ’கல்லூரியில் சேருவதற்கு அப்ளிகேஷன் போட்டியாஎன்று கேட்டபோது, அதற்குமேல் அவளால் மறைக்கவோ, அழுகையை அடக்கவோ முடியவில்லை. பதறிப்போன வார்டன்,

என்னம்மா, என்ன ஆச்சு. ஏன் அழறே. சித்தப்பா வீட்டில்தானே இருக்கிறே, ஏன் அவர் காலேஜில் உன்னை சேர்க்கலையா. உன்னைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்னாரேஎன்று கேட்டார்.

நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னவள், உடனடியாக ஒரு வேலைக்குப் போக வேண்டிய அவசியத்தையும் சொன்னாள். ஆண்டவன் தானே நேரடியாக வந்து உதவி செய்யாவிட்டாலும் மனித வடிவில் வந்து தேவையானவர்களுக்கு தேவையான நேரத்தில் செய்து கொண்டுதானிருக்கிறார் என்பதும் விளங்கியது. ஆம், மாலு வார்டனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பிரபல பள்ளியின் நிறுவனர், ஆசிரமத்திற்கு நன்கொடை கொடுப்பதற்காகவும், தன் பேரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரமத்தின் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவதற்காகவும் குடும்பத்துடன் வந்திருந்தார். வார்டன் அம்மாவிற்கு திடீரென்று இவரிடம் கேட்டால் என்ன என்ற எண்ணம் வந்தது. மாலு போன்ற நல்ல மதிப்பெண் பெற்றுள்ள மாணவிக்கு உதவுவதில் அவருக்கு ஆட்சேபனை இருக்காது என்று நினைத்தவர், மாலுவை 1 மணி நேரம் பொறுத்து திரும்பவும் பேசச் சொல்லிவிட்டு சமயம் பார்த்து அவரிடம் மாலுவின் நிலை பற்றி எடுத்துரைத்தார். அவரும் இரண்டு நாட்கள் பொறுத்து தன்னை பள்ளியில் வந்து சந்திக்கும்படி மாலுவிடம் சொல்லும்படி சொல்லியிருந்தார்.

இந்த இரண்டு மாதமாக பள்ளியின் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தப்பட்டவள் மாலையில் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பதற்கும் வாய்ப்பு கிடைத்ததால் வாழ்க்கை சரியான திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருப்பதாக நினைத்து பெருமிதம் கொண்டாள். இடையில் இரண்டு, மூன்று முறை அக்கா சாருவைச் சென்று பார்த்து வந்தாள். குண்டு கன்னமும், சொப்பு வாயும், ரோசா வண்ணமும் கொண்டு குட்டி கிருஷ்ணனாகவே அக்காவின் 10 மாதக் குழந்தை ரொம்பவே ஒட்டிக்கொண்டான் அவளிடம். அவனைப் பார்ப்பதற்காகவாவது அடிக்கடி அக்கா வீட்டிற்குப் போக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டாலும், நேரம் கிடைப்பது அரிதாகத்தான் இருந்தது. உடன் பிறந்த இரத்த சம்பந்தம் என்று சொல்லிக்கொள்ள அவள் மட்டும்தானே இருக்கிறாள். சகோதரன் எங்கு எப்படி இருக்கிறானோ என்று அவ்வப்போது நினைத்தாலும், ஏனோ தேடிக்கண்டுபிடிக்கத் தோன்றவில்லை. உடன் பிறந்த சகோதரிகளைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் இருப்பவனை ஏன் நினைக்க வேண்டும் என்று தோன்றியதால் அந்த நினைவையே தூக்கி எறிந்துவிட்டாள். சாருவும் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவில்லை. தன்னிடம் அவள் எதையோ மறைப்பதாகவேப் பட்டது. அவளிடமே கேட்டபோதும்,


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நீ உன் படிப்பை தொடருவதில் கவனம் செலுத்துஎன்று சொல்லி மழுப்பிவிட்டாள், அக்கா தன்னை இரண்டு நாள் கூட இருந்துவிட்டுப் போகலாம் என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்தவளுக்கு தன்னை  அனுப்புவதிலேயே குறியாக இருந்தது வருத்தமாகத்தான் இருந்தது.

