மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வாழும் ஆலயம். கோவில் அர்த்த மண்டபத்தில் குடவரையின் அருகில் வைகுண்டநாதர், இரண்ய சம்கார நரசிம்மர், மறுபுரம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக் கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி. 860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில் பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன். ஹரிஹர மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர் கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம். நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள் மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது. இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும். மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வாழும் ஆலயம். கோவில் அர்த்த மண்டபத்தில் குடைவரையின் அருகில் வைகுண்டநாதர், இரண்ய சம்கார நரசிம்மர், மறுபுரம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.
நாமக்கல் கமலாலயம் என்ற புண்ய தீர்த்தம் உடையது. சிறீ நாமகிரியம்மன் திருக்குளத்தில் அவதரித்து சிறீநரசிம்ம மூர்த்தியை வணங்கி தவம் மேற்கொண்டு அருள் பெற்றதால் இக்குளம் கமலாலயம் என்று சிறப்புற்றது. தேவர்கள், சிறீநரசிம்ம மூர்த்திக்குத் தெற்கே ஓர் நீர்நிலையை ஏற்படுத்தி சிறீநாமகிரி லட்சுமி நரசிம்மன், சிறீரங்கநாயகி ரங்கநாதர், சிறீஆஞ்சநேய சுவாமிகள் ஆகியோரை அருச்சித்துச் சென்றதால் அது தேவதீர்த்தம் என்று வழங்கலாயிற்று. வடக்கே பிரம்மனோத்தமர் உருவாக்கிய சக்கரதீர்த்தமும் உள்ளது. சிறீபதி என்ற அந்தணர் ஒருவர் ஒரு முறை கொல்லிமலைக் குகையில் இறைவனை நோக்கித் தவம் செய்ய, அப்போது வரதராஜப் பெருமாளாகத் தோன்றியவர், அவர்தம் விருப்பத்திற்கிணங்க மலை உச்சியில் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகிறது.