Wednesday, October 31, 2012

மணலும், நுரையும் - கலீல் ஜிப்ரான்



SAND AND FOAM - KHALIL GIBRAN (1926)


    "Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you."



மணலும், நுரையும்


அனுதினமும், இந்தக் கரையோரங்களில் அந்த மணல் மற்றுமந்த நுரையினிடையே,
நடை பயின்று கொண்டிருக்கிறேன் யான்
உயர்ந்த அந்த அலைகள் எமது பாதச்சுவடுகளை அழித்துவிடக்கூடும்,
மேலும் அந்த வளி அந்த நுரையையும் ஊதித்தள்ளிவிடும்.
ஆயினும் அந்தக் கடலும், கரையும் என்றும் நிரந்தரமாய் இருக்கும்.

Monday, October 29, 2012

நம்பிக்கை ஒளி! (4)





பவள சங்கரி

நம்பிக்கை ஒளி (3)


உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு தூக்கம் வந்தது.... அன்றாட வழக்கம் போலவே அன்றும் விடியலிலேயே விழித்துக் கொண்டவள், கண்ணைத் திறக்காமல் அப்படியே எழுந்து படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு தன் தாயாய் இருந்து அன்பு சொரிந்த அந்த அழகு அக்கா முகத்தை நினைவில் கொண்டுவந்தாள். பளிச்சென்ற ஒரு ஒளியுடன் ஒரு முகம் நினைவில் தோன்றியது. அது தன் தாயின் முகமோ அல்லது அக்காவின் முகமோ என்று தெரியாதவாறு இரண்டும் கலந்த ஒரு தோற்றமாகக் காட்சியளித்தது. தெய்வமாக இருந்து தன்னை எப்படியும் வழிநடத்துவாள் என்ற நம்பிக்கையும் தெம்பைக் கொடுத்தது. மறக்க நினைப்பதைவிட மனக்கோவிலில் தெய்வமாக்கி பூஜிப்பது எளிதாகவே இருந்தது! வாழ்ந்தாக வேண்டுமே... அதற்கு ஒரு பிடிமானமும் தேவையாக இருக்கிறதே...

சின்னம்மா மாலுவின் விடுமுறைக்கான காரணத்தை நேரில் சென்று அவள் வேலை பார்க்கும் பள்ளியில் சொல்லிவிட்டு வந்திருந்தாள் என்றாலும் அதிகமாக விடுமுறை எடுப்பது அவ்ளுடைய வேலைக்கு மட்டுமல்லாது மன ஆறுதலுக்கும் சரியாகாது என்பதால் அவளை எப்படியும் உடனடியாக திரும்ப வேலைக்குப் போகச் செய்வதே நல்லது.. அதற்காக அவளைத் தயார்ப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மாலு குளித்துவிட்டு வெளியே கிளம்பியதைக் கண்ட பரமுவும், சின்னம்மாவும் ஆச்சரியத்தில் கண் அகல பார்த்துக் கொண்டிருந்தனர். முகத்தில் அபரிமிதமான களைப்பும், வேதனையும் தெரிந்தாலும் அது அனைத்தையும் மீறி ஒரு தெளிவும் இருந்ததைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் ,

மாலு, நானே சொல்லணும்னு நினைச்சேன். வேலைக்குப் போனால்கூட மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமேன்னு. இப்படியே படுத்துக்கிட்டே அழுதுகிட்டே இருந்தாலும், மாண்டவர் மீண்டு வரப்போவதில்லை. நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்துதானே ஆக வேண்டும்.

அக்கா உன்னைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்குக்கா... எல்லா விசயத்திலும் போல இதிலேயும் நீ பக்குவமா நடந்துக்கிறது ஆச்சரியமாவும் இருக்கு. எவ்வளவு பெரிய இழப்பு. எத்தனை பெரிய அதிர்ச்சி! இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆகி வெளியே வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்க முடியல...

