Friday, December 7, 2012

தாமிர சபை


பவள சங்கரி


காந்திமதியம்மன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம்


மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் )
அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம்    :     மூங்கில்
தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்


சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.


தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.

திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்





அக்குலா மரையினர் திரையுலா
முடியினர் அடிகளன்று தக்கனார்
வேள்வியைச் சாடிய சதுரனார்
கதிர்கொள் செம்மை புக்கதோர்
புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும்
சோலைத் திக்கெலாம் புகழுறுந்
திருநெல்வேலியுறை செல்வர் தாமே.

 தெற்கிலிருந்து வடக்காக 756 அடி நீளமும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும்  கொண்ட ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிவன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இடையில் அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்ட அம்மன் ஆலயம் ஒரு புறமும், மறுபுறம் நெல்லையப்பர் ஆலயமும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.



ஆல்யத்தினுள் நுழையும் போதே மேற்கூரையில் கேரள ஆலயங்களில் உள்ளது போன்று அற்புதமான மர வேலைப்பாடுகளைக் காணலாம். உள்ளே நுழைந்தவுடன்  10 அடி உயர மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அவரை வழிபட்டுச் சென்றால் உடன் நெடிதுயர்ந்து நிற்கும் பளபளவென்ற கொடிமரம் சுற்றி வணங்கி மேலே சென்றால், மூலவர் ச்ன்னிதானத்தின் முகப்பில் 9 அடி உயரமுள்ள மிகப் பெரிய விநாயகர் திருவுருவம் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது போன்று   இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் முக்குறுணி விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மூலவர் சன்னிதானத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு. தமிழகத்திலேயே மூன்று மூலவர்களைக் கொண்ட கோவில் என்றால் அது ஸ்ரீ நெல்லையப்பர் கோவில் மட்டுமே. சுயம்பு மூர்த்தியான, மூலவர் "வேண்ட வளர்ந்தநாதர்'  பிரதான சன்னதியில் "நெல்லையப்பர்' என்று அழைக்கப்படுகிற பெரிய திருமேனி லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  மூங்கில் வேணுவனேசுவரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்களும் வழங்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் மத்தியில்  அபிஷேகத்தின் போது அம்பிகையின் திருஉருவத்தைக் காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாகக் கொள்ளலாம் அல்லவா. இதனால் பெருமானுக்கு "சக்தி லிங்கம்' என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.

மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு மகாவிஷ்ணு பூசித்த லிங்கம் ஒன்று உள்ளது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார். சாலி வாடீசுவரன், (சாலி என்பது நெல்), விருகி விடுதீசுவரன், ஸ்ரீதான மூர்த்தி ஆகிய திருநாமங்கள் கொண்ட இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூசை நடக்கிறது.  இங்கு பஞ்சமுக தெட்சிணாமூர்த்தி வடிவங்களையும் தரிசிக்கலாம். சண்டிகேசுவரர், மகிசாசுரமர்த்தினி, கால பைரவர் திருவுருவங்களும் காணலாம். சிவபெருமானுக்கு அருகிலேயே வேங்கடவனும் பள்ளி கொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
பெரிய அளவிலான இரண்டாவது பிரகாரத்தின் முகப்பிலேயே “இசைத்தூண்கள்” மற்றும் “தாமிர சபை”, அறுபத்து மூவர் சிலைகள், அஷ்ட லட்சுமி, சகசுவரலிங்கம், சனி பகவான் ஆலயமும் காணலாம்.

மூன்றாவது பிரகாரத்தின் வழியாக அம்மா மண்டபம் உள்ளது. இதிலிருந்து அம்மன் சன்னதி செல்லலாம். ஆஞ்சநேயர், மஞ்சனத்தி அம்மன், ஐயப்பன், சரசுவதி, பிரம்மா ஆகிய மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகளும் உண்டு. அம்மன் சன்னதியில் மிகப்பெரிய  உள் தெப்பமும் ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் காணப்படுகிறது.

