Wednesday, August 17, 2016

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!




அனுபவம் தவிர வேறு சிறந்த கல்வியேதுமில்லை - சத்திய சோதனை 1948


பல்கலைப் பட்டங்களுக்கு மயங்கிவிடும் போக்கு காந்தியின் காலத்திலும் இருந்திருக்கிறது. பட்டங்களுக்கு மதிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும் அனுபவக்கல்வியைக் காட்டிலும் உன்னதமான ஆசிரியர் எவரும் இருக்க முடியாது . அறிவார்ந்த செயலாற்றலே தனிநபர் திறமையை வளர்க்கும். அந்த வகையில் வாழ்க்கை அனுபவமே பாடமாக வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி. அதாவது ஏட்டுக் கல்விக்கு காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வழக்குகளை உருவாக்கி அதனை வளர்த்து, அதன் மூலம் வாழ்பவர்களே வழக்கறிஞர்கள். இவை தவிர நீதியையும், சமரசத்தையும் வளர்ப்பது அவர்களின் குறிக்கோள் அல்ல என்பதை அவர் தம் வழக்கறிஞர் பணி மூலம் அறிந்திருந்தார். காரணம் வழக்கறிஞர் தொழிலின் பலம் மற்றும் பலவீனங்களை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வன்முறையற்ற அகிம்சை வழியில் அரசின் தவறான சட்ட திட்டங்களை எதிர்த்து நிற்கும் துணிவை மக்களுக்கு ஊட்டுவது மூலமாக அரசையும், சமூகத்தையும் மாற்றிவிட முடியும் என்றே நம்பினார் மகாத்மா. கல்வி எனும் எல்லைகளைக் கடந்த அனுபவம் மட்டுமே எப்படிப்பட்ட பிரச்சனையாக இருப்பினும் அதை எதிர்கொள்ளும் வல்லமையைத் தருகிறது என்கிறார். கல்வித் திறன் மட்டும் கொண்டு ஒருவர் நிர்வாக வெற்றியைப் பெறுவது சாத்தியமன்று. ஆம், அந்தந்த சூழலுக்கு ஏற்ப காரியங்களை திட்டமிடவும், செயல்படுத்தவும் அனுபவம் தரும் ஆற்றலைத் தவிர வேறு எந்த பாடத்திட்டமும் தந்துவிடப்போவதில்லை. இதையுணர்ந்து அதன் போக்கில் செயலாற்றுபவரே நிர்வாகத்தில் வெற்றி காண்கிறார். சிறந்த முடிவுகள் என்பது தகுதி வாய்ந்த அனுபவத்தாலேயே எடுக்கப்படுகிறது. அப்படி மகாத்மா காந்தியடிகள் எடுத்த சில முடிவுகளால்தான் நம் நாடு சுதந்திரம் பெற முடிந்தது. இல்லாவிட்டால் நாம் இன்றும் அடிமைத்தளையில் சிக்குண்டுக் கிடந்திருப்போம். 



இன்றைய இளந்தலைமுறையினரின் எத்தனை விழுக்காடு இளைஞர்கள் இன்று நாம் இருக்கும் இந்த சுதந்திர நிலையை அடைய எத்தனை நல்லான்மாக்கள் தம் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள், அவர்கள் எத்துணை இன்னல்களை எதிர்கொண்டார்கள் என்பதெல்லாம் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நம் இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட அந்த உன்னத தியாகச்செம்மல்களின் போராட்டங்கள் குறித்தும், நம்முடைய மேன்மையான பாரம்பரியம் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவேண்டியதும் அவசியம். ஆண்கள் மட்டுமன்றி பல பெண்களுகளும் இந்த சுதந்திர வேள்வியில் ஆகுதியாக தம் இன்னுயிரை ஈந்துள்ளனர். நம்மில் பலர் அவர்களைப்பற்றி அறியாமலே இருக்கிறோம். அதில் ஒருவர் பிரேமா காண்டக் என்பவர். இவருடைய காலம் 1905 - 1985.