என்ன செய்யிறது பரமு, வேற வழியில்லையே ...  வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்ல... எல்லாமே ஒரு சுழற்சிதானே.. சுற்றிவரும் பூமியைப் போல நல்லதும், கெட்டதும் மாறி மாறித்தானே வருது. என்ன ஒரு சிலருக்கு கெட்டது கொஞ்சம் அதிகமா தங்கிப் போகுது. முதல் நாள் இரவு கோடீஸ்வரனாக பஞ்சு மெத்தையில் பகட்டாகப் படுத்து இருந்தவர் மறுநாள் குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்ததே. குஜராத்தின் பூகம்பத்தின் நில அதிர்வில் பயந்து அலறியடித்துக் கொண்டு வெளியில் வந்து நின்றவர்களின் கண் முன்னாலேயே பரம்பரையாகச் சேர்த்த அத்தனை சொத்தும் தரைமட்டமாகி கட்டிடத்துடன் சேர்ந்து அவர்களின் எதிர்காலமும் தூள், தூளாகி, மண்னோடு மண்ணாகிப்போனதே?   அவர்களெல்லாம் பிழைக்காமலா போனார்கள். கடலோரத்தில் சொகுசு விடுதியில் சுகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்களை சுனாமி மொத்தமாக அள்ளிக் கொண்டு போகவில்லையா? எஞ்சியவர்கள், முழு குடும்பத்தையும் இழந்தவர்களும் எப்படியோ பிழைத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். இதுதானே யதார்த்தம்.... வேதனையை மென்று கொண்டே, முன்னேறிக் கொண்டே இருக்கத்தானே வேண்டும். சில இழப்புகள் இறுதிவரை மறக்கவே முடியாதது. இதயத்தில் குத்திக் கொண்டிருக்கும் ஊசிமுனை போன்றது. அம்மா, அப்பாவை இழந்ததைவிட அதிக சோகம்தான்..  அம்மாவாக வளர்த்த அக்காவை இழந்தது.என்று சொன்னவளின் கண்களில் மாலையாகக் கண்ணீர் வழிந்தோடியது. அதனை மறு புறம் திரும்பி அப்படியே துடைத்துக் கொண்டு கடினமான புன்சிரிப்புடன் கோவிலுக்குச் சென்று வருவதாகக்கூறி கிளம்பினாள். அக்கா, மாமா மற்றும் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய மனமார பிரார்த்தனை செய்து கொண்டு திரும்பியவள், மளமளவென வேலைக்குக் கிளம்பத் தயாரானாள்.

பள்ளியில் ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிக்கும்போதும் பொத்துக் கொண்டு வந்த அழுகையை வெகு சிரமத்திற்குப் பிறகே கட்டுப்படுத்த முடிந்தது. மனதில் இருந்த இலட்சியங்களின் உறுதி அவளை மேற்கொண்டு அடி எடுத்து வைக்கும் வலலமையையும் வழங்கியது. தலைமையாசிரியர் அழைத்து ஆறுதல் சொன்னதோடு, ம்னதைக் கட்டுப்படுத்தி வேலையிலும், படிப்பிலும் முழு கவனம் செலுத்தினால் மனமும் தானாக ஒருநிலைப்படும், துக்கமும் கட்டுக்குள் வரும் என்று சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தாள்.

அரசுக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரப் பிரிவில் சேர்ந்து படிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் பிரகாசமாக இருந்தாலும், ஏனோ அவளுக்கு அதில் நாட்டமில்லாது போனது.  தன்னைப் போன்று ஆதரவில்லாமல் தவிப்போருக்கு உதவும் வகையில் தம் எதிர்காலம் அமைய வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததால், பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கத் தயக்கமாக இருந்தது. சொந்த நாட்டையும், உதவியை நாடும் உறவுகளையும் விட்டு பணி நிமித்தம் வெகுதூரம் செல்லவேண்டிய தேவையை எதிர்கொள்ள மனமில்லை என்பதும் முக்கிய காரணமானது. திரைகடல் ஓடாமலும் திரவியம் தேட நம் நாட்டிலேயே வழியும் இருப்பதாகத் தோன்றியது. மாலை கல்லூரியில் சேர்ந்து படித்ததில் பகல் நேரத்தில் பள்ளி வேலைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விடுமுறை நாட்களில் டியூசன் வகுப்பு எடுப்பதற்கும் ஏற்பாடு செய்து கொண்டாள். கடந்து போன கடினமான நிகழ்வுகளை திரும்பிப் பார்க்க நேரமில்லாத நெருக்கடியைத் தானே உருவாக்கிக் கொண்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுடன், குழந்தையாகப் பழகும்போது மனது லேசாகிப்போவது நிம்மதியளித்தது.