அம்மை, அப்பன் என இரு சன்னிதானங்களின் கிழக்குப் புறத்திலும் தனித்தனியே இராச கோபுரம் அமைந்துள்ளது. அம்மன் கோவிலுக்குத் தென் புறத்தில் ஒரு வாசலும், வடபுறத்தின் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் , வடபுறமும், மேற்புறமும் தனித்தனி வாசல்களும் உள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான இத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். 32 தீர்த்தங்கள் கொண்ட இத்தலம் அருணாசல கவிராயரால் வேணுவன் புராணத்திலும் காந்தியம்மை பதிகம், சொக்கநாதப் பிள்ளையாலும் பாடல் பெற்றுள்ளது.


காந்திமதி அம்மன் ஆலயம்



இத்தலத்தில் உள்ள அம்மன் காந்திமதி வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பிரதோச காலங்களில்  இக்கோவிலில் அம்பிகைக்கு பிரதோச வழிபாடு நடப்பது தனிச்சிறப்பு. வழமையாக அனைத்துக் கோவில்களிலும் சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூசை நடக்கும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோச பூசை நடைபெறுகிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சி.. அம்மன் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மகாசிவராத்திரியன்றும் நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு கால அபிசேகம், மற்றும் பூசைகள் நடைபெறுகிறது

”கணவர் நெல்லையப்பருக்கு அன்னம் பரிமாறும் அம்பிகை” என்று போற்றப்படும் காந்திமதி அம்மன்,  உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்குக் கொண்டு சென்று அங்குள்ள அர்ச்சகர்கள் மூலமாக சிவ பெருமானுக்கு படைக்கின்றனர். இந்த பூசை முடிந்தபின், அம்மனுக்கு அதே நைவேத்யம் வைத்து பூசை நடக்கிறது.
இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். சிம்மமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் வல்லமையை அருளுகிறாள். மேலும் பண்டாசுரனை வதம் செய்த அம்மன் சிலையும் இங்கு உள்ளது. துர்கையின் வடிவான இந்த அம்மன் "மஞ்சன வடிவாம்பிகை' என்று போற்றப்படுகிறாள்.


உலகிலேயே வேறு எங்குமே இல்லாத  ’மிடறு’ என்ற் இசைத்தூண்கள்:


இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில், இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும்  " ச, ரி, க, ம, ப, த, நி " என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு! ஒவ்வொரு பெரிய தூண்களைச் சுற்றியும் பல சிறிய தூண்கள் கட்டப்பட்டுள்ளது.. இதிலிருந்து ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களைக் கேட்க முடியுமாம். .  பெரிய தூணிலிருந்து கர்நாடக சங்கீதமும்., அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களிலிருந்து, மிருதங்கம், வீணை, கடம், சலங்கை, மணி போன்ற இசைக் கருவிகளின் நாதத்தையும் கேட்க முடியுமாம். மெலிதாக விரல்களில் மீட்டினாலே எந்த வலியும் இல்லாமல் சுகமான நாதம் இசைக்கிறது. நல்ல இசை ஞானம் உள்ளவர்களால் இதன் வேறுபாடுகளை நன்கு உணர முடியும். ’மிடறு’ என்று அழைக்கப்படும்  இது போன்ற இசைத் தூண்கள் உலகில் வேறு எங்குமே இல்லையென்கிறார்கள். தொழில்நுட்பங்கள் முன்னேறாத அந்த காலத்திலேயே இது எங்கனம் சாத்தியமானது என்று நினைக்கும் போது ஆச்சரியமே மேலிடுகிறது.இன்றைய நவீன தொழில்நுட்ப முறையைக் கொண்டு (spectral analysis) ஆய்வு செய்த போது இத்தூண்களிலிருந்து வரும் இசைகள் தன்மைகளுக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாகிறது என்று தெரிவிக்கின்றது இத்தூண்களில் ஒரு சிறு துவாரமோ அல்லது வேறு ஏதும் தூண்டுகோலோ இல்லாமல் அழகாக இசைப்பதுதான் அதிசயத்தின் உச்சம்.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருமார்பில் லிங்கம் உள்ளது மற்றொரு சிறப்பம்சம். கருவறையின் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூசை செய்தபடி இருக்கிறார். அருகில் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தரும் உற்சவர் விஷ்ணுவையும் காண முடிகிறது. திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

இக்கோவிலின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தினசரி சிறப்பான பூசைகளுடன், ஆண்டுதோறும் ஆனி மாதம். 10 நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். கார்த்திகை மாத உற்சவம், ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று மற்ற பிற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.



No comments:

Post a Comment