Wednesday, August 17, 2016

பாப்பா பாப்பா கதை கேளு! 34

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!




அனுபவம் தவிர வேறு சிறந்த கல்வியேதுமில்லை - சத்திய சோதனை 1948


பல்கலைப் பட்டங்களுக்கு மயங்கிவிடும் போக்கு காந்தியின் காலத்திலும் இருந்திருக்கிறது. பட்டங்களுக்கு மதிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும் அனுபவக்கல்வியைக் காட்டிலும் உன்னதமான ஆசிரியர் எவரும் இருக்க முடியாது . அறிவார்ந்த செயலாற்றலே தனிநபர் திறமையை வளர்க்கும். அந்த வகையில் வாழ்க்கை அனுபவமே பாடமாக வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி. அதாவது ஏட்டுக் கல்விக்கு காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வழக்குகளை உருவாக்கி அதனை வளர்த்து, அதன் மூலம் வாழ்பவர்களே வழக்கறிஞர்கள். இவை தவிர நீதியையும், சமரசத்தையும் வளர்ப்பது அவர்களின் குறிக்கோள் அல்ல என்பதை அவர் தம் வழக்கறிஞர் பணி மூலம் அறிந்திருந்தார். காரணம் வழக்கறிஞர் தொழிலின் பலம் மற்றும் பலவீனங்களை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வன்முறையற்ற அகிம்சை வழியில் அரசின் தவறான சட்ட திட்டங்களை எதிர்த்து நிற்கும் துணிவை மக்களுக்கு ஊட்டுவது மூலமாக அரசையும், சமூகத்தையும் மாற்றிவிட முடியும் என்றே நம்பினார் மகாத்மா. கல்வி எனும் எல்லைகளைக் கடந்த அனுபவம் மட்டுமே எப்படிப்பட்ட பிரச்சனையாக இருப்பினும் அதை எதிர்கொள்ளும் வல்லமையைத் தருகிறது என்கிறார். கல்வித் திறன் மட்டும் கொண்டு ஒருவர் நிர்வாக வெற்றியைப் பெறுவது சாத்தியமன்று. ஆம், அந்தந்த சூழலுக்கு ஏற்ப காரியங்களை திட்டமிடவும், செயல்படுத்தவும் அனுபவம் தரும் ஆற்றலைத் தவிர வேறு எந்த பாடத்திட்டமும் தந்துவிடப்போவதில்லை. இதையுணர்ந்து அதன் போக்கில் செயலாற்றுபவரே நிர்வாகத்தில் வெற்றி காண்கிறார். சிறந்த முடிவுகள் என்பது தகுதி வாய்ந்த அனுபவத்தாலேயே எடுக்கப்படுகிறது. அப்படி மகாத்மா காந்தியடிகள் எடுத்த சில முடிவுகளால்தான் நம் நாடு சுதந்திரம் பெற முடிந்தது. இல்லாவிட்டால் நாம் இன்றும் அடிமைத்தளையில் சிக்குண்டுக் கிடந்திருப்போம்.