Saturday, October 2, 2010

காந்தியமும்......பெண்ணியமும்.


"வாழ்க நீ, எம்மான், இந்த
வையகத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா நீ வாழ்க, வாழ்க "
என்பார் மகாகவி பாரதியார்.

அன்னைத் தமிழ் மொழி மீது மாறாக் காதல் கொண்டவராம், நம் தேசத் தந்தை காந்தியடிகள், தெய்வப் புலவர் திருவள்ளுவரின், திருக்குறளிலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக,
எனும் குறள் நெறியைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் நம் காந்தியண்ணல்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்றது உப்புச் சத்யாகிரகப் போராட்டம்.........

அதன் பின்பு 1932 ஆம் ஆண்டு, காந்தி - இர்வின் ஒப்பந்தம் மீறப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் எழுந்த சத்தியாகிரகப் போராட்டத்தில், காந்தியடிகள் கைது செய்யப் பட்ட போது, அதை எதிர்த்து, திருப்பூரில் தடையை மீறி ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது.

' வெள்ளையனே வெளியேறு ', இயக்கம் 1942 ஆம் ஆண்டு, நடந்தது.

1937 ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் மற்றும் மரியல் போராட்டம்.

1940 ஆம் ஆண்டு தனி நபர் சத்தியாகிரகப் போராட்டம்.......

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து பாடுபட்டவர், ஐயனாரின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை. இந்தியருக்குத் தேசியமும் இல்லை......... தேசியக் கொடியும் இல்லையென கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் . கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்கள்தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறை செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

இந்திய விடுதலைக்கு ஆணி வேரான உரிமைப் போர் தென்னாப்பிரிக்கப் போராட்டம்.... இதில் தன் இன்னுயிரையே அர்ப்பணித்த தில்லையாடி வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தை தென்னாப்பிரிக்காவில், 1914ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15ம் நாள் காந்தியடிகள் திறந்து வைத்தார்.

இப்படி எத்தனை வள்ளியம்மைகள், நம் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள், இன்னுயிரையும் ஈந்தார்கள் என்பதை நம் வரலாறு கூறும்.

இன்றும் நம் இந்தியப் பெண்டிரின் இரத்தத்திலும், ஆழ் மனத்திலும் அண்ணல் காந்தியடிகள் காட்டிய சத்தியப் பாதை வேறூன்றி இருக்கிறது என்பதை நம் அன்றாட வாழ்க்கையிலும் காண முடிகிறது.............

எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களின் சூழலில் கூட, அஹிம்சை முறையைத் தானே இன்றும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? அது மட்டுமல்லாமல், குடும்ப நன்மை கருதி, எத்துனை சத்தியாகிரகங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு குடும்பம் நல்ல மேன்மையான நிலைக்கு உயருவதற்கும், குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கவும், ஒரு பெண் எத்துணை தியாகங்கள் மேற் கொள்கிறாள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆக காந்தியம் இன்றும் நம் இந்தியப் பெண்களின் வடிவில், ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நல் மனம் கொண்டோர் எவரும் மறுக்க இயலாது!!

Friday, October 1, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்- பாகம்- 2.


'உடல் வளர்த்தேனே, உயிர் வளர்த்தேனே' என்பார், திரு மூலர். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்............ தயவு செய்து, இது பெண்கள் சமாச்சாரம் என்று ஆண்கள் ஒதுங்காதீர்கள். உடல் ஆரோக்கியம் இருவருக்கும் பொதுதானே. மிக எளிமையாக சமைக்கக் கூடிய இரண்டு ரெசிப்பிக்கள் நீங்களும் முயற்சித்து குடும்பத்தாரையோ அல்லது பேச்சிலராக இருந்தால் நண்பர்களையோ அசத்தலாமே.

உடல் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி அடைய வேண்டுமானால்,
சரிவிகித உணவு உட் கொள்வது மிக அவசியம். குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை, அனைவருக்கும் சத்தான உணவு மிக அவசியம். கர்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கூடுதல் கவனம் தேவை. பலவிதமான உணவு வகைகளைக் கொண்டதே, ஆரோக்கியத்திற்கு ஏற்றதான சரிவிகித உணவு எனப்படுவது.

