Tuesday, December 11, 2012

நம்பிக்கை ஒளி! (10)




ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் உன் வாழ்க்கையிலும் கண் திறந்திருக்கிறான். உனக்கும் ஒரு விடிவு காலம் வந்திருக்கு. தேவையில்லாம விரோதத்தை வளர்த்துக்காதே.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அவிங்கவிங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி போக வேண்டியதுதான். முத்தழகனும் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலையே.. காலம் செய்யுற கோலம் இதெல்லாம்..  இனிமேலாவது உன் வாழ்க்கை நிறைவா இருக்கணும்டா...  எதையும் மனசுல வச்சிக்காதே...” என்று சொன்னது அப்போதைக்கு அவ்ளுடைய கோபத்தை சற்றே தணியச் செய்திருந்தாலும், அண்ணன் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் மட்டும் வர மறுத்துக் கொண்டிருந்தது. சுப்ரஜாவும்  ஓரிரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசியும், பாசம் பெரிதாக வரவில்லை. காலம் மட்டுமே எல்லாவற்றையும் செப்பனிடும் வல்லமை பெற்றதன்றோ?