Wednesday, December 8, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 7


சக்தி.

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்.
சக்தி பொய்கையில் ஞாயிறு ஒரு மலர்,
சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது;
ஒன்றாக்குவது, பலவாக்குவது,
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது,
குதுகுதுப்புத் தருவது.
குதூகலந் தருவது, நோவு தீர்ப்பது,
இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது,
சக்தி ஊக்கந் தருவது,
சக்தி மகிழ்ச்சி தருவது....உவப்புந் தருவது.......

மகாகவி அன்றே பாடி வைத்துச் சென்றான், சக்தியின் சக்தியைப் பற்றி....

மனித உடலும், இயந்திரம் போலத்தான்,
ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு பாகம் மரை கழண்டு போகலாம், அதனை செப்பனிட்டு ஓடச் செய்வதிலேதான் ஒரு உரிமையாளனின் திறமை இருக்கிறது. அந்த வகையில் செப்பனிடும் போது அதனை ஏற்றுக் கொள்ள அடிப்படையாக உடலுக்குச் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியைத் தான் நாம் இயற்கையின் வரப்பிரசாதம் என்கிறோம். காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் இப்படி எத்தனையோ இயற்கை வளங்கள் நம் உடலுக்குச் சக்தி சேர்க்கின்றன. அதனை நன்கு பக்குவமான முறையில் சுத்தம் செய்து சமைத்து, உண்ணும் பக்குவத்தில் தயாரிப்பதில் தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.

இன்று அத்தகைய சக்தி கொடுக்கக்கூடிய
ஒரு சில பானங்கள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.அதிக பணிச்சுமை காரணமாகவோ, அதிக பயணம் காரணமாகவோ, உடல் சோர்வுறும் வேளையில்
இது போன்ற சக்தி பானங்களை பருகும் போது, வெகு விரைவிலேயே அந்த களைப்பு நீங்கி நம்மைப் புத்துணர்வு பெறச் செய்யும்.....

1. குளுகுளு ஆப்பிள் தேநீர்:

தேவையான பொருட்கள்:

1 கப் குளிர்ந்த தேநீர்
2 மேசைக் கரண்டி சக்கரை
1/2 கப் ஆப்பிள் ஜீஸ்
2 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு
ஒரு சில ஆப்பிள் துண்டுகள்.

செய்முறை :

அப்பிள் ஜீஸில், எலுமிச்சை சாறை கலக்கவும்.
மிக்ஸியில், இந்த ஜீஸ், தேநீர், ஐஸ் கட்டிகள், மற்றும் சக்கரை சேர்த்து அடிக்கவும்.

ஆப்பிள் துண்டுகளுடன் சில்லென்று பரிமாறவும்.


* சிங்கப்பூர் சிலிர்ப்பு......

தேவையான பொருட்கள்:

2 கப் செர்ரி ஜீஸ்
2 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு
1 பாட்டில் சோடா தண்ணீர்
2 துண்டுகள் எலுமிச்சை
4-6 செர்ரி
ஒரு கொத்து புதீனா இலை
அலங்கரிக்க சிறிது புதீனாவும், எலுமிச்சை துண்டமும்.

செய்முறை :

செர்ரி ஜீஸையும், எலுமிச்சை ஜீஸையும் கலக்கவும்.
பரிமாறுவதற்கு முன்பு சோடா தண்ணீரும் ஒரு சில புதீனா இ
லையும் சேர்த்து, சில்லென்று பரிமாறவும்.
செர்ரியும், எலுமிச்சை துண்டும் கொண்டு அலங்கரிக்கவும்.


3 காய்கனி கதம்ப ஜீஸ்:
தேவையான பொருட்கள் :

1 கப் பீட்ரூட் ஜீஸ்
1 கப் கேரட் ஜீஸ்
1 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 டீஸ்பூன் புதீனா இலைகள் [ பொடியாக நறுக்கியது ]
1 டீஸ்பூன் பிளாக் சால்ட்
1/2 டே.ஸ்பூன் ஆரஞ்சு சாறு[ ஸ்குவாஷ்}
1 பாட்டில் சோடா தண்ணீர்.

செய்முறை :

அனைத்து ஜீஸ் வகைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பரிமாறும் போது புதீனா இலை, சோடா தண்ணீர் மற்றும் கறுப்பு உப்பு சேர்த்து, சில்லென்று பரிமாறவும்.