நமக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களைக் கொண்டே, நல்ல சத்தான, அன்றாட உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முடியும். இன்றைய அவசர யுகத்தில், 'விரைவு உணவு', பெரும் பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே இப்படி காலத்திற்கேற்றவாறு, சுவையை மாற்றிக் கொண்டு, புதிய, புதிய நோயினால், அவதிப்படுகிறார்கள். ஆனால் ஐந்தறிவு படைத்த மிருகங்கள், காலங்காலமாக, அதே இயற்கை உணவு
வகைகளையே உட்கொண்டு, ஆரோக்கியமாக வாழுகின்றன.

அரிசி, கோதுமை, ராகி, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளே நம்முடைய அடிப்படை உணவாகும். நல்ல கட்டுப்பாடான உணவுப் பழக்கமே ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாகும். அடித்தளம் உறுதியானதாக இருந்தால்தான், கட்டிடம் நிலைத்து நிற்கும்........புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்,சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவையனைத்தும் சரியான அளவில் சேர்ந்தது தான் சரிவிகித உணவென்பது.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, கொழுப்புச் சத்தும் ஓரளவிற்கு அவசியமாகிறது. தாவரங்களிலிருந்து எடுக்கப்படும், எண்ணெய் வகைகள், உடலுக்குத் தேவையான, சக்தியைக் கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்முடைய மேல் தோல் பளபளப்பாக இருப்பதற்கும் இந்த கொழுப்புச் சத்து பயன்படுகிறது. ஆனால் இந்த கொழுப்புச் சத்து அளவிற்கதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காலை நேரம் [Break - Fast] அதாவது, இரவு முழுவதும் விரதம் இருக்கும் வயிரை காலையில் கட்டாயமாக நல்ல சத்தான உணவுடன் குளிரச் செய்ய வேண்டும். மதியம் அளவான சாப்பாட்டுடன், அதிகமான காய்கறிகளும், கீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு சற்றே மிதமான , ரொட்டி, சப்பாத்தி, காய்கறிகளுடன் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் எத்தனை வயது வரை உயிர் வாழ்கிறோம் என்பதைவிட, நோயில்லாமல் எத்தனை வயது வரை இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆரோக்கியம் என்பது முழுவதும் நம் கையில் தான் உள்ளது.

குறைந்த கலோரி உணவு வகைகளைப் பார்க்கலாம்.

ரவா மசாலா இட்லி.

8 இட்லிகள் செய்வதற்கு தேவையானவைகள் ;
ஒரு இட்லி 40 கலோரிகள்.

ரவை 1 கப்
தயிர்[கொழுப்பில்லாதது] - 2 கப்
ஃரூட் சால்ட்[ENO FRUIT SALT]-2 டீ.ஸ்பூன்.
ஆப்ப சோடா மாவு - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது.
சிகப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் - 2 அல்லது 3.
மிளகு - 1/4 ஸ்பூன்.
சீரகம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. வானலியில், 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தாளித்து, அத்துடன் ரவையும் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

2. இத்துடன் உப்பு, தயிர் மற்றும் ஃப்ரூட் சால்ட்,சோடா மாவு, சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

3. இட்லி பாத்திரத்தில் , தட்டு வைத்து, சிறிய இட்லியாக ஊற்றி 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய் இல்லாமல், கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியோ அல்லது சாம்பாரோ நல்ல மேட்ச்.


Thursday, September 30, 2010

மாய மான்.


வேழ முகத்தோனே, ஞானக் கொழுந்தனே,
கொம்பொடிந்த வலம்புரி நாயகனே,
உடற் நடுங்கி, இதழ் வரண்டு, கண்கள் சிவந்து,
சப்பரமேறிய நந்தி மகனே!


