Thursday, May 12, 2016

அருள்மிகு இலக்குமி நரசிம்மர் ஆலயம் (நாமக்கல்)மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வாழும் ஆலயம். கோவில் அர்த்த மண்டபத்தில் குடவரையின் அருகில் வைகுண்டநாதர், இரண்ய சம்கார நரசிம்மர், மறுபுரம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். 


அதியர், நாமக்கல்லில் இரண்டு குடைவரைக் கோயில்களை எழுப்பியுள்ளனர். நாமக்கல்லின் பழம்பெயர் திரு ஆலைக்கல் என்பதாகும். கி.பி. 860-இல் இக்குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டன. இரண்டுமே வைணவக் கோயில்கள். ஒன்றில் பால நரசிம்மர் அமைதியான தோற்றத்துடன்.  ஹரிஹர மூர்த்தியின் உருவமும் இதில் உள்ளது. இன்னொன்றில் அனந்த சயனச் சிற்பம். பல்லவர், பாண்டியர் கால அனந்த சயனச் சிற்பங்களில் காணப்படாத ஒரு சிறப்புக்கூறு இந்தச் சிற்பத்தில் காணலாம். நாகத்தின் முகத்தில் சிம்ம முகம் இருப்பதே அச்சிறப்புக்கூறு. திருமாலின் ஆயுதங்கள் மனித உருவமாக வடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் கீழே பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளமை சிறப்பானது. இங்கு வாமனச் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது. வாமனச் சிற்பத்தைச் சுற்றிலும் பல உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவை மார்க்கண்டேய புராணத்தில் வரும் பாத்திரங்களாகும்.  மாவலிச் சக்கரவர்த்தி அசுவமேத யாகம் செய்தபோது வாமன அவதாரம் நிகழ்ந்தது. எனவே, வாமனர் சிற்பத்தொகுதியில் குதிரை உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி வீராசனமாக வலது திருவடி ஊன்றி வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் வாழும் ஆலயம். கோவில் அர்த்த மண்டபத்தில் குடைவரையின் அருகில் வைகுண்டநாதர், இரண்ய சம்கார நரசிம்மர், மறுபுரம் வாமன மூர்த்தி, உலகளந்த பெருமாள், வராகமூர்த்தி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். 


நாமக்கல் கமலாலயம் என்ற புண்ய தீர்த்தம் உடையது. சிறீ நாமகிரியம்மன் திருக்குளத்தில் அவதரித்து சிறீநரசிம்ம மூர்த்தியை வணங்கி தவம் மேற்கொண்டு அருள் பெற்றதால் இக்குளம் கமலாலயம் என்று சிறப்புற்றது. தேவர்கள், சிறீநரசிம்ம மூர்த்திக்குத் தெற்கே ஓர் நீர்நிலையை ஏற்படுத்தி சிறீநாமகிரி லட்சுமி நரசிம்மன், சிறீரங்கநாயகி ரங்கநாதர், சிறீஆஞ்சநேய சுவாமிகள் ஆகியோரை அருச்சித்துச் சென்றதால் அது தேவதீர்த்தம் என்று வழங்கலாயிற்று. வடக்கே பிரம்மனோத்தமர் உருவாக்கிய சக்கரதீர்த்தமும் உள்ளது. சிறீபதி என்ற அந்தணர் ஒருவர் ஒரு முறை கொல்லிமலைக் குகையில் இறைவனை நோக்கித் தவம் செய்ய, அப்போது வரதராஜப் பெருமாளாகத் தோன்றியவர், அவர்தம் விருப்பத்திற்கிணங்க மலை உச்சியில் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகிறது.


நாமக்கல் நகரின் 10 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ‘சதுரகிரி’ என்கிற ‘கொல்லி மலை’, பல அரிய வகை மூலிகைகள் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக இசையில் மிகவும் சிறந்து விளங்கிய ‘பல்லவி நரசிம்ம அய்யங்கார்’ மற்றும் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது அற்புதமாகப் பாடல் பாடிய ‘நரகரி ஆச்சார்’ ஆகியோர் தோன்றிய பூமி இது. மேலும், தேசபக்தியில் மிகச் சிறந்து விளங்கிய ‘நாமக்கல் கவிஞர்’ பிறந்த ஊரும் இதுதான். கணிதமேதை ராமானுஜம் அவர்களுக்கு ஒரு முறை தாம் மிகவும் கடினமாக உணர்ந்த ஒரு கணிதத்தை, நாமகிரித் தாயார் அவருடைய கனவில் தோன்றி தெளிவுபடுத்தினாராம்.

நாமகிரித் தாயார் தம் கருணைப் பார்வையால் பக்தர்களின் பிணியும், வேதனையும் தீர்க்கும் வகையில் நம்மோடு நின்று உறவாடுதல் போன்ற விசேடமான தோற்றம் கொண்டிருப்பது அற்புதக் காட்சி. அன்னை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவத்தில் இருக்கிறார். இத்திருத்தலத்தின் பெயராலேயே இவ்வூர் திருவரைக்கல் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி, தாயாரை வழிபட்டால் சகல செல்வங்களும் சேர்வதோடு, பில்லி, சூன்யம் போன்றவைகள் ஒரு மண்டல காலத்திற்குள் விலகுகிறது என்றும் உறுதியாக நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் என்னும் புஷ்கரிணியில் காலை, மாலை என இரு வேளைகளிலும் புனித நீராடி, ஸ்ரீ நாமகிரியம்மன், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆகியோரை பக்திச் சிரத்தையுடன், பன்னிரு முறை வலம் வந்து நியமத்துடன் சேவை செய்து வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும், பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசு போன்றவைகளும் நீங்கி, சந்ததியின்மை போன்ற குறைகளும் நிவர்த்தி ஆகிறது என்றும் நம்பப்படுகிறது.