4. ஆறு காய்கறிகளின் காக்டெயில்.

தேவையான பொருட்கள் :

1 கப் வெள்ளரிக்காய் [ துறுவியது ]
1 கப் கேரட் [ துறுவியது ]
1 கப் லெட்டூஸ் அல்லது முட்டைகோஸ் [துறுவியது ]
1 கப் பாலக் அல்லது ஸ்பினேஸ்[ spinach ]
2 டீ.ஸ்பூன் கொத்தமல்லி இலை
3-4 புதீனா இலைகள்
சக்கரை தேவைக்கேற்ப.
உப்பு, மிளகு தூள், தூளாக்கிய ஐஸ்.

செய்முறை :

ஜீஸர் மூலமாக எல்லா கார்கறிகளிலிருந்தும் ஜீஸ் எடுத்துக் கொள்ளவும்.
தேவையான, சக்கரை, மிளகு தூள், தூள் உப்பு, சேர்த்து, ஐஸ் கட்டியுடன் பரிமாறவும்.

5. அன்னாசி மற்றும் தக்காளி பன்ச்!

தேவையான பொருட்கள்:

2 1/2 கப் தக்காளி சூப்
3 கப் அன்னாசி ஜீஸ்
1 கப் சக்கரை சிரப்
1 எலுமிச்சையின் சாறு
1/4 டீஸ்பூன் உப்பு
1/4 டீஸ்பூன் கறுப்பு மிளகு தூள்

செய்முறை :

தக்காளி சூப்பும் சக்கரை சிரப்பையும் கலக்கவும்.
நன்கு ஆறியவுடன் அதில் அன்னாசி ஜீஸ் மற்றும் எலுமிச்சை ஜீஸீம் சேர்த்து கலக்கவும்.
மிளகு தூளும், உப்பும் தூவி, எலுமிச்சை துண்டுகள் வைத்து அலங்கரித்து உடனே பரிமாறவும்.

Tuesday, December 7, 2010

வாங்க..வாங்க......பழகலாம்.......

வலைப்பதிவர்கள் சங்கமம் - 2010.

வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒன்றாக சந்திக்க ஆவலாய் காத்திருக்கிறோம்..........
அனைவரும் தங்கள் நண்பர்கள் புடைசூழ, வருக, வருக என வரவேற்கிறோம்.
காலை தேநீர், மதிய உணவு, மாலை தேநீர் என செவிக்குணவுடன், வயிற்றுக்கும் ஈய்ந்து, எங்கள் கொங்கு மண்ணிற்கேயுரிய அன்பான உபசரிப்புடன், தங்களை உள்ளம் குளிரச் செய்யக் காத்திருக்கிறோம், நண்பர்களே...........
கட்டாயம் வாருங்கள்....பழகலாம்......தோழர்களே.....
எங்கள் படைத் தளபதிகளின் தொடர்பு எண்கள் கொண்டு, தங்களின் வருகையை உறுதி செய்யுங்கள் நண்பர்களே.........
முன்கூட்டியே தங்கள் வருகையை தெரியப்படுத்துவதன் மூலம் விழாவை மேலும் சிறக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் தொடர்புக்காகக் காத்திருக்கிறோம்......
டிசம்பர் 26ம் நாளை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளுமாறு, நாம் இவ்விழாவைச் சிறப்பாக நடத்த தங்களனைவரின் முழு ஆதரவையும் எதிர்நோக்கி இருக்கிறோம். வாருங்கள் தோழர்களே..........
நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!
.
கதிர் 99653-90054
பாலாசி 90037-05598 கார்த்திக் 97881-33555
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540 ராஜாஜெய்சிங் 95785-88925 சங்கமேஸ் 98429-10707
ஜாபர் 98658-39393
நண்டு நொரண்டு 94861-35426




Sunday, December 5, 2010

செல்லம்மாவின் பாரதி.



சுட்டெரிக்கும் சூரியன்......அலைந்து திரிந்து, நிழலுக்காக ஏங்கித் திரிந்த வேளையில் விழுதுகள் வேறூன்றிய பரந்த, பசுமையான, பழமையான,ஆலமரம். பரந்தாமனை நேரில் தரிசித்த பரம பக்தனாக உள்ளம் குளிர அதன் தண்ணிழலை அணைத்துக் கொண்டேன்.

