Wednesday, May 11, 2016

‘கைத்தறிக் காவலர்’ மு.ப. நாச்சிமுத்து!



எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
http://www.vallamai.com/?p=68441
a09192c1-2a27-4dd7-94a9-f23a7e79b832

VISIONARIES DUP‘கைத்தறிக்காவலர்’ என்று அன்போடு அழைக்கப்பெறும், பத்மஸ்ரீ. மு.ப. நாச்சிமுத்துஅவர்களின் 103 வது பிறந்தநாள் விழா மற்றும் எம்.பி.என். நினைவு தபால்தலை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி (2016) சென்டெக்சு, சென்னிமலை நெசவாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில், எம்.பி.என். பொறியியற் கல்லூரியின் தலைவர் உயர்திரு தங்க.விசுவநாதன் அவர்கள் தலைமையில், ஏனைய அறிஞர் பெருமக்களின் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது. சென்னிமலை என்றால் கொடிகாத்த குமரன் பெயர் நினைவுக்கு வருவதுபோல கைத்தறியும், எம்.பி.என். என்ற பெயரும் உடன் நினைவிற்கு வருவது இயற்கை. ஆம் கைத்தறி உலகில் தனக்கென்றொரு தனியிடத்தை சென்னிமலை பெறுவதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர் “எம்.பி.என்.’ என, அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் மு.ப. நாச்சிமுத்து அவர்கள்தான். 28.04.1913 அன்று சென்னிமலையில் மு. பழனியப்பன் – சடையம்மாள் தம்பதியருக்கு அன்பு மகனாகப் பிறந்தவர் இவர். சட்டம் பயின்று 4 ஆண்டுகள் வழிக்கறிஞராகப் பணியாற்றினாலும், கைத்தறித் தொழிலில் நலிவுற்றிருந்த நெசவாளர்களின் துயர் கண்டு மனம் வருந்தி அவர்களை கூட்டுறவு அமைப்பில் கொண்டுவர அரும்பாடுபட்டதன் விளைவாக 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி சென்னிமலை நெசவாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டு அதே மாதம் 14ஆம் நாள் முதல் வெற்றிகரமாக இயங்கவும் ஆரம்பித்துள்ளது. இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற மு.ப. நாச்சிமுத்து அவர்கள் 46 ஆண்டுகள் நெசவுத் தொழில் மேன்மையுறவும், நெசவாளர்கள் நல்வாழ்வு பெறவும் பெரும்பணியாற்றினார். கைத்தறித் துறைக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற அரிய சேவையைப் பாராட்டி 1983 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1952 முதல் 1969 வரையிலான 17 ஆண்டுகள் கோ-ஆப்டெக்சு தலைவராகவும், 1953 முதல் 1985 வரை 32 ஆண்டுகள் அகில இந்திய கைத்தறி வாரியத்தின் உறுப்பினராகவும் தொண்டாற்றியதோடு, வெளிநாடுகளுக்குச் சென்ற கைத்தறிக் குழுக்களிலும் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வறுமைக்கோட்டுக்கு கீழ் அல்லலுற்று, தனியாரிடம் தறித்தொழிலில் சிக்கிக்கிடந்த நெசவாளர்களை, கூட்டுறவு அமைப்பின் கீழே கொண்டு வருவதில் பெரும்பணியாற்றியவர் இவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. தன்னலமற்ற இவருடைய சேவையைப் பாராட்டி, 1982 இல், “தமிழகத்தின் தலைசிறந்த கூட்டுறவுத் தலைவர்’ என்ற விருதை தமிழக அரசு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
bcf48538-2d7f-47c3-94a6-6ac25a18d3c8
இவை மட்டுமன்றி இந்தியன் வங்கி இயக்குநர், ரிசர்வு வங்கி ஆலோசகர், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் நிர்வாகத்தில் பங்கேற்பு என பல பதவிகளை செவ்வனே வகித்தவர் இவர். அனைத்து நெசவாளர் சகோதரர்களின் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றவர் மேன்மைமிகு மு.ப. நாச்சிமுத்து என்றால் அது மிகையாகாது! கைத்தறிக்காவலர், பண்பாளர், ஆன்மீகச் சிந்தனையாளர், தேசியவாதி, சமுதாயச் சிற்பி, தீர்க்கதரிசி, தன்னேரில்லாத் தலைவர் என்று நெசவாளர்களும், கவிஞர்களும் இன்றும் அவரை பலவாறு போற்றி மகிழ்கின்றனர்.
