Wednesday, December 1, 2010

தியானம்............

விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ...........அடுத்து தியானம்.ஆழ்ந்த தியானத்தில் கிடைக்கும் ஒரு இன்பநிலை அது எப்பொழுதும் வாய்ப்பதில்லை. அதற்கெல்லாம் இமயமலைக்குத்தான் போக வேண்டுமோ என்னமோ....

கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கலாமென்றா.....ல் “கர, கர,கர”..........மின் விசிறி சத்தம். சரி அதைக் கடக்க முயன்று கொஞ்சம் சிரமம்தான்....அதைக் கடந்தால் கூ......குகூ..........சின்னக் குயிலின் திருப்பள்ளியெழுச்சி. அடுத்து சில வினாடிகள்........’கொக்கரக்கோ’......முருகனின் கொடியிலிருக்கும், செஞ்சேவலின் சுப்ரபாதம் கடந்து, எங்கோ தொலைவில், மசூதியில் அல்லாஹூ..........அக்பர்....கடந்து, தெரு முனை பால் அங்காடியின் சலசலப்பு......இப்படி தெரு முனை வரை பயணித்த மனது வெட்ட வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்க......

கொஞ்சமாவது மண்டையில மூளை இருக்கா....உனக்கு.......என் தர்ம பத்தினரின் [ தர்ம பத்தினிக்கு ஆண்பால் அதுதானேங்க...]புகழாரம். அவரோட ஒரு முக்கியமான ஆவணத்தில் லேசா ஈரக்கையை வைச்சுட்டேன்....அதுக்கு போய் மண்டை மூளையெல்லாம் ஆராய்ச்சி பண்ணது கொஞ்சம் ஓவர்தானே.......சே, இப்ப போய் இதை எதுக்கு நினைக்கனும், நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமயா போகும்.....அப்ப வச்சிக்கலாம்....

அடடா....காஸ் சிலிண்டர் காலியாகி 5 ,6 நாள் இருக்குமே......இன்னும் புக் பண்ணவேயில்லையே......திடீர்ன்னு டிமாண்ட் வந்தா என்ன பண்றது. முதல் வேலையா காலைல ஆபீஸ் திறந்தவுடன் காஸ் புக் பண்ணனும்......

சரி இனிமேல் எதையும் பற்றி நினைக்கக் கூடாது.......ஓம்.....ஓம்......ஓம்......

டிங்....டாங்க்........வாசலில் அழைப்பு மணி.

அம்மா....கீரை. அடக் கடவுளே, மணி ஆறாயிடுச்சா.....அவசர அவசரமாக அள்ளி சுருட்டிக் கொண்டு....பிறகென்ன அன்றைய கடமைகள் அழைக்க தியானம் அவ்வளவுதான்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். அப்படித்தான் அன்று என் வீட்டு கதவும் தட்டப்பட்டது. குருஜீக்காக பக்கத்து ஊரில் ஏற்பாடு பண்ணியிருந்த சத்சங்கம் முடிந்து, அந்த ஒரு நாள் அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவர் வீட்டில் திடீரென ஒரு அசம்பாவிதம் நடந்துவிட, அதன் காரணமாக அவரை அங்கு தங்கவைக்க முடியாத சூழலில் அருகில் இருந்த எங்கள் குடில் நினைவிற்கு வர குருஜியின் புண்ணிய பாதம் படும் பாக்கியம் எங்கள் வீட்டிற்கும் கிடைத்தது.

மிக எளிய மனிதரான அவரைப் பார்த்தால் பெரிய மடத்திற்கு அதிபதியான குருஜீயாக தெரிய மாட்டார். சாதாரண வெள்ளை ஆடை உடுத்தி நம்மில் ஒருவராகத் தான் இருப்பார். பார்வையில் ஒரு தீட்சண்யமும், கண்டவுடன் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தேஜஸ்ஸீம் இருக்கும். தேவையில்லாமல் ஒரு வார்த்தைக் கூடப் பேச மாட்டார். மிக எளிய உணவுப் பழக்கம் இப்படி நிறைய அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அவர் திடீரென வந்ததால், பரபரப்பு ஏதும் இன்றி அமைதியாகவே இருந்தது வீடு.

