Sunday, September 27, 2015

தூரனின் மதிநுட்பம்!





மென்மையாகவும், நுட்பமாகவும் பேசும் திறன் பெ. தூரனுக்கு இளமையிலேயே வாய்த்திருந்தது. மாணவப் பருவத்தில் ‘பித்தன்’ என்ற இதழை நண்பர்களுடன் நடத்தி வந்தார் தூரன். இது திரு.வி.க.வின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதழைப் பதிவு செய்ய திரு.வி.க. வும், தூரனும் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களிடம் சென்றனர். அவர் ஆங்கிலேயர். இந்த இதழோ தேசப்பற்று மிக்க இளைஞர்களால் ‘பித்தன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. குற்றவியல் நடுவர், 'What do you mean by Pithan?' என்று தூரனைக் கேட்டார். திரு.வி.க. அவர்கள், இந்த இளைஞன் என்னதான் பதில் சொல்லப் போகிறானோ என்று சிந்தனை வயப்பட்டார். ஆனால் தூரனோ சற்றும் அசராமல், துளியும் கலவரமின்றி, 'It is one of the names of God Shiva'என்று பதிலளித்தார். இதழ் பதிவு பெற அனுமதி கிடைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ? மாணவர் தூரனின் அறிவார்ந்த பதிலால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த திரு.வி.க. தூரனின் மதி நுட்பத்தைக் கண்டு உளமார பாராட்டினாராம்!

இசையுலகின் முடிசூடா ராணி கே.பி.எஸ்.

பவள சங்கரி

இசை உலகின் முடி சூடா ராணியாகத் திகழ்ந்த கே.பி.எஸ் அவர்களின் மனதை மயக்கும் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.அழுத்தமான அந்த உச்சரிப்பும் குரலின் நீரோடை போன்ற தெளிவும் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை.இசையில் மட்டுமல்லாமல் தனது தனித்துவமான திறமைகளால் நாடகம் ,அரசியல், ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவர் அவர். சினிமாவில் முதன்முறையாக அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று சாதனை படைத்தவர் அவர். மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்ட அவர்தான் கேபிஎஸ் என்றால் அதற்கு அவருடைய மனிதாபிமானமும் ஒரு முக்கிய காரணம்.. இயற்கையாக அவரிடம் அமைந்திருந்த அந்த குணம். எங்கள் கொங்கு நாட்டு இசையரசி மங்கையர் குல திலகம் என்றால் அது மிகையாகாது... இசை தந்த கொடை கே.பி சுந்தராம்பாள் .
வீடு வாசல் மறந்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் தீரர் சத்தியமூர்த்தி. வருமானம் என்பதே இல்லாமல் இருந்த காலம்.. அப்போது தன் அரசியல் குருவான சத்தியமூர்த்தி அவர்களின் குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு நம் இசையரசியார் தாம் வாங்கியிருந்த நிலத்தில் நான்கு கிரவுண்ட் நிலத்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு இலவசமாக எழுதிக் கொடுத்தாராம். அந்த நிலத்தில் வீடு கட்டிய சத்தியமூர்த்தி சுந்தராம்பாள் அவர்களை தங்கள் சந்ததியாரும் நினைவுகூரும் வகையில் தமது வீட்டில் ‘சுந்தரம்’ என்று கல்வெட்டுப் பதித்தாராம். அந்த வீடு இன்றும் சென்னை தணிகாசலம் தெருவில் (தி.நகர்) உள்ளது. இதெல்லாம் அரசியல் கடந்த மனிதம் அல்லவா...?