நெசவு நம் தேசத்தின் பழமையான தொழில். ஆடைகளின் அவசியத்தையும், அதன் நேர்த்தியையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர்கள் நம் மூதாதையர்கள் என்றால் அது மிகையாகாது! நெசவுத்தொழில் என்பது நமது தேசியத்தின் உயிர்நாடி எனலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுத் தொழில்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போது அத்தொழில் பல இன்னல்களுக்கிடையேத் திணறும் தொழிலாகிவிட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது கைத்தறி நெசவுத் தொழில்தான். சேலம், ஈரோடு, கரூர் போன்ற நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவை. ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம், திருவில்லிப்புத்தூர், நெகமம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம் ஆகிய ஊர்களும் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களிலிருந்து பல விதமான ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெண்கள் பெருமளவில் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரோடு நகரிலிருந்து பெரும்பாலும் துண்டுகள், படுக்கை விரிப்புகள், கைலிகள் போன்றவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெசவாளர்கள் நூல் கொள்முதல், கடன் வசதி, உற்பத்தியைச் சந்தைப்படுத்துதல் என பல்வேறு நிலைகளில் இன்னல்களை எதிர்கொள்ளும்போதிலும் கைத்தறித்துறை குறிப்பிட்ட அளவு வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றே பெருமைப்பட முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் கைத்தறி ஆடைகளின் தேவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதும் நிதர்சனம்.
தனக்கென வாழா தவநெறியர், நெசவாளர் சமூகத்தையே தம் குடும்பமாக எண்ணி அவர்தம் நலனுக்காக அல்லும், பகலும் அரும்பாடுபட்டவர் அவர்தம் உள்ளங்களில் நித்தியமாய் வாழும் வள்ளல் அமரர் எம்.பி.என். அவர்களின் பிறந்த நாளில் சென்னிமலை எம்.பி.என்.நகர் சமய இலக்கியப் பேரவை ‘கவிபாடும் தறி நாடா’ என்ற அருமையானதொரு வாழ்த்துப்பா நூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். பல்வேறு கவிஞர்களின் அழகிய பாக்கள் நூலுக்கு வளம் சேர்க்கின்றன.
13102699_1024824607606164_368687633183519909_n
அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் எம்.பி.என். அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்ததோடு அவருடைய செயல்பாடுகளுக்கு பலவகையில் ஒத்துழைப்பும் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு முறை கைத்தறித் துணிகளுக்கு சலுகை அளிப்பது குறித்த பேச்சு எழுந்தபோது, ஐ.ஏ.எசு. உயரதிகாரி ஒருவர் இந்த கைத்தறி துணிகளுக்கு எவ்வளவு காலத்திற்குத்தான் சலுகை கொடுப்பது என்று சலித்துக்கொண்டு கோபமாகக் கேட்டாராம். அப்போது எம்.பி.என். அவர்கள் “ஒரு மனிதன் எத்தனை நாட்களுக்குத்தான் சாப்பிடுவான்” என்று கேட்டாராம். இந்த வினாவின் ஆழ்ந்த நுட்பமான பொருளறிந்து அந்த அதிகாரி பதில் ஏதும் பேச முடியாமல் அமைதியாக இருந்துவிட்டாராம். அதாவது ஒருவர் உயிருள்ள வரை வயிற்றுக்கு உணவு தேவைப்படுவதுபோல கைத்தறி ஆடைகள் நெய்யும் வரை சலுகை கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அவர் பேச்சு இருந்திருக்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் அவல நிலையை விளக்கும் ஒரு கவிதை….
அ.சீனிவாசன், பொது மேலாளர் (ஓய்வு), சென்னிமலை நகர கூட்டுறவு வங்கி, சென்னிமலை.
முகாரி பாடிய கூட்டுறவை
ஆனந்த பைரவியாக்கிய அற்புதர்;
கூட்டுறவுக்கே அகராதியானவர்!
பாவடிகள் அன்று …..
பாவடியில் தோய்த்தெடுக்கக்
கஞ்சித் தொட்டிகள்
சலசலக்கும் முகாரியாய்!
தறியோசையே சுப்ரபாதம்
நாடாவின் ஓட்டமே
நாடிநரம்புகளின் அதிர்வாகும்!
பழைய சோறே பஞ்சாமிர்தம்
நீராகாரமே நித்தியவாசம்
பாவோடும் நூலோடும்
நித்தமும் வறுமைவாசம்
இறைவனே இருக்கின்றாயா நீ என 
ஏங்கித் தவித்தன
அகிலத்தோர் மானங்காக்கும்
நெசவாளர் நெஞ்சங்கள்.
சோகத்தோடும் விழிநீரோடும்
சென்னிமலையின் தவமோ
மேதினியின் யாகங்களோ
கைத்தறிக்கு வாழ்வுதர
நெசவாளர்களுக்கு விடியலாக
சுழன்றோடும் இராட்டையாக
அகிலத்தில் அவதாரமானார்
நல்முத்து நாச்சிமுத்து.
