Sunday, December 5, 2010

செல்லம்மாவின் பாரதி.



சுட்டெரிக்கும் சூரியன்......அலைந்து திரிந்து, நிழலுக்காக ஏங்கித் திரிந்த வேளையில் விழுதுகள் வேறூன்றிய பரந்த, பசுமையான, பழமையான,ஆலமரம். பரந்தாமனை நேரில் தரிசித்த பரம பக்தனாக உள்ளம் குளிர அதன் தண்ணிழலை அணைத்துக் கொண்டேன்.

சில்லென்ற குளிர் கரம், குச்சியாக இருந்தாலும், உறுதியான கரம்.......என் தோளை வருடி, நலம் விசாரிக்க நானோ, யாராக இருக்கும் இம்மென்மலர் என சிந்திக்கும் முன்பே, முந்திக் கொண்டாள் அவள் தான் கவிக்குயில் பாரதியின் கண்ணம்மா என்கிற செல்லம்மா என்று!

அட எனதருமைத் தோழியே..........இன்றுதான் எனைக் காணும் மனது வந்ததா என்று பழங்கதையை அலச ஆரம்பித்தோம் இருவரும்.......

அவள் அன்று விட்ட செய்தியை தொடர ஆரம்பித்தாள் ஏக்கத்துடனே......

கவிக்குயில் பாரதி, தனதருமைக் கணவனின் பெருமை பேசுவதென்றால் அவளுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல......

பாரதியின் பெண் விடுதலை கட்டுரையைச் சிலாகிக்க ஆரம்பித்துவிட்டாள்.

” சகோதரிகளே ! ஔவையார் பிறந்தது தமிழ்நாட்டில், மதுரை மீனாஷியும், அல்லி அரசாணியும், நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ்நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன், மைத்துனராகவும்,தந்தை, பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர்.இவர்களே நமக்கு பகைவராகவும் மூண்டிருக்கையிலே இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும் போது, என்னுடைய மனம் குருஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜீனனுடைய மனது திகைத்தது போல திகைத்தது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அது பற்றியே ‘சாத்வீக எதிர்ப்பினால்’ இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.

“ அடிமைப்பட்டு வாழ மாட்டோம். சமத்துவமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம் என்று அவர்களிடம் வெளிப்படையாகவும், தெளிவாகவும் சொல்லிவிட்டு அதனின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பி பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம்.....”

செல்லம்மா, என்ன இன்று இப்படி இந்த தலைப்பை எடுத்துவிட்டாய் என்று கேட்பதற்குள் அடுத்து தன்னுடைய பாடலை எடுத்து விட்டாள்,


செல்லம்மாவின் பாரதி !

பாட்டுக்கொரு பாரதியென
பாரெல்லாம் போற்றியுனைப் பாராட்ட

எட்டயபுரத்து லட்சுமியின் செல்லமகன்
சுப்பையா எனும் பன்மொழி வித்தகராகி

எட்டையபுர மன்னனின் அவைதனில்
எட்டவொண்ணா சிம்மாசனத்தில் வீற்றிருக்க

சுதேசமித்திரனின் தலைவனுக்குத் துணையானாய்
சக்கரவர்த்தினிக்கே தலைவனாகவும் ஆனாய்!

தேசிய அரசியலிலும் ஆசானாய் நீயிருந்தாய்
சகோதரி நிவேதிதாவை ஞான ஆசானாகவும் கொண்டாய்

சுதேச கீதங்களை சுவையாக நீ யாத்தினாய்
‘இந்தியா’ எனும் இதழையும் சுவையாக்கினாய்!

பாலபாரதா எனும் ஆங்கில இதழை வெளியிட்டு
ஆங்கில மொழிப் புலமையையும் பறைசாற்றினாய்.

பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டென
அஞ்சலி செலுத்தினாய் அன்னை தமிழுக்கு

கீதையை மொழி மாற்றம் செய்தாய்
பாதையை செம்மையாக்கிக் கொள்ள

மகாத்மா காந்தி, அன்னி பெசண்ட் என
வரலாற்று நாயகர்களுடன் நல்லுறவு கொண்டாய்!

கனிவான என் காதல் மொழியையும்
கவிதையாக்கினாய் தேனூறும் கருத்தோடு.

எண்ணிலடங்கா சேவைகள் புரிந்தாய்
எண்ணெழுத்தைக் கண்ணாகக் கொண்டு.

கூட்டுப் பறவைகளின் பசியாற்றினாய் பரிவுடனே
குடும்பத் தலைவனாய் தவறவிட்ட கடமைகள்

பரிகாசப் பேச்சுடன் நம் சந்ததியினருக்கு
தவறான உதாரணமாகிவிட்டோமே கண்ணாளனே!!!



திடீரென உடல் சிலிர்க்க, வியர்வை ஆறாய்ப் பெருக, எங்கே இருக்கிறோம் என்று கண்ணை விரித்துப் பார்த்தால், மரத்தினடியில், சிலுசிலுவென தென்றல் வீச, கண்ணயர்ந்து விட்டேன் போல............

