வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ!
முன்னுரை : அகமும் புறமும் காதலும் வீரமும் இணைந்தவையே சங்கப்பாடல்கள். இவை வீட்டையும் நாட்டையும் போற்றிய தமிழ் மக்களின் உணர்வுகளால் பின்னப்பட்ட
சொற்களஞ்சியம். அந்த வகையில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும்
சீரிய கருத்துகளுடன் தனிச்சிறப்புடன் படைக்கப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் திருக்குறள்.
இலக்கியம், அறம், மெய்யியல்
வாழ்வியல், அரசியல், பொருளியல் போன்ற அனைத்துப்
பரிமாணங்களையும் கொண்ட தெய்வீக நூல் என்றால் அது மிகையாகா. தனி
மனித வாழ்வு உயரவும், சமூக முன்னேற்றம் மலரவும், எக்காலத்தும் பொருந்தும் வகையில் பல்வேறு புதிய கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது
குறள். சாமான்ய மனிதன் முதல் சாதனையாளன் வரை அனைத்து மக்களும் மாக்கள்
ஆகாமல் மகிழ்ந்து வாழ வகைசெய்யும் அற்புதப் பனுவல்கள் எளிய நடையில் படைக்கப்பட்ட நூல்.
சான்றாண்மையும், சமதர்மமும் நிறைந்து மனிதன் நிம்மதியுடன்
வாழ வழிவகை செய்யும் உயரிய நோக்கத்துடன் தள்ளவேண்டியவற்றையும், கொள்ளவேண்டியவற்றையும் பகுத்தாய்ந்து செம்மையாக வாழ வழி சொல்லும் அற்புதக்
காவியம் என்பதோடு நாட்டின் நல்லாட்சி மலர அரசியல் திட்டங்களும் அளிக்கும் ஆகச்சிறந்த
படைப்பு ..
உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானியும், உருசிய எழுத்தாளருமான இடால்சுடாய் நமது திருக்குறளை எந்த அளவிற்கு உணர்ந்து,
விரும்பி வாசித்துள்ளார் என்பதை 1906ஆம் ஆண்டில்
எழுதப்பட்ட அவருடைய கட்டுரை மூலம் அறிய முடிகின்றது. அதிலும்
தம்மை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் குறிப்பிடும் ஆறு குறட்பாக்கள், 'இன்னா செய்யாமை' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, 311,
312, 313, 314, 315, 319 ஆகிய குறட்பாக்கள்
என்பதை மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையை வாசித்த
பின்புதான் நம் தேசத்தந்தை காந்தியடிகள் திருக்குறளை வாசிக்கத் தொடங்கியதோடு அவருடைய
மனதில் அகிம்சை என்ற மகோன்னதமான தீபமும் ஏற்றப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.
காந்தியடிகளின் அறவழிப் போராட்டங்கள் அனைத்திற்கும் அடிகோலியதும் இவைகளாகத்தான்
இருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகின்றது. ஒரு மாபெரும் நாட்டில்
அகிம்சை என்ற அற்புதமான கோட்பாட்டை அறிமுகப்படுத்த வித்தாக அமைந்துள்ளதே
ஐயனின் குறட்பாக்கள் என்பதே சத்தியம்.
பழிக்குப்பழி இரத்தத்திற்கு இரத்தம் என்று
வாழ்நாள் முழுவதும் நிம்மதி இன்றிப் போராட்டத்திலேயே கழிக்க நினைப்பவர்கள் ஒரு
நொடி ஐயனின்,
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம்செய்துவிடல்.
என்ற குறளை உள் வாங்கியிருந்தால் அவர்தம்
தலையெழுத்தே மாறியிருக்காதா? இக்குறளின் பொருள், நமக்குத்
தீமை செய்தவர்களை நாணித் தலைக் குனியச் செய்யும் வகையில் அவருக்கு நன்மைகளைச்
செய்துவிடல் என்கிறார். எத்தகைய உளவியல்பூர்வமான அற்புதமான சிந்தைப் பாருங்கள். ஒறுத்தல்
என்ற சொல்லின் வித்தியாசமான பொருளைச் சற்றுக் கவனம் கொண்டால் இக்குறட்பாவின் தனித்தன்மை நன்கு விளங்கும். ’இன்னா செய்யாமை’ என்பது பிற உயிர்களுக்கு எந்த வகையிலும்
துன்பம் விளைவிக்காமல் இருப்பது. விலக்கத்தக்கனவற்றை விலக்கி
வைப்பதோடு, தீவினையைச் செய்வதற்கு அச்சம் கொள்வதும் அவசியமானது
என்பதை வள்ளுவர் பல அதிகாரங்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவற்றுள் இன்னாசெய்யாமை, தீவினையச்சம் போன்ற அதிகாரங்கள் பாவச் செயல்களைச் செய்ய அச்சம் கொள்ள வேண்டும்
எனவும்; பிற உயிர்கட்கு, மக்கள், மாக்கள்
என்ற அனைத்து உயிர்கட்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க அறிவுறுத்துவது. இவ்விரு அதிகாரங்களும்
பிறர்க்குத் தாம் செய்யும் தீமை தம்மையே வந்து சேரும் என்னும் ஆழமான கருத்துகளைக் கூறுகின்றன.