அந்த நேரத்தில் தான், அடுத்த வீட்டில் குடியிருக்கும், அமுதவல்லி, கையில் ஏதோ கிண்ணத்தில் தூக்கிக் கொண்டு வந்தாள். அமுதவல்லி, குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று வேறு எதிலும் நாட்டம் இல்லாத, சதா குடும்ப வேலையிலேயே மூழ்கிக் கிடப்பவள். வேலை முடிந்தால் நிம்மதியாக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுவாள். ஜோக்காக இருந்தால் வாய் விட்டு சத்தமாகச் சிரிப்பாள். அதே போல் சோகமான காட்சியென்றாலும் ஐயோ என்று சத்தம் போட்டு அழுது விடுவாள். எதையும் மனதில் போட்டு பூட்டி வைக்கத் தெரியாத வெள்ளந்தியான பெண். பல நேரங்களில் அவளைப் பார்த்து பொறாமையாகக்கூட இருக்கும் எனக்கு. ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் அவர்கள் வீட்டில். குடிகாரக் கணவர் ஒரு புறம், உடல் நலம் குன்றி, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் ஒரு புறம்..... பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இப்படி பம்பரமாக சுழலும் அமுதவல்லி ஒரு நாள் கூட வாக்கிங் என்றோ, உடற்பயிற்சி என்றோ, தியானம் என்றோ நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் ஒரு நாள் கூட தலைவலி, கால்வலி என்று புலம்பியதும் இல்லை........சலித்துக் கொண்டதும் இல்லை. எப்பவும் உற்சாகம்தான், சுறு சுறுப்பு தான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் வாழும் அறையில் [ அதாங்க ‘லிவ்விங் ரூம்’] குருஜீ புத்தகம் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவள் கொஞ்சமும் தயக்கமில்லாமல், அட ஐயா நீங்களா......

உங்களை பல முறை டிவீல பாத்திருக்கேனே.....நல்லா இருக்கீங்களா..... என்றாள்.
குருஜீயும் வெள்ளந்தியான அவளுடைய பேச்சைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு திரும்பவும் புத்தகத்தில் ஆழ்ந்து விட்டார்.

ஆனால் அவளோ அவரை விட்ட பாடில்லை. ஐயா இந்த சொஜ்ஜி அப்பத்தை சாப்பிட்டுப் பாருங்க நல்லா இருக்கும் என்றாள். நான் சுத்தமாத்தான் பண்ணியிருக்கேன், என்றாள்.

அவரும் திரும்பவும் புன்னகைத்துவிட்டு, இல்லைம்மா, நான் எண்ணெய் பலகாரமெல்லாம் சாப்பிடுவதில்லை, எனக்கு ஒத்துக் கொள்ளாது என்றார்.

திரும்பவும் அவள் கட்டாயப்படுத்த முயற்சிக்க நான் தலையிட்டு, ஒருவாறு அவளை அனுப்பி வைத்தேன்.

சரிங்க ஐயா நான் போய் வாரேன், எங்க வீட்டிற்கும் ஒரு நடை வாங்க ஐயா, என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

வெகு நாட்களாக எனக்கிருந்த சந்தேகம். எப்படி இவளால் மட்டும் இவ்வளவு எளிதாக வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காமல் ஒதுக்கி வைக்கும் கலையை எப்படிக் கற்றாள் இவள்..... இன்று குருஜியிடமே கேட்டு தெளிவு பெறும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பூரித்துப் போனவள் கேட்கலாம் என்று வாயைத் திறப்பதற்கு முன் அவளுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டவராக குருஜி சொன்ன ஓரிரு வார்த்தைகளில் அவளுக்கு தெளிவானது.......

அதாவது தூய்மையான சிந்தனையுடன், எல்லாவற்றிலும் 100 சதவிகித ஈடுபாடு. எந்த வேலை எடுத்தாலும் அதில் நூறு சதவிகித முழுமையான ஈடுபாடு கொண்டு செய்தாலே அதுதானே தியானம். எந்தச் செயலாக இருந்தாலும் மனம் ஒன்றி செயல்பட்டாலே போதும் என்று அவர் கூறிய பிரம்மோபதேசத்தை இன்றும் கடைப்பிடிக்கும் எனக்கு மன நிம்மதி நிறைந்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை!!