சில்லென்ற குளிர் கரம், குச்சியாக இருந்தாலும், உறுதியான கரம்.......என் தோளை வருடி, நலம் விசாரிக்க நானோ, யாராக இருக்கும் இம்மென்மலர் என சிந்திக்கும் முன்பே, முந்திக் கொண்டாள் அவள் தான் கவிக்குயில் பாரதியின் கண்ணம்மா என்கிற செல்லம்மா என்று!

அட எனதருமைத் தோழியே..........இன்றுதான் எனைக் காணும் மனது வந்ததா என்று பழங்கதையை அலச ஆரம்பித்தோம் இருவரும்.......

அவள் அன்று விட்ட செய்தியை தொடர ஆரம்பித்தாள் ஏக்கத்துடனே......

கவிக்குயில் பாரதி, தனதருமைக் கணவனின் பெருமை பேசுவதென்றால் அவளுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல......

பாரதியின் பெண் விடுதலை கட்டுரையைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டாள்.

” சகோதரிகளே ! ஔவையார் பிறந்தது தமிழ்நாட்டில், மதுரை மீனாஷியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ்நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன், மைத்துனராகவும்,தந்தை, பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.இவர்களே நமக்கு பகைவராகவும் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும் போது, என்னுடைய மனம் குருஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜீனனுடைய மனது திகைத்தது போல திகைத்தது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அது பற்றியே ‘சாத்வீக எதிர்ப்பினால்’ இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.

“ அடிமைப்பட்டு வாழ மாட்டோம். சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் என்று அவர்களிடம் வெளிப்படையாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டு அதனின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பி பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம்.....”

செல்லம்மா, என்ன இன்று இப்படி இந்த தலைப்பை எடுத்துவிட்டாய் என்று கேட்பதற்குள் அடுத்து தன்னுடைய பாடலை எடுத்து விட்டாள்,


செல்லம்மாவின் பாரதி !

பாட்டுக்கொரு பாரதியென
பாரெல்லாம் போற்றியுனைப் பாராட்ட

எட்டயபுரத்து லட்சுமியின் செல்லமகன்
சுப்பையா எனும் பன்மொழி வித்தகராகி

எட்டையபுர மன்னனின் அவைதனில்
எட்டவொண்ணா சிம்மாசனத்தில் வீற்றிருக்க

சுதேசமித்திரனின் தலைவனுக்குத் துணையானாய்
சக்கரவர்த்தினிக்கே தலைவனாகவும் ஆனாய்!

தேசிய அரசியலிலும் ஆசானாய் நீயிருந்தாய்
சகோதரி நிவேதிதாவை ஞான ஆசானாகவும் கொண்டாய்

சுதேச கீதங்களை சுவையாக நீ யாத்தினாய்
‘இந்தியா’ எனும் இதழையும் சுவையாக்கினாய்!

பாலபாரதா எனும் ஆங்கில இதழை வெளியிட்டு
ஆங்கில மொழிப் புலமையையும் பறைசாற்றினாய்.

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டென
அஞ்சலி செலுத்தினாய் அன்னை தமிழுக்கு

கீதையை மொழி மாற்றம் செய்தாய்
பாதையை செம்மையாக்கிக் கொள்ள

மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட் என
வரலாற்று நாயகர்களுடன் நல்லுறவு கொண்டாய்!

கனிவான என் காதல் மொழியையும்
கவிதையாக்கினாய் தேனூறும் கருத்தோடு.

எண்ணிலடங்கா சேவைகள் புரிந்தாய்
எண்ணெழுத்தைக் கண்ணாகக் கொண்டு.

கூட்டுப் பறவைகளின் பசியாற்றினாய் பரிவுடனே
குடும்பத் தலைவனாய் தவறவிட்ட கடமைகள்

பரிகாசப் பேச்சுடன் நம் சந்ததியினருக்கு
தவறான உதாரணமாகிவிட்டோமே கண்ணாளனே!!!



திடீரென உடல் சிலிர்க்க, வியர்வை ஆறாய்ப் பெருக, எங்கே இருக்கிறோம் என்று கண்ணை விரித்துப் பார்த்தால், மரத்தினடியில், சிலுசிலுவென தென்றல் வீச, கண்ணயர்ந்து விட்டேன் போல............