ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் உன் வாழ்க்கையிலும் கண் திறந்திருக்கிறான். உனக்கும் ஒரு விடிவு காலம் வந்திருக்கு. தேவையில்லாம விரோதத்தை வளர்த்துக்காதே.. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. அவிங்கவிங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி போக வேண்டியதுதான். முத்தழகனும் தெரிஞ்சு எந்த தப்பும் செய்யலையே.. காலம் செய்யுற கோலம் இதெல்லாம்.. இனிமேலாவது உன் வாழ்க்கை நிறைவா இருக்கணும்டா... எதையும் மனசுல வச்சிக்காதே...” என்று சொன்னது அப்போதைக்கு அவ்ளுடைய கோபத்தை சற்றே தணியச் செய்திருந்தாலும், அண்ணன் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் மட்டும் வர மறுத்துக் கொண்டிருந்தது. சுப்ரஜாவும் ஓரிரு முறை போனில் தொடர்பு கொண்டு பேசியும், பாசம் பெரிதாக வரவில்லை. காலம் மட்டுமே எல்லாவற்றையும் செப்பனிடும் வல்லமை பெற்றதன்றோ?
ஐ.ஏ.எஸ் படிப்பு என்பது மற்ற தொழிற்கல்விகள் போன்று அல்லாமல், நிலையான பொறுமையும், உறுதியான கொள்கையும், அதை அடையக்கூடிய தெளிந்த சிந்தையும், அசைக்க முடியாத தன்னம்பிக்கை, போன்றவைகளுடன் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் மிக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய முயற்சி இவையனைத்தும் இருந்தால் மட்டுமே சாதிக்கக்கூடியது.
முடியும் - முடியாது என்பதெல்லாம் ஒரு நபரின் மன உறுதியைச் சார்ந்தது கடுமையான உழைப்பு என்றுமே பலன் தராமல் ஏமாற்றுவதில்லை. இந்த சாதனையின் பின்புலத்தில் உழைப்பு,உழைப்பு என்பதைத் தவிர எந்த ஒரு பொழுது போக்கையும் தியாகம் செய்யும் மனத்தின்மையும் அவசியம்.. பொறுமையாக இருப்பவர்களுக்கு மட்டுமே நல்ல விசயங்கள் சென்றடையும்.
மூன்று தேர்வுகளிலும் பல்கலையிலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ள. அன்புத் தங்கையைக் கண்டு சகோதரன் முத்தழகிற்கு பெருமை பிடிபடவில்லை. வாழ்க்கையில் தானே எதையோ சாதித்து விட்டது போன்று ஒரு பரவச நிலையில் இருந்தான்.
ரிஷியும் மாலதிக்கு எந்த விதத்திலும் சளைத்தவனாக இல்லை. அவனும் நல்ல மதிப்பெண்களுடனேயே தேறியிருந்தான். திருமணம் என்ற சொல்லையே காதில் வாங்கத் தயாராக இல்லாத மகனின் பிடிவாதம் கண்டு நொந்து போன பெற்றோர் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் ரிஷிக்கு சாதகமாக அமைந்தது. முத்தழகின் தங்கையை தங்கள் குடும்பத்தின் மருமகளாக ஏற்றுக் கொள்ள தடை சற்று தளர்த்தப்பட்டிருந்தது. பெற்றோரின் மனமாற்றம் ரிஷியை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. காதலில் வெற்றிகொண்ட அனைவருமே ஏதோ உலக மகா சாதனை புரிந்ததைப் போன்ற மிதப்பில் இருப்பதும் இயற்கை. அதே எண்ணத்தில் மாலுவிடம் ஓடோடி வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சகோதரனின் தயவால் வாங்கிய அவளுடைய வாழ்நாள் குறிக்கோளுக்கான ஐ ஏ எஸ் பட்டமே இன்று பெரும் பாரமாக இருக்கும் போது, திரும்ப திருமண பந்தமும் அடுத்த சுமையாவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்மானமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. காதலைத் துறப்பதே நிம்மதிக்கு வழி என்றே நினைத்தாள். சேவை ஒன்றையே தன் வாழ்நாள் இலட்சியமாக முடிவு செய்தவள் அடுத்து பணிக்குத் தயாரானாள்.
வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தயிர் தாளியை உடைத்து எரிந்தது போன்ற மாலுவின் செயலை சீரணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் ரிஷி.