இருமை வாழ்க்கையற்ற சுத்த ஞானியையும்,
ஒளி மனம் திறந்த நிலையில் அற்புதங்கள்,
நிகழ்த்தும், அறிவு நுட்பம் வாய்ந்தோரையும்,
அகர, உகர, மகரம் இணைந்த 'ஓம் கார',
எண்ணத்தை அடை காத்து வெற்றி பெற்ற மகான்கள்,


ஏனையோரையும் படைத்து உலக நலம் காத்தோனே!
இன்றோ, மரபணுக் காய் கனிகளையும் படைத்து,
அழிவுப் பாதையைத் திறந்திடச் செய்ததினாலோ,
நீயும் கரைந்து மாயமாகிப் போனாயோ மாயவனே?


இன்று உலகம் அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கிற அளவிற்கு அதன் பக்க விளைவுகள் ஏற்படுத்துகிற பாதிப்புக்களுக்கும் குறைவில்லாமல் தான் இருக்கிறது. இயற்கை சீற்றம் ஏற்படுத்துகிற அழிவைக் காட்டிலும் மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிற அழிவுகளின் பாதிப்புக்கள் சொல்லொனாதவை.

GM என்று சொல்லப் படுகிற மரபணுக் காய் கனிகளினால், பலவகையான உயிர்க்கொல்லி நோய்கள் பரவுவதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இது குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமான காலமிது........எச்சரிக்கை .............எச்சரிக்கை.....

கீழ்கண்ட தொடர்பில் உள்ள விடியோப் பதிவைக் கட்டாயமாகப் பாருங்கள். சற்றே அளவில் பெரிதாக உள்ள படியால் இதனை பதிவேற்ற இயலவில்லை அதனால், இந்த லிங்கைஅவசியம் க்ளிக் செய்து பாருங்கள்.

http://uk.video.yahoo.com/watch/4687000/12525766


Sunday, September 26, 2010

புலரும்..............பொழுது..........


வசந்த கால வண்ண மலர்களின்
வசீகரம் நெஞ்சையள்ள
காதல் பறவைகளின் பூபாளம்
இதமாக மனதை வருட..........

மணி 5.15. அலார பென்குயினின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, எழுந்திருக்கலாமா, வேண்டாமா என்று யோசித்த நொடி...........

அடுத்த 45 நிமிட, வழமையான மூன்று கிலோமீட்டர் நடைப்பயணம்..............இன்று ஒரு நாள் போகாமல் விட்டால்தான் என்ன ஆகிவிடப் போகிறது?

அன்பு கணவர் அருகண்மையில், ஆனந்தமான நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். இரவு வெகுநேரம் , ஒரு சிறிய பந்திற்காக, 22 வல்லுநர்கள் ஆடி, ஓடி விளையாடும் அரிய காட்சியைக் காண தன் இரவு நேர நித்திரையைக்கூடத் தியாகம் செய்த உத்தமர்..........இப்பொழுதுதான், சாக்லேட் உண்ணும் மழலையைப் போல புன்னகை தவழும் இதழ்களுடன், [ ஏதாவது கனவு கண்டு கொண்டிருப்பாரோ?] உறங்கிக் கொண்டிருக்கிறார்.......

ஒரு வேளை நான் எழுந்தால் அந்த அசைவுகளின் உரசல் அவருடைய இன்ப நித்திரைக்கு பங்கம் விளைவித்து விடக் கூடுமே.................அதனால் இன்று நடைப்பயணத்தை தியாகம் செய்து விடலாமா, என்று சுகமான நித்திரையைக் குறிவைத்த சுயநல மனது, ஏதேதோ, நொண்டிச் சாக்கைத் தேடுகிறது..........

ஆனால் வானம் தெளிவாக இருப்பது, கண்ணாடி சன்னலின் திரைச்சீலையின் இடுக்கில் தெளிவாகிறது........எப்படியும் இன்னும் 45 நிமிடங்களில், பகலவனின் தங்கக் கிரணங்கள் தக தகவென ஒளி வீச ஆரம்பித்து விடும்.......என்னவரும் எழுந்தவுடன் ஏன் நடைப் பயணம் செல்லவில்லை என்றுதான் கேட்பார்.

ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு எழுந்து, அவசர அவசரமாக, ஓய்வரைக்குச் சென்று, காலைக் கடன்களை முடித்து, உடை மாற்றி, படியிறங்கி கீழே வந்தேன்......