சின்னம்மா அசந்து தூங்கிக் கொண்டிருப்பது போன்று தெரிந்தது. பாவம் இந்த வயதில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்துபோய்க்கிடக்கிறாரே என்று வருத்தமாக இருந்தது. இன்று நாமே சமைக்க்லாமே என்று சமையலறைப் பக்கம் போக எத்தனித்தவள், அங்கு ஏதோ உருட்டும் சத்தம் கேட்டுத் தயங்கி நின்றாள். கையை எட்டி மெதுவாக மின் விளக்கைப் போட்டாள். வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களைக் கண்டும் அஞ்சாமல் மீண்டு வர முடிந்தவளுக்கு இந்த சிறு எலியின் மீது அப்படி ஒரு அச்சம். விளக்கைப் போட்டுவிட்டு அது ஓடி மறையக் காத்திருந்தாள். உள்ளே சென்று அரிசிப் பானையிலிருந்து இரண்டு ஆழாக்கு அரிசியை எடுத்து முதலில் தண்ணீரில் கொட்டினாள். அதற்குள் விளக்கு வெளிச்சமும், உருட்டும் சத்தமும் கேட்டு வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து வந்தாள் சின்னம்மா.

அடடா.... இன்னைக்கு என்னமோ இப்படி தூங்கிப்போயிட்டேனே... என்னமோ ஒரே அசதியா இருந்ததுஎன்று ஏதோ பெரிய தவறு செய்தவள் போல சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள். சின்னம்மா எழுந்து வந்துவிட்டால் இனி தன்னை எந்த சமையல் வேலையும் செய்யவிடமாட்டார் என்று தெரிந்தாலும்,

அம்மா, இன்னைக்கு நானே சமைக்கிறேனே.. நீ இன்னும் கொஞ்ச் நேரம் படுத்து ஓய்வெடுக்கலாமில்ல.. ஏன் இப்படி அரக்கப்பரக்க எழுந்திரிக்கணும்?” என்றாள்.

இல்லம்மா, நல்லாத்தானே இருக்கேன். நான் பல்லை விளக்கிப்புட்டு போய் பால் வாங்கியாறேன். வந்து காபி போட்டுட்டு சமைக்கிறேன். நீ போய் உன் வேலையைப்பாரும்மா.. இதெல்லாம் நான் பாத்துக்கறேன்என்று கையைப்பிடித்து சமையல அறையிலிருந்து வெளியே கூட்டி வந்துவிட்டாள். என்ன கெஞ்சினாலும் இனி தன்னை வேலை செய்ய விடமாட்டாள் என்று தெரிந்ததால், கொஞ்ச நேரம் பாடம் படிக்கலாம் என்று புத்தகத்தை எடுத்துவைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

சின்னம்மா பால் வாங்கிவந்து சுடச்சுட, மணக்க, மணக்க காப்பியுடன் வந்தபோது, பரமுவும் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்திருந்தாள்.மூவரும் ஒன்றாக அமர்ந்து கொஞ்ச நேரம் காபியுடன் சுகமாக அளவளாவிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.

வழக்கம் போல துண்டு முடிந்து கொண்டிருந்த பரமுவிடம் மாலை தான் பள்ளி வேலை முடித்து வரும்போது, வெளியில் செல்லத் தயாராக இருக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாள், மாலு.  வெகு சிரத்தையுடன் காலையிலேயே தம் கடமையைத் துவங்கிவிட்ட, பரமுவைப் பார்த்து பெருமிதமாக இருந்தது. ஏதாவது சிறு நூல்முனை கிடைத்தாலும் முன்னுக்கு வந்துவிடுவாள் அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டு என்று நினைத்துக் கொண்டாள். எங்கு போகப் போகிறோம் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாலும் அக்கா, அவளாகவே சொல்லுவாள என்று முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பரமு. மாலு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் மாலை கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள். சின்னம்மா கொடுத்த தக்காளி சாதம் டப்பாவை எடுத்து கைப்பையினுள் திணித்துக் கொண்டே மாலை முதலாளியிடம் சொல்லிவிட்டு சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்பிவிட்டால் மூவரும் சேர்ந்தே வெளியில் செல்லலாம்  என்றும் கூறிவிட்டுச் சென்றாள். சின்னம்மா அவசரமாகக் காரணம் கேட்டதற்கும் புன்னகைத்துவிட்டு, ”சாயந்திரம் வாங்க பேசிக்கலாம்என்று ஒத்தை வரியில் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அன்று மாலை கல்லூரியும் விடுமுறையாக இருந்ததால் வசதியாகப் போய்விட்டது.