1930 - 32 இல் தண்டி உப்பு சத்தியாகிரகம் நடந்த காலகட்டம். பிரேமா இதில் தீவிரமாக ஈடுபட்டு இரு முறை சிறை பிடிக்கப்பட்டார். விடுதலையான பின்பு அகமதாபாத்திலிருந்து பூனாவிற்குக் குடிபெயர்ந்து அங்கு மகாத்மா காந்தியுடன் இணைந்து அவர்தம் ஆக்கப்பூர்வமான பணிகளில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்டார். 
பிரேமா காண்டக் தேசபக்தி மிக்க, சுதந்திரப்போராட்ட தியாகியும், பேரறிஞரும் ஆவார். 1905 ஆம் ஆண்டில் கன்வார் எனும் இடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 1928 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பை படித்து முடித்தார். மாணவர் இயக்கத்தில் சேர்ந்து சைமன் கமிசனுக்கு எதிராக பொது ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றார். மும்பை பிரசிடென்சி இளைஞர் அணியின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்களில் போராளி இந்து மதமும், கம்யூனிசம் ஆகிய இரண்டு சித்தாந்தங்களும் மாணவர்களைக் கவரக்கூடியவைகளாக இருந்தன. இவரை கம்யூனிசத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பிரேமா கம்யூனிச  இலக்கியமும் கற்றார். ஆனாலும் மகாத்மா காந்தியடிகளின் சித்தாந்தங்கள் மீது ஈடுபாடு ஏற்பட அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். காந்தியடிகள் அவரை சபர்மதி ஆசிரம பொறுப்பாளராக நியமிக்க, அவரும் 1929 முதல் 1933 வரை அப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார். 

அவருடைய முக்கியமான செயல்பாடுகள், சுதேசி இயக்கம், காதி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலையும், பெண்கள் முன்னேற்றம் குறித்ததாகவும் இருந்தது. காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டத்தின் ஒரு முக்கியமான பங்கேற்பாளராக இருந்தார் பிரேமா. நான்கு முறை கைது செய்யப்பட்டு, ஒவ்வொரு முறையும் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில காலம் இந்திய தேசிய காங்கிரசில் குறிப்பாக காங்கிரசு சேவா தளத்தில் இணைந்திருந்தார். 

1942 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதால் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தபோது இளம் பெண்கள் அமைதியான முறையில் போராடுவதைவிட இராணுவ முறையில் போரிடுவதையே அதிகம் விரும்பியதை அறிந்தார். இந்த விசயம் அவரை மிகவும் சிந்திக்கச் செய்தது. விடுதலையான பின்பு சாசுவதியில் சங்கர்ராவ் தியோவின் ஆசிரமத்தில் சேர்ந்துகொண்டார். 1942 இல் காங்கிரசு கட்சி தடை செய்யப்பட்டது. பெண்கள் பங்கேற்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டன. 1952 வரை இந்த கூட்டமைப்பில் ஈடுபட்டிருந்தார். 

ஆனாலும் இந்த செயல்பாடுகள் அவர் மன அமைதிக்கு பங்கம் விளைவித்ததால், தனக்கு ஏற்பட்ட மாற்றங்களுக்காக வருத்தியதோடு, அதிலிருந்து விடுபட்டு மன அமைதிக்காக இமாலய மலையில் தனிமையில் சில காலம் கழித்தார். அதன்பின் அவர் பூனாவிற்குத் திரும்பிவந்து அங்கு சசுவாத்தில் கஸ்தூரிபா ஆசிரமத்தின் பொறுப்பேற்றுக் கொண்டார். மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பித்து, வருடத்தில் நான்கு மாதங்கள் வறண்ட மாதங்கள் என்று மது இல்லாத மாதங்களாக அறிவிப்பதிலும் வெற்றி கண்டார். 

பின் தங்கிய கிராமங்களில் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தங்கள் சுய கால்களில் நிற்பதற்கான அத்துணை முயற்சிகளும் செய்து அதில் வெற்றியும் கண்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் குறிப்பிட்ட ஒரு சில இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இருந்தார் பிரேமா. காந்தியச் சிந்தனைகள் மற்றும் நம் வேத வசனங்கள் குறித்த பல நூல்களும் இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது!



No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...