கண்ணாடிக் குடில், மீன் தொட்டியில், தங்க மீன்கள் நிற்க நேரமின்றி, சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, வெள்ளை ஷார்க் மீன்கள் சுழன்று, சுழன்று சாலம் புரிவதையும், அழுக்குத் தின்னி மீனோ, கொழு கொழுவென, அசையாது உண்ட மயக்கத்தில் சயனித்திருக்கிறது..........இது எப்பொழுதும் இப்படித்தான், ஏதோ ஒரு சில நேரம் தான் தானும் இருக்கிறேன் என்று லேசாக உடலசைத்துக் காட்டும்........

அந்த ஐந்து நிமிடக் காட்சி, மேலும் சுறு சுறுப்பையும், உற்சாகத்தையும் ஊற்றெடுக்கச் செய்ய..........

வாசலைத் தாண்டி பூச்செடிகளின் குளுமையான இலைகளைத் தீண்டிக் கொண்டே, தெருவில் இறங்கி நடந்தேன் நேற்றைய பௌர்ணமி நிலவின் சொச்சம் இன்னும் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் துளிர் விட............அழகான முழு நிலவு இன்னும் தக தகத்துக் கொண்டிருப்பது, மெலிதான அந்த இருட்டு வேளையிலும் தெரிந்தது.

பிரின்ஸ்டன் குடியிருப்புப் பகுதியின், சாலையின் இரு மருங்கிலும் வித விதமான உல்லாச உந்துகளின் அணிவகுப்பு. சற்று தூரத்தில் ஒரு சிறிய சரிவில் இறங்கி, திரும்பவும் ஒரு குடியிருப்பு. உல்லாச உந்துகள் சயனித்திருக்கும் காட்சிகள்...........அங்கிருந்து, பிரதான சாலைக்குச் செல்லும் பாதையை நோக்கி நகர்ந்தேன்.........

திரும்பவும் ஆவல் உந்த மேற்கு திசையை நோக்கித் தலை தானாகத் திரும்பியது. இன்னும் அந்த நிலா மகள் அங்கு புன்னகைத்துக் காத்துக் கிடந்தாள். அதற்குக் கீழே பஞ்சுப் பொதி போன்ற மெல்லிய மேகம்..........

பிரதான சாலையின் திருப்பத்திற்கு வந்துவிட்டேன். அங்கு ஒரு சிறிய செயற்கைக் குளம்......வெள்ள நீரையும், மழை நீரையும் அணை போடும் விதமாக உருவாக்கப்பட்ட அழகிய குளம்.......[ திருமண பந்தம் போல.....] அருகில் ஒரு சிறிய ஊசி இலைக் காடு.... பனிக் காலத்தில் இந்த குளம் முற்றிலுமாக உறைந்துக் கிடக்கும் காட்சி கண் முன்னே விரிந்தது.

ம்மா........ம்மா..........மாடு பால் கறக்க வேண்டிய வேளையை நினைவு படுத்த கத்த ஆரம்பித்திருந்தது. உட்புறமாகத்தான் மாடு மேய்ச்சலுக்கான பசும் புல் வெளிகள் இருந்தது......

ஊசியிலைக் காட்டின் முகப்பில் ஏதோ சல சலப்பு.........என்னையறியாமல் இதயம் ஒரு நொடி பலமாகத் துடித்து, கால்கள் சற்றே பின் வாங்கியது. சலசலப்பு வந்த திசை நோக்கித் தலை தானாகத் திரும்பியது......... அங்கே,

ஆறு மான்கள், விசாரமாக நின்று கொண்டு, குறு குறுவென எனை உற்று நோக்கிக் கொண்டிருந்தது........ரடார் கருவி போன்ற அதனுடைய காதுகள் குவிந்து என் புறம் திரும்பியிருந்தன. முதுகில் சிலீரென ஒரு மின்னல்........