ஸ்ரீ நரசிம்மர் ஆலயச் சிறப்பு:


கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள மிகப் பழமையான இத்திருக்கோவிலின் இருநூறடி உயரமுள்ள மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது சிறீநரசிம்மர் ஆலயம். அதியேந்திர குணசீலன் என்ற பல்லவ மன்னரால் இக்கோவில் அமையப்பெற்றதாக இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரமும், பலிபீடமும் காணப்படுகின்றன. இடப்பக்கம், தனிச்சன்னதிகளில், இராமர், கிருட்டிணர், இராமானுசர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மறுமுனையின் எதிரில் வேதாந்த தேசிகரைக் காணலாம். பெருமாளை நோக்கி அமர்ந்துள்ள கருடாழ்வாரையும் வழிபடலாம். வாத்திய மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் அனைத்தும் வரிசையே இருக்கின்றன. மகாமண்டபத்தின் அருகே விசுவக்சேனர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். கருவறை மலையிலிருந்து துவங்கி அர்த்த மண்டபத்தில் சென்று சேருகிறது.

கருவறையில், வலது கால் தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து கம்பீரமாக வீற்றிருக்கும் சிறீநரசிம்மர் வடிவம் கண் கொள்ளாக காட்சி. சூரிய சந்திரர்கள் அருகிருந்து கவரி வீச, வலது புறம் ஈசுவரரும், இடது புறம் பிரம்மாவும், இரணியனை அழித்த உக்கிரம் நீங்கி இறைவன் சாந்தி பெற வழிபடுகிறார்கள். நரசிம்ம மூர்த்தியின் திருமார்பில் உள்ள மாலையில் மகாஇலக்குமி திருவுருவம் காணப்படுகிறது.பின் இடது கரத்தில் சக்கரமும், பின் வலது கரத்தில் சங்கும் மேற்புறத்தில் உள்ளன.  சிறீஇலக்குமி நரசிம்மர் என்ற திருநாமமும் கொண்டவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இத்தலம் மும்மூர்த்தித் தலம் என அழைக்கப்படுகிறது. இரணியனை வதைத்த பின்பு கூரிய நகங்களுடன், இரத்தக் கறையுடன் காட்சி தந்து நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறார், சிறீநரசிம்ம மூர்த்தி..

வாத்திய மண்டபத்தின் வடக்கு வாயில் வழியாக வெளியே வந்தால் இலக்குமி நாராயணரையும், தெற்கு வாயில் வழியாக வந்தால் நாமகிரித் தாயாரையும் தரிசிக்கலாம். நரசிம்மர் சன்னதியின் எதிரே இருக்கும் சாளரத்தின் வழியாக ஆஞ்சநேயரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. 


தல வரலாறு :

நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாதாரணமாக ஒரு துளை உள்ள சாளக்கிராமம் கிடைப்பது வழமை. ஆனால் ஆஞ்சநேயருக்கு மட்டும் இந்த நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைத்திருக்கிறது. சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தாம் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு திரும்பி வரும்போது நாமகிரித்தாயாரிடம் இந்த சாளக்கிராமத்தைக் கொடுத்துவிட்டு ஆழ்ந்து  ராமஜெபம் செய்கிறார்.நீண்ட நேரம் ஆனதால் தாயாரும் அதைக் கீழே வைத்து விடுகிறார். ஆஞ்சநேயர் வழிபாடு முடித்து விட்டு வந்து பார்க்கும் நேரத்தில் அதிசயமாக அந்த சாளக்கிராமம் பெரிய மலையாக மாறிவிட்டிருந்தது. அதை அசைக்கக்கூட முடியாத நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மர் கோலத்தில் திருக்காட்சி அளித்ததோடு இராமருக்கு பணிவிடை செய்யவும், தன்னை  வழிபடவரும் பக்தர்களுக்கு தாங்கள் வேண்டிய காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கவும், சிறீநரசிம்மரை வழிபட்டு வீடுபேறு பெறவும், பணிக்கிறார். அதன்படியே இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் பல்லாண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


சிவபெருமான் தலையில் பிறைச் சந்திரனுடன் தோன்றும் அரிதான காட்சியும் இங்கு காண முடிகிறது. ”நாமக்குன்றமீதமர்ந்த நரசிங்கமே” என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் இராமாயணத்தின் யுத்த காண்டத்தில், அனுமனின் தோளின் மீது அமர்ந்து யுத்தத்திற்குத் தயாராகும் சிறீஇராமனைப் பாடுகிறார். இம்மலையைச் சுற்றி உள்ள கோட்டை மத்திய அரசினால் நினைவுச் சின்னமாகப் போற்றி பாதுகாக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் இங்கு தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
No comments:

Post a Comment