26 comments:

  1. //எந்த வேலை எடுத்தாலும் அதில் நூறு சதவிகித முழுமையான ஈடுபாடு கொண்டு செய்தாலே அதுதானே தியானம். எந்தச் செயலாக இருந்தாலும் மனம் ஒன்றி செயல்பட்டாலே போதும்//

    உண்மைதான். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. நன்றிங்கம்மா

    ReplyDelete
  3. தியானம் என்பதன் பொருளை தெளிவாகச் சொல்லியதற்கு வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
  4. அதாவது தூய்மையான சிந்தனையுடன், எல்லாவற்றிலும் 100 சதவிகித ஈடுபாடு. எந்த வேலை எடுத்தாலும் அதில் நூறு சதவிகித முழுமையான ஈடுபாடு கொண்டு செய்தாலே அதுதானே தியானம். எந்தச் செயலாக இருந்தாலும் மனம் ஒன்றி செயல்பட்டாலே போதும் என்று அவர் கூறிய பிரம்மோபதேசத்தை இன்றும் கடைப்பிடிக்கும் எனக்கு மன நிம்மதி நிறைந்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை!!


    .... very good advice. :-)

    ReplyDelete
  5. தினப்படிகாரியங்களை கர்மங்களை யோகமாக செய்தால் கர்மயோகியாகிவிடலாம் :))

    ReplyDelete
  6. அதாவது தூய்மையான சிந்தனையுடன், எல்லாவற்றிலும் 100 சதவிகித ஈடுபாடு. எந்த வேலை எடுத்தாலும் அதில் நூறு சதவிகித முழுமையான ஈடுபாடு கொண்டு செய்தாலே அதுதானே தியானம். //


    அழகா சொன்னீங்க...

    அதுமட்டுமல்ல , நம்மை நிலைகுலைய செய்வது , பாராட்டுகளும் இகழ்ச்சியும்.. இவற்றை சமன்படுத்த /அல்லது கண்டுகொள்ளாத பக்குவம் வந்துவிட்டால் அதுவும் தியானம்.:)

    ReplyDelete
  7. Good post!! flow nalla irukku madam! congrats!

    ReplyDelete
  8. நன்றிங்க ராமலஷ்மி.

    ReplyDelete
  9. வானம்பாடிகள் சார் நன்றிங்க.

    ReplyDelete
  10. நிகழ்காலம் அவர்களே.....வருக, வணக்கம், ஒரு சின்ன திருத்தம் நண்பியே என்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  11. சித்ரா, இதை அறிவுரை என்று சொல்வதைவிட, அனுபவப் பகிர்வு என்றே சொல்ல வேண்டும். அறிவுரை சொல்லும் அளவிற்கு நான் இல்லை சித்ரா. நன்றி.

    ReplyDelete
  12. முத்துலஷ்மி, நெத்தியடி.....ஒரே வார்த்தையில் தூள் கிளப்பி விட்டீர்கள்.

    ReplyDelete
  13. அதுமட்டுமல்ல , நம்மை நிலைகுலைய செய்வது , பாராட்டுகளும் இகழ்ச்சியும்.. இவற்றை சமன்படுத்த /அல்லது கண்டுகொள்ளாத பக்குவம் வந்துவிட்டால் அதுவும் தியானம்.:)
    சூப்பரா சொன்னீங்க...பயணங்களும் எண்ணங்களும்...

    ReplyDelete
  14. தக்குடுபாண்டி, வருக, வருக. நன்றி, தொடர்ந்து வாங்க......

    ReplyDelete
  15. பிரம்ம உபதேசம் உங்களுக்கும் வாய்த்திருக்கிறது...மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. தியானம்... யோகம்... அப்படீன்னு டீப்பா சிந்திக்க நான் ஒன்றும் சித்தனில்லை.... யோகியுமில்ல... சாமியுமில்லை!
    ஓர் சராசரிதன்... அதாவது.. சராசரி மனிதன்...!