எங்கோ தூரத்தில்.......கொக்கரக்கோ........சேவல் கரைவது மெலிதாகக் கேட்டது. காலங்காலமாக மாறாத சங்கதிகள்..........பால் கறக்கும் மாடுகள், ஒலி எழுப்பும் பறவைகள், அன்றாடம் தோன்றி மறையும் சூரியன், பௌர்ணமி நிலவு, மலரும் மொட்டுக்கள்.......இப்படி எத்தனையோ......... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவையெல்லாம் ஓய்வில்லாமல் நடந்து கொண்டுதானிருக்கிறது. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளானாலும் நடந்து கொண்டுதானிருக்கும்........

அந்த இடத்தைக் கடக்க முயன்றவள் மனம் மறுக்க, அன்றாடம் வழமையாகச் செல்லுகிற பாதையில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, அப்படியேத் திரும்ப வந்து கண்ணிறைந்த அதே காட்சியைக் காணும் பேராவல் ஏற்பட்டது. இயற்கை அரசியின் உன்னதத்தை விட்டு அகல மனம் மறுக்க, நிலவோவியமும் என்னோடு சேர்ந்து அக் காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறது.

15 நிமிடங்கள் கடந்திருக்கும். திரும்பவும் போய் அதே குளக்கரையின் முகப்பில் நின்று மேற்கே நோக்கினேன்..........அழகு நிலவை திடீரெனக் காணவில்லை........ மேகமூட்டம் சிறிது, சிறிதாக , மென்மையான சல்லடைக்கண் துணி போல விலகிக் கொண்டே இருந்தது............மான்களையும் காணவில்லை...........பொழுது புலர ஆரம்பித்திருந்ததால், குளுமையான, பாதுகாப்பான இடம் தேடிச் சென்றிருந்தது போலும்..... மாடு கத்தும் ஓசையும் இல்லை. பால் கறந்து விட்டிருக்க வேண்டும். சேவலும் தன் கடமை முடித்த திருப்தியோடு அமைதியாகிவிட்டிருந்தது......

இரண்டு விடயங்களில் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அந்த இனிய நாள் என் வாழ்நாளின் ஒரு மகுடமாக ஆனது......ஒரு வேளை, சயன அறையை விட்டு வெளியே வர சோம்பல் பட்டு விட்டிருந்தால், எத்துணை அரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பேன்.......இயற்கை அன்னைத் தன் பரிவாரங்களுடன் ஒன்று கூடி, காட்சி கொடுத்த, அழகு நர்த்தனம், இன்னொரு நாள் இப்படிக் காணக் கிடைத்திருக்குமோ என் வாழ்நாளில்..........

மற்றொன்று, அனைத்துக் காட்சிகளும், மாறிவிட்டிருந்தாலும், பெரியோர்கள் சொல்கின்ற 'உலகில் மாற்றங்கள் மட்டுமே நிலையானது' என்ற பேருண்மை............. சில விடயங்களில் பொருந்தாதும் போகிறதே? அதாவது.........'நிலையான நிலையாமை'..........

மேலும், மனித உயிர்களுக்கு மட்டுமே, உரித்தான, இரசிக்கும் தன்மை, [தியானம் என்று கூட இதைச் சொல்லலாமோ] மற்றும் பாராட்டும் வள்ளல் தன்மை......... மிக எளிமையான முறையில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி..........

அதாவது, மிக ஆழமாக, மிக அடிப்படையாக, மிகத் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு மட்டுமே, உரித்தான அந்த குணம்............ தானும் மகிழ்ந்து, அடுத்தவரையும், மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தச் செய்யும் அந்த வள்ளல் தன்மை............ கடவுட் தன்மை.............

இந்த எண்ணம் எனக்குள் நிரந்தரமாக இருந்தாலும், அந்த விடியற்காலை நேர விழிப்புணர்வு என்னுள், ஏற்படுத்திய தாக்கம் மட்டும், நிலைத்து விட்ட ஒன்று......... அந்த மான் கூட்டமும், பறவை, மிருகங்களின் கீதமும், பௌர்ணமி நிலவும்............. நல்ல பொழுதை ஆரம்பித்து வைத்தது......

வழமையாக மனம் பாடுகிற, 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா' என்ற பாடலை, இதழ்களும் அசைந்து உயிரூட்டியது............

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...