Saturday, October 13, 2012

SPIRIT COMES.. SPIRIT COMES.. SPIRIT COMES...


நம்பினால் நம்புங்கள்!

--
நான் இன்று என் தோழி ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அமானுஷ்யம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு ஆவி, பேய் என்பதிலெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. கடவுளின் சக்தி முன்னால் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது (?) என்று தைரியம் அதிகம் உண்டு. ஆனால் அவள் அதில் அதிகமாகவே நம்பிக்கை உள்ளவள்.அவர்கள் வீட்டில் அவ்வப்போது ஓஜோ பிளேட் மூலமாக ஆவியை வரவழைத்து குறி கேட்பார்களாம்... 

ஒரு போர்டில் ஆங்கில எழுத்துக்கள் வட்டமாக எழுதி, அதன் உட்புறம் எண்கள் 1 முதல் 10 வரை, மேலும், கீழும் YES, NO, என்று எழுதிக் கொள்கிறார்கள். மத்தியில் ஒரு சிறு கற்பூரம் வைத்து அதன்மீது ஒரு குட்டி டம்ளர் கவிழ்த்து வைக்கிறார்கள்.  இரண்டு பக்கம் இருவர் அமர்ந்து கொண்டு அந்த டம்ளர்மீது ஆள்காட்டி விரலை வைத்துக் கொள்கிறார்கள். SPIRIT COMES... SPIRIT COMES... SPIRIT COMES என்று மூன்று முறை சொல்கிறார்கள்.  என்ன ஆச்சரியம்! அந்த டம்ளரில் ஒரு அசைவு தெரிகிறது. நான் உடனே கற்பூரம் எரிவதால் அந்த சூட்டின் காரணமாக இந்த அசைவு என்றேன். ஆனால் அடுத்தடுத்து நடந்ததைப் பார்த்தவுடன் கொஞ்சம் சந்தேகம் மெதுவாக வந்துவிட்டது... ஒரே குழப்பத்துடன் திரும்பி வந்தேன்.



என் தங்கையும் உடன் வந்திருந்தாள். அவளுடைய பெண் 11ம் வகுப்பு படிக்கிறாள். அடுத்து மருத்துவம் படிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை.. அதைப்பற்றி கேட்டார்கள். அதற்கு நல்ல மதிப்பெண் வாங்குவாளா என்று கேட்டதற்கு yes என்று வந்தது.. எவ்வளவு என்று கேட்டதற்கு 1009 என்றது. அந்த டம்ளர் அப்படியே நகர்ந்து அந்த எண்ணில் போய் நிற்கிறது.. அந்தப் பெண் சென்னை குயீன் மேரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பாள் என்று சொன்னவுடன்,அவள் அழ ஆரம்பித்து விட்டாள். அவளை தேற்றுவதற்குள் போதுமென்றாகி விட்டது. அவர்கள் வீட்டில் திருமணம் பற்றி கேட்டார்கள். அந்தப் பையனுக்கு காதல் திருமணமா என்று கேட்டார்கள். இல்லை என்றது.2 வருடத்தில், எம்.சி.ஏ படித்து சி.டி.எஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் வள்ளிதான் மணமகள் என்றது... ஏற்கனவே பல முறை இது போன்று பலருக்கு அவர்கள் கேட்டது சரியாக இருந்ததாம்... என் பங்குக்கு நானும் சில கேள்விகள் கேட்டேன்.. அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்... நான் கேட்டது கூடங்குளம் பற்றி.. அது இன்னும் ஓராண்டில் திறக்குமாம்.. அதுவரை மின்வெட்டு இப்படித்தான் இருக்குமாம்.. உலகம் அழிவது பற்றி கேட்டேன். 2012ல் அழியுமாம்?  அடுத்து சட்ட மன்ற தேர்தல் பற்றி கேட்டேன்.. . போதும் மீதமெல்லாம் சொன்னால் பிரச்சனை வரும்... ஆனால் ஒன்று மட்டும் உறுதிங்க...  உலக அரசியலையேத் தன் விரல் நுனியில் வைத்திருக்கிறது ஆவியுலகம்! 3 மணி நேரம் பொழுது போனதே தெரியவில்லை! ஆச்சரியமாக இருந்தது.. 
                                                              

Tuesday, October 9, 2012

நம்பிக்கை ஒளி (2)


பவள சங்கரி

நம்பிக்கை ஒளி - பகுதி (1)


மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது. உறவுகளுக்காக ஏங்கும் இந்த மனதை கட்டுப்படுத்துவது சிரமம்தான். எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது. அறிவுக்கு தெரிந்த பல விசயங்கள் உணர்விற்கு எட்டுவதில்லை. அதற்கு கட்டுப்படுவதும் இல்லை. யதார்த்தங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது மட்டுமே மன அமைதிக்கு வழிவகுக்கும் என்பதே அனுபவப்பாடம். கீதையின் சாரங்களும், நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளும், பைபிளின் வாசகங்களும் எத்தனையோ கேட்டு கேட்டு மனம் பண்பட்டிருந்தாலும், இப்போது நடந்ததை ஜீரணித்துக் கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. சமீபத்தில் படித்த ‘when there is no cure, endure' என்கிற வரிகள் நினைவிற்கு வர, தீர்வு இல்லாத ஒன்றை தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும். இந்த எண்ணம் வந்தவுடனே, ஒரு அமைதியான தென்றல் வீசி உள்ளம் குளிர ஆரம்பித்தது. அப்படியே, உள்ளே.... உள்ளே .. ஆழ்ந்து செல்லச் செல்ல வானில் சிறகடித்துப் பறக்கும் இனிய அனுபவம். கீழே இறங்கும் நினைவே இல்லை. எவ்வளவு நேரம் அப்படியே இருந்திருப்போம் என்று தெரியாத நிலையில், குழந்தை அழும் சத்தம் எங்கோ கேட்க, மெல்ல மெல்ல வெளியே வந்தாள். ஆசிரமத்தில் பழகிய பல நல்ல பழக்கங்களில் மிக முக்கியமானது தியானம். மனதை என்றும் அன்று பூத்த மலராக பசுமையாக வாழ வைக்கவல்லது.

Sunday, October 7, 2012

கலீல் ஜிப்ரானின் காதல்



The forerunner - Love - Khalil Gibran

கலீல் ஜிப்ரானின் காதல்

சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே
அந்தக் குள்ளநரியும் மூஞ்சூறும் நீரருந்துகிறது 
என்கிறார்கள் அவர்கள்.

இறந்து கிடக்குமோர் உடலினுள்ளே 
கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது,  
அச்சவத்தின் முன்னிலையில்
இரண்டும் ஒன்றுக்கொன்று சமாதானமாகவே
உள்ளதென்கிறார்கள் அவர்கள்.