ஒரு துக்கம் நடந்த வீட்டில் உடனடியாக ஏதாவது நல்ல காரியம் செய்ய முயற்சிப்பார்கள். அந்த சூழ்நிலை மாற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதற்காக.

பரமுவை ஆட்டோவில் ஏற்றுவதற்கு இருவரின் உதவியும் தேவையாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரு வாய் காப்பித் தண்ணீர் கூடக்குடிக்காமல் அத்துனை அவசரமாக மகள் எதற்காக இரண்டு பேரையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாள் என்பது சஸ்பென்சாகவே இருந்தது. இருந்தாலும் மாலு எதைச் செய்தாலும் அது அனைவரின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருந்ததால் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே போனது. ஆட்டோ ஒரு எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவமனை வாசலில் போய் நின்றபோது குழப்பம் கொஞ்சம் வந்தது. அம்மாவிற்கு ஒருவேளை ஏதும் உடம்பு முடியவில்லையோ என்று எண்ணிய போது கொஞ்சம் டென்சன் ஆனாலும், அம்மாவைப் பார்த்தால் நல்லாத்தானே இருக்குன்னு குழப்பம் அதிகமானது.. அதற்குள் செவிலியர் வந்து, “யாரும்மா இங்க பரமேசுவரிங்கறது?”  என்று கேட்கவும் அடுத்த வார்த்தை பேச முடியாமல் மாலு அக்காவின் பின்னால் அமைதியாக அம்மாவும் மகளும் நடந்தார்கள்....

போலியோ நோயினால் வலுவிழந்து சூம்பிப்போன கால்களுக்கு விசேசமான  காலணிகள் அணிந்து நடக்கப்போகும் தன்னுடைய கனவு நடைமுறைக்கு வரப்போகிறது என்ற இன்ப அதிர்ச்சி, மருத்துவமனையினுள் நுழைந்து அதற்கான ஏற்பாடுகள் செய்தபோதுதான் தெரிந்தது. தன்னையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். முதன்முதலில் கால்களுக்கு பெரிய தெம்பு வந்ததுபோல் உணர்ந்தாள். இரண்டு கைகளின் அடியில் கச்சிதமாகப் பொருந்தும்படியான பஞ்சுப்பொதி வைத்த குச்சியும், தொடைப்பகுதியில் அணைப்பாக பெல்ட் போட்டு  கட்டி, அதனை இடுப்புடன் மற்றொரு பெல்ட்டுடன் சேர்த்துக் கட்டி, ஒரு வழியாக எழுந்து நிற்க வைத்துவிட்டார்கள். வானளவு உயர்ந்து நிற்பது போல ஒரு உணர்வு வந்தது முதன்முதலில் எழுந்து நின்ற அந்த இனிய பொழுதில்.. தெய்வமாக மாலு தன் வாழ்வில் வந்து ஒளியேற்றி வைத்ததை நினைக்க நினைக்க கனவா, நனவா என்றே தெரியாமல் மயக்கத்தில் கிடந்தாள் அவள்..