முத்தழகன் மாலுவிடம் வந்து எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளால் இயல்பாக இருக்க முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவே இருந்தது. யாரிடமும், இந்த அளவிற்கு இறங்கி வந்து, பேசியறியாத சுப்ரஜாவும் பல முறை மாலதியை சமாதானம் செய்தும் அவள் மனம் இளகுவதாக இல்லை. ரிஷியை மணமுடித்துக் கொள்ளும் ஆலோசனையையும் கூட அவளால் ஏற்க முடியாது போனது கோபத்தையே ஏற்படுத்தியது.
மாலு அன்று பணி நிமித்தமாக நேர்காணலுக்காக தில்லி செல்ல வேண்டிய நாள். அநேகமாக அவளுக்கு தில்லியிலேயே போஸ்டிங்கும் இருக்கும் என்று பரவலாக செய்தியும் அடிபட்டது. ரிஷியை விட்டுப் பிரியப் போகும் அந்த எண்ணம் மட்டும் தன் சக்தியில் பெரும் பகுதியை உறிஞ்சுவதாக இருப்பதை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. தனிமையில் அழுது ஓய்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகை தவழும் முகத்துடனே வளைய வந்து கொண்டிருந்தாள். தில்லைராசன் ஐயாவும் தன் பங்கிற்கு அவளுக்கு எடுத்துச் சொல்லி ரிஷியை மணமுடிக்க எடுத்த முயற்சியும் பலனில்லாமல்தான் போனது.
அடுத்த நாள் விடியலில் தில்லி கிளம்ப வேண்டும். அதற்கான ஆயத்தப் பணிகளில் மற்ற அனைத்தையும் மறந்து மும்முரமாக இருந்தாள். எவ்வளவோ மறுத்தும் கேளாமல் முத்தழகு, மாலதிக்கு விமான டிக்கெட் புக் செய்து விட்டது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அதைத் தவிர்க்க முடியவில்லை. சின்னம்மாவிடம் நேரில் சென்று ஆசிகள் பெற்றவள், பரமுவிடமும் கண்ணீருடன் பிரியாவிடை பெற்று வந்தாள். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வெளிவர வெகு சிரமப்பட்டே அதனைத் தவிர்க்க முடிந்தது.
கிளம்பப் போகும் முதல்நாள் மாலை தன்னுடைய விருப்ப தெய்வமான ஆருத்ர கபாலீசுவரரை தரிசித்துவிட்டு வர முடிவுசெய்து கிளம்பினாள். அண்ணன் பலமுறை தன் வீட்டிற்கு அழைத்தும் செல்ல மனமில்லாமல் தவிர்த்தே வந்தாலும், மனதில் அதுவும் ஒரு குறையாக இருந்ததும் நிசம்.
விநாயகரை தரிசித்து, மூலவரையும், அம்மனையும் வணங்கிவிட்டு முருகன் சன்னதிக்கு வந்தவள் அன்று கிருத்திகை என்பதால் முருகன் சர்வ அலங்காரத்துடன் காட்சியளிக்க மெய்மறந்து நின்று கொண்டிருந்தவளை அருகில் ஏதோ சலசலப்பு திரும்பிப் பார்க்கச் செய்தது. “த்தை... த்தை.. த்த்த.....” என்று ஒரு பெண் குழந்தை அவள் காலைக் கட்டிக் கொண்டு பொக்கை வாயுடன் அழகாக் சிரித்துக் கொண்டிருந்தது. அசப்பில் பால முருகனின் சாயலாகவே தெரிந்தது அந்த நேரத்தில். ”அட..என் அமிர்தா செல்லமா.....வாடி என் கண்ணே” என்று தன்னையறியாமல் வாரி அணைத்துக் கொண்டாள். அந்த நொடியில் அவள் உடலில் ஏற்பட்ட அந்த பரவசம் அவளை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. குழந்தையும் அவள் கழுத்தை இறுக கட்டிக் கொண்டது. ஏனோ தன் தாயின் அணைப்பில் இருப்பது போன்ற சுகம் அவளைக் கட்டிப்போட்டது. கண்கள் கலங்க ஒன்றும் புரியாமல் நின்றவளை, “மாலு” என்ற ஆதரவான குரலுடன் தன்னை அணைத்துக் கொண்டு நிற்கும் சுப்ரஜாவின் அருகில் அண்ணன் முத்தழகு! “அண்ணா... அண்ணி” என்று தன்னையறியாமல் சத்தமாக அழைத்தவளின் கண்களில் தாரை தாரையாக ஊற்றிய கண்ணீரை அன்பாக துடைத்துவிட்டு அழைத்துச் சென்றாள் தாயாக அண்ணி சுப்ரஜா.