    காலைல எழுந்தோமா... நம்புற சாமிய சில நிமிடம் கும்டோமா.... (தற்போது இவ்வுலகில் உலவும் எந்த மனிதரையும் கடவுளாய் வணங்குவதில்லை... குருவாய்கூட ஏற்பதில்லை... மறைந்தும் மறையாமல் என் நினைவில் வாழும் "என் தந்தை" எனும் தெய்வத்தைத் தவிர) வேலைக்கு போனோமா... உழைச்சோமா... நேரமிருந்தால் பொண்டாட்டி..புள்ளகுட்டியோட வெளிய போய்வந்தோமா... சாப்டோமா... திருப்பி தூங்கினோமா...!

    குடும்பம்தான் கோயில்... அவங்கள சந்தோசமா வைத்திருந்தாலே போதும்... அதுவே கடவுள்... இறைவன்... அதுவே பேரருள்... அதுவே சிறந்த தியானம்... யோகம்... அப்படீன்னு நினைக்கிற சாதாரண மனிதன்...

    கீதையில் சொன்னமாதிரி "கடமையை ஒழுங்காய் செய்தலே" பரமாத்மா.... சிறந்த தியானம் அப்படீன்னு நினைக்கிற சாதாரண மனிதன்...

    இதுதான் நமக்கு தெரிந்த "பரப்பிரம்மம், பரமாத்மா..." எவ்வித தியானம், யோக, அநிஷ்டை அறிய விரும்பியதும் இல்ல... அதுங்ககிட்ட நான் போனதே இல்ல...!

    சாரிங்க... மேடம்...

    தியானம் என்பது அமைதி...
    அது நமக்குள்ளே இருக்கு...!
    "ஆசையே துன்பங்களுக்கு காராணி" என அனைத்து மத வேதங்களும்... அனைத்து மத பெரியோர்களும் (தற்போதைய மனிதர்களாய் உலவும் சாமியாரையோ... யோகியையோ குறிப்பிட விரும்பவில்லை) சொல்கின்றனர்...

    ஆசை தேவைதான்...
    அதில்லாமல் மனிதனில்லை... மனித மனமும் இல்லை...

    அதுவும் அளவோடு... அதாவது "பேராசை" படாமல் இருந்தால்...

    அம்மனதில் "அமைதி" உலவும்...
    அதுவே சிறந்த "தியானம்" என்பது அடியேனின் அடிபணிந்த கருத்து...

    ReplyDelete
  17. முரளி நானும் அதே தாங்க சொன்னேன். நம் கடமையை சரிவர செய்து மன அமைதியுடன் இருப்பதே தியானம் என்றுதானே நீங்களும் நினைக்கிறீர்கள். so we both are sailing on the same boat......thats it....

    Relax.....friend.......

    ReplyDelete
  18. எத செய்யாதன்னு மனசுக்கு சொல்றோமோ, அத தான் முதல்ல செய்யுது :) நல்ல பதிவு..

    ReplyDelete
  19. சரியாகச் சொன்னீர்கள் ப்ரசன்னா......ஆனால் அதை கட்டுப்படுத்துவதற்காகத்தானே பயிற்சிகள்......

    ReplyDelete
  20. தியானத்திலும்...யோகாசனத்திலும் பெரிதா நம்பிக்கையோ ஈடுபாடோ இல்லாமல் இருந்தேன்... தற்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் தியானத்திற்கும் யோகாவிற்கும் முக்கியத்துவம் தருவதால், நானும் பயிற்சியில் தள்ளப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்...பயிற்சியை ஒரு மாதமாக தொடர்கிறேன்...எனக்குள் நடக்கும் மாற்றங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது...நல்ல பதிவு

    ReplyDelete
  21. அருமையாகச் சொன்னீர்கள் மங்கை...வருக, வருக. அனுபவம் தருகிற பயிற்சி வேறு எவராலும் தரமுடியாது என்பதே நிதர்சனம் அல்லவா.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...