8 comments:

  1. பரிகாசப் பேச்சுடன் நம் சந்ததியினருக்கு
    தவறான உதாரணமாகிவிட்டோமே கண்ணாளனே!!!


    ......வித்தியாசமான கவிதை - பார்வை.

    ReplyDelete
  2. தலைப்பு தொடங்கு பதிவு முடியும் வரை எல்லாமே வித்யாசமாய் அசத்தலாய்..

    தலைப்பு அழகு:)

    ReplyDelete
  3. செல்லம்மா அப்படி நினைத்திருக்கச் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது:).

    ReplyDelete
  4. பெண்களின் பலமும் பலஹீனமும் அன்பு ஒன்றேதான் என்பதை வைத்தே ஆண்கள் பெண்களைக் கையாளுகிறார்கள் !

    ReplyDelete
  5. வித்தியாசமா இருந்தது...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. புகைப்பட பகிர்வுக்கு நன்றி.இடுகை புதுமை.

    ReplyDelete
  7. அன்பு நித்தி.... வணக்கம்.... நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு... இங்கே இடைமறிக்க தலைப்படுகிறேன்... உங்களின் எழுத்துக்களில் நீங்கள் கையாளும் யுக்திகள் அபாரம்... பாரதியை பற்றிப் பேசுகிற கண்ணம்மாவாய் கணப்பொழுது கண்மூடியிருக்கிறீர்கள்.... இந்த சிந்தனைக்கு வந்தனங்கள்.....
    பாரதி உயர்வுகளை பேசி....
    பாரதியின் சாதனை பேசி...
    பாரதியின் சரித்திரம் பேசி....
    பாரதியின் தரித்திரம் பேசி....
    பாரதியின் சரிவுகளும் பேசி....
    கடைசியாய்.....

    சமத்துவம் பேசியிருக்கிறீர்கள்....
    பாராட்டுக்கள்......
    உங்களிடம் ஒரு கருத்தைப் பதிய வைக்கிறேன்....
    முதலில்..... "விடுதலை" என்பது எது...? இந்த வார்த்தை என்னனென்ன பொருள் தருகிறது... என்பது தெளிவாய் புரிதல் வேண்டும். அடுத்தது.... "சுதந்திரம்" என்பது.... இதுவும் முழுப் பொருள் உணரப் படாமலே.... நம்மை நசியச் கெய்துக்கொண்டிருக்கிறது.
    எத்தனை பேருக்கு தெளிவான சிந்தனையும்..., விசாலமான அறிவும்..., கூரியப் பார்வையும்.... இருக்கிறது என நினைக்கிறீர்கள்....? நாம் கடந்து வந்திருக்கும் பாதை மிக நீளமானது..... ஒவ்வொரு தலைமுறையும் ஒரு மைல் கல்லைத் தாண்டியே வந்திருக்கிறது....இது காலக் கட்டாயம்...
    அன்பை கொடுப்போம்.... அன்பை எடுப்போம்.... ஆண் இல்லா பெண்ணும்.., பெண் இல்லா ஆணும்... படைப்பின் பிழை.... பிரபஞ்ச நரகம்.... அதோடு இவர்களிடம் அன்பில்லாதிருந்தால்..... அந்த இடம் சர்வ நாச சங்கமங்களின் சுடுகாடு.
    நாம் தனித்தனி இல்லை.... ஒன்றின் பிம்பமாய் இன்னொன்று..... எங்களின் பாதிகள் உங்களிலும், உங்களின் பாதிகள் எங்களிலும் ஒளிந்து கிடக்கும் இரகசியம் அறியும் "தேடலே" வாழ்க்கையாகிறது.
    பாதிகள் முழுமை இல்லை நித்தி.... ஒரு பாதியை அவமதித்தோ... அழித்தோ... நசுக்கியோ.... மறுபாதி வாழவே முடியாது.
    நம் சமூக கட்டமைப்பின் முதுகெலும்பு நம்முடையப் பெண்கள். மறுக்க முடியாது. உண்மை.
    ஆனால் முதுகெலும்பு மட்டும் முழு உருவம் ஆகாது. அதையும் புரிதல் வேண்டும்... நாம் உரிமைகளை பெறப் போராட வேண்டும்.... என்கிற எண்ணம் விட்டு.... வாழ்க்கையை போராட்டம் என எண்ணாமல்.... நம் வாழ்வியல் பூங்கா நல்ல மணம் வீசத் தென்றல் தேடுவோம்.... புரிந்து கொண்டு புரிதல் செய்வோம்.... மகிழ்சியின் மகுடம் நாம். வாழ்வை அமைப்போம். உயிரில் எதுவும் தாழ்வில்லை....
    அரைகுறைகள் தான் நம்முடைய அறிவீனமாகிறது... அறிவை புகட்டுவோம்... தெளிய வைப்போம். தெளியும் வரை.
    பெண்கள் பெண்களாகட்டும்..... ஆண்கள் ஆண்களாகட்டும்.... வணக்கம்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...