அக்கா, வங்கியில் கணக்கு ஆரம்பித்து, ஏதோ கொஞ்சம் சேமித்து வருகிறாள் என்று தெரிந்தாலும் அது அவளுடைய படிப்பிற்காக என்றுதான் எண்ணியிருந்தாள். ஆனால் அதெல்லாம் தனக்காகத்தான் என்று தெரிந்தபோது அவளுடைய மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது. இழுத்து, இழுத்து நகர்ந்து பின்புறமெல்லாம் தேய்ந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிக்மாக நகரக்கூட முடியாமல் சிறைக்கைதியாய் அடைந்து கிடந்தவளுக்கு சுவர்கலோகமே கண் முன்னால் தெரிந்ததில் ஆச்சரியமில்லையே! இவ்வளவு பெரிய தொகையை தனக்காக மனமுவந்து செலவு செய்தவளை நினைக்கும் போது நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அதைவிட அடுத்து நடந்தது மேலும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆம், மருத்துவமனையில் இவர்களுடைய ஏழ்மை நிலையை உணர்ந்தவர்கள் தொண்டு நிறுவனம் மூலம் உதவி கிடைக்க செய்த ஏற்பாட்டினால், செலவு செய்த தொகையில் பெரும் பகுதி திரும்பக் கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாலு அதை வாங்க மறுத்தாள். தங்களைவிட சிரமத்திலிருப்பவர்களுக்கு உதவக்கூடுமே என்றே மறுத்தாள். ஆனாலும் சின்னம்மாவும், பரமுவும் வற்புறுத்தியதால் அரை மனதுடனே வாங்கிக் கொண்டாள். ஆனால் அதுவும் நல்லதாகவேப் போய்விட்டது.

ஆம்... பரமுவிற்கு தான் செய்ய நினைத்த அடுத்த முக்கியமான கடமையும் நிறைவேறியது, அந்தப் பணத்தின் மூலமாக. பரமு, வானுலக தேவதையாக உலா வருவது போல உணர்ந்தாள். அடுத்தடுத்து நடந்தவைகள் பரமுவின் தன்னம்பிக்கையை உரமிட்டு வளர்ப்பதாகவே அமைந்தது. ஆம், மாலு செய்த அடுத்த நல்ல காரியம், பரமுவிற்கு ஊனமுற்றோருக்கான பொது தொலைபேசிச் சேவையை வாங்கிக் கொடுத்ததுதான். மற்றவர்களைப் போன்று தம் மகளும் எழுந்து நடந்து வேலைக்குச் செல்வதைக் கண்ட அந்தத் தாயின் மனம் பூரிப்பில் நிறைந்துதான் போனது. மாலுவைக் கட்டிக்கொண்டு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினாள். அந்தக் கணம் இளம் வயதிலேயே தம்மை அனாதையாக விட்டுச்சென்ற தாயே திரும்பி வந்துவிட்டதாக உணர்ந்தாள் மாலு ..... அதுவே அடுத்தடுத்த அவளுடைய செயல்பாடுகளுக்கு ஒரு டானிக்காகவும் அமைந்து விட்டது.

இளங்கலை பட்ட வகுப்பில் முதல் நிலையில்  தேறியவள், மேற்கொண்டு உயர்கல்வி பெறவும் முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் மேற்கொண்டாள். பெரிய சிரமம் இல்லாமல் எம். ஏ. வகுப்பில் சேர்ந்தும்விட்டாள்.

அன்று கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் பரமுவையும் கூட்டிவந்து விடலாம் என அவளுடைய பூத்திற்குச் சென்றவள், பேருந்தை விட்டு இறங்கியவுடனே சற்று தொலைவிலிருந்த பரமுவின்  தொலைப்பேசிச் சாவடி நன்கு தெரியும். கம்பீரமாக மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருப்பவளைப் பார்க்க பெருமையாக இருந்தது. அவளுடைய முகத்தில் இருந்த அந்த நிறைவு இவ்வளவு நாளைய வேதனையைப் பறைசாற்றியது. கிட்டே நெருங்கும் போது ஒரு இளைஞன் அவளிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. இவனை இதற்கு முன்பும் ஒரு சில முறைகள் பார்த்தது போலத்தான் இருந்தது. ஆனால் இன்று அவர்களுடைய பழக்கத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. இது நல்லதற்கா அல்லது தீமை விளையக்கூடியதா என்ற தெளிவு தனக்கே இல்லாதலால் பொறுத்திருந்து பார்ப்போம் என்றிருந்தாள் மாலு. 16 வயது தளதளப்பு நன்றாகவேத் தெரிந்தது. ஏழ்மையோ, வறுமையோ எதுவும் பருவ வளர்ச்சியை பெரிதாக தடை செய்வதில்லை.  ஊனமில்லாத மனதில் அனைத்து உணர்வுகளும் எதார்த்தமாக வருவதும் இயற்கை. இதெல்லாம் நினைவில் வந்தபோது, பரமுவின் பாதுகாப்பு பற்றிய கவலையும் உடன் வந்தது!

தொடரும்

நன்றி : திண்ணை