திருக்குறள்களை உள்வாங்கி உணர்ந்து வாசிக்கும்
ஒருவரின் ஆளுமை பன்மடங்கு உயரும் வாய்ப்புகள் மிக அதிகமாவே உள்ளதை எவரும் மறுக்கவியலாது.
ஆளுமை என்றால் என்ன என்ற ஐயம் எழுவது இயற்கையே. காரணம் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாரு ஆளுமை என்பதன் பொருள் பலவகைப்படுகின்றன.
பொதுவாகப் பிறரால்
விரும்பப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான செயல்பாடுகளை மட்டுமே சிந்தையில்
கொண்டு தமது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்பவர்களே சிறந்தவர்கள் என்ற எண்ணமே நம்
தமிழ் கலாச்சாரத்தில்
பின்னிப் பிணைந்துள்ளதை நாம் அறிவோம். இதன் அடிப்படையில் நம் தமிழர்கள்
எந்த நாட்டிற்கோ அல்லது வெகு தொலைவான ஊர்களுக்கோ சென்று
குடியேற வேண்டிய சூழலிலும் தமது ஆளுமையைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்
தன்னிறைவு பெற்று வாழ முற்படுகின்றனர். பொதுவான நோக்கில் ஆளுமை என்பது ஒரு தனி மனிதரின்
வசீகரிக்கும் தன்மையாகக் கருதப்படுகிறது.
ஆனால் இன்றைய தொலைக்காட்சித் தொடர்களில்
நம் பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தும் கொலை செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றன. ஐயனின் கற்பு நெறி ஒழுக்கத்தையும், பெண்ணின் பெருமையையும், புறங்கூறித் திரியாமை போன்ற குணநலன்களை
நச்சென்று மண்டையில் அடித்தாற்போன்று எடுத்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளதை நாம் அறியாமல்
இல்லை.
ஊடகங்களில் பொய் புரட்டு மட்டுமா
உள்ளது? தப்பும், தவறுகளும் கூட மலிந்துதான் கிடக்கின்றன.
அதையும் ஐயனின் வாக்கின் மூலம் தெளிவாகப் புரிய வைக்க வேண்டிய தேவையும்
இருக்கத்தான் செய்கிறது. இன்றைய நவீன உலக வாழ்வியலில் அடுத்த
வீட்டில் வாழும் சக மனிதரின் புறத்தைக்கூட அறியாமல்தானே வாழ்கிறோம். ஆனால் ஐயனின் வாழ்வியல் தத்துவங்களைப் பக்குவமாக எடுத்துரைத்தால் அடுத்தவரின்
அகத்தையும் புரிந்து அன்போடு பழக வாய்ப்பமையாதா என்ன ….
மனித மனம் விநோதமானதொன்று. இந்த மனம் ஒரு குரங்கு. அதாவது மரத்திற்கு மரம் தாவக்கூடிய
குரங்கைப் போன்றது என்பார்கள். இந்த மனம் வெளிப்படுத்தும் நடத்தைகள்
அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது. தற்காலிகமாக நடக்கும் சில மோசமான சம்பவங்கள், அதாவது
நெருங்கிய உறவில் ஏற்படும் மரணம் போன்ற நிகழ்வுகள் காரணமாக மனதில் ஏற்படும் அழுத்தம்
நடத்தையிலும் மாற்றம் ஏற்படுத்திவிடக்கூடும் என்றாலும் அது போன்ற நடத்தைகள் தற்காலிகமானதுதான்
என்பதால் அது மன்னிக்கப்படலாம். ஆனால் தொடர்ந்து வெளிப்படும்
தேவையில்லாத எதிர்மறை நடத்தைகள் நீடித்தால் அது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டியே ஐயன் வள்ளுவன் குறள் நெறியை நமக்கு வகுத்துவிட்டுச்
சென்றிருக்கிறார். அவைகளை உள்வாங்கி உணர்ந்து வாழும் நிலையில்
மன அமைதிக்கும் உத்திரவாதம் ஆகிறது. தீமைகளையே செய்வதால்
கொடும் செயல்கள் தீயினும் மேலாக அஞ்சப்படும் என்கிறார் ஐயன். எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு. ஆனால் தீயச்செயலாகிய பகை என்பது விலகாது தொடர்ந்து சென்று கொன்று தீர்க்கும்
எனக் கூறும் ஐயனின் குரலில் ஒலிக்கும் குறள் அழிவற்றது.