அன்று பள்ளியின் தாளாளர் கூப்பிட்டனுப்பி, பல பெரிய மனிதர்களின் குழந்தைகள் படிக்கிற பள்ளியில் ஓரளவிற்காவது டீசண்ட்டாக டிரஸ் ப்ண்ணிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி, கணக்கரிடம்  ரூ.3000 முன் பணமாக வாங்கி, நல்ல துணியாக வாங்கி போட்டுக்கொண்டு வரச் சொன்னார். மாதம் 300 ரூபாயாக 10 மாதம் பிடித்துக் கொள்வார்களாம், அவர் சொன்னவுடன் தான் தெரிந்தது, தன் நிலை. மற்றவர்களிடமிருந்து தான் எந்த அளவிற்கு மாறுபட்டு இருக்கிறோம் என்பது. கையில் பணத்தை வாங்கியவுடன் அக்காவின் குழந்தை மிதுனின் நினைவுதான் வந்தது. அவனுக்கு ஒரு சட்டை வாங்கிக் கொண்டு, பரமுவிற்கு ஒரு பாவாடை சட்டையும், சின்னம்மாவிற்கு ஒரு வாயில் புடவையும், மீதமுள்ள பணத்தில் தனக்கு சில சுடிதார்களும் எடுத்துக்கொண்டு வீடு வந்தாள்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, அக்கா வீட்டிற்குச் சென்று மிதுனைப் பார்த்துவிட்டு சட்டையையும் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பரமுவிடம் பாவாடை சட்டையை கொடுத்தபோது, “அக்கா நீயாவது எனக்கு தாவணி எடுத்துக் கொடுக்கலாமில்ல.. அம்மாகிட்ட நிறையவாட்டி கேட்டுட்டேன், வாங்கித்தர மாட்டீங்குது. தாவணி போட்டா நான் பெரிய பொண்ணா தெரிவேனாம். தனியா வீட்டில இருப்பது ஆபத்தாம். ஆனா தாவணி போடாட்டியும் நான் பெரிய பொண்ணாத்தானே தெரியறேன், நீயே சொல்லு என்று கேட்டபோது, கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது மாலுவிற்கு.

சரி அடுத்த முறை கடைக்குப் போகும்போது கட்டாயம் உனக்கு தாவணி வாங்கித் தறேன், சரியாஎன்று முதுகில் தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றாள். அடுத்த நாள் அக்கா வீட்டிற்குச் சென்று மிதுன் குட்டியைப் பார்க்கப் போகிறோம் என்றமகிழ்ச்சியுடன் தூங்கிப் போனாள்.

காலையில் தன்னுடைய துணியெல்லாம் துவைத்து விட்டு, சின்னம்மாவிற்கும் உதவி செய்துவிட்டு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன் அக்கா வீட்டிற்குப் போகலாம் என்று கிளம்பிய நேரம், சாரு, குழந்தையை தூக்கிக் கொண்டு தானே வந்திருந்தாள். குழந்தையைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை மாலுவிற்கு. தான் அக்காவின் வீட்டிற்கு வருவதற்காகத்தான் கிளம்பிக் கொண்டிருந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தாள். குழந்தைக்கு சட்டையைப் போட்டு அழகு பார்த்தாள். அவனுடைய நிறத்திற்கு அந்த மேக வண்ணக்கலர் உடை அத்துனை அழகாகப் பொருந்தியிருந்தது. தன் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது.

அக்காவின் பேச்சு என்னமோ ஒரு மார்கமாகத்தான் இருந்தது. அம்மா, அப்பாவைப் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தவள், தங்களுடைய ஆசிரம வாழ்க்கை பற்றியும், இனிமேல் மாலுவின் வாழ்க்கையில் என்றுமே ஏறுமுகம்தான் என்றும் அவள் சின்னம்மா வீட்டை விட்டு எங்கும் போக வேண்டாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள். ஏன் அக்கா இப்படி என்னவோபோல் பேசுகிறாள் என்று புரியாமல் தவித்தாள் மாலு. அவளை எப்படி, என்னவென்று கேட்பது என்று புரியாமல் தவித்தாள். இரவு வீடு திரும்ப கிளம்பும் போது மாலுவை அணைத்துக் கொண்டு கண்கலங்கிச் சென்றாள் அதற்கான காரணம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவவளவு பயங்கரமாக இருக்கும் என்று துளியும் நினைத்துப் பார்க்கவில்லை அவள்!

தொடரும்

நன்றி : திண்ணை வெளியீடு

No comments:

Post a Comment