ஒன்றும் பேசமுடியாமல் அம்ரிதாவின் மழலையும், கொஞ்சலும் கட்டிப்போட மகுடி நாதத்தைக் கேட்ட நாகமாக அவர்களின் பின்னாலேயே வீட்டிற்குச் சென்றாள். இரவு வரை இருந்து உணவு முடித்து கிளம்பும் வரை ஏதேதோ பழைய கதைகளையும், குழந்தையைப் பற்றியும் பேசிய முத்தழகு அண்ணன் தவறி கூட ஒரு முறையேனும் ரிஷியைப் பற்றி பேசாதது ஏமாற்றமாகவே இருந்தது. ஒரு வேளை ரிஷியின் பெற்றோர் திரும்பவும் மறுத்து விட்டிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது. விடை பெற்று விடுதிக்கு வரும்போது அண்ணனும், அண்ணியும் அடுத்தநாள் தாங்களே வந்து விமான நிலையம் அழைத்துப் போவதாகச் சொல்லி காரில் அனுப்பி வைத்தாலும் ஏனோ மனம் அமைதியில்லாமலே தவித்தது. இரவு முழுவதும் அந்தத் தவிப்பு தூங்க விடாமல் அலைக்கழித்தது. விடிய்லில் அப்படியே எழுந்து குளித்து தயாராகி, அண்ணன், அண்ணியுடன் விமான நிலையம் செல்லும் வழியெல்லாம் ரிஷி எங்கேனும் தென்படமாட்டானா, ஒரே ஒரு முறை பார்த்து விட்டாவது செல்ல மாட்டோமா என்று மனது ஏங்கியது. இறுதியாக அவனிடம் பேசும்போது ரொம்ப அழுத்தமாக இனி தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என்று கூறியது இந்த அளவிற்கு அவன் மனதை பாதித்திருக்கும் என்று நினைக்கவில்லை. வழியெல்லாம் இருவரும் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாலும் , எதுவுமே அவள் காதில் விழவேயில்லை. ஆச்சு.... விமான நிலையமும் வந்தாகிவிட்டது. செக் இன் செய்ய உள்ளே போக வேண்டும், இப்போதாவது அண்ணன் ரிஷி பற்றி ஏதாவது சொல்லுவானோ என்று ஏக்கத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
“என்னம்மா, மாலு ஏதாவது சொல்ல நினைக்கிறாயா..? “ என்று அன்பாக கேட்டும் அவள் தன்மானம் தான் நினைத்து ஏங்குவதைப் பற்றி சொல்ல இடங்கொடுக்கவில்லை. ஒன்றுமில்லை என்பது போல தலையை அசைத்துவிட்டு விடை பெற்று சென்றாள். அன்புத் தங்கை பார்வையை விட்டு மறையும் வரை கையாட்டிக் கொண்டிருந்த அண்ணனின் முகம் இதயத்தினுள் பதிந்து போனாலும், ஒரு வெறுமையும் உடன் வரத்தான் செய்தது.
தன்னுடைய சன்னலோர இருக்கை எண்ணைக் கண்டுபிடித்து, அமர்ந்தாள். அருகிலிருந்த இருக்கை காலியாக இருந்தது..... சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். விமானம் கிளம்பப் போகும் அறிவிப்பும், சீட் பெல்ட் போடும் முறையையும் விமானப் பணிப்பெண் சொல்வதைக் கேட்டு அதைப் பின்பற்றி போட முயற்சித்தாள். முதல் முறைப் பயணம் என்பதால் எல்லாமே புதுமையாக இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லாதலால் சீட் பெல்ட் போட சிரமமாகவும் இருந்தது. மிகச் சிரமத்தினிடையே போடும் போது, ” அப்படி இல்லை, இப்படி பெல்ட்டை கொஞ்சம் லூசாக இழுத்து, பின்பு இந்த கிளிப்பில் இணைக்க வேண்டும்” என்று அருகில் யாரோ சொல்ல... ஏதோ பழகிய குரலாக இருப்பது போலத் தெரிய, திரும்பியவள.... அருகில் ரிஷியா...... தன் கண்களையே நம்ப முடியாதவளாக திரும்ப உற்று நோக்கினாள்... ஒருவேளை அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாதால் அப்படி தெரிகிறதோ என்ற ஐயமும் வந்தது... “மாலு .... என்ன அப்படி பார்க்கிறே” என்று ரிஷி சொன்னவுடன், மெல்ல தன் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டவள்.. ஷ்.... இது உணமைதான் என்று புரிய அடுத்த நொடி, சுற்றுப் புறம் பற்றிய எந்த நினைவுமே இல்லாதவளாக அவன் மார்பில் அப்படியேச் சரிந்தாள்!
சுபம்.
நன்றி : திண்ணை
No comments:
Post a Comment