தீயவை தீய பயத்தலால்
தீயவை
தீயினும் அஞ்சப் படும் (குறள் 202)
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று (குறள் 208)
ஆம். நாம் செய்த வினை நம்மைவிட்டு
ஒரு சிறிதும் விலகாமல் நிழல்போல நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
நேர்மை, உண்மை, சத்தியம் என அனைத்தையும் தங்கள் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட தலைவர்கள் வாழ்ந்த
காலமும் நம் நாட்டில் உண்டு. அதையே நம் ஐயன் அழகுற எடுத்துரைத்துள்ளார்.
அது மட்டுமா - அரசியல் சாணக்கியம்,நெளிவு, சுளிவு என அனைத்தையும் அல்லவா அழகுற விளக்கியுள்ளார்.
இன்றைய அரசியல் தலைவர்கள் அதன்படி நடந்து வெற்றி மேல் வெற்றி பெற்றாலும்
நேர்மை, உண்மை, சத்தியம் என்பதையும் சேர்த்தே
கடைபிடிப்பார்களேயானால் அதுதானே நம் மக்களின் வெற்றித் திருவிழா!
சமுதாய வாழ்க்கையின் ஒழுங்கமைதிக்கு அடிகோலுவது அரசியல். ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரோ அல்லது குடும்பங்களோ கூடிவாழ்ந்து பொருளியலில் ஒழுங்கமைதி
காக்கவும் அரசியலே துணை புரிகிறது. அந்த வகையில் நல்ல அரசியல்
அமைப்புகள் உருவாகும் நாட்டில் மட்டுமே ஒழுக்கமும், மகிழ்ச்சியும்,
நன்மையும் நிலைபெறும்.
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:474)
அனைவரோடும் அனுசரித்து நடக்காமல். தனக்கிருக்கும் வலிமையை முழுமையாக அறியாமல்,
தன்னையே வியந்து தற்பெருமை கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயம் இன்றே, வேந்து அமைவு இல்லாத நாடு. அதாவது வேந்தனோடு மேவதல் இல்லாத நாடு;
மேற்கூறிய அனைத்துக் குணங்களும் நிறைந்து இருந்ததாயினும்
அவற்றால் பயன் ஏதும் அன்று. ஐயனின் வாக்கின்படி நாட்டின் வளம் எத்துணைதான்
பெருகியிருந்தாலும் சரியான அரசாங்கம் அமையாத போழ்தில் அவற்றால் பயனேதும் இல்லை, அப்படிப்பட்ட நாட்டில்தான் மக்கள் செல்வச் செழிப்புடனும், நல்லொழுக்கத்துடனும் வாழ்வர் என்கிறார்.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே
கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு
எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம். (மணக்குடவர் உரை)
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளை அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை
அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும். (மு.வரதராசனார் உரை )
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு
இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.
(தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல்.
ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர்
என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி
விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) - பரிமேலழகர் உரை
அரும்பெருஞ்செல்வங் கிடைத்துச் சிறப்பெய்துவதாயினும்,
பிறருக்குத் துன்பம் செய்யாமலிருப்பதே அறிவுடைமை. தான் ஒரு குற்றமும் செய்யாதிருக்கும்போதும்
தனக்கு இன்னாதவற்றைச் செய்தவர்க்கும், இன்னா செய்யாமல் இருக்க வேண்டும்.
எவன் ஒருவன் பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக்
கருதாமல் இருக்கிறானோ அவனுடைய அறிவு எவருக்கும் பயனற்ற அறிவு. இன்னாது எனத் தெரிந்தும்
அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது ஆகாது. எப்போதும், யாருக்கும் எந்த அளவிலும் இன்னா
செய்யாமையே சிறப்பாகும். ஒருவன் செய்த துன்பம் அவனையே தொடர்ந்து
வந்து வருத்துமாதலின், துன்பமில்லாமல் வாழ
விரும்புகிறவர்கள், பிறருக்குத் துன்பம் செய்ய எண்ண மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும்
பொறுத்தாற்றும் பண்பை மேற்கொண்டால் அது அமைதிக்கு வழிவகுக்கும். வாழ்வு சிறக்க ஐயன் கூறும் செய்திகள் இவை.
முடிவுரை : அந்த வகையில் அன்றாட வாழ்வியலிலும், சமூகம் மற்றும் பொது
வாழ்விலும் ஐயன் வள்ளுவனின் வாக்குகளைத் தேவ வாக்காக எண்ணி வாழ்பவர்களைக் கண்டறிந்து
வாக்களிக்கும் வல்லமையை நாம் பெறும் திருநாளே உலக மாந்தரின் வாழ்வின் பொன்னாள் எனக்கொள்ளலாம்! வாழ்வே ஒரு கலையாக இரசித்து வாழ ஐயனின் அருகண்மையைத் தவிர வேறு எதுதான் நமக்கு
வழிகாட்டியாகப் போகிறது? இதை உணர்ந்து திருக்குறளை நம்
வேதமாகக்கொண்டு வாழ்தல் இனிதன்றோ!