மலர்ந்தார், வாழ்ந்தார்,
வாழ்ந்து கொண்டே
சிரகிரியின் சுவாசமாய்
சென்னிமலையின் கவசமாய்
உலகின் புருவமெல்லாம்
வியந்து நோக்கிடும்
புதுமைதனைச் செய்திட்ட
கூட்டுறவுத் தந்தை
ஒரு தீர்க்கதரிசி.
புலவர் ஆ.தண்டபாணி
வானவில்லின் வடிவத்தைக் கையால் வரையாமல்
காலால் வரைந்திட்ட கலைஞன் நெசவாளி
கானகத்துப் பறவைகளின் கனிவான இசையமுதை
காலடி ஓசையிலே காணுபவன் நெசவாளி
வானத்துத் தேவர்களும் வந்துவந்து காணுகிற
வகையான நூற்கலையை வடிப்பவன் நெசவாளி
ஊணமுது இல்லாமல் உறங்குகிற வேளையிலும்
உலகத்தார் நலம்காக்க உதவுபவன் நெசவாளி
நெசவாளி வாழ்க்கையிலே நிலைத்துவிட்ட
நிரந்தர வறுமை தனைஓட வைத்தார்
வசையில்லா வாழ்க்கையிலே வகையாய் வாழ
வழக்கறிஞர் தொழில்விடுத்து வந்தார் இங்கே
அசைபொடும் விலங்காக வாழ்ந்த மக்கள்
ஆனந்த வாழ்வு பெறவழி அமைத்தார்
இசையோடும் நாடாவை இழையோடு ஓடவைத்த
இவர்தானே நம்வாழ்வின் கலங்கரை விளக்கு.
தன்னுடைய 21 ஆம் அகவையிலிருந்து எம்.பி.என். அவர்களின் இறுதிக்காலம் வரை அவருடைய தொடர்பில் இருந்த திரு ஜெகதீசன் அவர்களின் வாழ்த்துப்பா…
சென்னிமலை 
தன் சிகரத்தின் மகுடத்தில்
பதித்துக்கொண்ட
நல்முத்து
எம்.பி.என்.நாச்சிமுத்து!
இவருக்கு
கண்கள் இரண்டும்
கைத்தறியும்
கூட்டுறவும்!
கையில் பிடித்த
கைத்தடியோ
நெசவாளியின்
வாழ்வை உயர்த்த
சபதமேற்ற ஊன்றுகோல்!
அவர்
எடுத்துவைத்த
ஒவ்வொரு அடியும்
கைத்தறியின் எதிர்காலத்தை
எண்ணி வைத்த அடிகள்!
பதவி ஒரு மேல்துண்டு
இவர் வகித்த பதவிகளால்
பதவிகளே பெருமையடைந்தன!
வினாக்குறியாய் வளைந்த
நெசவாளியின் வாழ்வு
கொடிமரமாய் நிமிரும்
நாள் வாராதா?
என வாதாடிய வழக்கறிஞரே!
தறிநாடா ஓசை
நீங்கள் விரும்பிய இசை!
நெசவாளியின் கைகால் அசைவே
நீங்கள் ரசித்த நடனம்!
சென்னிமலையை 
கூட்டுறவாளர்களின்
வேடந்தாங்களாக்கிய
கைத்தறியின்
கற்பக விருட்சமே!
உங்கள் பாதம்படாத
நெசவாளர் வாழும் ஊர்
தமிழகத்தில் இல்லை!
நீங்கள் அறியாத 
நெசவாளர் பிரச்சனை
இந்தியாவில் இருந்ததில்லை!
இந்திய வரைபடக் கோடுகளில்
சென்னிமலைக்கு சிவப்புக்கம்பளம்
விரித்துக் கொடுத்த
கைத்தறியின் தந்தையே!
நெசவாளர் துயர் துடைக்க
இன்னும் ஒரு முறை
இம்மண்ணில் பிறந்து வாரீரோ!
நெசவாளர்க்கு பயன் தரும்
மருந்து மரமாய்
நிமிர்ந்து நிற்கும்
சென்டெக்ஸ் நிறுவனமே!
எம்.பி.என். புகழை என்றும்
இன்றுபோல் பேச
சிரகிரி முருகன் போல்
இளமையாய் வாழ்க! வளர்க!
இவ்வாறு நெசவாளர் வாழ்வில் ஒளிவிளக்காகத் திகழ்ந்த மு.ப.நாச்சிமுத்து அவர்கள் 27.06.1987 இல் அமரர் ஆனாலும், இன்றும் நெசவாளர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்பதற்கு இவ்விழாவே சாட்சி!

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...